குற்ற ஒப்புதல் வாக்குமூலம் ஏற்கமுடியாதது. 7 வருடங்களின் பின்னர் சந்தேக நபர் விடுதலை.
தமிழீழ விடுதலைப் புலிகளிடம் ஆயுதப் பயிற்சி பெற்றவர் என்ற குற்றச்சாட்டின்பேரில் 2004ம் ஆண்டு நவம்பர் மாதம் கைதுசெய்யப்பட்டு தடுத்து வைக்கப்பட்டிருந்த பதுளையை சேர்ந்த கந்தசாமி தவராஜன் (44வயது) என்பவர் விடுதலை செய்யப்பட்டுள்ளார்.
குற்றஒப்புதல் வாக்குமூலத்தை தடயமாக கொண்டு சந்தேக நபருக்கு எதிராக மட்டக்களப்பு மேல் நீதிமன்றில் வழக்கு தொடரப்பட்டிருந்ததுடன், பயங்கரவாத தடுபுப்புச் சட்டத்தின்கீழ் தடுத்துவைக்கப்பட்டிருந்த சந்தேக நபர் சார்பாக சார்பில் சட்டத்தரணி கிருத்திகா முத்துராஜா வழக்காடி வந்தார்.
குறிப்பிட்ட குற்ற ஒப்புதல் வாக்குமூலத்தில் சந்தேக நபர் தான் தமிழீழ விடுதலைப் புலிகள் அமைப்பில் இருந்து ஆயுதப் பயிற்சி பெற்றதுடன் படையினருக்கு எதிரான நடவடிக்கையில் ஈடுபட்டதாகவும் தெரிவித்திருந்தார்.
வழக்கு விசாரணை செய்த மட்டக்களப்பு மேல்நீதிமன்ற நீதிபதி பி.சசிமகேந்திரன் முன்னிலையில் இடம்பெற்றது, குற்றமூல ஒப்புதல் வாக்குமூலத்தை தடயமாக கொண்டு இரு சாட்சியங்களுடன் உதவி பொலிஸ் அத்தியட்சர் குறித்த வழக்கினைக் முன்னெடுத்திருந்தனர்.
இருந்தபோதும் குறித்த குற்ற ஒப்புதல் வாக்குமூலம் சந்தேகநபரால் சுயமாக வழங்கப்படவில்லை என்பதுடன் சட்டம் தேவைப்படுகின்ற தேவைப்பாடுகளுக்கு அமையவும் பதியப்படவில்லை என்ற அடிப்படையில் குறித்த ஒப்புதல் வாக்குமூலத்தை நிராகரித்து இக்குற்றச்சாட்டுகளில் இருந்து சந்தேகநபரை விடுதலை செய்தார்.
இதேபோன்று குறித்த சந்தேகநபருக்கு குற்ற ஒப்புதல் வாக்குமூலத்தைக் கொண்டு கல்முனை மேல்நீதிமன்றில் ஆறு வழக்குகளும் யாழ் மேல்நீதிமன்றத்தில் ஒரு வழக்கும் தாக்கல் செய்யப்பட்டுள்ளன.
மட்டக்களப்பு மேல் நீதிமன்றம் இந்த வழக்கில் இருந்து சந்தேகநபரை விடுதலை செய்துள்ளதால் ஏனைய வழக்கில் இருந்தும் விடுதலை செய்யப்படக்கூடிய சாத்தியம் உள்ளதாக சட்டத்தரணி கிருத்திகா முத்துராஜா தெரிவித்தார்.
0 comments :
Post a Comment