Thursday, February 24, 2011

தேசிய கண் வங்கி இன்று ஜனாதிபதியினால் திறந்து வைக்கப்பட்டது.

இலங்கையில் முதல் முறையாக அமைக்கப்படும் தேசிய கண் வங்கி இன்று மாலை ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ அவர்களால் திறந்து வைக்கப்பட்டது.

சிங்கப்பூரின் உயர் தொழில்நுட்பத்தின் கீழ் அமையும் தேசிய கண் வங்கியின் மூலம் நோயாளர்களுக்கு கோர்னியா விழி வெண் படலம் பொருத்தப்படும்.

இலங்கையில் உள்ள நோயாளர்களுக்கு மட்டுமன்றி முழு உலகத்திலும் உள்ள கண் நோயாளர்களுக்கு உதவும் இந்த கண் வங்கி, ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ அவர்களின் ஆலோசனை மற்றும் வழிகாட் டலின் கீழ் தேசிய கண் வைத்தியசாலையில் இந்த வங்கி அமைக்கப்பட்டுள்ளது.

சர்வதேச மட்டத்தில் அமையும் தேசிய கண் வங்கிக்காக சிங்கப்பூர் அரசாங்கம் மூன்று கோடி ரூபா நிதியை வழங்கியுள்ளது.

ஐந்து வருட திட்டத்தின் கீழ் செயற்படும் தேசிய கண் வங்கியின் எதிர்கால அபிவிருத்தி மற்றும் மேம்படுத்தலுக்கு சிங்கப்பூர் அரசாங்கம் உதவி ஒத்தாசை வழங்கவும் இணக்கம் தெரிவித்துள்ளது.

தேசிய வைத்தியசாலையில திடீரென உயிரிழக்கும் நோயாளர்களின் கண்கள் புதிய கண் வங்கியின் மூலம் பெற்றுக் கொள்ளப்படும் என்று சுகாதார அமைச்சின் மேலதிக செயலாளர் பாலித மஹிபால தெரிவித்துள்ளார். 6 மணி நேரத்துக்குள் இந்த கண் வில்லைகளை பெற்றுக் கொள்ள வேண்டியிருப்பதால் இவ்வாறான திட்டத்தை முன்னெடுத்திருப்பதாக அவர் மேலும் கூறினார்.

கண்ணின் வெண் படலத்தில் குறை ஏற்பட்டால், சத்திர சிகிச்சை மூலம் வெண் படலத்தை அகற்றி அதனை மாற்றியமைக்கும் சிகிச்சை மேற்கொள்ளப்பட வேண்டும். இதனை இலகுவாக்கும் வகையில் அவசியமான படலத்தை பெற உதவுவதே இதன் நோக்கமாகும் என்று அவர் மேலும் கூறினார்.

தேசிய கண் வைத்தியசாலையின் கண்காணிப்பில் உள்ள படலம் இலங்கையின் கண் சத்திரசிகிச்சை இடம்பெறும் கராபிட்டிய, திருகோணமலை மற்றும் ஏனைய எந்தவொரு வைத்தியசாலையிலும் பெற்றுக்கொள்ள முடியும்.

கொழும்பு கண் வைத்தியசாலையில் நேற்று இடம்பெற்ற ஊடகவியலாளர் மாநாட்டில் அமைச்சின் செயலாளர் இவ்வாறு தெரிவித்தார்.

தேசிய கண் வங்கியின் பணிப்பாளர் டாக்டர் சிசிர லியனகே, சிங்கப்பூர் கண் வைத்தியசாலையின் கண் வங்கியின் பணிப்பாளர் பேராசிரியர் டொனல்ட் பேன், விசேட கண் வைத்தியர் சரித் பொன்சேகா ஆகியோர் இந்த ஊடகவியலாளர் மாநாட்டில் பங்குபற்றினர்.

0 comments :

Copyright www.ilankainet.com All right reserved.
Designed and Hosted By : ilankainet.com
To contact us : ilankainet@gmail.com