Wednesday, January 12, 2011

நான் சர்வாதிகாரியாக மாறியிருக்க வேண்டும்: முன்னாள் ஜனாதிபதி சந்திரிகா

(கெலும் பண்டார, ஆர்.சேதுராமன்) "2000 ஆம் ஆண்டில் தற்காலிகமாக நான் 6 மாதங்களுக்கு சர்வாதிகாரியாக மாறி புதிய அரசியலமைப்பை கொண்டு வந்துவிட்டு மீண்டும் ஜனநாயக முறைமைக்குச் சென்றிருக்க வேண்டும். எனக்குப் பின்னர் சர்வாதிகாரம் வரும் எனத் தெரிந்திருந்தால் நாட்டின் நன்மைக்காக நான் அதை செய்திருப்பேன்" என முன்னாள் ஜனாதிபதி சந்திரிகா பண்டாரநாயக்க குமாரதுங்க தெரிவித்தார்.

டெய்லி மிரர் மற்றும் தமிழ் மிரருக்கு தனது ஹொரகொல்ல இல்லத்தில் வைத்து அளித்த பிரத்தியேக செவ்வியொன்றிலேயே முன்னாள் ஜனாதிபதி இவ்வாறு கூறினார்.

தனக்கு நாடாளுமன்றத்தில் இன்னும் 8 வாக்குகள் இருந்திருந்தால் இது ஏறத்தாழ சமஷ்டி நாடொன்றாக இருந்திருக்கும் எனவும் அவர் தெரிவித்தார்.

அவர் அளித்த செவ்வி விபரம் பின்வருமாறு:

கேள்வி: ஜனாதிபதி பதவியிலிருந்து ஓய்வு பெற்றபின் உங்களது தற்போதைய செயற்பாடுகள் எவை?
ப: ஓய்வு பெற்ற பின்னர் நான் மீண்டும் நேரடியாக அரசியலில் ஈடுபடுவதில்லை எனத் தீர்மானித்தேன். ஏனெனில் ஆட்சி நடத்தப்படும் விதம் எனக்குப் பிடிக்கவில்லை. ஜனநாயகம், எதிர்கால நோக்கு என்பன இல்லை. இரு 11 வருட காலம் மாத்திரம் நான் நிறைவேற்றதிகார ஜனாதிபதியாக பதவி வகித்த போதிலும் 33 வருடங்களாக நான் அரசியல் ஈடுபட்டேன். 61 வயதில் நான் ஓய்வு பெற்றேன். அதுவரை எனது பிள்ளைகளுடன் செலவிடுவதற்கு எனக்கு அதிக நேரம் கிடைக்கவில்லை.

உண்மையில் 1995 ஆம் ஆண்டு நான் தேர்தலில் போட்டியிட்ட போது எனது பிள்ளைகள் அவர்கள் சற்று எதிர்ப்பு தெரிவித்தனர். அதற்கு ஒரு காரணம் உள்ளது. பண்டாரநாயக்காக்கள் அரசியல் காரணமாக அவர்களிடமிருந்தவற்றை இழந்தார்கள். எனது தந்தை கொல்லப்பட்டார். பின்னர் எனது கணவரும் கொல்லப்பட்டார். என்னை கொலை செய்ய முயற்சி நடந்து மரணத்தை நெருங்கினேன். உடல், மன ரீதியில் நான் திடமாக இருந்தாலும் மீண்டும் அரசியலில் ஈடுபடுவதில்லை என நான் தீர்மானித்தேன். அரசியல் காரணமாக நான் ஒரு சதத்தையேனும் சம்பாதிக்கவில்லை.

எவ்வாறெனினும் ஓய்வின் பின்னர் நான் தொந்தரவுக்குள்ளாக்கப்பட்டேன். ஊடகங்களில் எனக்கெதிராக அவர்கள் பல்வேறு குற்றச்சாட்டுகளை சுமத்தினர். நான் திருத்தங்களை ஊடகங்களுக்கு அனுப்பினேன். ஆனால் அவற்றை வெளியிடாதிருப்பதற்கு அப்பாவி ஊடகவியலாளரகள் மீதான தொந்தரவுகள், அழுத்தங்கள் கொடுக்கப்பட்டன.

