Monday, January 24, 2011

ஈழத் தமிழர் விடுதலைக்கான நெடுந்தூர நடைபயணம் - 6,7 மற்றும் 8வது நாள் நிகழ்வுகள்!

20-01-2011 வியாழன் அன்று நாயுடு பேட்டை தாண்டி 15 கிலோ மீற்றர் தூரத்தில் இரவு தங்கிய நடைபயண வீரர்கள் 21-01-2011 வெள்ளிக்கிழமை காலை 07:15 மணிக்கு நெல்லூர் நோக்கிப் புறப்பட்டனர். வெங்கையாசாமி தேசிய நெடுஞ்சாலையில் தொடர்ந்து பயணித்த நடைபயண வீரர்கள் 07:53 மணிக்கு சேருகுண்டா என்ற கிராமத்தை கடந்தனர். அந்த கிராமத்து மக்கள் நடைபயண வீரர்களுக்கு கையசைத்து வாழ்த்துச் சொல்லி அனுப்பினர்.

சரியாக காலை 08:30 மணிக்கு நடைபயண வீரர்கள் நெல்லூரை அடைந்தனர். நெல்லூரில் காலை உணவு பரிமாரப்பட்டது. தொடர்ந்து பயணித்த நடைபயண வீரர்கள் வேடயாபாலம் என்ற இடத்தை கடந்து 11:30 மணியளவில் நெல்லூர் மாநகரம் வந்தடைந்தனர். அங்கே தமிழகத்துத் தமிழர்களும் மற்றும் ‘சிறிமா-சாஸ்திரி” ஒப்பந்தத்தின் மூலம் இலங்கையிலிருந்து இந்தியா வந்த தமிழர்களும் மற்றும் நெல்லூர் மக்களும் நடைபயண வீரர்களுக்கு உற்சாக வரவேற்பைக் கொடுத்தனர். நடைபயண தலைமைக் குழுவினர் ஆறுபேருக்கும் பொன்னாடைப் போர்த்தி நடைபயணம் வெற்றிபெற வாழ்த்துக் கூறினர். அன்பு மழையில் திணறவைத்துவிட்டனர்.

மீண்டும் மதியம் 12:00 மணிக்கு தொடர்ந்த பயணம் நெல்லூர் தொடர்வண்டி நிலையத்தின் வழியாக சென்று 12;:20 மணிக்கு நெல்லூர் பாலத்தை கடந்தது. அங்கு நடைபயண வீரர்களுக்கு குளிர்பானம் வழங்கப்பட்டது. அதைத் தொடர்ந்து 12:45 மணிக்குப் புறப்பட்ட நடைபயணம் 01:10 மணிக்கு படுகுபாடு-வெங்டேஸ்வரபுரம் கோயில் அருகில் மதிய உணவுக்காக இடைநிறுத்தப்பட்டது.

வெங்கடேஸ்வரபுரம் கோவிலில் இருந்து மாலை 03:50 மணிக்கு நடைபயண வீரர்கள் சந்திரசேகரபுரம் நோக்கி பயணிக்க ஆரம்பித்தனர். அவர்கள் 04:30 மணிக்கு கோவுர் என்ற இடத்தைக் கடந்து மாலை 06:10 மணிக்கு கோவுர்மண்டூர் வந்தனர். அங்கே அவர்களுக்கு தேனீர் வழங்கப்பட்டது. தேனீர் இடைவேளையை முடித்துவிட்டு புறப்பட்ட நடைபயணம் இரவு 07:35 மணிக்கு சந்திரசேகரபுரம் வந்தடைந்தது. இன்று இதுவரை நடைபயண வீரர்கள் 37 கிNலூ மீற்றர் தூரத்தைக் கடந்துள்ளதாலும் சந்திரசேகரபுரத்தில் தங்குவதற்கான வசதிகள் இருந்ததாலும் அங்கேயே இரவு உணவையும் இரவு ஓய்வையும் நடைபயண வீரர்கள் எடுத்துக்கொண்டனர்.

