Friday, May 13, 2011

ஜெயலலிதா மாபெரும் வெற்றி: 3வது இடத்துக்கு தள்ளப்பட்ட திமுக!

முதல்வர் பதவியில் இருந்து கருணாநிதி ராஜிநாமா
தமிழக சட்டமன்றத் தேர்தலில் அதிமுக மாபெரும் வெற்றி பெற்றுள்ளது. கூட்டணி கட்சிகளின் தயவின்றி, தனித்தே அறுதிப் பெரும்பான்மையைப் பெற்றுள்ளது அதிமுக. இதனால் அக் கட்சியின் பொதுச் செயலாளர் ஜெயலலிதா தனித்தே ஆட்சியமைக்கவுள்ளார்.

மொத்தமுள்ள 234 தொகுதிகளில் அதிமுக கூட்டணி 200 தொகுதிகளில் முன்னிலையில் உள்ளது. இதில் அதிமுக மட்டும் தனித்து 152 தொகுதிகளைக் கைப்பற்றியுள்ளது.

விஜயகாந்தின் தேமுதிக யாரும் எதிர்பாராத வகையில் 26 இடங்களில் வென்றுள்ளது. இதன்மூலம் 2வது இடத்தைப் பிடித்து சட்டமன்ற எதிர்க் கட்சித் தலைவர் பதவியை அந்தக் கட்சி கைப்பற்றவுள்ளது.

மார்க்சிஸ்ட் கம்யூனி்ஸ்ட் கட்சி 8 இடங்களிலும், இந்திய கம்யூனிஸ்ட் கட்சி 6 இடங்களிலும், சரத்குமாரின் சமத்துவ மக்கள் கட்சி 2 தொகுதிகளிலும், புதிய தமிழகம் 2 தொகுதிகளிலும், மனிதநேய மக்கள் கட்சி 2 தொகுதிகளிலும், கொங்கு இளைஞர் பேரவை 1 தொகுதியிலும், பார்வர்ட் பிளாக் 1 தொகுதியிலும் முன்னிலையில் உள்ளன. மொத்தத்தில் இந்தக் கூட்டணி 201 தொகுதிகளில் முன்னிலையில் உள்ளது.

ஆட்சியமைக்க 118 இடங்களே தேவை என்ற நிலையில், அதிமுக தனிப் பெரும்பான்மையுடன் தனித்தே ஆட்சியைப் பிடிக்கிறது. கடந்த 2006ம் ஆண்டு சட்டசபை தேர்தலில் அதிமுக 61 இடங்களில் மட்டுமே வெற்றி பெற்றிருந்தது குறிப்பிடத்தக்கது.

3வது இடத்துக்கு தள்ளப்பட்ட திமுக:
திமுக கூட்டணி 33 இடங்களில் மட்டுமே முன்னிலையில் உள்ளது. இதில் திமுக 24 தொகுதிகளிலும், காங்கிரஸ் 6 தொகுதிகளிலும், பாமக 4 தொகுதிகளிலும் முன்னிலையில் உள்ளன.

இந்தக் கூட்டணியில் இடம் பெற்ற விடுதலைச் சிறுத்தைகள் ஒரு இடத்தில் கூட வெற்றி பெறவில்லை.

வெறும் 24 இடங்களை மட்டுமே பிடிப்பதன் மூலம் தேமுதிகவுக்கு அடுத்த இடத்தையே திமுக எட்டியுள்ளது. இதனால் சட்டமன்றத்தில் எதிர்க் கட்சி என்ற அந்தஸ்தைக் கூட இழந்துள்ளது.

கூட்டணி ஆட்சி இல்லை-அதிமுக:
ஆட்சியை கூட்டணிக் கட்சிகளுடன் அதிமுக பகிர்ந்துகொள்ளும் நோக்கமில்லை என்று அதிமுக மூத்த தலைவர் தம்பிதுரை தெரிவித்தார். அதிமுக பொதுச்செயலர் ஜெயலலிதாவை மிகவும் சக்திவாய்ந்தவர் என்றும் வலிமையான அரசியல் தலைவர் என்றும் தம்பிதுரை வர்ணித்தார்.

அதிமுக முழு பெரும்பான்மை பெற்றுள்ளது. எனவே அம்மா தனியாகவே அமைச்சரவையை அமைப்பார் என தம்பிதுரை குறிப்பிட்டார்.

