Saturday, June 11, 2011

இலங்கைத் தமிழர்களுக்கு இன்று அரசியற் தலைமை இல்லை. அ. வரதராஜப்பெருமாள்

இலங்கைத் தமிழர்களுக்கு இன்று பொருத்தமான தலைமை ஒன்று இல்லை என நிலவிவரும் கருத்தாடல் தொடர்பாக முன்னாள் இணைந்த வடகிழக்கு மாகாணசபையின் முதலமைச்சரும் ஈபிஆர்எல்எப் கட்சியின் முக்கியஸ்தருமான வரதராஜ பெருமாள் அவர்கள் நீண்டதோர் தொடர் ஆய்வினை எழுத முனைந்துள்ளார்.

ஆய்வின் முதற்பகுதி வருமாறு.

இலங்கைத் தமிழர்களுக்கான அரசியற் தலைமைத்துவத்தில் இன்றைய காலகட்டத்தில் ஒரு பாரிய வெற்றிடம் நிலவுகிது என்றும் தமிழ் மக்களை வழிநடத்தி தலைமை தாங்குவதற்கு இன்று சரியான அரசியற் தலைமை இல்லை என்றும் பொத்தாம் பொதுவாக இலங்கைத் தமிழரிடையே பரவலாக ஒரு கருத்து நிலவுகிறது.

இவ்வாறு அபிப்பிராயம் கொள்வோர் - கூறுவோர் சாதாரணமான பாமரர்கள் மட்டுமல்ல – வேலையற்று வீதிகளில் நிற்கும் விரக்தியுற்ற இளைஞர்களின் கருத்து மட்டுமல்ல. இலங்கைத் தமிழ்நாளேடுகளின் ஆசிரியர்கள் மற்றும் தமிழ் ஊடகவாளர்கள், கட்டுரை எழுத்தாளர்கள், பல்கலைக்கழக மற்றும் பள்ளிக்கூட ஆசிரியர்கள், சமயத் தலைவர்கள் சமூக சேவைத் தொண்டு நிறுவனங்களின் தலைவர்கள், தமிழ் உயர் அரசாங்க அதிகாரிகள், சட்டத்தரணிகள், தொழிற் சங்கத் தலைவர்கள் எனப் பல சமூகப் பிரிவினரிடையே பரவலாகவே – வலுவாகவே தமிழர்களுக்கு இன்றைய காலகட்டத்தில் சரியான பலமான அரசியற் தலைமை இல்லை என்ற வகையானதொரு கருத்தைக் காணலாம்.

இலங்கைத் தமிழர்கள் மத்தியில் மட்டுமல்ல தமிழ் மக்களின் அரசியல் உரிமைகள் தொடர்பாக அக்கறை கொண்ட சிங்கள முற்போக்கு சக்திகள் மத்தியிலும் இக்கருத்து பரவியிருக்கிறது. இவ்வாறான கருத்து தமிழகத்திலுள்ள அரசியல் மற்றம் சமூகப் பிரமுகர்கள் மத்தியிலும் பரவப்பட்டிருக்கிறது, ஏன்! டெல்லி மட்டத்தில் இலங்கைத் தமிழர்கள் விடயத்தில் ஈடுபாடுகாட்டி வரும் இந்திய அரசியற் பிரமுகர்கள், ஆய்வாளர்கள் மற்றும் அரசாங்க நிர்வாகிகளிடையேயும் இவ்வாறானதொரு கருத்து தனிப்பட்ட ரீதியிலான கலந்துரையாடல்களின் போது வெளிப்படுவதைக் காணலாம்.

இவ்வாறானதொரு கருத்து சமூகத்தில் படித்தவர்கள் மத்தியில் பரவலாக நிலவுகிறது என்பதற்காகவோ அல்லது பத்திரிகை ஆசிரிகள் எழுதுகிறார்கள், மற்றும் சமயத் தலைவர்கள் சொல்லுகிறார்கள் என்பதற்காகவோ நாம் கட்டாயமாக ஏற்க வேண்டுமென்றில்லை.