22-01-2011 சனிக்கிழமை காலை 07:00 மணிக்கு சந்திரசேகரபுரத்தில் இருந்து புறப்பட்ட ஈழத் தமிழர் விடுதலைக்கான நடைபயணம் ரெகடி செலிகா என்ற இடத்தைக் கடந்து ராச்சலாபாத் வழியாக காவாலி தேசிய நெடுஞ்சாலையில் பயணித்தது. காவாலி தேசிய நெடுஞ்சாலையிலேயே காலை 09:00 மணிக்கு நடைபயண வீரர்களுக்கு காலை உணவு வழங்கப்படடது.

காலை உணவை முடித்து புறப்பட்ட நடைபயணம் செங்கரயாகோண்ட சோதனை நிலையம் ஊடாக லயன் நகர் காப்பர்லதிப்பா என்ற இடங்களைக் கடந்து மதியம் 12:30 மணிக்கு மதிய உணவிற்காக செங்கம் என்ற கிராமத்தில் இடைநிறுத்தப்பட்டது. மீண்டும் 03:30 மணிக்குப் புறப்பட்ட நடைபயணம் கடநுட்லா கௌரவம் என்ற இடங்களைக் கடந்து காவாலி தேசிய நெடுஞ்சாலையில் பயணித்தது. மாலை 05;40 மணிக்கு தேனீர் வழங்கப்பட்டது. தொடர்ந்து பயணித்த நடைபயண வீரர்கள் இரவு 08:10 மணியளவில் காவாலி தேசிய நெடுஞ்சாலையில் உள்ள ஒரு வயல்வெளியில் இரவு ஓய்வுக்கா முகாம் அமைத்தனர். இன்று (22) அவர்கள் 35.5 கிலோ மீற்றர் தூரத்தைக் கடந்தனர்.

23-01-2011 ஞாயிறு அன்று காலை 06:40 மணிக்கு தேனீர் அருந்திவிட்டு நடக்க ஆரம்பித்த நடைபயண வீரர்கள் மட்டுராபாடு என்ற இடத்தைக் கடந்து ஓங்கல் தேசிய நெடுஞ்சாலையில் பயணித்தனர். 09:00 மணிக்கு ஓங்கல் தேசிய நெடுஞ்சாலையில் காலை உணவை முடித்துவிட்டு புறப்பட்ட நெடும்பயணம் குகடாபல்லி என்ற இடத்தைக் கடந்து கூட்லூரு என்ற இடத்தில் தேனீர் இடைவேளைக்காக நிறுத்தப்பட்டது.

தேனீர் இடைவேளை முடிந்து நடக்க ஆரம்பித்த நடைபயண வீரர்கள் ஓங்கல் தேசிய நெடுஞ்சாலையில் மதிய உணவை முடித்துவிட்டு அங்கேயே முகாம் அமைத்தனர். அன்று மதியத்தோடு நடைபயண வீரர்களுக்கு ஓய்வு கொடுக்கப்பட்டது. மருத்துவ பரிசோதனைக்காகவும், வீரர்களது உடுப்புகளை கழுவி எடுப்பதற்காகவும் ஓய்வு கொடுக்கப்பட்டது. இன்று மட்டும் விரர்கள் 23 மீற்றர் தொலைவை மடடுமே கடந்தனர். 23-01-2011 ஞாயிறு மதியம் வரை ஈழத் தமிழர் விடுதலைக்கான நடைபயண வீரர்கள் மொத்தமாக 279 கிலோ மீற்றர் தூரத்தைக் கடந்துள்ளனர்.

ஈழ தேசிய ஜனநாய விடுதலை முன்னணி
(ஈ.என்.டி.எல்.எப்.)
24-01-2011

0 comments :

Copyright www.ilankainet.com All right reserved.
Designed and Hosted By : ilankainet.com
To contact us : ilankainet@gmail.com