Wednesday, February 16, 2011

இந்திய மீனவர்கள் கைதில் கனிமொழி - டக்ளஸ் இலவச விளம்பரம்:

இலங்கையின் கடற்பரப்பினுள் அத்துமீறி மீன் பிடித்தார்கள் என்ற குற்றச்சாட்டின் பேரில் இந்திய காரைக்கால் பகுதி தமிழக மீனவர்கள் 112 பேரை கைது செய்த இலங்கை அதிகாரிகள் நீதிமன்ற உத்தரவின் பேரில் அவர்களை யாழ்ப்பாணம் பருத்தித்துறையில் சிறையில் அடைத்துள்ளனர்.

இலங்கை கடற்படையின் இந்த செயலை கண்டித்தும், அவர்களை உடனடியாக விடுதலை செய்யக் கோரியும் தி.மு.க. சார்பில் தமிழ்நாடு முழுவதும் இன்று ஆர்ப்பாட்டம் நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டு இருந்தது.

சென்னையில் இலங்கை தூதரகம் முன்பு ஆர்ப்பாட்டம் நடத்த முடிவு செய்யப்பட்டது. ஆனால் போலீசார் அதற்கு அனுமதி வழங்கவில்லை. எனவே மைலாப்பூர் லஸ் கார்னர் அருகில் உள்ள நாகேஸ்வரராவ் பூங்கா அருகே ஆர்ப்பாட்டம் நடந்தது.

பின்னர் இலங்கை தூதரகத்தை நோக்கி பேரணியாக செல்ல முயன்ற கனிமொழி எம்.பி. உள்பட 5 ஆயிரம் பேர் கைது செய்யப்பட்டனர். இதேபோல் நாகை, திருவாரூர், கன்னியாகுமரி, தூத்துக்குடி, கடலூர் மற்றும் தமிழகம் முழுவதும் உள்ள துறைமுகங்கள் முன்பு கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இதில் பல்லாயிரக்கணக்கான தி.மு.க.வினர் கைது செய்யப்பட்டனர். கனிமொழி எம்.பி. உள்பட தமிழ்நாடு முழுவதும் கைதான அனைவரும் இரவு 7 மணிக்கு விடுதலை செய்யப்பட்டனர்.

ஆர்ப்பாட்டத்தின்போது செய்தியாளர்களிடம் பேசிய மாநிலங்களவை உறுப்பினர் கனிமொழி, தமிழக மீனவர்கள் மீதான தாக்குதலை இலங்கை கடற்படை உடனடியாக நிறுத்திக்கொள்ள வேண்டும். தாக்குதலை தடுத்து நிறுத்தக்கோரி இலங்கை அரசை மட்டுமல்லாமல் மத்திய அரசையும் முதல்வர் கருணாநிதி தொடர்ந்து வலியுறுத்தி வருகிறார். இலங்கை கடற்படை தமிழக மீனவர்கள் மீதான தாக்குதலை உடனடியாக நிறுத்தாவிட்டால், எங்களது போராட்டம் மேலும் தீவிரம் அடையும் என்றார்.


மீனவர்கள் கைது கண்டிக்கத்தக்கது: பிரதமர்
அதேநேரம் டெல்லியில் தனது இல்லத்தில் இன்று நாட்டின் முன்னணி தொலைக்காட்சிகளின் ஆசிரியர்களைச் சந்தித்து, 2ஜி ஊழல் முதல் இந்தியா எதிர்நோக்கியுள்ள பல்வேறு பிரச்சனைகள் குறித்து பேசிய பிரதமர் மன்மோகன் சிங இந்திய மீனவர்கள் இலங்கை கடற்படையினரால் கைது செய்யப்பட்டிருப்பது ஏற்கத்தக்க நடவடிக்கையல்ல எனவும் சிறிலங்க அரசிற்கு கண்டனத்தை தெரிவித்துள்ளதாகக் கூறியுள்ளார். அத்துடன் இந்தியாவை தனது நட்பு நாடாக கருதுவதாகக் கூறிக்கொள்ளும் நாட்டின் இப்படிப்பட்ட நடவடிக்கை ஏற்கத்தக்கதல்ல என்று தெரிவித்துள்ளார்.

'மீனவர்களை சிறைபிடித்துச் சென்றது கண்டனத்திற்குரியது. எங்களது கண்டனத்தை சிறிலங்க அரசிற்கு தெரிவித்துள்ளோம். இந்தியாவை தனது நட்பு நாடாக கூறிக்கொள்ளும் ஒரு நாட்டின் இப்படிப்பட்ட நடவடிக்கை ஏற்கத்தக்கதல்ல' என்று கூறிய மன்மோகன் சிங், 'இதை பாதுகாப்புத் தொடர்பான பிரச்சனையாகவே முன்னெடுக்க உள்ளோம்' என்று கூறியுள்ளார்.

இந்தியத் தரப்பினரால் தமது மீனவர்கள் இலங்கைக் கடற்படையினரால் கைது செய்யப்பட்டுள்ளார்கள் என்ற குற்றச்சாட்டு முன்வைக்கப்படுகின்றபோதும் கைது செய்யப்பட்ட மீனவர்கள் இலங்கையின் வடமாராட்சி பிரதேச மீனவர்களாலேயே கரைக்கு பலவந்தமாக இழுத்துவரப்பட்டு பொலிஸாரிடம் ஒப்படைக்கப்பட்டதாக ஈபிடிபி எனப்படும் ஈழ மக்கள் ஜனநாயக் கட்சியின் உத்தியோக பூர்வ இணையத்தளம் தெரிவிக்கின்றது.

கைது செய்யப்பட்டள்ள மீனவர்களை நேரில் சென்று பார்வையிட்ட அமைச்சர் டக்ளஸ் தேவானந்த, மீனவர்கள் தன்னுடன் பேசுகையில் அவர்கள் இலங்கையில் கடற்பரப்பினுள் அத்துமீறி மீன்பிடத்தமையை ஒத்துக்கொண்டுள்ளதுடன் அதற்கான மன்னிப்பையும் கோரியுள்ளனர் எனவும் தெரிவித்துள்ளதுடன் இந்திய மீனவர்கள் இலங்கை மீனவர்களுக்கு இடைஞ்சலாக இருப்பதாக மீனவர்கள் தன்னிடம் ஏற்கனவே முறையிட்டிருந்ததாகவும் தெரிவித்துள்ளார்:

அவ்வாறாயின் இக்கைது தமிழக அரசுடன் இணைந்த கூட்டு நாடகமா என்ற சந்தேகம் வலுப்பெறுகின்றது. இந்திய மீனவர்கள் இலங்கையினுள் அத்துமீறி செயற்படுகின்றார்களாயின் அதை தமிழக அரசிற்கு தெரியப்படுத்தி உரிய நடவடிக்கை எடுப்பதை தவிர்த்து விட்டு தமிழகத்தில் தேர்தல் ஒன்று இடம்பெறவுள்ள தருணத்தில் வாக்கு வேட்டைக்கான தந்திரோபாயமா?

0 comments :

Copyright www.ilankainet.com All right reserved.
Designed and Hosted By : ilankainet.com
To contact us : ilankainet@gmail.com