'எப்பொருள் யார் யார் வாய்க் கேட்பினும் அப்பொருள் மெய்ப் பொருள் காண்பது அறிவு' இதுவே திருவள்ளுவர் உண்மையைக் கண்டறிவதற்காகக் காட்டும் அறிவுவழி.

இலங்கைத் தமிழர்களுக்கு இன்றைய காலகட்டத்தில் அவர்கள் எதிர்பார்க்கும் - அவர்களின் அரசியற் தேவைகளுக்கு உரிய – அவர்களின் அரசியல்ரீதியான அறிவுக்கும் சிந்தனைகளுக்கும் எண்ணப்பாடுகளுக்கும் பொருத்தமான தலைவர்கள் இப்போது களத்தில் தளத்தில் இருக்கிறார்களா இல்லையா என்பது பற்றிய ஆய்வு ஒருபுறமிருக்க, உண்மையில் இன்றைய தமிழர்கள் கடந்த காலங்களில் தமிழர்களுக்கு அரசியற் தலைமை தாங்கி இறந்து போன அல்லது கொல்லப்பட்டுப்போன தலைவர்களை மனதில் வைத்துக் கொண்டு, அந்தக் கற்பனைகளின் அடிப்படைகளில் தமக்கான இன்றைய அரசியற் தலைமையைத் தேடுகிறார்கள் என்றே நாம் மக்கள் மத்தியில் தற்போது நிலவும் இன்றைய அரசியற் தலைமை பற்றிய கருத்துக்களைப் பரிந்து கொள்ள வேண்டியுள்ளது.

தமிழர்களுக்கு சேர், பொன். இராமநாதன், சேர், பொன், அருணாசலம் போன்ற தலைவர்கள் இன்று தம்மத்தியில் இல்லையே என்று முதிய அறிஞர்கள் ஒரு பகுதியினர் கொண்டிருக்கும் கவலையும் இதில் அடங்கியுள்ளது,

தமிழன் என்று சொல்லடா தலை நிமிர்ந்து நில்லடா என்று நிற்க வைத்த நீதி மன்ற மேதை ஜி ஜி பொன்னம்பலம் மற்றும் அவர் மகன் குமார் பொன்னம்பலம் போல் இன்று தமக்கு ஒரு தலைவர் இல்லையே என்று பழைய தமிழக் காங்கிரஸைச் சேர்ந்த இன்னொரு பகுதியினர் கொண்டிருக்கும் எண்ணமும் இதில் புதைந்துள்ளது.

தமிழர்களுக்கு சமஸ்டித் தமிழரசு கேட்டுப்போராட்டத்தைத் தொடக்கி வைத்த ஈழத்துக்காந்தி தந்தை செல்வநாயகம், கோப்பாய் கோமகன் வன்னிய சிங்கம், சிந்தனைச் சிற்பி கதிரவேற்பிள்ளை, அடங்காத் தமிழன் சுந்தரலிங்கம், இரும்பு மனிதன் நாகநாதன், திருமலை காத்த இராஜவரோதயம், பட்டிருப்பு தந்த இராசமாணிக்கம், அமைச்சர் பதவியையே துச்சமென மதித்துத் தூக்கியெறிந்த இராணி அப்புக்காத்து திருச்செல்வம் போன்ற தலைவர்கள் இன்று தம் மத்தியில் இல்லையே என்று பழ்ம் தழிழரசுக்காரர்களிடம் பகுதியினரிடம் உள்ள ஆதங்கங்களும் அதற்குள்ளே பரவிக்கிடக்கின்றன.

தமிழீழ ஆணையை தமிழர்களிடமிருந்து வென்றெடுத்த தானைத் தளபதி அமிர்தலிங்கம், சிங்கத் தமிழன் சிவசிதம்பரம், அடலேறு ஆலாலசுந்தரம், சமத்துவவாதி தருமலிங்கம், தமிழன் விடிவுக்காகத் தாடி வளர்த்த சாவகச்சேரி வி என் நவரத்தினம், யாழ் மண்ணின் இளைய தளபதி யோகேஸ்வரன், மல்லாக மன்னன் (சந்தனப்) பொட்டர் நடராஜர், மூதூர் தந்த தமிழ் வீரன் தங்கத்துரை என இருந்த தலைவர்களைக் கண்டவர்களுக்கும் அவர்களோடு பழகியவர்களுக்கும் அவர்கள் மாதிரியான தலைமை இன்று தமக்கு இல்லையே என்ற எண்ணமும் இங்கு மிகவும் ஆழமாகவே பதிந்துள்ளது.

