அரசியல் சாணக்கியம் இன்மையால் இன்று ஜெயலலிதா காலில் விழாத குறை. TNA
தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் அண்மைக்காலச் செயல்பாடுகள் குறித்துத் தமிழ் மக்கள் மத்தியில் அதிர்ச்சியும், கவலையும் எழுந்துள்ளன. அரசாங்கத்துடன் பேச்சுவார்த்தை நடத்துவதாகக் கூறி இதுவரை ஆறு சுற்றுப் பேச்சுக்களை நடத்திவிட்டனர். ஆனால் இதுவரை எந்தவொரு ஆக்கபூர்வமான சிறியதொரு விடயத்தையும் இவர்களால் அரசாங் கத்திடமிருந்து வென்றெடுக்க முடியாம லுள்ளது. காரணம் பேச்சுக்களின்போது இவ ர்கள் காத்திரமான எந்தவொரு விடயத்தி னையும் முன்வைப்பது கிடையாது.
அரசுடன் பேச்சுவார்த்தையை நடத்திவிட்டு வெளியே வந்து தமக்குச் சார்பான உள்ளூர் ஊடகங்களுக்கும் புலம்பெயர் சமூகத்திற்காகவும், புலிகளுக்காகவும் இயங்கிவரும் முகவரியில்லாத இணையத் தளங்களுக்கும் அரசாங்கத்தை விமர்சித்து தாறுமாறாக அறிக்கைகளை விடுவர். பேச்சுவார்த்தை தொடர்பான விடயங்களை ஊடகங்களுக்கு வெளியிடக் கூடாது என உள்ளே முடிவெடுத்துவிட்டு அதனை மீறிச் செயற்படும் வகையில் கூட்டமைப்பின் உறுப்பினர்கள் நடந்து கொள்கின்றனர். இது அரசாங்கத்தைச் சீண்டுவதுடன் வெறுப்பையும் நிச்சயம் ஏற்படுத்தும்.
தமிழ் ஊடகங்களில் கருத்துத் தெரிவித்தால் அரசிற்குத் தெரிய வராது என நினைப்பதுடன் தமிழ் மக்களையும் திருப்திப்படுத்தலாம் என இவர்கள் நினைத்துச் செயற்படுவது போலவே உள்ளது. ஆனால் அரசாங்கம் சகலவற்றையும் அறிந்து வருகிறது என்பது இவர்களுக்குத் தெரியாமலுள்ளது போலும்.
கடந்த இரு வாரங்களுக்கு முன்னர் இடம்பெற்ற ஆறாவது சுற்றுப் பேச்சுவார்த்தையின் பின்னர் சுரேஸ் பிரேமச்சந்திரன் எம்.பி ஊடகங்களுக்குத் தெரிவித்த ஒரு கருத்தில் இனிவரும் காலங்களில் அரசுடனான பேச்சுக்கள் இறுக்கமானதாகவே இருக்கும் எனவும், முடிவெடுக்கும் வகையில் பேச்சுக்களை எமது அணியினர் கடினமாகக் கடைப்பிடிப்பர் எனவும் தெரிவித்திருந்தார்.
இச்செய்தியினை வழமைபோல அவர்களுக்குத் தாளம் போடும் ஊடகங்களும், இணையத்தளங்களும் முதல் பக்கத்தில் முக்கிய செய்தியாக அவரது படத்துடன் பிரசுரித்திருந்தன. இதேபோன்றுதான் மாவை சேனாதிராஜா எம்.பி, சுமந்திரன் எம்.பி, அரியநேத்திரன் எம்.பி என அவர் களும் தமது பங்களிப்பை தமக்குச் சார்பா கத் தெரிவித்திருந்தனர். ஆனால் இம்முறை மக்கள் இதனைப் பெரிதாக அலட்டிக் கொள்ளவில்லை. பேச்சுக்குப் போவதும் வந்து இப்படி ஒரு அறிக்கையை விடுவதும் வழமையாகி விட்டது. மக்களுக்கும் இதைக் கேட்டும், பார்த்தும் சலித்துப் போய்விட்டது. இதுவரை உருப்படியாக இதனை மட்டுமே கூட்டமைப்பு செய்து வருகிறது என்பதை மக்கள் நன்கு புரிந்துவிட்டனர்.
