Thursday, May 26, 2011

கேபி அரச கைதி : நான் அரசியல் கைதி - சரத் பொன்சேகா கவலை

என்னோடு கைது செய்யப்பட்ட கேபி அரச கைதியாகவும் நான் அரசியல் கைதியாகவும் சிறைவைக்கப்பட்டுள்ளேன் என முப்படைகளின் முன்னாள் பிரதானி சரத் பொன்சேகா தெரிவித்துள்ளார். வெள்ளைக் கொடி விவகார வழக்கில் இன்று 5ம் நாளாக சாட்சியமளிக்கையிலேயே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.

மேலும் அவர் அங்கு சாட்சியமளிக்கையில்:-

அரசியல் பழிவாங்கல் நோக்கத்துக்காகவே நான் சிறை வைக்கப்பட்டுள்ளேன். இராணுவ நீதிமன்றில் நடந்த விடயங்கள் ஊடகங்களின் ஊடக வெளியிட அனுமதி மறுக்கப்பட்டது. அத்தோடு இராணுவ நீதிமன்றில் சட்டத்தரணிகளுடன் கலந்துரையாட எனக்கு இடமளிக்கப்படவில்லை. இராணுவ நீதிமன்றின் தலைவராக ஜனாதிபதிக்கும் பாதுகாப்பு செயலாளருக்கும் தேவைக்கேற்ப செயற்படக் கூடியவர்கள் நியமிக்கப்பட்டனர்.

என்னை சிறையில் அடைத்து வைத்தாலும் எனது அரசியல் கொள்கைகள் மாறாது அதனை அழிக்கவும் முடியாது. சுயாதீன நீதிமன்றமோ அல்லது இயற்கையோ என்னை இவ்வாறு குற்றவாளி கூண்டில் நிறுத்தியவர்களை சரியான நேரத்தில் தண்டிக்கும். இது நிச்சயம்.

பிரதம நீதியரசராக புதியவர் ஒருவர் பதவியேற்றுள்ளார். நீதிமன்ற 19ம் இலக்க அரசியலமைப்பு சீர்திருத்தத்தினை அரசாங்கம் கொண்டுவர முயல்கிறது. இதன் மூலம் ஜனாதிபதி நீதிமன்ற கட்டமைப்பின் சகல அதிகாரங்களையும் பெற முயற்சிக்கிறார்.

நீதிமன்ற கட்டமைப்பும் நீதிச் சேவைகள் ஆணைக்குழுவும் ஜனாதிபதியின் கைப்பிடிக்குள் மாற்றுவதற்கு ஜனாதிபதி முயல்கிறார். ஐக்கிய நாடுகளினாலும் சர்வதேச சமூகங்களினாலும் இலங்கைக்கு எதிராக முன்வைக்கப்பட்டுள்ள இராணுவம் தொடர்பான அனைத்து குற்றச்சாட்டுக்களுக்கும் பதிலளிக்க கூடிய சரியான நபர் நானே.

என்றும் நான் மக்களின் ஜெனரல் சரத் பொன்சேகா. நாட்டை மீட்டெடுத்த எனக்கோ அரசியல் கைதியாக பட்டம் சூட்டப்பட்டுள்ளது.நான் இராணுவ தலைவராக பதவியேற்றதன் பின்னர் எனக்கு அடுத்து வரும் இராணுவத் தளபதிக்கு யுத்த சூழ்நிலையை மீதம் வைக்க மாட்டேன் என உறுதியளித்திருந்தேன்.அந்த வாக்குறுதியை நான் நிறைவேற்றியிருந்தேன். அந்த வாக்குறுதியை நான் நிறைவேற்றி இருக்காவிட்டால் இன்னும் யுத்தம் தொடர்ந்து இருக்கும்.

நான் எனது கண்காணிப்பால் திறமை மிக்க அதிகாரிகளாக மாற்றிய பல இராணுவ அதிகாரிகளை அரசாங்கம் பழிவாங்கியுள்ளது. அவர்களுக்கு ஓய்வூதியம் கூட மறுக்கப்பட்டுள்ளது. ஆனால் சவேந்திர சில்வா போன்ற பலவீனமுற்ற அதிகாரிகளுக்கு வெளிநாடுகளில் சிறந்த பதவிகளும், பதவி உயர்வுகளும் வழங்கப்பட்டுள்ளது.

ஊடகவியலாளர் லசந்த விக்கிரமதுங்கவின் கொலைக்கு என்னையும் ஒரு குற்றவாளியாக மாற்ற அரசாங்கம் பல முயற்சிகளை மேற்கொண்டது. இதன் ஒரு கட்டமாக முன்னாள் குற்றப்புலனாய்வுத் துறையின் அதிகாரி ஒருவரை விலை கொடுத்து வாங்க முயற்சித்தது.

ஆனால் அவர் நீதிமன்றில் சாட்சியமளிக்கும் போது "இராணுவ அதிகாரி ஒருவர் பணம் கொடுப்பதாகவும், சுகபோகங்களுடன் வெளிநாட்டு வாழ்கையை பெற்று தருவதாகவும் உறுதியளித்ததாகவும் சரத் பொன்சேகாவினை லசந்த விக்ரமதுங்கவின் கொலையுடன் தொடர்புபடுத்த ஆலோசனை வழங்கினார்"என அவர் சாட்சிமளித்தார்.

இதனால் வெள்ளைக் கொடி வழக்கில் சாட்சிமளிக்க வந்தவர்களும் அரசாங்கத்தினால் விலை கொடுத்து வாங்கப்பட்டவர்கள் என நான் சந்தேகிக்கிறேன். என்றார்.

இன்றைய சாட்சியமளிப்பினை கருத்திற் கொண்ட தீபாலி விஜேசுந்தர தலைமையிலான நீதயரசர் அடங்கிய குழு வழக்கினை 31 ம் திகதிக்கு ஒத்திவைத்துள்ளது.

0 comments :

Copyright www.ilankainet.com All right reserved.
Designed and Hosted By : ilankainet.com
To contact us : ilankainet@gmail.com