எனினும் எனது அனுபவத்தையும் அறிவையும் எனது நாட்டிற்காக பாரியளவில் பயன்படுத்தலாம் எனத் தீர்மானித்தேன். அதை மனதிற்கொண்டு ஜனநாயக கற்கைகளுக்கான மன்றம் என்ற பெயரில் அமைப்பொன்றை ஸ்தாபித்தேன். அது லாபநோக்கற்ற அறக்கட்டளையாக பிரிட்டனில் பதிவு செய்யப்பட்டுள்ளது. இலங்கையிலும் அது பதிவு செய்யப்பட்டுள்ளது. நானும் அதற்கு நிதி வழங்கியுள்ளேன். வெளிநாட்டு நன்கொடையாளர்களும் நிதி வழங்கினர்.

கேள்வி: இந்த அமைப்பு எதில் கவனம் செலுத்துகிறது?

ப: இது பிரதானமாக தெற்காசியாவில் கவனம் செலுத்துகிறது. ஏனெனில், உலகிலேயே தெற்காசியாவில்தான் அதிக எண்ணிக்கையான வறிய மக்கள் உள்ளனர். அதிக அரசியல் பிரச்சினைகள் உள்ளன. நாம் பொருளாதார அபிவிருத்தி, வறுமை ஒழிப்பு, பெண்கள் முன்னேற்றம், காலநிலை மாற்றம், பிரநர்திய ஒத்துழைப்பு, சமாதானத்தை கட்டியெழுப்புதல் பிணக்குத் தீர்வுகாணல் மற்றும் சமாதானத்தை கட்டியெழுப்பல் போன்றவற்றில் நாம் செயற்படுகிறறோம்.

நாம் எம்பிலிப்பிட்டியவில் 31 வீடுகளுக்கு தண்ணீர் வசதிகளை ஏற்படுத்திக் கொடுத்துள்ளோம். மழை நீரை சேகரித்து வடிகட்டி பயன்படுத்தும் முறை அது. யாழ்ப்பாணத்தில் இடம்பெயர்ந்து மீளக்குடியேறிய 30 குடும்பங்களுக்கு நாம் சூரியசக்தி மின்சார வசதிகளை ஏற்படுத்திக் கொடுத்துள்ளோம். 100 வீடுகளுக்கு இவ்வசதிகளை வழங்க நாம் விரும்புகிறோம். இதற்காக மேலும் 70 பேரின் பெயர்களை சிபாரிசு செய்யுமாறு நாம் அரசாங்கத்திடம் கோரினோம். ஆனால் இதுவரை அரசாங்கம் அப்பெயர்களை வழங்கவில்லை. அவர்களே தேவையுள்ள மக்களை தெரிவு செய்ய வேண்டும் எனக் கூறுகிறார்கள். சிலரின் பெயர்களை தந்தார்கள். அவர்கள் இடம்பெயர்ந்த மக்கள் அல்ல. நாம் இடம்பெயர்ந்த மக்களுக்கே இவ்வசதிகளை வழங்க விரும்புகிறோம்.

இவற்றைத் தவிர நாம் சிறிமாவோ பண்டாரநாயக்க ஞாபகார்த்த தலைமைத்துவ கற்கை நிலையமொன்றையும் நிறுவியுள்ளோம். எனது தயார் உலகின் முதலாவது பெண் பிரதமராக பதவியேற்றதன் 50 ஆண்டுகள் பூர்த்தியையொட்டி கடந்த வருடம் இந்நிலையத்தை நாம் நிறுவினோம். கல்விதான் எனது ஆர்வத்திற்குரியது. சிறந்த கல்வி முறைமை இல்லாமல் நாட்டை அபிவிருத்தி செய்ய முடியாது. இன்று நாட்டில் வளர்ந்தோர்கள் மோசமாக செயற்படுகின்றனர். முரண்பாடுகள் உள்ளன. தீவிரமான சிந்தனைப்போக்கு உள்ளது. எனது அரசாங்கத்தில் நான் இவற்றை அனுமதிக்கவில்லை. அவர்கள் ஜனநாயகம், சமவுரிமையை மதிப்பதில்லை. நடத்தைகளில் முழுமையான மாற்றமொன்று எமக்குத் தேவைப்படுகிறது. நான் அறிமுகப்படுத்திய விஞ்ஞானபூர்வ கல்வித் திட்டம் இன்று சீர்குழைந்துள்ளது.