அரசாங்கத்தை இவ்வாறு கடுமையான தொனியில் விமர்சித்துவரும் கூட்டமைப்பு எவ்வாறு அரசுடன் உண்மையான பேச்சுவார்த்தையில் கலந்து கொள்ள முடியும் என்பதில் பலருக்கும் சந்தேகம் உள்ளது. தமிழ் மக்களது பிரச்சினைகளில் அக்கறையுடன் செயற்படும் அனைத்துக் கட்சிகளினதும் கருத்துக்களை உள்வாங்கியே தீர்வு காணப்பட வேண்டும் என்பதில் அரசாங்கம் மீண்டும் உறுதியாக உள்ளதாகத் தெரிவித்துள்ளது. அத்துடன் தமிழ்க் கூட்டமைப்பு தமிழ் மக்களின் ஏகப் பிரதிநிதிகள் அல்லர் என்றும் அரசாங்கம் தெரிவித்துள்ளது. ஜனாதிபதியே இதனை ஒரு கூட்டத்தில் தெரிவித்துள்ளார்.
இந்நிலையில் கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர்கள் தமிழகத்தின் புதிய முதல்வர் செல்வி ஜெயலலிதா ஜெயராமிற்கு வாழ்த்துச் செய்திகளை அனுப்பிய வண்ணம் உள்ளனர். கட்சியின் சார்பாக ஒரு வாழ்த்துக் கடிதத்தினை அனுப்பாது ஒவ்வொரு உறுப்பினர்களும் தனித்தனியாக அனுப்பி வைத்துள்ளனர். அதிலிருந்தே புதிய தமிழக அரசு இவர்களது ஒற்றுமையை நன்கு அறிந்திருக்கும்.
இந்தியாவிலிருக்கும் தமது சொந்தபந்தங்க ளுக்கு முதல்வரால் எவ்விதமான இடையூறும் வந்துவிடக் கூடாது எனும் காரணத்தினாலேயே வாழ்த்துக் கடிதங்கள் தனித்தனியாகப் பறந்தன. அதில் தமிழ் மக்களை ஏமாற்றுவதற்காக இலங்கைத் தமிழர் குறித்தும் இரண்டு வார்த்தைகளை எழுதியிருக்கிறார்கள்.
இதுவரை காலமும் கருணாநிதி புகழ் பாடியவர்கள் இப்போது அம்மா புகழ் பாட முற்பட்டுள்ளனர். தமிழ்க் கூட்டமைப்பு முதிர்ச்சியான தலைவர்களைக் கொண்டிருந்தாலும் அவர்கள் அரசியலில் முதிர்ச்சி காணவில்லை என்பதை அவர்களது கடந்த கால இந்திய விஜயங்கள் உணர்த்தி நிற்கின்றன. அதாவது டெல்லி சென்றாலும் சரி, தமிழகம் சென்றாலும் சரி ஆட்சியிலிருக்கும் அணியை மட்டும் பார்த்துப் பேசிவிட்டு வந்துவிடுவர்.
அதனால்தான் ஆட்சி மாற்றம் ஏற்பட்டதும் அவசரமாகச் சென்று அடுத்தவர் கால்களில் விழ வேண்டி வருகிறது. இது தமிழ்க் கூட்டமைப்பினரிடையே அரசியல் சாணக்கியம் இல்லாதிருப்பதை உணர்த்துகிறது. இன்று ஜெயலலிதாவை இவ்வளவு தூரம் இறங்கிச் சென்று கும்பிட வேண்டிய தேவை அன்று அவர் எதிர்க்கட்சியில் இருந்த போதும் சந்தித்துரையாடியிருந்தால் ஏற்பட்டிருக்காது.
