257993 குடும்ப ங்கள் நிர்க்கதி - 18 மரணம் - 1603 வீடுகள் நாசம். (படங்கள் இணைப்பு)
கடந்த சில நாட்களாக பெய்து வரும் கடும் மழைகப் காரணமாக நாட்டில் 11 மாவட்டங்களில் உள்ள மக்களின் அன்றாட வாழ்க்கை பாதிக்கப்பட்டுள்ளது. வெள்ள அனர்த்தம் காரணமாக நாடு முழுவதும் 2 லட்சத்து 57 ஆயிரத்து 993 குடும்பங்கள் நிர்க்கதியாகியுள்ளன.
இவர்களுக்கென நாடு முழுவதும் தற்காலிகமாக 502 முகாம்கள் அமைக்கப்பட்டுள்ளன. குறித்த முகாம்களில் தற்போது 52 ஆயிரத்து 391 குடும்பங்கள் தஞ்சமடைந்துள்ளன. வெள்ளம், இடி மின்னல், மண்சரிவு மற்றும் மின்னல் தாக்கம் காரணமாக இதுவரையில் 18 பேர் உயிரிழந்துள்ளதுடன், 49 பேர் காயமடைந்துள்ளனர்.
இதேவேளை, அம்பாறை மஹஓயா பிரதேசத்தில் ஒருவரும், மட்டக்களப்பு மன்முனைப்பற்று பிரதேசத்தில் ஒருவரும் வெள்ளத்தில் அள்ளுண்டு செல்லப்பட்டுள்ளனர். இன்று மட்டக்களப்பு வைத்தியசாலை வயோதிபர் ஒருவரது சடலம் இனம்காணப்பட்டுள்ளது. சீரற்ற காலநிலையினால் நாடு முழுவதும் சுமார் ஆயிரத்து 603 வீடுகள் முற்றாக சேதமடைந்துள்ளன.
அதனைவிடவும், 11 ஆயிரத்து 338 வீடுகளுக்கு பகுதி அளவில் சேதம் ஏற்பட்டுள்ளது. மண்சரிவு காரணமாக பிரதான வீதிகள் பலவற்றின் போக்குவரத்து நடவடிக்கைகள் பாதிக்கப்பட்டுள்ளன. மாத்தளை கண்டிக்கு இடையிலான ரயில் போக்குவதைது இன்னும் சீர்செய்யப்படவில்லை. இதேவேளை, கொழும்பு மட்டக்களப்புக்கு இடையிலான ரயில் போக்குவரத்துக்கள் கல்கமுவ வரை மட்டுப்படுத்தப்பட்டுள்ளன.
பாதிக்கப்பட்ட மக்களுக்கான உலர் உணவு மற்றும் சமைத்த உணவுகளை படையினரும், சில அரச சார்பற்ற நிறுவனங்களும் வழங்கி வருகின்றன.
அம்பாறை கல்முனைப் பகுதிகளில் பாதிக்கப்பட்ட மக்களுக்கான உதவி ஏற்பாடுகளை ஜனாதிபதியின் அம்பாறை மாவட்டத்திற்கான இணைப்பாளர் இனியபாரதி அவர்களும் மேற்கொண்டுவருவதாக எமது கல்முனை செய்தியாளர் தெரிவிக்கின்றார்.
அதேநேரத்தில் மட்டக்களப்பு பிரதேசத்தில் உள்ள முகாமொன்றுக்கு விஜயம் செய்த தமிழ் தேசியக் கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர் அரியநேந்திரன் அவர்களுக்கும் மக்களுக்குமிடையே வாக்குவாதம் இடம்பெற்றதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. மக்கள் அல்லலுறும் இத்தருணத்தில் முகாமுக்கு சென்ற அவர் தேவைகள் என்ன என்பதை அறிந்து செல்லவந்ததாகவும் தொடர்ந்து பேச்சுவார்த்தை நாடாத்தி நிவாரணங்களை பெறமுடியும் என கூறியபோது பேச்சுவார்த்தை நடாத்துவதே த:தே:கூ வின் தொழிலாகிபோய்விட்டது சென்றுவாருங்கள் என மக்கள் தெரிவித்ததாகவும் கூறப்படுகின்றது.
அதேநேரம் வளத்தாப்பிட்டி வில்லுக்குளம் உடைப்படுத்ததால் காரைதீவு விசேட அதிரடிப்படை முகாமினுள் நேற்றுமுன்தினம் குளத்துநீர் வெள்ளமாக உட்புகுந்தது. அங்கு வெள்ளம் தேங்கி நிற்பதையும் படையினர் நிற்பதையும் வாகனங்கள் வெள்ளத்தில் இருப்பதையும் படங்களில் காணலாம்.
0 comments :
Post a Comment