Thursday, November 11, 2010

ஒபாமாவின் மனித உரிமை பேச்சும் இந்தியாவின் சங்கடமும்

இந்திய நாடாளுமன்றத்தின் சிறப்புக் கூட்டுக் கூட்டத்தில் அமெரிக்க அதிபர் பராக் ஒபாமா உரையாற்றியபோது பல நேரங்களில் அவருடைய உரைக்கு நாடாளுமன்ற உறுப்பினர்கள் எழுப்பிய கையொலி அவையை அதிரச் செய்தது. இப்படிப் பலமுறை நடந்தது. ஆனால் ஒரே ஒரு முறை, ஒபாமா தனது உரையை முடிக்கும் தருவாயில் குறிப்பிட்ட ஒரு விடயம், அவையில் எதிர்பாராத அமைதியை ஏற்படுத்தியது.

அது மனித உரிமைகள் தொடர்பானது. இந்தியாவில் மனித உரிமை நிலை பற்றிக் குறிப்பிட்டு ஒபாமா எதுவும் பேசவில்லை என்றாலும், அண்டை நாடுகளில் மனித உரிமைகளும், ஜனநாயக நெறிமுறைகளும் அந்த நாட்டு அரசுகளால் மி‌திக்கப்பட்டபோது இந்தியா அதனை கண்டிக்காமல் தவிர்த்ததை மிக நேரடியாகவே ஒபாமா சுட்டிக்காட்டினார். அதுவே அந்த நேரத்தில் நிலவிய அமைதிக்குக் காரணமானது. ஒபாமா உரையின் அந்தப் பகுதி:

“ஒவ்வொரு நாடும் அதற்குரிய பாதையைக் கடைபிடித்து வருகின்றன. எந்த ஒரு நாடும் அ‌றிவில் சிறந்தவர்கள் தாங்களே என்று சொந்தம் கொண்டாட முடியாது. அதேபோல், தனது மதிப்பீடுகளை மற்ற நாடுகளின் மீது திணிக்கவும் முற்படக்கூடாது. ஆனால், பர்மாவில் (மியான்மரில்) நடப்பதுபோல், அமைதியான போராட்டங்களும், இயக்கங்களும் ஒடுக்கப்படும்போது உலகின் ஜனநாயக நாடுகள் அமைதி காக்க முடியாது. அமைதியாக ஆர்ப்பாட்டத்தில் ஈடுபடுவோர் மீது துப்பாக்கிச் சூடு நடத்துவதும், பல பத்தாண்டுகளாக சிறையில் அடைப்பதும் ஒப்புக் கொள்ள முடியாதவை. ஒரு பேராசைப் பிடித்த, மக்கள் சக்தியைக் கண்டு அஞ்சும் ஒரு கொள்கையற்ற அரசின் வசதிக்காக மக்கள் அனைவரையும் பிணையக் கைதிகளாக்குவதை ஒப்புக்கொள்ள முடியாது. பர்மிய அரசு செய்வது போல், தேர்தலையே திருடுவதை ஏற்க முடியாது.

இப்படிபட்ட மனித உரிமை மீறல்களை தட்டிக் கேட்கும் பொறுப்பு பன்னாட்டு சமூகத்திற்கு, குறிப்பாக அமெரிக்கா, இந்தியா போன்ற ஜனநாயகத் தலைமை நாடுகளுக்கு உள்ளது. இந்த விடயத்தில் நான் வெளிப்படையாக பேச வேண்டுமேயானால், பன்னாட்டு அளவில் இப்படிப்பட்ட பிரச்சனைகளை இந்தியா தவிர்க்கிறது என்றே கூறுவேன். தங்கள் நாட்டில் இப்படிப்பட்ட மனித உரிமைகளில் ஈடுபடும் அரசுகளுக்கு எதிராக குரலெழுப்புவது அந்த நாடுகளின் இறையாண்மைத் தொடர்பான உரிமையில் தலையிடுவதாகாது. அவ்வாறு தலையிடுவது உண்மையான ஜனநாயக நெறிமுறையின்படி நாம் நிற்கின்றோம் என்பதாகும். மனித உரிமை என்பது உலகளாவியது என்று நாம் கூறுவதற்கு சான்றானதாகும். அப்படிபட்ட தொடர்ந்த செயல்பாடுகள் மட்டுமே ஆசியாவை சர்வாதிகாரத்தில் இருந்து மீட்டு ஜனநாயகப் பாதைக்குத் திருப்பும், அதன் மூலம் உலகின் பாதுகாப்பும் உறுதியாகும்”.

ஒபாமா இவ்வாறு பேசியதற்கு இந்திய அரசின் சார்பாக எந்த விளக்கமும் தரப்படவில்லை என்றாலும், அது ஊடகங்கள் பலவற்றில் சர்ச்சையானது.