விஜயகாந்த் தலைமையிலான கட்சி அடுத்த அரசில் இடம்பெறுமா என்ற கேள்விக்கு பதிலளிக்கையில் அவர் இவ்வாறு தெரிவித்தார்.

திமுக ஆட்சியில் சட்டம், ஒழுங்கு மிகவும் மோசமடைந்துவிட்டது. அதை சீரமைப்பதுதற்குதான் ஜெயலலிதா முன்னுரிமை கொடுப்பார் என்றும் தம்பிதுரை தெரிவித்தார்.


இது தவிர மேலும் 5 தொகுதிகளில் வாக்கு எண்ணிக்கை தொடர்ந்து கொண்டுள்ளது.
ஸ்டாலின் போட்டியிடும் கொளத்தூர், மதுரை கிழக்கு, மதுரை தெற்கு, மதுரை மேற்கு மற்றும் மேலூர் ஆகிய 5 தொகுதிகளில் வாக்கு எந்திரங்களில் கோளாறு ஏற்பட்டதால் வாக்கு எண்ணிக்கை பாதிக்கப்பட்டது. இங்கு திமுக, அதிமுக இரு தரப்பினருடனும் அதிகாரிகள் பேச்சு நடத்தி வருகிறார்கள்.

முதல்வர் பதவியில் இருந்து கருணாநிதி ராஜிநாமா

சட்டப்பேரவைத் தேர்தலில் திமுக கூட்டணி தோல்வி அடைந்ததைத் தொடர்ந்து முதல்வர் பதவியில் இருந்து கருணாநிதி இன்று ராஜிநாமா செய்தார். ஆளுநர் பர்னாலாவிடம் தனது ராஜிநாமா கடிதத்தை கொடுத்தார். அதை ஏற்றுக்கொண்டதாக ஆளுநர் தெரிவித்தார்.

அடுத்தக்கட்ட ஏற்பாடுகள் செய்யப்படும்வரை முதல்வர் பதவியில் தொடருமாறு ஆளுநர் அவரிடம் கேட்டுக்கொண்டார்.

சட்டசபைத் தேர்தலில் திமுக மிகப் பெரிய தோல்வியைச் சந்தித்துள்ளது. ஆட்சிக்கு எதிரான தீர்ப்பாக இது பார்க்கப்படுகிறது. அதிமுக மிகப் பெரிய வெற்றியுடன், தனிப் பெரும்பான்மை பலத்துடன் கோட்டைக்குள் நுழைந்துள்ளது.

திமுக அடைந்துள்ள தோல்வி குறித்து முதல்வர் கருணாநிதியிடம் கருத்து கேட்டபோது, மக்கள் எனக்கு ஓய்வளித்து விட்டனர் என்று தனது பாணியில் கூறினார்.

ஸ்டாலின் வெற்றியா, தோல்வியா?- மு.க.ஸ்டாலின் போட்டியிடும் கொளத்தூர் தொகுதியில் சர்ச்சை வெடித்துள்ளது. கடைசிச் சுற்றின்போது 3 வாக்குப் பதிவு இயந்திரங்கள் பழுதடைந்ததால் வாக்கு எண்ணிக்கையை நிறுத்துமாறு அதிமுகவினர் கோரிக்கை விடுத்துள்ளதால் அங்கு குழப்ப நிலை நீடிக்கிறது.

சென்னை நகர தொகுதிகளில் கிட்டத்தட்ட அனைத்தையும் வென்று விட்டது அதிமுக மற்றும் அதன் கூட்டணிக் கட்சிகள். கொளத்தூர் தொகுதி நிலவரம் மட்டுமே இன்னும் வெளிவராமல் உள்ளது.

இங்கு கடைசிச் சுற்றுக்கு முந்தைய சுற்றில் மு.க.ஸ்டாலின் தன்னை எதிர்த்துப் போட்டியிடும் அதிமுக வேட்பாளர் சைதை துரைசாமியை விட அவர் 2000 வாக்குகள் அதிகம் பெற்றிருப்பதாக கூறப்பட்டது.




0 comments :

Copyright www.ilankainet.com All right reserved.
Designed and Hosted By : ilankainet.com
To contact us : ilankainet@gmail.com