நான் ஓய்வு பெற்ற பின்னர் கல்வி நிலை மீண்டும் கீழிறங்கியுள்ளது. நான் ஆரம்பித்த பல நல்ல திட்டங்கள் நிறுத்தப்பட்டுள்ளன. பல நல்ல திட்டங்கள் நிறுத்தப்பட்டுள்ளதாக அதிகாரிகள் என்னிடம் முறையிட்டனர். இதில் நான் செய்யக்கூடியது எதுவுமில்லை.

இச்சூழ்நிலையில் ஒரு சிறிய விதத்தில் நான் சிந்தித்தேன். இந்த நாட்டுக்கு இப்போது நல்ல தலைவர்கள் தேவை. சொற்ப அளவிலான சிறந்த தலைவர்கள் உள்ளனர். அரசியலில் மாத்திரமல்ல, அரச சேவைத் துறையிலும் சொற்ப அளவிலான சிறந்த தலைவர்களே உள்ளனர். தனியார் துறையில் சில சிறந்த தலைவர்கள் உள்ளனர். பொய் சொல்லாத, கசிப்பு, போதைப்பொருள் விற்காத நல்ல தலைவர்கள் சிலரை நாம் உருவாக்க வேண்டும்.

கேள்வி: யுத்தம் தொடர்பான உங்கள் செயற் திட்டத்துடன் தொடர்பான தெற்காசிய தலைவர்கள் யார்?
பதில்: சர்வதேச ஆலோசனைக் கவுன்ஸில் எனும் ஒரு குழு எம்மிடமுள்ளது. இந்திய முன்னாள் பிரதமர் ஐ.கே. குஜ்ரால் மற்றும் பிரிட்டனைத் தளமாகக் கொண்ட இந்தியரான லண்டன் பொருளாதார பாடசாலையின் தலைவர் மேக்நாத் போன்றோர் அதில் உள்ளனர்.
எமது நான்காவது திட்டம் தெற்கு ஆசிய கொள்கை மற்றும் ஆராய்ச்சி நிறுவகமாகும். பெரும் எண்ணிக்கையான வெளிநாட்டவர்கள் அதில் சம்பந்தப்பட்டுள்ளனர். தெற்காசிய நாடுகளுக்கான கொள்கைகளை ஆய்வு செய்து சிபாரிசு செய்யும் ஆராய்ச்சி நிறுவகமாகும். நல்லாட்சி, பூகோள பார்வைப் புலத்தில்; தெற்காசியாவின் பாத்திரம் உட்பட பல விடயங்களை நாம் உள்ளடக்கியுள்ளோம்.

தெற்காசிய பிராந்தியத்திற்கு மாத்திரமே பிராந்திய ரீதியான சிந்தனைப்பள்ளியொன்று இல்லை. நாடாளாவிய ரீதியில் உள்ளன. பிராந்திய ரீதியில் இல்லை. வறுமையான ஆபிரிக்காவில்கூட பல்வேறு பெயர்களில் இவை உள்ளன. நாம் உயர் கல்வி கற்ற பெரும் எண்ணிக்கையானோரை கொண்டிருக்கிறோம். இது பிராந்தியத்தின் முறையாக இயங்கும் முதலாவது சிந்தனைப் பள்ளியாக இருக்கலாம். 10 விடயங்களில் ஆராய்ச்சிகளை மேற்கொள்வதற்காக உலகெங்குமிருந்து ஆராய்ச்சியாளர்களை நாம் பெற்றிருக்கிறோம்.

ஆய்வுகளை மீளாய்வு செய்வதற்காக கல்வியாளர் சபையொன்று உள்ளது. இந்தியா பங்களாதேஷ் பாகிஸ்தான் மாலைதீவு, ஐரோப்பா, பிரான்ஸ் ஆகியவற்றைச் சேர்ந்த கல்விமான்கள் இதில் அங்கம் வகிக்கின்றனர். அடுத்த செயற்பாடு கருத்தரங்குகளை நடத்துவதாகும். நாம் சிபார்சு செய்வதை அமுல்படுத்துமாறு அரசாங்கங்களையும் தனியாரையும் நாம் ஊக்குவிக்கிறோம்.

