Saturday, February 19, 2011

­எகிப்து தந்த பாடம் -லெனின் பெனடிற்-

ஜனநாயகப் புரட்சி என்பது ஆயுதம் தாங்கி அரசுக்கெதிராகப் போராடுவதே என்று இத்தனை காலமும் சித்தரிக்கப்பட்டு வந்துள்ள நிலையில் ஆயுதமின்றி இரத்தம் சிந்தாமல் மகத்தான மக்கள் எழுச்சியினாலும் ஒற்றுமையினாலும் ஜனனாயகத்தை வென்றெடுத்த சாதனையை எகிப்திய மக்கள் சாதித்திருக்கிறார்கள்.

இந்த புரட்சியின் சாதனையான இப்போராட்தைத் தலைமைதாங்க எவ்வித தலைவர்களும் இன்றி அல்லது வழிகாட்டலின்றி எல்லோரும் அந்நாட்டு மன்னர்களாக இந்த ஜனனாயகப் போராட்டத்தை எவ்வித சிதைவோ சீரழிவோ இன்றி உறுதியுடன் முன்னெடுத்துச் சென்று இறுதியாக எகிப்திய சர்வாதிகாரியை பதவியிலிருந்து விரட்டியடித்து ஓர் அற்புத சாதனையைப் படைத்துள்ளார்கள்.

இதில் குறிப்பிடத்தக்க மற்றுமொருவிடயத்தை இங்கு பதிவுசெய்தே ஆகவேண்டும். அது எகிப்திலுள்ள பல்வேறு இஸ்லாமியப் பிரிவினரும் குறிப்பாகக் கிறீஸ்தவ சிறுபான்மையினரும் இணைந்து தங்களுடைய மத அரசியல் வேறுபாடுகளைக் களைந்து ஒன்றுபட்டு நின்றதே இப்புரட்சி வென்றெடுக்கப் பட்டதற்கான மிகப் பிரதான காரணமாகும்.
முழு வெகுஜனங்களும் செய்யவேண்டிய வரலாற்றுக் கடமையை ஆயுதம்தாங்கிய சாகசவாதிகளால் ஒருபோதும் இடம்பெயர்க்கவோ பிரதியீடுசெய்யவோ முடியாது என்பதை வரலாறு எகிப்துப் புரட்சி மூலம் மீண்டும் ஒரு முறை நிறுவிக்காட்டியுள்ளது. எகிப்து ஒட்டுமொத்த மக்களும் எந்த மேற்குலக ஏகாதிபத்தியவாதிகளையும் தலையிட்டு விடுதலை எடுத்துத் தரும்படி மன்றாடாதது மற்றொரு பெரிய படிப்பனையாகும்.

புழுதியில் கிடந்த எகிப்தின் விடுதலையைத் தமது இரத்தக்கறைபடியாத் சொந்தக் கரங்களால் மாத்திரம் பவுத்திரமாக எடுத்து அரியணையிலே வைத்துள்ளார்கள்.

மத்திய கிழக்கைக் கொள்ளையடித்தது மாத்திரமல்ல அவர்களது எண்ளை வளம் தந்த செல்வங்களைப் பேரழிவுதரும் கொலைக் கருவிகளாக மாற்றியதைத் தேவையற்றது என்று நிறுவிக்காட்டியது எகிப்துப் புரட்சி.

மில்லியன் கணக்குப் பெறுமதியான கவசவாகனங்கள்மேல் எகிப்திய மழலைச் செல்வங்கள் ஏறிநின்று முகமலர்ச்சியோடு எகிப்திய தேசியக் கொடிகளைப் பிடித்த காட்சிகளையே பிரபலமான சர்வதேசப் பத்திரிகைகள் தமது முதற்பக்கங்களில் போட்டுப் பிரசுரித்தன.

எகிப்து மக்கள் நவீன பேரழிவுதரக் கூடிய ஆயுதங்களைப் பிரயோகிக்க எந்த நெழிவு சுழிவும் விடாத அரசியல் தந்திரோபாயத்தை உலகுக்குப் படிபித்துச் சென்றார்கள்.