அத்தோடு, ஈழமக்கள் புரட்சிகர விடுதலை முன்னணிக்காரர்களுக்கு தோழர் பத்மநாபா மாதிரி ஒருவர் இல்லையே என்ற எண்ணமும், தமிழீழ விடுதலை இயக்கத்தில் இருந்தவர்களுக்கு இன்று தமது தலைவர் சிறீ சபாரட்ணம் போல ஒரு தலைவரில்லையே என்ற எண்ணமும், தமிழீழ மக்கள் விடுதலைக் கழகத்தவர்களுக்கு தமது செயலாளர் நாயகம் உமாமகேஸ்வரன் போல ஒரு தலைவர் இன்று இல்லையே என்ற எண்ணமும் இன்று தமிழர்களுக்கு ஒரு அரசியற் தலைமை என நிலவும் கருத்துக்கு மேலும் ஆள் சேர்க்கின்றன.

இதற்கெல்லாம் மேலாக 1987ம் ஆண்டுக்கும் 2009ம் ஆண்டுக்கும் இடைப்பட்ட இருபது ஆண்டுகளுக்கும் மேற்பட்ட காலகட்டத்தில் தமிழர்கள் மத்தியில் தமிழர்களின் விடுதலைக்கான ஏக தலைவனாக உலகையே ஆட்டி அசைத்து வெருட்டி மிரட்டி வைத்திருந்த அசகாய மாமகா சூரனான பிரபாகரனையே உலகம் முழுவதுவும் பரந்து வாழும் பெரும்பாலான தமிழர்கள் ஏக தேசியத் தலைவனாக எண்ணி அவருக்கு அடங்கி ஒடுங்கி தாழ் பணிந்து வணங்கி வாழ்த்துப்பாடி நின்றார்கள். அவரை சுட்டெரிக்கும் சூரிய தேவனாக சித்தரிக்கும் முயற்சிகள் கூட தமிழ்ப் பெருங்குடியினரால் மேற்கொள்ளப்பட்டன.

பிரபாகரன்; தமிழர்கள் மத்தியில் இருந்த சுயசிந்தனையும் சுயமரியாதையும் கொண்ட சமூக அரசியற் தலைவர்கள் எவரும் இருக்கக் கூடாதென தனக்குக் கிடைத்த எல்லா வாய்ப்புக்களையும் தனது எல்லா வல்லமைகளையும் பாவித்து கொன்றொழித்ததோடு எதிர்காலத்தில் தலைவர்களாக வளரக் கூடியவர்கள் எனக் கருதப்பட்டவர்களையும் தேடித் தேடிக் கொன்றொழித்து தன்னை நேரே எதிர்ப்பார் எவருமில்லாத ஏகபோக தலைவனாக நிலைநாட்டிக் கொண்டார். தமிழர்களும் அவர் மட்டும்தானே தனியே நின்று தலைமை தாங்கி தமிழர்களின் விடுதலைப் போரை முன்னோக்கி நடத்திச் செல்கிறார் என்று சொல்லிக் கொண்டு கைகட்டி வாய் பொத்தி அவரும் அவரது ஆட்கள் எனக் கருதப்பட்டோரும் காலால் இட்ட கட்டளைகளை தலையால் ஏற்று செயற்பட்டுக் கொண்டிருந்தார்கள்.

இவ்வாறு பிரபாகரனைத் தலைவனாகக் கொண்டு புலிகளுக்கு மட்டும் தலைதாழ்த்தி மற்றவர்களுக்கு நெஞ்சை நிமிர்த்தி இருந்தவர்களுக்கு இன்று அந்த வேங்கைக் கொடியோன் பிரபாகரன் இல்லை. அவர்தான் இல்லையென்று போனாலும் பொட்டம்மானாவது இருந்திருந்தால் அல்லது சூசையாவது இருந்திருந்தால் அல்லது கிட்டுவாவது ஒற்றைக் காலுடனாவது இருந்திருந்தால் அந்தப் புலி விசுவாசிகளுக்கு மட்டுமல்ல பெரும்பாலான தமிழச் சமூகப் பிரமுகத் தலைவர்களுக்கும் தமிழ்ப் பத்திரிகையாளர்களுக்கும் கூட தமிழர்களுக்கு இன்று சரியான தலைமை இல்லையே என்ற கவலை ஏற்பட்டிருக்காது.

