Sunday, May 1, 2011

சபாலிங்கம் படுகொலை: 17 ஆம் ஆண்டு நினைவு

பிரான்சில் புலிகளால் சுட்டுக் கொல்லப்பட்ட பிரபல அரசியல் விமர்சகரும் மூத்த போராளியும் புலம்பெயர் தேசங்களில் தொடர்ந்து நடைபெற்றுவரும் இலக்கியச் சந்திப்புக்களின் ஆரம்பகர்த்தாக்களில் ஒருவருமான எஸ்.சபாலிங்கம் அவர்களின் 17 ஆவது நினைவு தினம் இன்று பாரிஸிலுள்ள அவரது நண்பர்களால் நினைவுகூரப்படுகின்றது. பாரிஸ் நகரின் புறநகர்ப்பகுதியான கார்ஜ் லே கோணேஸ் நகரிலுள்ள அவரது இல்லத்தில் வைத்து 1994ஆம் ஆண்டு மே மாதம் முதலாம் திகதி புலிகளால் சுட்டுக்கொல்லப்பட்டார்.

இவர் ஆசியா பதிப்பகம் மூலம் பல நூல்களை வெளியிட்டு வந்த வேளையில் தமிழ் இளைஞர் பேரவையின் ஸ்தாபகரும் தமிழீழ விடுதலை இயக்கத்தின் ஸ்தாபகர்களில் ஒருவரும் தமிழீழ விடுதலைப் போராட்ட ஆரம்பகால முக்கியஸ்தருமான திரு.சி.புஸ்பராசா அவர்களால் பின்னாளில் வெளியிடப்பட்ட ஈழவிடுதலைப் போராட்டத்தில் எனது சாட்சியம் என்ற நூலை ஆசியா பதிப்பகத்தின் மூலம் 1994 ஆம் ஆண்டு வெளியிட முயற்சிகள் மேற்கொள்ளப்பட்ட தருணத்திலேயே புலிகளால் இந்தக் கொலை நிகழ்த்தப்பட்டது என நம்பப்படுகின்றது.

இவர் பிரான்சில் வாழ்ந்த காலத்தில் மனித உரிமை அமைப்புக்களுடன் தொடர்புகளை பேணி இருந்தார். அந்த வகையில் யாழ். பல்கலைக்கழக மாணவியும் கவிஞரும் கவிதைக்காக சர்வதேச விருதைப் பெற்றவருமான செல்வி புலிகளால் கடத்தப்பட்டு காணாமற் செய்யப்பட்டது தொடர்பாகவும் மற்றும் புலிகளின் மனிதஉரிமை மீறல்கள் தொடர்பாகவும் உலகிலுள்ள மனித உரிமை அமைப்புக்களுக்கு அறிக்கைகளை சமர்ப்பித்திருந்த காரணத்தால் புலிகள் இவர் மீது சீற்றம் கொண்டிருந்தனர். ஐரோப்பிய நாடுகளில் புலிகள் நடத்திய முதலாவது படுகொலை இது என்பது குறிப்பிடத்தக்கது.

0 comments :

Copyright www.ilankainet.com All right reserved.
Designed and Hosted By : ilankainet.com
To contact us : ilankainet@gmail.com