தெற்காசிய நாடுகளில் வருடாந்த மாநாடுகளையும் நாம் நடத்துவோம். இலங்கையிலும் கருத்தரங்கொன்று இருக்கும். ஆனால் நான் அதை வெளிப்படுத்த முடியாது. அரசாங்கம் அதை குழப்பிவிடும் என அஞ்சுகிறேன். தனிப்பட்ட ரீதியில் என்னில் பொறாமை கொண்ட தீய மனம் கொண்டவர்கள் இருக்கிறார்கள். எனினும் எமக்கு அரசாங்கத்தின் தார்மீக ஆதரவு தேவை. எவ்வாறெனினும் நேரம் வரும்போது அவர்களுடன் நான் பேசுவேன். இதுவரை அரசாங்கத்தின் பிரதிபலிப்பானது குறுகிய மனம்கொண்டதாகவே உள்ளது.

கேள்வி: போருக்குப் பிந்திய சமாதானத்தை கட்டியெழுப்பல் என்ற தொனிப்பொருளின் கீழ் இலங்கையில் நீங்கள் எவ்வகையான பாத்திரத்தை வகிக்க எதிர்பார்க்கிறீர்கள்?
பதில்: போருக்குப் பிந்திய சமாதானக் கட்டியெழுப்பல் மிகவும் அவசியமானது. போர் முடிவுற்றவுடன் ஜனாதிபதிக்கு நான் அனுப்பிய வாழ்த்துச்செய்தியை நீங்கள் பார்த்திருக்கிறீர்களா என்று தெரியவில்லை. அவர் வெற்றி பெற்றதாக நான் சொல்லவில்லை. அரசாங்கம் வென்றதாக அதில் கூறியிருந்தேன். சொற்களை நான் கவனமாக தேர்ந்தெடுத்தேன்.

'உங்கள் அரசாங்கம் சந்தேகத்திற்கிடமின்றி யுத்தத்தில் வென்றுள்ளது. எனினும் நீங்கள் மேலும் கடுமையான சமாதானத்தை வென்றெடுக்கும் இலக்கை எதிர்நோக்குகிறீர்கள். அந்நடவடிக்கையில் பெருந்தன்மையையும் விவேகத்தையும் பெற்றிருக்க வாழ்த்துகிறேன்|' என நான் அதில் தெரிவித்திருந்தேன். அது மிகவும் அவசியமானது. யுத்தத்தில் வெற்றி பெறலாம். ஆனால் எமது நாட்டின் சுமார் 10 சதவீதமான மக்கள் கோபத்தையும் காயத்தையும் கொண்டிருக்கும்போது ஸ்திரமான சமூகத்தை கட்டியெழுப்ப முடியாது.

எல்.ரி.ரி.ஈ. அழிக்கப்பட்ட பின்னர் சமாதானத்தை ஏற்படுத்துவதற்கு அதிசயமான சந்தர்ப்பொன்று ஏற்பட்டது. எல்.ரி.ரி.ஈ. முன்னர் அதற்கு ஒருபோதும் அனுமதிக்கவில்லை. சமாதானத்தை ஏற்படுத்துவதற்கு நான் செய்தவைகள் கடவுளுக்குத் தெரியும். அத்துடன் சமாதானத்தை ஏற்படுத்துவதற்கான எனது முயற்சிகளை எதிர்க்கட்சியும் தடுத்தது. எனக்கு இன்னும் 8 வாக்குகள் இருந்திருந்தால் (இது) ஏறத்தாழ சமஷ்டி நாடொன்றாக இருந்திருக்கும். அதன்பின் தமிழ் பொதுமக்கள் எல்.ரி.ரி.ஈ.யை ஆதரித்திருக்க மாட்டார்கள். என்னிடமிருந்தை கொடுக்குமாறு தமிழ் மக்கள் வலியுறுத்தினார்கள். புலம்பெயர்ந்த மக்கள் வலியுறுத்தினார்கள். எனக்கு 8 வாக்குகள் மட்டுமே தேவைப்பட்டன. தமிழ் முஸ்லிம் கட்சிகள் அனைத்தும் அதற்கு வாக்களித்திருக்கும். இப்போது அந்தளவு கொடுப்பதற்கு எவருக்கும் தேவையில்லை. ஏனெனில் போது யுத்தம் முடிந்துவிட்டது. எல்.ரி.ரி.ஈ.யும் இல்லை. எனினும் தமிழ் மக்கள் கௌரவத்துடனும் சுயமரியாதையுடனும் ஏற்றுக்கொள்ளதக்க ஏதேனும் கொடுக்கப்பட வேண்டும். வெறும் பிரதேச சபைகள் அல்ல.

