நூறு சிறைச்சாலைகளில் அடைத்தாலும் இலட்சியப் பயணம் தொடரும்! பொன்சேகா சூளுரை
ஊழல் அரசியலை இல்லாதொழித்து நாட்டு மக்கள் மகிழ்ச்சிக் கோசம் எழுப்பும் வரையில் எமது பயணம் தொடரும். நாட்டு மக்களுக்காக இரத்தத்தையும் வியர்வையையும் சிந்திய நான் தொடர்ந்தும் நாட்டுக்காக அர்ப்பணிப்புடன் செயற்படவுள்ளேன். நூறு சிறைச்சாலைகளில் தம்மை அடைத்தாலும் பயணத்தைத் தடுத்து நிறுத்த முடியாது.
- இவ்வாறு முன்னாள் இராணுவத் தளபதி சரத் பொன்சேகா தெரிவித்துள்ளார்.
இராணுவ நீதிமன்ற தீர்ப்புத் தொடர்பான வழக்கு விசாரணைகளில் கலந்துகொண்ட போது அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.
இராணுவ நீதிமன்றின் தீர்ப்பை ஜனாதிபதி அங்கீகரித்துள்ளதனால் அதற்கு எதிரான தீர்ப்பு வழங்கக்கூடிய அதிகாரம் மேன்முறையீட்டு நீதிமன்றிற்கு கிடையாது என பிரதி சொலிசிட்டர் ஜெனரல் பிம்பா திலகரட்ண தெரிவித்துள்ளார். இவ்வாறு ஏற்கனவே உச்ச நீதிமன்றினால் வழங்கப்பட்ட மூன்று முக்கிய தீர்ப்புக்களையும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
இதேவேளை இரண்டாவது இராணுவ நீதிமன்றத்தால் முப்படைகளின் முன்னாள் பிரதானி சரத் பொன்சேகாவுக்கு வழங்கப்பட்டுள்ள சிறைத்தண்டனை குறித்து நீதிமன்றில் விசாரணை செய்யமுடியாது என சட்ட மா அதிபர் சார்பில் மேன் முறையீட்டு நீதிமன்றில் நேற்று அறிவிக்கப்பட்டுள்ளது.
இரண்டாவது இராணுவ நீதிமன்றில் தனக்கு விதிக்கப்பட்டுள்ள 30 மாதகால சிறைத்தண்டனைக்கு எதிராக சரத் பொன்சேகா தாக்கல் செய்திருந்த மனு நேற்று விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டபோதே இவ்வாறு கூறப்பட்டுள்ளது.
இரண்டாவது இராணுவ நீதிமன்றில் வழங்கப்பட்ட தீர்ப்பை நாட்டின் தலைவர் மற்றும் முப்படைகளின் தலைவர் என்ற வகையில் ஜனாதிபதி அங்கீகரித்துள்னார் என சட்டமா அதிபர் சார்பில் நீதிமன்றில் கருத்துத் தெரிவித்த அரச பிரதி சட்டத்தரணி சுட்டிக்காட்டியுள்ளார். அதனால் அரசியல் யாப்பு ஏற்பாடுகளுக்கு அமைய இரண்டாவது இராணுவ நீதிமன்றின் தீர்ப்பை நீதிமன்றில் விசாரணை செய்ய முடியாது என அவர் குறிப்பிட்டுள்ளார்.
எனினும் குறித்த தீர்ப்பிலிருந்து நிவாரணம் பெறவேண்டுமாயின் மனுவை ஜனாதிபதியிடம் சமர்ப்பிக்க வேண்டும் என அரச பிரதி சட்டத்தரணி கூறியுள்ளார்.
இதையடுத்து குறித்த வழக்கின் மீதான விசாரணை எதிர்வரும் 23ஆம் திகதிக்கு ஒத்திவைக்கப்பட்டது.
0 comments :
Post a Comment