Thursday, February 17, 2011

எகிப்து நிலைமை இலங்கைக்கு வராது என்கின்றார் மஹிந்த !!

எகிப்தில் நாட்டு மக்கள் அதிபருக்கு எதிராக கொதித்தெழுந்து புரட்சியில் ஈடுபட்டது போன்ற ஒரு நிலைமை இலங்கைக்கு வராது என்று ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ச கூறியுள்ளார். இது தொடர்பாக அவர் அளித்துள்ள பேட்டியில், அமெரிக்கா உள்ளிட்ட மேற்கத்திய நாடுகள், இலங்கை உள்ளிட்ட வளர்ந்து வரும் நாடுகளில் அரசியல் குழப்பங்களை உருவாக்க முயற்சிப்பதாகவும் குற்றம்சாற்றியுள்ளார்.

மூன்றாம் உலக நாடுகளில் குழப்பங்களை தோற்றுவிக்க அமெரிக்கா முயற்சித்து வருவதாகவும், எனினும் அவர்கள் அமெரிக்காவுக்கு எதனையும் செய்யவில்லை எனவும் அவர் கூறியுள்ளார்.

எது எவ்வாறாயினும் இலங்கையில் மக்கள் புரட்சி ஒன்று உருவாவதற்கான வழியினை ஏற்படுத்த மாட்டோம் என அவர் தெரிவித்துள்ளார்.

அதேநேரம் கடந்த காலங்களில் ஜனாதிபதி புற்றுநோயினால் பாதிக்கப்பட்டுள்ளதாக வெளியான செய்திகளில் எவ்வித உண்மையும் கிடையாது என அவரது மகனும் நாடாளுமன்ற உறுப்பினருமான நாமல் ராஜபக்ச தெரிவித்துள்ளார்.

இச்செய்திகளுக்கு மறுப்பு தெரிவித்து பத்திரிகை ஒன்றுக்கு நாமல் ராஜபக்ச அளித்துள்ள பேட்டியில் கூறியிருப்பதாவது:

எனது தந்தைக்கு புற்றுநோய் இருப்பதாக வெளியான செய்திகளில் உண்மை இல்லை. அவர் தனிப்பட்ட விடயமாகவே அமெரிக்கா சென்றிருந்தார்.

நான் அவருடன் அவருடைய இல்லத்திலேயே இருப்பதால் அவர் குறித்த அனைத்து விடயங்களும் எனக்கு தெரியும்.

இவ்வாறான போலித் தகவல்களை அரசியல் நோக்கத்துக்காக எதிர்கட்சிகளே பரப்பி வருகின்றன என்றாலும், எதிர்கட்சிகள் இந்த தகவல்களை பரப்பும் நோக்கத்தில் வெற்றிக் கொள்ளவில்லை எனவும் கூறியுள்ளார்.

0 comments :

Copyright www.ilankainet.com All right reserved.
Designed and Hosted By : ilankainet.com
To contact us : ilankainet@gmail.com