யுத்தம் முடிந்து 18 மாதங்களானபின் இடம்பெயர்ந்த மக்களுக்காக 8000 வீடுகள் மாத்திரமே நிர்மாணிக்கப்பட்டுள்ளன. சுனாமிக்குப் பினன்னர் நாம் 70000 வீடுகளை நிர்மாணித்தோம். சுனாமி ஏற்பட்டு 11 மாதங்களின்பின் நான் ஓய்வு பெறும்போது ஏறத்தாழ அனைத்து வீடுகளும் பூர்த்தியாக்கப்பட்டுவிட்டன. அல்லது கிட்டத்தட்ட பூர்த்தியாகியிருந்தன. எனவே 8000 வீடுகளை நிர்மாணிப்பதற்கு 19 மாதங்கள் சென்றது ஏன் என எனக்குத் தெரியவில்லை. அதற்கான அரசியல் மனோதிடம் இல்லாததுபோல் தென்படுகிறது.

இறுதித் தீர்வானது பேச்சுவார்த்தை மூலமான அரசியல் தீர்வாக இருக்க வேண்டுமென்ற எனது நிலைப்பாட்டை நான் ஒருபோதும் மாற்றிக்கொள்ளவில்லை. அதில் இன்னும் நான் நம்பிக்கை கொண்டுள்ளேன். எல்.ரி.ரி.ஈ.க்கு தேவையாக இருந்தால் நீங்கள் சண்டைகளில் ஈடுபட வேண்டியிருக்கும். அவர்கள் (அரசாங்கம்) எல்.ரி.ரி.ஈ.யை முடித்துவிட்டர்கள். அது நல்லது. அதனால் எல்.ரி.ரி.ஈ.யின் அங்கத்தவர்களை தவிர யாரும் கவலையடையவில்லை.

ஆனால், இறைமையுள்ள இலங்கை அரசாங்கம் தான் இலங்கையின் அனைத்து மக்களினதும் அரசாங்கம் என்பதை நிரூபிக்கக்கூடியதாக இருக்க வேண்டும். அதை நிரூபிப்பதற்கு அனைத்து மக்களையும் ஒரு விதமாக நடத்த வேண்டும். அரசாங்கத்தினால் குறுகிய காலத்தில் யுத்தத்தை ஒழுங்கமைத்து அதில் வெற்றி பெற முடியுமானால் அவர்களுக்கு சமாதானத்தை வென்றெடுப்பதிலும் இதே விதமாக ஒழுங்கமைக்கும் ஆற்றலும் அவர்களுக்கு இருக்கும் என்பது வெளிப்படை.

அவர்களிடம் பணம் இல்லாவிட்டால் தெற்கிலிருந்து பணத்தை பெற முடியும். தெற்கில் ஏராளமான பணம் உள்ளது. ஊழல் நிறுத்தப்பட்டால் பெருமளவு பணத்தை பெற்றுக்கொள்ள முடியும். நாட்டின் தேசிய வரவுசெலவுத்திட்டத்தில் சுமார் 40 சதவீதம் ஊழல் காரணமாக விரயமாகிறது.

