Friday, June 17, 2011

இலங்கை போர்க்குற்றம்: ஐ.நா.விசாரிக்க இங்கிலாந்து பிரதமர் கோரிக்கைமீண்டும்

இலங்கை உள்நாட்டுப் போரில் நடந்த போர்க் குற்றங்கள் குறித்து சிறிலங்க அரசும், ஐ.நா.வும் விசாரணை நடத்த வேண்டும் என்று கோரியுள்ள இங்கிலாந்து பிரதமர் டேவிட் கேமரூன், அங்கு நடந்தது என்ன என்பதை ஆழமாக சென்று பார்க்கவேண்டும், அதிலிருந்து பாடங்களை கற்க வேண்டும் என்று கூறியுள்ளார்.

இங்கிலாந்து நாடாளுமன்றத்தில் பேசிய கன்சர்வேடிவ் கட்சியைச் சேர்ந்த உறுப்பினர் லீ ஸ்காட், “இலங்கைத் தமிழ் மக்களுக்காகவும், அங்கு நடந்த போரில் கொல்லப்பட்டவர்களுக்காகவும் நீ கோரும் எனது குரலுக்கு இங்கிலாந்து பிரதமர் ஆதரவளிப்பாரா” என்று வினவினார்.

அதற்கு பதிலளித்துப் பேசிய பிரதமர் டேவிட் கேமரூன், “நான் அந்த ஆவணப் படத்தை (சானல் 4 வெளியிட்டது) பார்க்கவில்லை, இலங்கையில் நடந்த போரின் இறுதிக் கட்டத்தில் நடந்த மிகவும் கவலையளிக்க்கூடிய நிகழ்வுகளின் பதிவாக அந்த படம் இருந்தது என்பதை கேள்விப்பட்டேன்” என்று கூறியுள்ளார்.

“இங்கிலாந்து அரசு, மற்ற நாடுகளின் அரசுகளுடன் இணைந்து கேட்பதெல்லாம், அது குறித்து இலங்கை அரசு விசாரணை நடத்த வேண்டும் என்பதும், ஐ.நா. அது குறித்து விசாரணை நடத்த வேண்டும் என்பதும், அதன் மூலம் அங்கு நடந்த போரைப் பற்றி ஆழமான உண்மைகள் வெளிக்கொணரப்பட வேண்டும் என்பதே” என்றும் டேவிட் கேமரூன் கூறியுள்ளார்.

சானல் 4 ஒளிபரப்பிய இலங்கையின் கொலைக்களம் என்கிற அந்த காணொளியைக் கண்ட இங்கிலாந்து அயலுறவு அமைச்சர் அலிஸ்டர் பர்ட், அந்தப் படத்தைக் கண்டு தான் அதிர்ச்சியுற்றதாகவும், அங்கு நடந்த போர்க் குற்றங்கள் குறித்து சிறிலங்க அரசு விரிவான விசாரணை நடத்த வேண்டும் என்றும், அதைச் செய்யத் தவறினால், ஐ.நா. அப்படிப்பட்ட ஒரு விசாரணையை முன்னெடுக்க வேண்டும் என்றும், அதற்கு இங்கிலாந்து அரசு முழுமையாக ஆதரவளிக்கும் என்றும் கூறியுள்ளார்.

“இலங்கையில் நடந்த போர் குறித்து ஆய்வு செய்த ஐ.நா.நிபுணர் குழுவும், சானல் 4 வெளியிட்டுள்ள காணொளிப் பதிவுகளும் அங்கு பன்னாட்டு மனிதாபிமான சட்டங்களும், மனித உரிமை மீறல்களும் நடந்துள்ளன என்பதற்கு போதுமான ஆதாரங்களாகும்” என்று பர்ட் கூறியுள்ளார்.

0 comments :

Copyright www.ilankainet.com All right reserved.
Designed and Hosted By : ilankainet.com
To contact us : ilankainet@gmail.com