Sunday, May 15, 2011

கனிமொழி ஜாமீன் மனு தீர்ப்பு 20-ந் தேதிக்கு தள்ளிவைப்பு.

2ஜி ஸ்பெக்ட்ரம் அலைவரிசை ஒதுக்கீடு வழக்கில் சி.பி.ஐ. தாக்கல் செய்த துணைக் குற்றப்பத்திரிகையில் கனி மொழியை கூட்டு சதியாளர் என்று குற்றம் சாட்டப்பட்டுள்ளது. இது தொடர்பான வழக்கு விசாரணை கடந்த வாரம் 6-ந் தேதி டெல்லியில் உள்ள சி.பி.ஐ. சிறப்பு கோர்ட்டில் நடந்தது. கனிமொழி எம்.பி. சார்பில் மூத்த வக்கீல் ராம் ஜெத்மலானி ஆஜராகி வாதாடினார்.

கலைஞர் டி.வி.யில் கனிமொழிக்கு வெறும் 20 சதவீத பங்கே உள்ளது. டி.வி.யின் தினசரி அலுவல்களில் அவர் தலையிடுவது இல்லை. எனவே ஸ்பெக்ட்ரம் வழக்கில் கனிமொழியை குற்றம் சாட்ட இயலாது என்று வாதிட்டார். சி.பி.ஐ. சார்பில் ஆஜரான வக்கீல் லலித் இதை மறுத்தார். கலைஞர் டி.வி.க்கு கடனாக பெற்ற 200 கோடி ரூபாய் விவகாரத்தில் கனி மொழிக்கு தொடர்பு இருப்பதாக கூறினார்.

இதையடுத்து கனிமொழிக்கு ஜாமீன் கோரி ராம்ஜெத் மலானி மனுத்தாக்கல் செய்தார். இரு தரப்பு வாதங்களையும் கேட்ட சி.பி.ஐ. சிறப்பு கோர்ட்டு நீதிபதி ஓ.பி.சைனி, கனிமொழியின் ஜாமீன் மனு மீது 14-ந் தேதி தீர்ப்பு வழங்கப்படும் என்று அறிவித்தார். கனிமொழி வருமான வரித்துறை விசாரணைக்கு ஆஜராக வேண்டியதிருந்ததால் 12,13-ந் தேதிகளில் சி.பி.ஐ. கோர்ட்டில் ஆஜராக வேண்டியதில்லை என்று விலக்கு அளித்து உத்தரவிட்டார். இதனால் கனிமொழி எம்.பி. சென்னை வந்து வருமான வரித்துறை விசாரணையில் பங்கேற்றார்.

அந்த விசாரணை முடிந்ததைத் தொடர்ந்து நேற்றிரவு அவர் டெல்லிக்கு புறப்பட்டுச் சென்றார். சென்னை விமான நிலையத்தில் கனிமொழியிடம் நிருபர்கள் தேர்தல் முடிவு குறித்து கருத்து கேட்டனர். அதற்கு பதில் அளித்த கனிமொழி, மக்கள் தீர்ப்பை ஏற்றுக் கொள்கிறேன் என்றார். இன்று காலை 10 மணிக்கு டெல்லி சி.பி.ஐ. சிறப்பு கோர்ட்டில் கனிமொழி எம்.பி. ஆஜர் ஆனார். அவருக்கு ஜாமீன் கிடைக்குமா? என்ற பரபரப்பான எதிர் பார்ப்பு நிலவியது.

இந்த நிலையில் கனிமொழி ஜாமீன் மனு மீதான தீர்ப்பை வரும் 20-ந்தேதிக்கு ஒத்திவைப்பதாக சி.பி.ஐ. சிறப்பு கோர்ட்டு நீதிபதி ஓ.பி.சைனி அறிவித்தார். கலைஞர் டி.வி.நிர்வாக இயக்குனர் சரத்குமார் தாக்கல் செய்துள்ள ஜாமீன் மனு மீதும் 20-ந் தேதி தீர்ப்பளிக்கப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

கனிமொழி, சரத்குமார் இருவரது ஜாமீன் மனு மீதான தீர்ப்பு ஏன் மீண்டும் ஒத்தி வைக்கப்பட்டது என்பதை அறிய கோர்ட்டு வளாகத்தில் திரண்டிருந்த நூற்றுக்கணக்கான நிருபர்களிடம் ஆர்வம் ஏற்பட்டது. அவர்களிடம் சி.பி.ஐ. வக்கீல் ஏ.கே.சிங் பேசுகையில் கூறியதாவது:-

கனிமொழி, சரத்குமார் இருவரது ஜாமீன் மனு மீதான உத்தரவு விபரங்கள் இன்னும் முழுமையாக தயாராகவில்லை. எனவே தீர்ப்பு ஒத்தி வைக்கப்பட்டுள்ளது. தீர்ப்பு ஒத்திவைப்புக்கு வேறு எந்த காரணமும் இல்லை. இவ்வாறு சி.பி.ஐ. வக்கீல் ஏ.கே.சிங் கூறினார்.

சி.பி.ஐ. கோர்ட்டு தீர்ப்பு ஒத்திவைக்கப்பட்டதைத் தொடர்ந்து கனிமொழி எம்.பி. பாட்டியாலா ஹவுஸ் வளாகத்தில் இருந்து புறப்பட்டுச் சென்றார். அவருடன் அவரது கணவர் அரவிந்தன் வந்திருந்தார். தி.மு.க. எம்.பி.க்களில் டி.ஆர்.பாலு மட்டும் வந்திருந்தார்.


0 comments :

Copyright www.ilankainet.com All right reserved.
Designed and Hosted By : ilankainet.com
To contact us : ilankainet@gmail.com