எகிப்து மக்கள் எந்தவித அரச ஆத்திரமூட்டல்களுக்கும் அடிபணியாத மனவைராக்கியம் உடையவர்களாக நடந்து கொண்டார்கள். நானாவித ஆத்திரமூட்டல்களையும் தோற்கடிக்கும் கலையைக் கற்றிருந்தார்கள்.

மற்றுமொரு மகத்தான உண்மை எகிப்திய தொழிலாளவர்க்கத்தின் எந்த ஒரு சிறுபகுதி கூட அரசை ஆதரிக்கவில்லை. தொழிலாளி வர்க்கத்தின் ஒருபகுதி அரசை ஆதரிக்கும் வரை ஒருபோதும் விடுதலையைப் பெறமுடியாது என்ற பேருண்மையை எகிப்து மீண்டும் நிறுவிக்காட்டியது.

இலங்கைத் தொழிலாளி வர்க்கம் தானொரு உணர்மையுள்ள வர்க்கம் என்பதை நினைத்துப் பார்க்கவேண்டும். சமரசப் படக் கூடாத வர்க்கத்தோடு சமரசப்படக் கூடாது என்பதில் பிடிவாதமாக நிற்க வேண்டும்.

வெகுசனங்கள் ஒன்றுபட்டுப் பங்களித்து வென்றெடுத்த அரசியல்மாற்றங்களின் பலாபலன்களை எல்லாமக்களுமே பகிர்ந்து அனுபவிக்க உரிமையுடையவர்கள் என்பதையும் உறுதி செய்தார்கள்.

இலங்கையைப்போல் ராஜபக்ஸ்ச குடும்பமும் மற்றும் உச்சியிலுள்ள ஆயுதப் படையினரும் அரச அடிவருடிகளும் மாத்திரம் அனுபவிக்கும் உரிமையை அவர்கள் விடவில்லை.

ஒட்டுமொத்ததத் தமிழ் மக்கள் செய்யவேண்டிய வரலாற்றுக் கடமையை குறுங்குழுத் தனிமனித பயங்கரவாதிகளாலோ அன்றேல் ஒட்டுமொத்த இலங்கை மக்களும் இணைந்து செய்யவேண்டிய வரலாற்று அரசியற்கடமையை ராஜபக்ஸ்ச குடும்ப மற்றும் குறுங்குழுக் கும்பலினால் ஒருபொழுதும் ஆற்ற முடியாது என்பது அசைக்க முடியாத பெரியபாடமாகும்.

தமிழ் மக்களின் அரசியற் போராட்டத்திற்கான தலைமையை பாசிசப் புலிகள் ஏகோபித்த உரிமைகொண்டாடியதும் அதனை ஆதரித்த புலம்பெயர் தமிழர்கூட்டம் கோடானுகோடியைக் கொட்டிக் கொடுத்து உலகிலுள்ள அதிநவீன ஆயுதங்களை வாங்கிக் குவித்தும் கப்பற்படைமுதல் பீரங்கிப் படை வரையிலிருந்து விமானப்படையென்று வைத்திருந்தும் அவமானகரமான தோல்வியைச் சந்தித்தது ஏன் என்ற கேள்வியை எழுப்புகிறது.

ஏனய போராளிகளையும் போராட்டத்தலைமையையும் பூண்டோடு அழித்தொழித்து தமிழ் மக்களின் உயிரோடும் உணர்வுகளோடும் ஒன்றிக்கலந்துநின்ற தமிழ்பேசும் இஸ்லாமிய மக்களை அவர்களுடைய பூர்வீகப் பிரதேசத்திலிருந்து விரட்டியடித்தது மட்டுமல்லாமல் அரசியல் பகையாளிகளாகவும் உருவாக்கி தமிழ் மக்களின் ஒன்றுபட்ட வாக்குகளைச்
சிதறிடித்து இந்த ஈழத்தமிழ்மக்களை அரசியல் அனாதைகளாக அரசியல் விதைவைகளாக
ஆக்கியதற்கு யார் காரணம் என்பதை தமிழ் மக்கள் உணரவேண்டும்.