இதையே பெரும்பான்மையின அரசியல் வாதிகளிடம் காண முடியாது. மாறாக அவர்கள் தமிழகம் சென்றால் முதல்வரையும் சந்தித்து எதிர்க் கட்சித் தலைவரையும் சந்திப்பர். அதேபோன்று புதுடில்லி சென்றாலும் பிரதமர், ஜனாதிபதி ஆகியோரைச் சந்திப்பதுடன் எதிர்க்கட்சித் தலைவரையும் சந்தித்து உரையாடி நாடு திரும்புவர். அது எமது நாட்டின் ஜனாதிபதி மற்றும் எதிர்க்கட்சித் தலைவர் ஆகியோரது கொள்கையாக உள்ளது. அதுவே உண்மையான அரசியல் தலைமைக்கு அடையாளம். இதனைக் கூட்டமைப்பிலிலுள்ள எந்தத் தலைவரும் புரிந்து கொள்ளவில்லை.
தமிழ்க் கூட்டமைப்பிற்குள் இன்று ஏற்பட்டுள்ள உட்பூசல் நிலை காரணமாக மக்களுக்கு அவர்கள் மீது மேலும் வெறுப்பு ஏற்பட்டுள்ளது. தமக்குள் ஒருவரை ஒருவர் வசைபாடுவதும் தலைமைக்குக் கட்டுப்படாமல் தமது போக்கில் நடந்து கொள்வதுமான நிலையே இன்று கூட்டமைப்பில் காணப்படுகிறது. இதற்குக் காரணம் எல்லோரும் தலைவராக வரும் எண்ணம் கொண்டுள்ளதே.
சம்பந்தன் ஐயாவிற்குப் பின்னர் அடுத்த தலைவராவது யார் என்பதில் பலர் குறியாக உள்ளனர். இதற்காகவே அவர்கள் ஊடக பிரசார போட்டியில் குதித்துள்ளனர். தத்தமது இணையத்தளங்களிலும், தத்தமது பத்திரிகைகளிலும் போட்டிபோட்டு மக்களுக்குச் சேவை செய்வது போலப் பாசாங்கு செய்து விளம்பரம் செய்கின்றனர்.
தம்மைக் கடந்த தேர்தலில் தெரிவு செய்த மக்களுக்கு இன்றுவரை செய்த ஒரு சிறு சேவையையாவது இவர்கள் ஒவ்வொருவராலும் பட்டியலிட்டுக் காட்ட முடியுமா? அல்லது தமது ஊடகங்களில் வெளிக்கொண்டு வர முடியுமா? ஒவ்வொரு உறுப்பினர்களுக்கும் அரசாங்கம் வருடா வருடம் பன்முகப்படுத்தப்பட்ட நிதியாக ஐம்பது லட்ச ரூபாவை வழங்கி வருகிறது. கூட்டமைப்பின் எத்தனையோ உறுப்பினர்கள் எத்தனையோ வருடங்கள் பாராளுமன்ற உறுப்பினர்களாக இருந்து வருகின்றனர். நிதிகளிலிருந்து இவர்கள் தமிழ் மக்களுக்குச் செய்த சேவைதான் என்ன?
உண்மையில் இப்போது தமிழ் மக்கள் பற்றிச் சிந்திக்க கூட்டமைப்பினருக்கு நேரம் கிடைப்பதில்லை. தமக்கும் தமது குடும்பத்தாருக்கும் வேறென்ன சலுகையை இந்த அரசிடமிருந்து பெற்றுக்கொள்ளலாம் என்பது பற்றிச் சிந்திக்கவே இவர்களுக்கு நேரம் போதாமலுள்ளது. இதற்காகத்தான் இவர்கள் அரசாங்கத்துடன் பேச்சுவார்த்தையை நடத்துகின்றார்களோ எனும் சந்தேகமும் எழுந்துள்ளது.