எனவே இங்கே இலங்கைத் தமிழர்களுக்கான அரசியற் தலைமையில் ஒரு பெரும் வெற்றிடம் நிலவுவதாக உள்ள கருத்தில் புலிகளின் தலைமை முற்றாக அளிக்கப்பட்டுப் போனதினால் ஏற்பட்டுள்ள கவலையே பெருமளவு செல்வாக்குச் செலுத்துகின்றது எனறால் அது மிகையாகாது.

இரா.சம்பந்தர் அவர்கள் 1977க்குப் பின்னர் அரசியல் யாப்பில் அதிகாரப் பகிர்வு விடயங்களில் திரு அமிர்தலிங்கம் அவர்களுக்கே ஆலோசகராக இருந்தவர். திருகோணமலையில் சிறந்த சட்டத்தரணி என்று பேரெடுத்தவர். 1977ம் ஆண்டு; தொடக்கம் பாராளுமன்ற அனுபவம் பெற்றவர். 13வது திருத்தத்தில் நிலம் சம்பந்தப்பட்ட அதிகாரங்களை உள்ளடக்குவதற்கு இந்திய அரசுக்கு ஆலோசகராக இருந்தவரே சம்பந்தர்தான். அப்படிப்பட்டவரை சிறந்த தலைவராகத் தெரியவில்லையா?

திரு. சேனாதிராஜா அவர்கள் 45 ஆண்டுகளுக்கு மேற்பட்ட காலம் தொடர்ச்சியான அரசியல் ஈடுபாடு உடையவர். ஐந்து ஆண்டுகள் தமிழர்களுக்காக சிறை வாசமும் அனுபவித்தவர் சுமார் பதினைந்து ஆண்டு கால பாராளுமன்ற அனுபவமும் உடையவர். 1970களில் அவரது தாய் மற்றும் சகோதரர்களும் தமிழர்களின் போராட்டத்தில் எத்தனையோ பங்குகளை ஆற்றியிருக்கிறார்கள். அவர் இன்றைய தமிழர்களின் அரசியலுக்கு தகுதியான தலைவரில்லையா?

கௌரவ பாராளுமன்ற உறுப்பினர் திரு.சுரேஸ்பிரேமச்சந்திரன் அவர்கள் கடந்த 35 ஆண்டுகாலமாக தமிழர்களின் அரசியலில் தொடர்ந்து இருக்கிறார். கௌரவ பாராளுமன்ற உறுப்பினர்களான திரு.அடைக்கலநாதன் செல்வம் மற்றும் திரு.விநோதராதலிங்கம் அவர்களும் கடந்த 30 ஆண்டுகளாக தமிழர்களின் அரசியலில் செயற்பட்டு வருகிறார்கள். வன்னி மாவட்ட கௌரவ பாராளுமன்ற உறுப்பினர் சிவசக்தி ஆனந்தன் அவர்கள் கடந்த இருபத்தைந்து ஆண்டுகளாக தமிழர்களின் அரசியலில் தொடர்ந்து செயற்பட்டு வருகிறார். இவர்கள் கடந்த 10 ஆண்டுகளுக்கும் மேலாக புலிப் பிரமுகர்களின் அன்பையும் ஆதரவையும் பெற்றவர்கள். இவர்கள் பல தடவைகள் பாராளுமன்ற உறுப்பினர்களாகத் தெரிவு செய்யப்பட்டிருக்கிறார்கள்.

உதயன் நாளெடு மற்றும் சுடரொளி ஆகியவற்றின் உரிமையாளர் சரவணபவனை யாழ்ப்பாணப் பெருமக்கள் ஊடகப் போராளியாக தமிழ் மக்களுக்கு இருபத்தைந்த ஆண்டுகளுக்கு மேலாக சேவை செய்து வருபவர் என்ற அடிப்படையில்த்தானே தெரிவு செய்தார்கள்;.

