Wednesday, February 16, 2011

கருணா, கே.பி விடயத்தில் ராஜபக்ஷக்கள் தண்டனைக்குரிய குற்றவாளிகள். சட்ட நிபுணர்கள்

இலங்கை குற்றவியல் சட்டக்கோவையின் பிரகாரம் நாட்டின் இறைமையை மீறி அரசிற்கு எதிராக செயற்பட்ட புலிகளின் முன்னாள் முக்கியஸ்தர்களான கிழக்கு மாகாண இராணுவத் தளபதி கருணா மற்றும் புலிகளியக்கத்திற்கான அயுதக்கடத்தல் மன்னன் கே.பி. எனப்படும் குமரன் பத்மநாதன் ஆகியோருக்கு எந்தக் கட்டத்திலும் பொதுமன்னிப்பு வழங்க முடியாது என்றும் அவர்களை தண்டனையிலிருந்து காப்பாற்றி வரும் ராஜபக்சக்கள் தண்டனைக்குரிய குற்றவாளிகள் எனவும் சட்ட வல்லுனர்கள் சுட்டிக்காட்டுகின்றனர்.

1979ம் ஆண்டின் 15ம் இலக்க திருத்தச் சட்டத்தின் பிரகாரம் கேபி , கருணா ஆகியோர் கடந்த காலங்களில் இழைத்துள்ள தவறுகளின் அடிப்படையில் எந்தவொரு கட்டத்திலும் அவர்களுக்குப் பொதுமன்னிப்பு வழங்கவோ, சமரசம் செய்து கொள்ளவோ முடியாதெனவும் சட்டவல்லுனர்கள் வலியுறுத்துகின்றனர்.


மேற்குறித்த சட்டப்பிரிவின் ஐந்து விதிகளின் பிரகாரம் பயங்கரவாத செயற்பாடுகளில் ஈடுபட்ட புலிகளுக்கு பொதுமன்னிப்பு வழங்க முயற்சிப்பது, வழக்குத் தொடராமல் இருக்கத் தீர்மானிப்பது அல்லது அதற்குத் துணை செய்வது என்பன கூட கடும் தண்டனைக்குரிய குற்றங்களாகும். அத்துடன் அவை அரசியலமைப்பை மீறும் செயல்களுமாகும்.

அந்த சட்ட விதிகள் கீழே பட்டியலிடப்பட்டுள்ளன. அவற்றில் ஈடுபடும் நபர்களுக்கான தண்டனைகளும் அதன் பக்கத்தில் குறிப்பிடப்பட்டுள்ளன.


114. இலங்கை அரசாங்கத்துக்கு எதிராகப் போரிட முயற்சித்தல் அல்லது அதற்குத் துணை செய்தல்- இக்குற்றத்தில் ஈடுபட்டவர்களை வாரண்ட் இன்றிக் கைது செய்ய முடியும். பொது மன்னிப்பு வழங்கவே முடியாது. சமரசம் செய்து கொள்ளவும் முடியாது.

115. இலங்கை அரசாங்கத்துக்கு எதிராக அரச விரோத சதிகளில் ஈடுபடல்- இக்குற்றத்திற்காக இருபது வருட சிறைத்தண்டனை அல்லது கடும் தண்டப்பணம் விதிக்கப்படலாம்.

116. இலங்கை அரசாங்கத்துக்கெதிராக ஆயுதம் சேகரித்தல்- இக்குற்றத்தில் ஈடுபடுகின்றவர்களை வாரண்ட் இன்றிக் கைது செய்யமுடியும். பொது மன்னிப்பு வழங்க முடியாது. சமரசத்துக்கு இடமில்லை. சொத்துக்கள் அரசுடைமையாக்கப்பட வேண்டும்.

117. இலங்கை அரசாங்கத்துக்கெதிராக யுத்தம் புரியும் நோக்கில் அதற்கான விடயங்களை மறைத்தல்- இதற்கு பத்து வருடங்கள் சிறைத்தண்டனை அல்லது தண்டப்பணம் விதிக்கலாம்.

120. இலங்கை அரசாங்கத்தின் மீது அதிருப்தியை உருவாக்குதல் மற்றும் உருவாக்க முயற்சித்தல்- இக்குற்றத்தில் ஈடுபட்டவர்கள் பதினாறு வயதுக்குக் கீழ்ப்பட்டவராகவோ அல்லது கர்ப்பிணியாகவோ இருக்கும் பட்சத்தில் மாத்திரமே தண்டனையிலிருந்து விதிவிலக்களிக்க முடியும்.

அவ்வாறில்லாத கட்டத்தில் நிச்சயமாக மரண தண்டனை விதிக்கப்பட வேண்டும். அல்லது கட்டாயமாக 20 வருடச் சிறைத்தண்டனை விதிக்கப்பட்டாக வேண்டும்.

அதிலும் பதினாறு வயதுக்குட்பட்டவரைக் கூட விரும்பிய காலம் வரை தடுத்து வைத்திருக்கலாம். கர்ப்பிணியைக் கூட ஆயுள் தண்டனைக்குட்படுத்த முடியும். அத்துடன் அவர்களின் சொத்துக்கள் அரசுடைமையாக்கப்பட வேண்டும்.

அந்த வகையில் பார்க்கும் போது ஜனாதிபதி, பாதுகாப்புச்செயலாளர், சட்டமா அதிபர் ஆகியோர் கே.பி மற்றும் கருணா மீது வழக்குத் தொடர்ந்து மரண தண்டனை விதிக்காமலிருப்பதன் காரணமாக அவர்கள் இலங்கை அரசியலமைப்பை மீறியுள்ள குற்றச்சாட்டை எதிர்கொள்ள வேண்டியவர்களாவர். அவர்களுக்கும் தண்டனை வழங்கப்பட வேண்டும்.

அண்மையில் பத்திரிகைகளுக்கு அளித்திருந்த பேட்டியில் கூட கே.பி கடந்த காலத்தில் தான் அவ்வாறான குற்றங்களில் ஈடுபட்டிருந்ததை ஏற்றுக் கொண்டிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

0 comments :

Copyright www.ilankainet.com All right reserved.
Designed and Hosted By : ilankainet.com
To contact us : ilankainet@gmail.com