ஒரு முன்னணி ஆங்கில தொலைக்காட்சியில் நடந்த விவாதத்தில் பங்கேற்ற இந்தியாவின் முன்னாள் இராஜ தந்திரிகள் பலரும், மனித உரிமைப் பற்றிப் பேச அமெரிக்க அதிபருக்கு எந்த அருகதையும் இல்லை என்றே சாடினர். அந்த‌க் கூற்றில் தவறேதும் இருப்பதாகக் கருத முடியாதுதான். பேரழிவு ஆயுதங்கள் உள்ளன என்று கூறி ஈராக் மீது படையெடுத்து, 7 ஆண்டுக் காலத்தில் 11 இலட்சம் பேரை பலிகொண்ட உலகின் மிகப் பெரும் மேலாதிக்க சக்தியாகத் திகழும் அமெரிக்காவின் அதிபர் எவராயினும், நிச்சயமாக அவருக்கு மனித உரிமை குறித்துப் பேச அருகதையில்லை என்பதை மறுக்க முடியாது. தங்களிடம் பிடிபட்ட அரசியல் கைதிகளை இரகசிய இடங்களில் சிறை வைப்பது, மிக மட்டமான, கொடூரமான சித்தரவதைகளைச் செய்வது (வாட்டர் போர்டிங் என்றழைக்கப்படும் தண்ணீரை மூக்கில் ஊற்றி திணறச் செய்வது - இதற்கு நான் அனுமதி அளித்தேன் என்று அமெரிக்க முன்னாள் அதிபர் ஜார்ஜ் புஷ் தனது புத்தகத்தில் எழுதியுள்ளார்!), அப்பாவி மக்களை குண்டு வீசிக் கொன்றுவிட்டு, அவர்கள் யாவரும் பயங்கரவாதிகளே என்று கூறுவது போன்ற நடவடிக்கைகளில் இன்றளவும் ஈடுபடும் ஒரு நாட்டின் அதிபராக இருக்கும் பாரக் ஒபாமா மனித உரிமைப் பற்றிப் பேசுவது அருகதையற்ற செயல்தான்.

அதே நேரத்தில், அமெரிக்க அதிபராக பொறுப்பேற்றவுடன் மனித உரிமைகளுக்கு ஓரளவிற்கு உரிய முக்கியத்துவத்தைக் கொடுத்துவருபவர் என்பதும், அதற்காக உலக அளவில் குரல் கொடுத்துவருபவர் என்பதும் ஒபாமாவிற்குரிய தகுதிகள் என்பதையும் நாம் மறந்துவிடலாகாது.

ஆனால், இவை யாவற்றையும் விட, பராக் ஒபாமா மனித உரிமை மீறல்கள் தொடர்பாக இந்திய அரசின் ‘பாரா முகம்’ பற்றிப் பேசியது உண்மையா? இல்லையா? என்று சீர்தூக்கிப் பார்ப்பது அவசியமாகும்.

மனித உரிமைகளை மதிக்கிறதா மத்திய அரசு?
உலகின் மிகப் பெரிய ஜனநாயக நாடாக மதிக்கப்படும் இந்தியாவின் மத்திய அரசு, அண்டை நாடுகளில் மனித உரிமை நசுக்கப்படும்போதும், ஜனநாயக உரிமைகள் பறிக்கப்படும்போதும் எப்போதாவது குரல் கொடுத்துள்ளதா? நிச்சயமாக இல்லை.

அமெரிக்க அதிபர் ஒபாமா குறிப்பிட்டதுபோல், மியான்மரில் (பர்மாவில்) இராணுவ ஆட்சிக்கு எதிராக போராடிவரும் ஆன் சூ கீ-யின் போராட்டத்திற்கு ஆதரவாக உலகமே குரல் கொடுக்கிறது. ஆனால் ஒரு முறை கூட இந்திய அரசு குரல் கொடுக்கவில்லை. அந்நாட்டு இராணுவ அரசின் அடக்குமுறைகளை ஒருபோதும் கண்டித்ததில்லை. அருகிலுள்ள சிறிலங்க அரசு, ஈழத் தமிழ் மக்கள் மீது தொடுத்துவரும் இனப் படுகொலையை (1983இல் அது இனப்படுகொலை என்று சுதந்திர தின உரையில் கண்டித்துக் கூறினார் அன்றையப் பிரதமர் இந்திரா காந்தி) இன்றைய அரசு எதிர்க்காதது மட்டுமின்றி, அதற்கு ஆதரவாகவும், உறுதுணையாகவும் நிற்கிறது. இந்திய அரசு தந்த ஆதரவால்தானே, ராஜபக்ச அரசால் இரண்டரை ஆண்டுகளில் ஒன்றரை இலட்சம் தமிழர்களை படுகொலை செய்ய முடிந்தது?