அதேபோல பாராளுமன்ற உறுப்பினர் சிறீதரன் அவர்கள் யாழ்ப்பாண சமூகத் தலைவர்கள், ஆசிரியர்கள் மற்றும் படித்தவர்கள் மத்தியிலும் வெளிநாடுகளிலுள்ள புலி ஆதரவாளார்கள் மத்தியிலும் இன்று பெரும் மத்திப்புக்கு உள்ளவராக இருக்கிறார். சிறீதரன் அவர்கள் புலிகளின் காலத்தில் பள்ளிக்கூட மாணவர்களிடையே இருந்து புலிகளுக்கு பல நூற்றுக்கணக்கில் போராளிகளைத் திரட்டிக் கொடுத்தவர் என்ற பெருமைக்கும் உரியவராவார்.

வன்னிலுள்ள பெருந்தொகையான கத்தோலிக்க சமயத் தலைவர்கள் கௌரவ நாடாளுமன்ற உறுப்பினர் செல்வம் அடைக்கநாதனையே தமிழர்களின் இன்றைய சிறந்த தலைவராகக் கருதுகிறார்கள்.

திருகோணமலைத் தமிழ்ப் பெருங்குடியினர் திரு.சம்பந்தர் அவர்களைத்தானே தமிழர் ஒற்றுமையின் சின்னமாக பிரபாகரனுக்கப் பின்னர் தமிழர்களின் ஏக தலைவனாகக் கருதுகிறார்கள்.

யாழப்பாணத் தமிழ் பெருங்குடியினர் திரு சேனாதிராஜா அவர்களைத் தானே தந்தை செல்வநாயம், தானைத் தளபதி அமரர் அமிர்தலிங்கம் அவர்களின் அரசியல் வாரிசாகக் கொள்கிறார்கள்

மண்ணெண்ணெய் மகேஸ்வரன் அவர்கள் ஆரம்பத்தில் சோடாப் போத்தலில் மண்ணெண்ணெய் கடத்தும் வியாபாரத்தில் ஈடுபட்டவர் என்று சொல்லப்பட்டாலும் பத்து ஆண்டுகளுக்கு உள்ளேயே இராணுவத்துக்கும் கருவாடு வித்து புலிகளுக்கும் பொருட்கள் கடத்திக் கொடுத்து யாழ்பாணம் மற்றும் கொழும்பில் கடைகள், லொறிகளில் கப்பல்களில் சரக்குப் போக்குவரத்துகள், விமானப் பயண வியாபாரம் என பெருங் கோடீஸ்வரனானார்.. யாழ்ப்பாணத்து வர்த்தகர்கள் அவரது வியாபாரத் திறமைகளை வியந்து பாராட்டுவதை சர்வசாதாரணமாக யாழ்ப்பாணத்தில் கேட்கலாம். இப்போது பாராளுமன்ற உறுப்பினராக இருக்கும் கௌரவ திருமதி மகேஸ்வரன் அவர்கள் திரு மகேஸ்வரனையும் விட வியாபார நுட்பங்கள் கொண்ட திறமைசாலி என யாழ்ப்பாண வர்த்தகர்கள் பரவலாக வாய் திறந்து வாழ்த்துவதை யாழ்ப்பாணக் கடைக்காரர்களிடம் கதை கொடுத்துப் பார்த்தால் கேட்கலாம்..

இங்கு மேலே குறிப்பிட்டவர்களையெல்லாம் தமிழ் மக்கள்தானே தங்கள் மனச்சாட்சிப்படி ரகசிய வாக்குகளால் தெரிவு செய்தார்கள். இவர்கள்தானே இன்றைய தமிழச் சமூகத்தின் அரசியற் தலைவர்கள். இதிற் சந்தேகம் கொள்வது ஜனநாயகரீதியில் எந்தளவு தூரம் சரியானது என்பது கேள்விக்குரியதே.

(பாகம் 2 தொடரும்....)

0 comments :

Copyright www.ilankainet.com All right reserved.
Designed and Hosted By : ilankainet.com
To contact us : ilankainet@gmail.com