Tuesday, June 28, 2011

பல்கலைக்கழக பட்டத்தை விற்பனை செய்ய சட்டத்தில் இடமுண்டா: ஐ.தே.க கேள்வி

இலங்கை பல்கலைக்கழகங்களின் பட்டங்களை பணத்திற்கு விற்பதற்கு சட்ட விதிமுறைகள் உள்ளனவா என ஐக்கிய தேசிய கட்சி கேள்வி எழுப்பியுள்ளது. கொழும்பில் இன்று இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின் போது அக்கட்சியின் பொதுச் செயலாளர் திஸ்ஸ அத்தநாயக்க இவ்வாறு கேள்வி எழுப்பியுள்ளார்.

மேலும், வெளிநாட்டு மாணவர்கள் ஆயிரம் பேருக்கு பல்கலைக்கழக வாய்ப்பு வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.பல்கலைக்கழகத்திற்கு பணம் செலுத்தி அதன் மூலமே இந்த வாய்ப்பைப் பெற்றுக் கொடுக்கின்றனர் என அவர் குற்றம்சுமத்தியுள்ளார்.

தொடர்ந்து அவர் ஊடகவியலாளர்களுக்கு கருத்து தெரிவிக்கையில்:-

அரசாங்கமும் பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழுவும் ஒன்றிணைந்து இவ்வாறான செயற்பாட்டிலேயே ஈடுபட்டு வருகிறது. இலங்கை பல்கலைக்கழக பட்டங்களை பணத்திற்கு விற்க பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழுவுடன் இணைந்து அரசு செயற்படுகிறதா,அதற்கு சட்ட விதிமுறைகள் உள்ளனவா என நாம் கேட்கிறோம்.

வருடாந்தம் வழங்கப்படும் பல்கலைக்கழக அனுமதியில் நூற்றுக்கு ஐந்து வீதத்தை பணத்திற்கு விற்கும் அரசின் இத்திட்டத்தை நாம் முழுமையாக எதிர்க்கிறோம். பல்கலைக்கழக கட்டமைப்பின் வாய்ப்புக்களை பணத்திற்கு விற்கும் முதல் நடவடிக்கையே இது.

இந்த நாட்டின் நடுத்தர மக்களது பிள்ளைகளின் பல்கலைக்கழக வாய்ப்பை இதன்மூலம் தட்டிப் பறிக்கின்றனர். பல்கலைக்கழக அனுமதி பெறமுடிந்த வகையில் சாதராண நிலை மாணவர்களுக்கு திட்டங்களை வகுக்காமல் தேசிய பல்கலைக்கழக கட்டமைப்பின் ஒரு பகுதியை விற்கும் இத்திட்டம் அரசின் கொள்ளையை நன்கு தெளிவுபடுத்துகிறது. இதனை நாம் முற்றாக மறுக்கிறோம்.

0 comments :

Copyright www.ilankainet.com All right reserved.
Designed and Hosted By : ilankainet.com
To contact us : ilankainet@gmail.com