Friday, July 22, 2011

யாழ் பல்கலைக்கழக மாணவர்களின் எதிர்காலத்தை கேள்விக்குறியாக்கும் த.தே.கூ

வட பகுதியில் நாளை இடம்பெறவுள்ள தேர்தலுக்காக தமிழ் தேசியக் கூட்டமைப்பினர் யாழ் பல்கலைக்கழக மாணவர்களின் எதிர்காலத்தை சீர்கெடுக்கும் செயலொன்றினை மேற்கொண்டுள்ளனர். தமிழ் மக்களிடம் நேரடியாக சென்று தமது தரப்பு நியாயங்களை முன்வைக்க முடியாத தமிழ் தேசியக் கூட்டமைப்பினர் தமது பினாமி இணையத்தளங்கள் மற்றும் ஊடகங்கள் ஊடாக போலி அறிக்கைகள் மூலம் தொடர்ந்தும் தமிழ் மக்களை ஏமாற்றி வருகின்றனர்.

நாளை இடம்பெறவுள்ள தேர்தலுக்காக யாழ் பல்கலைக் கழகத்தின் அனைத்துப்பீடங்களின் சங்கம் எனும்பெயரில் தமிழ் தேசியக் கூட்டமைப்பினை ஆதரிக்குமாறு அறிக்கை ஒன்று வெளியிடப்பட்டுள்ளதுடன், அதன் உள்ளடக்கம் மற்றும் அறிக்கை உண்மையிலேயே மேற்குறிப்பிட்ட சங்கத்தினால் வெளியிடப்பட்டதா அன்றில் புலிசார்பு இணையங்களின் வழமையான போலி அறிக்கையா என்ற புலன் விசாரணைகள் ஆரம்பமாகியுள்ளதாக தெரியவருகின்றது.

குறிப்பிட்ட அறிக்கை தமிழ் தேசியக் கூட்டமைப்பின் வழமையான போலிப்பிரச்சாரங்களை பிரதிபலிப்பதாகவுள்ளது. ஆனால் இவ்வாறானதோர் அறிக்கை யாழ் பல்கலைக்கழக மாணவர்களால் விடுக்கப்பட்டிருக்குமானால் இதில் சம்பந்தப்பட்டவர்கள் மீது கடும் நடவடிக்கையினை மேற்கொள்ள பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழு நிர்ப்பந்திக்கப்படுகின்றது.

மேலும் யாழ் பல்கலைக்கழக அனைத்துப்பீடங்களின் சங்கம் என குறிப்பிட்ட அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. ஆனால் அவ்வாறானதோர் சங்கம் யாழ் பல்கலைக்கழகத்தில் இல்லையென பல்கலைக்கழக வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

அத்துடன் யாழ் பல்கலைக் கழகத்தில் 5 பீடங்கள் உள்ளபோதும் இரு பீடங்களின் தலைவர்கள் அறிக்கையில் கையொப்பமிட்டுள்ளதுடன் ஏனைய பீடங்களின் தலைவர்கள் எதிர்ப்பை தெரிவித்துள்ளனர்.

எவ்வாறாயினும் குறிப்பிட்ட அறிக்கையில் கையொப்பமிட்டுள்ள இருவரும் சட்டரீதியான சிக்கல்களை எதிர்நோக்கும் நிலைதோன்றியுள்ளது.

இவ்வறிக்கையின் உண்மைத்தன்மை மற்றும் இதன் பின்னணி தொடர்பாக அறிந்து கொள்வதற்காக இலங்கைநெற் ஆசிரியர் பீடம் கையொப்பமிட்டவர்களில் ஒருவரை தொடர்புகொண்டபோது எவ்வித கருத்தினையும் தெரிவிக்க முடியாதவராக தொடர்பினை துண்டித்துகொண்டார் என்பதையும் ஒருவகையான பதட்ட நிலையில் குறிப்பிட்ட மாணவன் காணப்படுகின்றார் என்பதையும் இலங்கைநெற் உணர்கின்றது.

இவ்வாறான இழிநிலைக்கு மாணவர்களை தள்ளியுள்ள தமிழ் தேசியக் கூட்டமைப்பினர் குறிப்பிட்ட மாணவர்கள் சட்டச்சிக்கலை எதிர்நோக்கும்போது அதை எவ்வாறு கையாளப்போகின்றனர் என்பதே இங்கு தொக்கி நிற்கும் கேள்வியாகும்.

0 comments :

Copyright www.ilankainet.com All right reserved.
Designed and Hosted By : ilankainet.com
To contact us : ilankainet@gmail.com