இந்தக் கூட்டமைப்பிலுள்ள எத்தனை தலைவர்களது பிள்ளைகள் விடுதலைப் போராட்டத்தில் கலந்து கொண்டனர். அல்லது ஒரு சிறு பங்களிப்பையாவது செய்துள்ளனர்? எல்லோரும் வெளிநாடுகளில் சுகபோக வாழ்க்கையை வாழ்ந்து வருகின்றனர். சம்பந்தன் ஐயாவினது அல்லது மாவை சேனாதிராஜாவினது அல்லது எவராவது ஒருவரது பிள்ளையாவது அல்லது பேரப்பிள்ளையாவது இயக்கங்கள் நடத்திய போராட்டத்தில் இணைந்து காயமடைந்தனரா? அல்லது உயிரை விட்டுள்ளனரா? அல்லது ஊரில் ஒரு பொதுமகனாகத் தங்கி உயிரை விடவேண்டாம் சிறு காயமாவது அடைந்திருக்கிறார்களா?
கூட்டமைப்பு முக்கியஸ்தர் ஒருவரின் மூன்று பிள்ளைகளில் இருவர் பொறியியலாளர்கள், ஒருவர் வைத்தியர். மூவரும் இந்தியாவின் உதவியுடன் அங்கு இலவசமாகத் தங்கி படித்துப் பட்டம் பெற்று அங்கேயே சுகமாக வாழ்ந்து வருகின்றனர். இந்நிலையில் இவர் ஆட்சிக்கு வருபவர்களின் கைகளை மட்டுமல்ல கால்களைக் கூடப் பிடிக்கத்தான் வேண்டும். இல்லாவிட்டால் இந்தியாவில் இவரது குடும்பம் ஆட்டம் கண்டுவிடும். அதனால் அவருக்கு தமிழ் மக்களை விடத் தான் பெற்றெடுத்த மக்களின் நலனே முக்கியம்.
இதேபோன்றுதான் முன்னாள் போராளியாக இருந்த இன்னொரு கூட்டமைப்பின் முக்கியஸ்தரின் குடும்பத்தினர் கனடா பிரஜைகளாகிவிட்டனர். எனினும் தற்போது இந்தியாவில் வந்து தங்கியுள்ளனர். இவராலும் எப்படி இந்தியாவை விமர்சிக்க முடியும். அறிக்கைகள் மூலம் தமிழ் மக்களைத் திருப்திப்படுத்திவிட்டு அவர் இந்தியாவைத் திருப்திப்படுத்த வேண்டிய நிலையிலுள்ளார். இதுதான் இன்றைய தமிழ்க் கூட்டமைப்பின் நிலையாக உள்ளது.
ஊரான் பிள்ளைக்கு போராட்டம் உன் பிள்ளைகளுக்கு கொண்டாட்டம், ஊரான் பிள்ளைகள் கைகளில் ஆயுதம், உன் பிள்ளைகள் கைகளில் ஆங்கில பாடப் புத்தகங்கள். ஏன் இந்த மக்களை ஏமாற்றும் நடிப்பு.
அப்போது இவர்களுக்கு எப்படி தமிழ் மக்களது உணர்வுகளும், கஷ்டங்களும், அவல வாழ்வும் புரியும்? வடக்கு, கிழக்குப் பகுதிகளில் அடுத்த நேரத்திற்கு உணவிற்காகப் பாடுபடும் அப்பாவித் தமிழ் மக்களின் வாக்குகளை ஆசை வார்த்தை மூலமாக அபகரித்து கொழும்பில் இவர்கள் சொகுசு வாழ்க்கை நடத்துவது மிகவும் மனவருத்தமான விடயம்.