கேள்வி: தாங்கள் எவ்வாறு இந்த தொகை இலக்கத்தை பெற்றுக்கொண்டீர்கள்?
பதில்: இது சுமாரான தொகை. எவ்வளவு கொள்ளையடிக்கப்படுகிறது என்பது குறித்த தொகைகள் எதுவும் இல்லை. கேள்விப்பத்திரங்களைப் பெறுவது, பாரிய அபிவிருத்தித் திட்டங்கள் குறித்த எனது அறிவின் அடிப்படையில்தான். இப்பாரிய திட்டங்களுக்கு எனது பதவிக்காலத்தில் அடிக்கற்கள் நாட்டப்ட்டன. அந்த வேளையில் அந்தத் திட்டங்களுக்கு எவ்வளவு செலவு என்பதும் தற்போதை செலவும் எனக்குத் தெரியும். மேலதிகமாக உள்ள தொகை ஊழலாகும். இத்திட்டங்களுக்கான பொருட்கள் கடந்த இரு வருடங்களில் அதிகரிக்கவில்லை. ஊழல் நிறுத்தப்பட்டால் குறிப்பிடத்தக்களவு தொகை பணம் பெறப்படலாம்.

கேள்வி: சர்வகட்சி பிரதிநிதிகள் குழு பற்றிய உங்களது கருத்து என்ன?

பதில்: அதை பார்த்து சிரித்தேன். இதில் நான்கு வருடங்களை விரயமாக்கத் தேவையில்லை. ஏனெனில் கடந்த காலத்தில் நாம் போதியளவு உதாரணங்களைக் கொண்டிருந்தோம். 2000 ஆம் ஆண்டு அரசியலமைப்பு யோசனைகளில் பெருமளவு வேலைகளை நாம் செய்தோம். ஐ.தே.கவுடன் பேச்சுவார்த்தை நடத்தினோம். அவர்கள் எமக்கு ஆதரவு வழங்கவில்லை. அவர்களுடன் மாத்திரம் நானே 34 கலந்துரையாடல்களை நடத்தினேன். தமிழ் முஸ்லிம் கட்சிகளுடன் நான் பேச்சு நடத்தினேன். அவர்கள் கேட்ட அனைத்தையும் நாம் கொடுக்கவில்லை. அது எனது பெரு விருப்புள்ள திட்டம். ஐ.தே.க. ஆதரவு வழங்கியிருந்தால் நான் அத்திட்டத்தை நிறைவேற்றியிருப்பேன்.

உண்மையில் நான் சர்வாதிகாரியாக செயற்பட்டிருக்கலாம். பலர் அப்படி ஆலோசனை கூறினார்கள். சர்வாதிகாரியாக மாறி அரசியலமைப்பை கொண்டுவரும்படி கூறினார்கள். நான் அதை கருத்திற்கொண்டது ஏனெனில் நான் தொடர்ச்சியாக அதிகாரத்தில் இருப்பதற்காக அல்ல. மாறாக பெருமளவு அதிகாரப் பரவலாக்கத்தை கொண்டிருந்த அந்த அரசியலமைப்பை கொண்டு வருவதற்காக. ஓன்று அல்லது இரு வருடங்களில் நிறைவேற்றதிகார ஜனாதிபதி முறைமையை நீக்குவதும் அதில் அடங்கியிருந்தது. ஆனால் நான் அதை முன்னெடுக்கவில்லை. ஏனெனில் நான் ஒரு ஜனநாயக வாதி. எனது பதவிக்காலத்தில் ஜனநாயகமற்ற எந்த நடவடிக்கையிலும் நான் ஈடுபடவில்லை. இந்த நோக்கத்திற்காகக்கூட சர்வாதிகாரியாக மாற என்னால் முடியவில்லை.

இதற்காக நான் கவலையடையலாம். தற்காலிகமாக நான் 6 மாதங்களுக்கு சர்வாதிகாரியாக மாறி அந்த அரசியலமைப்பை கொண்டு வந்துவிட்டு, மீண்டும் ஜனநாயக முறைமைக்கு மாறியிருக்க வேண்டும். எனக்குப் பின்னர் சர்வாதிகாரம் வரும் என்று தெரிந்திருந்தால் நாட்டின் நன்மைக்காக நான் அதை செய்திருப்பேன்- நான் அதிகாரத்தில் இருப்பதற்காக அல்ல.

