Saturday, January 29, 2011

வெள்ளத்தால் பாதிக்கப்பட்டவர்களுக்கு மட்டக்களப்பு செஞ்சிலுவைச் சங்கத்தின் சேவை.

அண்மையில் மட்டக்களப்பு மாவட்டத்தில் ஏற்பட்ட தொடர் மழை காரணமாக மாவட்டத்தின் பல்வேறு கிராமங்கள் வெள்ளத்தில் மூழ்கின. இந்நிலையில் அங்குள்ள மக்கள் பல்வேறு துயரங்களுக்கு ஆளாகி தங்குமிட வசதிகள் எதுவுமின்றி முகாம்களில் தங்கவைக்கப்பட்டு அவர்களுக்கான நிவாரணப்பணிகள் மேற்கொள்ளப்பட்டன. பல்வேறு தொண்டர் அமைப்புக்கள் மற்றும் அரச அரசசார்பற்ற நிறுவனங்கள் பாதிக்கப்பட்டவர்களுக்கான நிவாரணப்பணிகளை மேற்கொண்டுள்ளது. இதில் குறிப்பிடத்தக்க பங்காக இலங்கை செஞ்சிலுவைச்சங்கத்தின் சேவை பாராட்டத்தக்கது.

குறிப்பாக வெள்ளத்தால் முற்றாக மூழ்கிய வாகரை பிரதேச செயலகத்திற்கு உட்டபட்ட கிராமங்கள் மற்றும் மட்டு படுவான்கரை பிரதேசத்தின் கிராமங்களில் தவித்த மக்களை மீட்கும் பணியில் இலங்கை செஞ்சிலுவைச்சங்கத்தின் மட்டக்களப்பு கிளையே முதன்முதலில் ஈடுபட்டுள்ளது. இது மாத்திரமின்றி மட்டக்களப்பின் மண்முனை வடக்குப்பிரிவில் அமைக்கப்பட்ட பல்வேறு தற்காலிக முகாம்களுக்கு இலங்கை செஞ்சிலுவை சங்கத்தின் மட்டு மாவட்ட இளைஞர் பிரிவின் தலைவர் ஆர். பிராகாஸ் தலைமையில் பல்வேறு வேலைத்திட்டங்கள் மேற்கொள்ளப்பட்டன. குறிப்பாக கருவப்பன்கேணி ஊறணி நாவலடி கொக்குவில் மாமாங்கம் கூழாவடி போன்ற கிராமங்களில் அமைக்கப்பட்டிருந்த முகாங்களுக்கு நேரில் சென்று பார்வையிட்டதுடன் நிவாரணப்பொருட்களையும் மக்களோடு மக்களாக நின்று பகிர்ந்தளித்தார்.

மாத்திரமின்றி மக்கள் தங்கவைக்கப்பட்டிருந்த பாடசாலைகளில் சிரமதானப்பணிகளும் செஞ்சிலுவைச்சங்க இளைஞர் பிரிவின் தொண்டர்கள் மூலம் மேற்கொள்ளப்பட்டது. இது மாத்திரமின்றி வெள்ள அணர்த்தம் காரணமாக உடல்ரீதியாக பாதிக்கப்பட்டு நோய்வாய்ப்பட்ட மக்களுக்கு விசேட வைத்தியர்கள் மூலம் அவர்களுக்கான இலவச மருத்துவ சேவையும் வழங்கப்பட்டமை குறிப்பிடத்தக்கதாகும். அரசாங்கத்தின் சார்பில் பாதிக்கப்பட்ட மக்களுக்கான நிவாரணப்பொருட்கள் வழங்கப்பட்டிருந்த போதிலும் அதனை உடனடியாக மக்களுக்கு பகிர்ந்தளிப்பதில் காலதாமதம் ஏற்பட்டிருந்தது. இந்நிலையில் செஞ்சிலுவைச்சங்கத்தின் இச்சேவை தமக்கு மிகப்பெரிய உதவியாக இருந்தாதாக முகாம்களில் தங்கியிருந்த மக்கள் தெரிவித்திருந்தனர்.

0 comments :

Copyright www.ilankainet.com All right reserved.
Designed and Hosted By : ilankainet.com
To contact us : ilankainet@gmail.com