தமிழ் மக்கள் இன்று பழம்பெரும் தமிழ்க் கட்சிகள் மீது மிகவும் வெறுப்புற்றுக் காணப்படுகின்றனர். அதனால் புதிதாக மாற்றுக் கட்சியையும், துடிப்புள்ள தலைவர்களையும் காணத் துடிக்கிறார்கள். புலி இருக்கும்போது பாடிய அதே பல்லவியைப் பாடிக் கொண்டு அரசாங்கத்தின் சலுகைகளை மக்களுக்குக் கிடைக்கவிடாதுள்ளது டன், அரசின் அபிவிருத்தித் திட்டங்களுக்கும் முட்டுக்கட்டை கொடுத்துக் கொண்டு தாம் மட்டும் சகல பாராளுமன்ற வரப்பிரசாதங் களையும் குறைவில்லாது அனுபவித்துவரும் தமிழ்க் கட்சிகளின் தலைவர்களை தமிழ் மக்கள் வெறுத்து ஒதுக்கத் தொடங்கியுள்ளனர்.
அரசாங்கத்திற்கு தமது நல்லெண்ணத்தைக் காட்டுகின்றோம் எனப் புறப்பட்டு இன்று அரசாங்கத்தின் மீது வசைபாடும் வேலையிலேயே கூட்டமைப்பு ஈடுபட்டு வருகின்றது. குறிப்பாக தமிழ் மக்கள் தொடர்பாக கலந்துரையாடப் பல விடயங்கள் உள்ளன. அவை தொடர்பாக எதுவுமே பேசப்படுவதில்லை. முயற்சி எடுப்பதுவும் இல்லை. இறுதி யுத்தத்தின் போது பாதிக்கப்பட்ட மக்கள் இன்னமும் முழுமையாக இயல்பு வாழ்வுக்குத் திரும்பவில்லை. பலரைத் தேடி இன்றும் அவர்களது உறவுகள் அங்கும் இங்கும் அலைகின்றன. இவற்றைத் துரிதப்படுத்தி தமது மக்களுக்கு உதவுமாறு அரசாங்கத்திடம் கூட்டமைப்பினர் எப்போதாவது கேட்டார்களா? அரசாங்கமே கருணையுடன் அவை தொடர்பாக தீவிர கவனம் செலுத்தி செயற்பட்டு வருகின்றது.
கூட்டமைப்பு ஒரு கொள்கையில்லாது செயற்பட்டு வருவதாக இப்போது பலரும் வெளிப்படையாகவே விசனம் தெரிவிக்கத் தொடங்கியுள்ளனர். தற்போது வடக்கில் மீண்டும் தேர்தல் தொடர்பாக கதைக்கப்படுவதால் கூட்டமைப்புப் பிரதிநிதிகளின் செயற்பாடுகள் அப்பகுதியில் சற்று தடல்புடலாகக் காணப்படுகின்றன. ஆனால் மீள்குடியேற்றம், குடியேறியுள்ள மக்களுக்குள்ள குறைபாடுகள், சரணடைந்த இளைஞர்களின் நிலை, சிறையில் வாடும் அப்பாவித் தமிழ் இளைஞர், யுவதிகளின் நிலை தொடர்பாக எவ்விதமான அக்கறையும் இவர்களுக்கு இல்லை போலவே தெரிகிறது.
அப்படியே யாராவது ஞாபகப்படுத்தினால் ஒரு அறிக்கையை அல்லது கடிதத்தை எழுதி இவர்கள் தமிழ் ஊடகங்களுக்கு வழமைபோல அனுப்பி வைத்துவிடுவர். அவர்களுக்கும் செய்தி வேண்டுமே. தலைப்புச் செய்தியாகக் கூடப் பிரசுரித்து விடுவர். அந்தக் கடிதம் ஜனாதிபதிக்கோ அல்லது சம்பந்தப்பட்ட அமைச்சருக்கோ கிடைக்குதோ இல்லையோ பத்திரிகைகளுக்கு சரியான நேரத்திற்கு அனுப்பி வைக்கப்பட்டு அது கிடைத்ததா என உறுதியும் செய்யப்பட்டு முக்கியத்துவம் அளித்துப் பிரசுரிக்குமாறும் கேட்டுவிட்டுத்தான் மற்ற வேலை.
1 comments :
தமிழ் தேசியக் கூட்டமைப்பின் குள்ள நரித்தனத்தை இந்தக் கட்டுரை சரியாக விளக்கியுள்ளது
Post a Comment