இலங்கையில் சிறார் தொழிலாளர்
இலங்கையின் சிறார்களில் 18 வீதமானோர் சிறார் தொழிலாளர்களாக பயன்படுத்தப்படுவதாக சிறார் தொழிலாளர்கள் குறித்து ஆராய்ந்த வல்லுனர்கள் கூறுகிறார்கள். சர்வதேச மட்டத்தில் ஒவ்வொரு ஆண்டும் ஜூஉன் 12 ஆம் திகதி சிறார் தொழிலாளர் முறையை ஒழிப்பதற்கான தினமாகக் கடைப்பிடிக்கப்படுகிறது.
அதனை முன்னிட்டு இலங்கை நிலைமைகள் குறித்து கருத்து வெளியிட்ட கண்டி பேராதனை பல்கலைக்கழகத்தின் சிரேஷ்ட்ட விரிவுரையாளரான எஸ். விஜயச்சந்திரன் அவர்கள், இலங்கையில் குறிப்பாக மலையகப் பகுதியில் பெருந்தோட்டங்களில் 29.1 வீதமான சிறார்கள் தொழிலாளர்களாக இருப்பதாகவும் கூறினார் விரிவாக பெருந்தோட்டங்களிலும், அதனையடுத்து கடந்த பல தசாப்தங்களாக போர் நடந்த வடக்கு கிழக்கிலும், தலைநகர் கொழும்பை அண்டிய குடிசைப் புறங்களிலும் சிறார் தொழிலார்கள் அதிகமாக இருப்பதாகவும் அவர் குறிப்பிட்டார்.
இலங்கை அரசாங்கம் சிறார் தொழிலாளர் முறைமையை ஒழிப்பதற்கான பல நடவடிக்கைகளை எடுத்திருக்கின்ற போதிலும் அவை பலவீனமாக இருப்பதாகவும் விஜயச்சந்திரன் கூறினார்.
இலங்கையில் சுமார் முப்பதினாயிரம் சிறார்கள் சுற்றுலாத்துறையில் பாலியல் தொழிலாளர்களாக பயன்படுத்தப்படுவதாகவும் அவர் குறிப்பிட்டார்.
இருப்பினும் ஒப்பீட்டளவில் அண்டை நாடுகளான இந்தியா, பாகிஸ்தான் மற்றும் வங்கதேசத்தை விட இலங்கையில் சிறார் தொழிலாளர்கள் குறைவாகவே இருப்பதாகவும் அவர் கூறினார். இலங்கையில் காணப்படும் கட்டாயக் கல்வி முறைமை, பள்ளிக்கூடங்களின் ஆழமான வலையமைப்பு மற்றும் அதிக பெற்றோர்கள் கல்வியறிவு பெற்றிருத்தல் ஆகியவை இதற்கான காரணமாக இருக்கலாம் என்றும் அவர் கூறினார். -BBC
0 comments :
Post a Comment