Saturday, November 13, 2010

புலிகள் இந்தியாவில் ஒன்றுகூட முயற்சிக்கவில்லை என கடிதம் எழுதியுள்ளனர்.

இலங்கையில் ராணுவத்தால் தோற்கடிக்கப்பட்டுள்ள புலிகள் இந்தியாவில் மீண்டும் காலூன்ற முயற்சித்து வருவதாக இந்திய மத்திய அரசு வெளியிட்டிருந்த கருத்தினை புலிகள் மறுதலித்து கடிதமொன்றினை எழுதியுள்ளதாக தெரியவருகின்றது. புலிகள் மீதான தடையை நீடிப்பது குறித்து ஆராய அமைக்கப்பட்ட நீதிபதி விக்ரம்ஜித் சென் தலைமையிலான ஒரு நபர் தீர்ப்பாயத்தில் ஆஜராகிய இந்திய மத்திய அரசின் கூடுதல் தலைமை வழக்கறிஞர் அமர்ஜித் சிங் விடுதலைப் புலிகள் மீதான தடை தொடரப்பட வேண்டியதற்கான காரணங்களை விளக்கி அறிக்கை சமர்பித்திருந்த அறிக்கையில் கடந்த ஆண்டு இலங்கை ராணுவத்துடனான போரில் தோற்கடிக்கப்பட்டபின் எஞ்சியிருக்கும் சில விடுதலைப் புலிகள் தமிழகத்தை மையமாகக் கொண்டு மீண்டும் அணி திரள முயல்கின்றனர். இது இந்தியாவில் உள்ள முக்கிய தலைவர்களின் உயிருக்கு பெரும் அச்சுறுத்தலாக அமையும்.

மேலும் ஏற்கெனவே அவர்கள் இணையத்தளத்தின் மூலம் இந்தியாவுக்கு எதிரான பிரசாரத்தை மேற்கொண்டு வருகின்றனர். எனவே அந்த இயக்கத்தின் மீதான தடை தொடர வேண்டும் என்று கூறப்பட்டுள்ளது.

இந்நிலையில் நாம் இந்தியாவில் அணிதிரள முயலவில்லை எனவும் இந்தியாவில் எந்த வகையான சட்டவிரோதமான நடவடிக்கையும் நாங்கள் ஈடுபடவில்லை எனவும் விடுதலைப் புலிகள், மத்திய உள்துறை அமைச்சர் ப.சிதம்பரத்திற்கு கடிதம் மூலம் தெரிவித்துள்ளனர்.

நவம்பர் 5ம் தேதியிட்ட இந்தக் கடிதம் ப.சிதம்பரம் கை சேர்ந்துள்ளதாக இந்தியச் செய்திகள் தெரிவிக்கின்றன. புலிகள் அமைப்பின் தலைமை அலுவலக ஒருங்கிணைப்பாளர் ஆர்.எம்.சுபன் என்ற பெயரில் இக்கடிதம் அனுப்பப்பபட்டுள்ளது. சுபன், புலிகள் அமைப்பின் மீடியா பிரிவு தலைவர் என்று கூறப்படுகிறது.

முதல்வர் கருணாநிதி, வெளியுறவுஅமைச்சர் எஸ்.எம்.கிருஷ்ணா ஆகியோருக்கும் அதன் நகல் அனுப்பப்பட்டுள்ளதாக தகவல்கள் கூறுகின்றன.

கடிதத்தில், விடுதலைப் புலிகள் இந்தியாவில் ஒன்று கூட முயற்சிப்பதாகவும், இந்திய மாவோயிஸ்ட் நக்சலைட்டுகளுடன் தொடர்பு வைத்திருப்பதாகவும் இந்திய அதிகாரிகள் கூறியுள்ளனர். இது முற்றிலும் தவறான தகவல். இதில் எந்த உண்மையும் இல்லை.

எங்களுக்குச் சற்றும் சம்பந்தம் இல்லாத மாவோயிஸ்டுகளுடன் எங்களைத் தொடர்புப்பபடுத்தி பேசுவதை நாங்கள் முழுமையாகவும், உறுதியாகவும் நிராகரிக்கிறோம். இது எங்கள் மீது அவதூறு கற்பிக்கச் செய்யும் முயற்சியாகும் என்று அதில் சுபன் தெரிவித்துள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

2 comments :

Anonymous ,  November 13, 2010 at 8:19 PM  

இதெல்லாம் வெறும் பம்மாத்து. வெளிநாடுகளில் இருந்து புலிகளின் பெயரில் பணம் சம்பாதிக்கும் கொள்ளை கோஷ்டிகளின் கைவண்ணம் தான் அக்கடிதம்.

அவர்களின் நோக்கம் தங்களின் சுருட்டல் தொழிலுக்கு வலுவூட்டுவதே தவிர வேறு ஒன்றுமே இல்லை..

balu ,  November 14, 2010 at 2:46 PM  

no permission to LTTE TRAITORS in india

Copyright www.ilankainet.com All right reserved.
Designed and Hosted By : ilankainet.com
To contact us : ilankainet@gmail.com