எல்லாவற்றிற்கும் சிகரம் வைத்தாற்போல் தமிழ்பேசும் மக்களின் நியாயமான அரசியற் தீர்வை ஆதரித்த ஒரு குறிப்பிட்ட சதவீத தென்பகுதி சிங்கள மக்களையும் அதன் அரசியற் தலைவர்களையும் கூட தமது பயங்கரவாத நடவடிக்கையால் வெறுப்படைய வைத்து அரசபயங்கரவாதத்திற்கு நிகரான தமிழ்பயங்கரவாதத்தைக் கட்டவிழ்த்து தமிழரின் நியாயமான அரசியற் தீர்வை எதிர்க்க சிங்கள மக்களை தூண்டிய காரியத்தைச் செய்தது யார்?

தமிழ்சிறுவர்களும் மக்களும் கொல்லப்பட்டால் அது அநியாயம். ஆனால் சிங்கள சிறார்களும்
மக்களும் கொல்லப்பட்டால் அது நியாயம். எந்த அநியாயத்திற்கு எதிராகப் போராட முற்பட்டோமோ அதே அநியாயத்தை நாமே செய்து தமிழர் பக்கமுள்ள நியாயத்தை அநியாயப்படுத்தியதே புலிகளின் மற்றுமொரு சாதனையாகும்.

காலம் இலங்கைத் தமிழருக்கு ஒரு மகத்தான உண்மையை வெளிக்காட்டியிருக்கிறது. அதாவது இலங்கைத் தமிழரின் சமூக பொருளாதார மற்றும் அரசியல்வாழ்வு மற்றும் எதிர்காலம் இலங்கையிலுள்ள சிங்கள இஸ்லாமிய மக்களோடு பின்னிப்பிணைக்கப்பட்டுள்ளதே அது.

தமிழ் மக்களின் நலன் சிங்கள இஸ்லாமிய மக்களின் நலனோடும் தமிழ் மக்களின் அரசியல் எதிர்காலம் சிங்கள இஸ்லாமிய மக்களின் அரசியலோடும் இணைக்கப்பட்டுள்ளது உண்மையாகும்.

சிங்கள இஸ்லாமிய மக்களின் அழிவில் தமிழ்மக்கள் ஒருபொழுதும் தப்பிப் பிழைக்கவே மாட்டார்கள் என்பதே நியதி. இவற்றைத் தமிழ் மக்கள் மிகத் தெளிவாக உணர்ந்துகொண்டால் அன்றி ஒருபோதும் தமிழ் மக்களுக்கு அரசியல் விடிவு ஏற்படப் போவதில்லை.

ஆளும் அதிகார வர்க்கத்தின் பிரித்தாளும் சூழ்ச்சிகளிலிருந்து தம்மை தமிழ்மக்கள் விடுவித்துக் கொண்டு தமது அரசியற் பங்காளிகளான சிங்கள மற்றும் இஸ்லாமிய மக்களோடு ஒன்றுபட்டு நின்றால் மட்டுமே ஏதேச்சாதிகார சக்திகளையும் சர்வாதிகாரத்தையும் வீழ்த்தி இலங்கையின் ஒட்டுமொத்த விடுதலையின் ஒரு பாகமாகத் தமிழ் மக்களின் நியாயமானதொரு தீர்வைப் பெறமுடியுமென்பதைத் தமிழ் மக்கள் உணரவேண்டும்.

பொதுவாக ஈழத்தமிழர் தம்மை யூதருக்கு இணையாகக் காட்டிக் கொள்வதையும் அதில் பெருமை அடைவதையும் ஒருபழக்கமாகக் கொண்டவர்கள். அப்படி இணையாகக்
காட்டிக் கொள்வதில் சிலவேளை உண்மை இருந்தாலும் கூட ஈழத்தமிழர் தங்களுடைய
அரசியல் உரிமைகளை எப்போதோ வென்றெடுத்து இருக்க வேண்டும். யூதரை
விடுவோம். எகிப்தியரிடமிருந்தாவது நம்மக்கள் பாடம் கற்றுக் கொள்வார்களா என்பதை பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்.

2011.02.19

0 comments :

Copyright www.ilankainet.com All right reserved.
Designed and Hosted By : ilankainet.com
To contact us : ilankainet@gmail.com