Tuesday, April 5, 2011

இந்தியப் பெருங்கடலில் நிலநடுக்கம் அச்சத்தில் இந்தோனேசியா, இந்தியா

இந்தோனேசியாவின் தென்பகுதியில் இந்தியப் பெருங்கடலில் நேற்று பயங்கர நிலநடுக்கம் ஏற்பட்டது. சுனாமி எச்சரிக்கை விடுக்கப்பட்டு பின்பு வாபஸ் பெறப்பட்டது. இந்தோனேசியாவின் தென்பகுதியில் உள்ள ஜாவா தீவில் இருந்து தென்பகுதியில் இந்தியப் பெருங்கடலில் நேற்று பயங்கர நிலநடுக்கம் ஏற்பட்டது. ஜாவா தீவின் பங்கண்டரன் மற்றும் சிலாசாப் ஆகிய மாகாணங்களில் இந்நிலநடுக்கம் உணரப்பட்டது. அமெரிக்க புவியியல் ஆய்வில், 6.7 புள்ளிகள் வரை, இந்நிலநடுக்கம் பதிவானது. ஆனால், இந்தோனேசிய நிபுணர்கள் கணக்கீட்டில், இது, 7.1 புள்ளிகள் பதிவானதால், ஜாவா தீவில் நேற்று சுனாமி எச்சரிக்கை விடுக்கப்பட்டது. இதனால், துறைமுக நகரான சிலாசாப்பில் இருந்து மக்கள் கார், மோட்டார் சைக்கிள் மூலம் மேட்டுப் பாங்கான பகுதிக்குச் சென்றனர். எனினும் சிறிது நேரத்தில் சுனாமி எச்சரிக்கை வாபஸ் பெறப்பட்டது. அமெரிக்க பசுபிக் சுனாமி எச்சரிக்கை மையம் விடுத்த செய்தியில், 'மிகப் பெரிய அளவில் சுனாமி ஏற்பட வாய்ப்பில்லை. எனினும் சிறிய அளவில் சுனாமி உருவாகலாம்' என கூறியிருந்தது

இதே நேரம் நேபாள எல்லையை ஒட்டிய இந்திய நிலப் பகுதியில் ஏற்பட்ட நிலநடுக்கம் ரிக்டர் அளவுகோலில் 6 ஆகப் பதிவானது. இந்த நில அதிர்ச்சி, தலைநகர் தில்லி மற்றும் அதன் சுற்றுப் பகுதிகளிலும் உணரப்பட்டது. தில்லியில் கட்டடங்கள் லேசாக அதிர்ந்தன. வீடுகளில் உள்ள பொருட்களும் அசைந்து அதிர்ந்தன. இதனால் சேதம் ஏதும் ஏற்பட்டதா என்பது குறித்து விவரம் எதுவும் வெளிவரவில்லை.

இந்தியாவின் நில அதிர்வுகள் குறித்து ஆராயும் அமைப்புகள், இந்த நில அதிர்வு திங்கள்கிழமை மாலை 5.01 மணி வாக்கில் ஏற்பட்டதாகத் தெரிவித்துள்ளது. இந்த பூகம்பம் 10 கி.மீ. ஆழத்தில் ஏற்பட்டதாகவும் அது தெரிவித்தது.

அதே நேரம் உத்தரப் பிரதேசம், உத்தராஞ்சல், இமாசலப் பிரதேசம், பஞ்சாப், ராஜஸ்தான் உள்ளிட்ட வடமாநிலங்களில் திங்கள்கிழமை நிலநடுக்கம் ஏற்பட்டது. ரிக்டர் அலகில் 5.7 ஆகப் பதிவான இந்த நிலநடுக்கத்தால் உயிரிழப்போ, பொருள்சேதமோ ஏற்பட்டதாகத் தகவல் இல்லை. 'இந்திய- நேபாள எல்லையில் நேபாளத்தின் மேற்குப் பகுதியில் நிலநடுக்கம் மையம் கொண்டிருந்தது. தில்லியிலிருந்து 363 கி.மீட்டர் தொலைவிலும், உத்தராஞ்சல் மாநிலம் ஹால்ட்வாய் பகுதியில் இருந்து 130 கி.மீட்டர் தொலைவிலும் நிலநடுக்கம் மையம் கொண்டிருந்ததாக' தில்லி வானிலை மையம் அறிவித்துள்ளது.

0 comments :

Copyright www.ilankainet.com All right reserved.
Designed and Hosted By : ilankainet.com
To contact us : ilankainet@gmail.com