Saturday, June 25, 2011

ருவாண்டா இனப்படுகொலை குற்றவாளிக்கு ஆயுள் தண்டனை!

ருவாண்டா இனப்படுகொலை தொடர்பான ஐநா அனுசரணை நீதிமன்றம் அந்நாட்டின் முன்னாள் அமைச்சர் ஒருவருக்கு, இனப்படுகொலை மற்றும் பாலியல் வல்லுறவு சம்பவங்களைத் தூண்டியமை உள்ளிட்ட குற்றங்களுக்காக ஆயுட் தண்டனை அளித்து தீர்ப்பளி்த்துள்ளது.

போலின் நீராமாசுஹூக்கோவுக்கு எதிரான வழக்கு 2001ம் ஆண்டில் தொடங்கப்பட்டது. தான்ஸானியாவில் அமைக்கப்பட்ட சிறப்பு நீதிமன்றத்தில் மூன்று நீதிபதிகளடங்கிய குழுவொன்று, இந்த தீர்ப்பை வழங்கி வழக்குக்கு முற்றுப்புள்ளி வைத்துள்ளது.

சிக்கல்கள் நிறைந்திருந்த இந்த வழக்கு நீண்டநாளாகவே பெரும் இழுபறியாக இருந்து வந்தது. வழக்கு ருவாண்டாவில் கூட நடக்கவில்லை. பல நூறு கிலோமீற்றர்களுக்கு அப்பால் தான்சானியா நகர் அருஷாவில் வழக்கு நடத்தப்பட்டது.

வழக்கு முடிவில், போலின் நீராமாசுஹூக்கோவுடன் அவரது மகன் உட்பட இன்னும் ஐந்து பேரும் குற்றவாளிகள் என அறிவிக்கப்பட்டுள்ளனர்.

சூடானில் புட்டாரே பிராந்தியத்தில் படுகொலைகளைப் புரிந்த ஆயுதக் குழுக்களை அமைப்பதில் பங்கெடுத்துள்ள முன்னாள் குடும்ப நலத்துறை அமைச்சர் போலின், அந்தக் குழுக்களின் அட்டூழியங்களை மேற்பார்வையும் செய்துள்ளதாக குற்றஞ்சாட்டப்பட்டது.

1994ம் ஆண்டு ருவாண்டா இனப்படுகொலை காலத்தில் டுட்ஸி சிறுபான்மை இன மக்கள் மற்றும் பெரும்பான்மை ஹூட்டு இன மக்களில் தாராளவாதப் போக்குடையவர்கள் என சுமார் எட்டு லட்சம் பேர் கொன்று குவிக்கப்பட்டனர்.

ருவாண்டா தொடர்பான ஐநா அனுசரணையுடனான சர்வதேச குற்றவியல் நீதிமன்றம் முதற்தடவையாக ருவாண்டா இனப்படுகொலைக்காக பெண்ணொருவரை குற்றவாளியாக உறுதிப்படுத்தியுள்ளது.

ருவாண்டா இனப்படுகொலைக்குப் பின்னர், அண்டை நாடான கொங்கோ ஜனநாயகக் குடியரசுக்கு தப்பிச் சென்றிருந்த போலின், 1997ம் ஆண்டில் கென்யாவில் கைதுசெய்யப்பட்டார்.

65 வயதான போலின் நீராமாசுஹூக்கோ, அவரது எஞ்சிய காலத்தை சிறையில் கழிப்பார்.

0 comments :

Copyright www.ilankainet.com All right reserved.
Designed and Hosted By : ilankainet.com
To contact us : ilankainet@gmail.com