Tuesday, June 14, 2011

தமிழ் மக்களுக்கான அரசியல் தீர்வு விடயத்தில் அரசு இரட்டைவேடம். UNP

வடக்கு, கிழக்கு தமிழ் மக்களின் பிரச்சினைக்கு அரசு உடன் தீர்வை வழங்கவேண்டும். 13ஆவது திருத்தச்சட்டத்தைத் தீர்வாக வைப்பது தொடர்பில் அரசு முன்னுக்குப்பின் முரணான கருத்தைத் தெரிவித்து வருகிறது. 13ஆவது திருத்தச் சட்டம் தொடர்பான அரசின் நிலைப்பாட்டை அரசு நாடாளுமன்றில் தெளிவாகத் தெரிவிக்கவேண்டும். தொடர்ந்தும் இதுதொடர்பில் இரட்டை வேடம் போடக்கூடாது.

- இவ்வாறு ஐக்கிய தேசியக்கட்சி நேற்று அரசிடம் வேண்டுகோள் விடுத்தது.

எதிர்க்கட்சித் தலைவரின் அலுவலகத்தில் நேற்று இடம்பெற்ற ஊடகவியலாளர்களின் சந்திப்பில் கலந்துகொண்டு உரையாற்றிய அக்கட்சியின் ஊடகப் பேச்சாளரும், நாடாளுமன்ற உறுப்பினரான கயந்த கருணாதிலக்க இவ்வாறு கூறினார்.

அவர் இது தொடர்பாக மேலும் கூறியவை வருமாறு:

வடக்கு, கிழக்கு பிரச்சினைக்கு 13ஆவது திருத்தச் சட்டத்தை முன்வைக்கப் போவதாக அரசு கூறுகின்றது. வெளிவிவகார அமைச்சர் ஜி.எல்.பீரிஸ் அண்மையில் இந்திய அரசிடம் அரசின் இந்த நிலைப்பாட்டை உறுதிப்படுத்தினார்.

இருப்பினும், இது தொடர்பில் முன்னுக்குபின் முரணான கருத்துகளை அரசு கூறி வருகின்றது. 13ஆவது திருத்தச் சட்டத்தில் உள்ள காணி மற்றும் பொலிஸ் அதிகாரங்கள் வழங்கப்படும் என்று ஓர் அமைச்சர் கூறுகின்றார்.

ஆனால் அப்படி வழங்கப்படமாட்டாது என்று மற்றொரு அமைச்சர் கூறுகின்றார். அரசு இது விடயம் தொடர்பில் இரட்டை வேடம் போடுகிறது என்று இதன்மூலம் நன்றாகத் தெரிகின்றது. அரசு எல்லாப் பிரச்சினைகளையும் இழுத்தடிப்பதுபோல இதையும் இழுத்தடிக்கின்றது.

இதுதொடர்பில் அரசின் உண்மையான நிலைப்பாடு என்ன என்று அரசு நாடாளுமன்றில் கூறவேண்டும். தொடர்ந்தும் இது தொடர்பில் இரட்டை வேடம் போடக்கூடாது. தமிழ் மக்களின் பிரச்சினைக்கு அரசு உடன் தீர்வை வழங்கவேண்டும் – என்றார்.

அதேநேரம் இந்திய - இலங்கையில் இடையில் ஏற்பட்டுள்ள ராஜதந்திர நெருக்கடி குறித்து கலந்துரையாடுவதற்காக தேசியப் பாதுகாப்புச் சபையின் விசேட கூட்டம் ஒன்று அடுத்த வாரம் நடைபெறவுள்ளதாக அரசாங்கத்தின் உயர் மட்டத்தரப்புத் தகவல்கள் தெரிவிக்கின்றன.

ஜனாதிபதி தலைமையில் இந்த கூட்டம் நடைபெற உள்ளது. தேசியப் பாதுகாப்புச் சபையின் தலைவராக ஜனாதிபதி இருக்கின்றார். அதன் உறுப்பினர்களாக பிரதமர், பாதுகாப்புச் செயலாளர், முப்படைத் தளபதிகள் மற்றும் புலனாய்வுப் பிரிவுகளின் தலைவர்கள் உள்ளனர்.

0 comments :

Copyright www.ilankainet.com All right reserved.
Designed and Hosted By : ilankainet.com
To contact us : ilankainet@gmail.com