பதவியிலிருந்து விலகி இரு வருடங்களின் பின்னரும் நான் எனது நாடு குறித்து கவலையடைகிறேன். நிரந்தர சமாதானத்தை கொண்டுவரப்படுவதற்கான தெளிவான அறிகுறி எதுவும் தெரியவில்லை. எதிர்காலத்தில் மேலும் பிரபாகரன்கள் உருவாக மாட்டார்கள் என்பதை உத்தரவாதப்படுத்துவதற்கு எமக்கு எதுவுமில்லை.

கேள்வி: முன்னாள் இராணுவத் தளபதி சரத் பொன்சேகா சிறந்த தலைவராக இருந்திருப்பார் என்று நீங்கள் கருதுகிறீர்களா?
பதில்: அது உண்மையில் எனக்குத் தெரியாது. நான் அவருடன் இணைந்து செயற்படவில்லை. ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவை நன்கறிவேன். சரத் பொன்சேகாவை இராணுவத் தளபதியாகவே எனக்குத் தெரியும். ஆனால் தலைவர் மாற்றம் என்பது ஜனநாயக முறைமைக்கு எப்போதும் சிறந்ததாகும்.

கேள்வி: தற்போதைய எதிர்க்கட்சி குறித்து உங்கள் அபிப்பிராயம் என்ன?
பதில்: எதிர்க்கட்சியின் பலவீனம்தான் அரசாங்கத்தின் பலமாகவுள்ளது. அரசாங்கம் பலமாக இருப்பதற்கான பிரதான காரணம் யுத்தத்தில் பெற்ற வெற்றியாகும். பல்வேறு பிரச்சினைகள் உள்ளன. சம்பள உயர்வு வழங்கப்படவில்லை. எனது பதவிக்காலத்தில் 5 தடவைகளில் சம்பளம் 500 சதவீதத்தால் அதிகரிக்கப்பட்டது. இந்நிலையில் அரசாங்கத்தின் பலத்திற்கான பிரதான காரணம் யுத்த வெற்றியாகவும் இரண்டாவது காரணம் எதிர்க்கட்சியின் பலவீனமுமாகவுள்ளது.

கேள்வி: அரசாங்கத்தின் சில அங்கத்தவர்கள் தற்போது உங்களை நடத்தும் விதம் குறித்து உங்கள் உணர்வுகள் என்ன?
பதில்: அரசாங்கத்தின் அங்கத்தவர்களில் மூவரைத் தவிர வேறு எவரும் எனக்கு எதிராக எதுவும் கூறவோ செய்யவோ இல்லை. எமது கட்சி 17 வருடங்களாக எதிர்க்கட்சியில் இருந்தது. ஒவ்வொரு தேர்தலிலும் அவர்கள் தோல்வியுற்றார்கள். 1994 ஆம் ஆண்டில் அவர்கள் வெற்றிபெறுவதற்கு நான் தலைமை தாங்கினேன். அவர்கள் இன்றிருக்கும் நிலைக்கு பகுதியளவில் நான் காரணம். அவர்களின் முயற்சியும் அவர்களின் வெற்றிகளுக்கு பங்காற்றியிருக்கலாம்.

கேள்வி: இப்போது உங்கள் ஓய்வு நேரத்தை எவ்வாறு செலவிடுகிறீர்கள்?

பதில்: எனக்கு ஓய்வு நேரம் கிடைப்பது அரிது. நான் எனது சர்வதேச பணிகளில் மும்முரமாகவுள்ளேன். ஓய்வாக இருந்தால் தோட்டத்தை வீட்டை பராமரிப்பதில் ஈடுபடுவேன். ஹொரகொல்ல வளவை நான் மீள்மெருகூட்டினேன். தோட்டக்கலை, ஓவியம் வரைதல் என்பனவற்றை நான் விரும்புகிறேன். வாசிப்பதற்கு எனக்கு நேரம் கிடைக்க வேண்டும் என விரும்புகிறேன். அத்துடன் எனது அரசியல் வாழ்க்கை குறித்த நூலொன்றையும் எழுதிக்கொண்டிருக்கிறேன்.

Thanks Tamilmirror

0 comments :

Copyright www.ilankainet.com All right reserved.
Designed and Hosted By : ilankainet.com
To contact us : ilankainet@gmail.com