Saturday, March 5, 2011

புலிகளின் கோப்பாய் மாவீரர் துயிலும் இல்ல வளாகத்தில் 51 வது படைத்தலைமையகம்!

இலங்கை இராணுவத்தின் 51 ஆவது படைத் தலைமையகம் நேற்றுக் காலை கோப்பாயில் விடுதலைப்புலிகளின் மாவீரர் துயிலும் இல்ல வளாகத்தில் திறந்து வைக்கப்பட்டுள்ளது. இராணுவத் தளபதி லெப்டினன்ட் ஜெனரல் ஜகத் ஜயசூரிய இதில் பிரதம விருந்தினராகக் கலந்துகொண்டு புதிய தலைமையகத்தைத் திறந்துவைத்தார்.

இந்தத் திறப்புவிழா வைபவம் நேற்றுக் காலை 10 மணிக்கு யாழ்.மாவட்டப் படைகளின் தளபதி மேஜர் ஜெனரல் மஹிந்த ஹத்துருசிங்க தலைமையில் நடைபெற்றது. இராணுவத்தினர் 1995ஆம் ஆண்டு குடாநாட்டைப் புலிகளிடம் இருந்து கைப்பற்றியதன் பின்னர் 51ஆவது படைத் தலைமையகம் சுபாஸ் ஹோட்டலில் நிறுவப்பட்டது. அன்று முதல் கடந்த 16 வருடங்களாக அது யாழ்.நகரப் பகுதியிலேயே இயங்கி வந்தது.

இந்நிலையில் 51ஆவது படைத் தலைமையகத்தை யாழ்.நகருக்கு வெளியே கோப்பாயில் இருந்த விடுதலைப் புலிகளின் மாவீரர் துயிலும் இல்லத்தில் நிறுவுவதற்குத் தீர்மானிக்கப்பட்டது.

இந்தக் கட்டுமானப் பணிக்காக கோப்பாய் துயிலும் இல்லத்தில் இருந்த கல்லறைகள் இடித்து அழிக்கப்பட்டன. இதன் பின்பு தலைமையகத்தின் புதிய கட்டடம் அமைக்கும் பணிகள் சீன அரசின் உதவியுடன் நடைபெற்றன.

சகல வசதிகளையும் கொண்டதாக நவீன முறையில் அமைக்கப்பட்டுள்ள 51ஆவது படைத் தலைமையகம் திறந்துவைக்கப்பட்டதை அடுத்து அதன் நிர்வாகச் செயற்பாடுகள் அனைத்தும் நேற்று முதல் புதிய கட்டடத்தில் ஆரம்பிக்கப்பட்டுள்ளது எனவும், தொழில் நுட்பப்பிரிவு, உட்பட சில பிரிவுகள் தொடர்ந்தும் சுபாஸ் ஹோட்டலிலேயே இயங்கி வருவதாகவும் அவையும் அடுத்த வாரமளவில் புதிய தலைமையகத்துக்கு மாற்றப்படும் எனவும் இராணுவ அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.

இதன் பின்னரே சுபாஸ் ஹோட்டல் முழுமையாக அதன் உரிமையாளரிடம் ஒப்படைக்கப்படும் எனவும் அவர் மேலும் தெரிவித்தார்.

0 comments :

Copyright www.ilankainet.com All right reserved.
Designed and Hosted By : ilankainet.com
To contact us : ilankainet@gmail.com