அது மட்டுமல்ல, இறுதிக் கட்டப் போரில் பல பத்தாயிரக்கணக்கில் தமிழர்கள் கொல்லப்பட்டபோது, அதனைக் கண்டு அதிர்ச்சியுற்று உலகமே கண்டித்தது. இந்தியா மெளனம் காத்தது. இந்தியாவின் ஒரு அங்கமான தமிழ்நாட்டு மக்கள் கொதித்தெழுந்து குரல் கொடுத்தனர். அதனைப் பொருட்படுத்தாமல், கூட்டணி அரசியலைக் கொண்டு திசை திருப்பியது. ஐ.நா.மனித உரிமை மன்றத்தில் ராஜபக்ச அரசிற்கு எதிராக போர்க் குற்றச்சாற்றுத் தீர்மானம் கொண்டு வரப்பட்டபோது அதனை சீனாவுடன் (மற்றொரு மனித உரிமை மீறல் மகான்) இணைந்து முறியடித்ததோடு மட்டுமல்ல, சிறிலங்க அரசைப் பாராட்டித் தீர்மானத்தையும் நிறைவேற்றித் தந்தது. ஆனால், சிறிலங்க அரசின் போர்க் குற்றம் குறித்தும், மனித உரிமை மீறல் குறித்தும் ஒபாமா அரசு அறிக்கை வெளியிட்டு, அதன் அடிப்படையில் பன்னாட்டு அளவில் விசாரணை நடத்த வேண்டியதன் அவசியத்தையும் வலியுறுத்தியது.

பீஜிங் ஒலிம்பிக் போட்டிகளின்போது, தங்களுக்கு எதிராக சீன அரசு கட்டவிழ்த்துவிடும் அடக்குமறைக்கு எதிராக அமைதியான வழியில் போராட்டத்தில் ஈடுபட்ட திபெத்தியர்களை சீன காவற்படை கடுமையான நடவடிக்கையின் மூலம் ஒடுக்கியதை இந்தியா கண்டுகொள்ளவில்லை. ஆனால் சீன அரசிற்கு எதிரான நடவடிக்கைகளை இந்திய மண்ணில் இருந்து மேற்கொள்ள வேண்டாம் என்று திபெத் மக்களின் ஆன்மிகத் தலைவர் தலாய் லாமாவிற்கு கட்டுபாடு விதித்தது.

உள்நாட்டில் மனித உரிமை மீறல்கள்!
உலகின் மிகப் பெரிய ஜனநாயக நாடான இந்தியாவின் மைய அரசு, அண்டை நாடுகளில் இந்த அளவிற்கு மனித உரிமை மீறல்கள், ஜனநாயக இயக்கங்கள் ஒடுக்கப்படுவதையெல்லாம் கண்டுகொள்ளாமல் நடந்துகொள்ளக் காரணம், அது தன் நாட்டு மக்கள் மீதே அப்படிப்பட்ட ஒடுக்குமுறைகளை கையாள்கிறது என்ற குற்றச்சாற்றும் உள்ளது.

காஷ்மீர் மக்களின் அரசியல் உரிமை பிரச்சனைக்குத் தீர்வு காணாமல், எப்போதெல்லாம் அப்பிரச்சனை வெடிக்கிறதோ அப்போதெல்லாம், ‘காஷ்மீர் இந்தியாவின் ஒருங்கிணைந்த பகுதி’ என்கிற ஒற்றை மந்திரத்தை உச்சரித்து, அந்த மக்களின் அரசியல் உரிமைக் கோரிக்கைக்கு நிரந்தரத் தீர்வு காணாமல் இன்றுவரை காலம் கடத்தி வருகிறது. அதன் விளைவே அங்கு உருவான ஆயுதப் போராட்டம் என்பதை அப்பிரச்சனையை அறிந்த அனைவரும் கூறுகின்றனர், எழுதுகின்றனர். ஆனால், அரசியல் பிரச்சனைக்கு தீர்வு காணாமல், பொருளாதார முன்னேற்றம் பற்றி பிரதமர் பேசுகிறார்.

இதேபோல் இந்தியாவின் மையப் பகுதியில் உள்ள தண்டகாரண்ய வனப்பகுதியில் உள்ள வளங்களை எடுக்க இந்திய, அயல் நாட்டுப் பெரு நிறுவனங்களுக்கு சுரங்கம் அமைக்க அனுமதி அளித்ததன் விளைவாக ஏற்பட்ட பிரச்சனை அங்கு மிகப் பெரிய வாழ்வுரிமைப் பிரச்சனையை உருவாக்கியுள்ளது. ஆனால் அதனை மாவோயிஸ்ட், நக்சலைட் பிரச்சனை என்று மத்திய, மாநில அரசுகள் திசை திருப்புகின்றன.

மாவோயிஸ்ட்களை ஒடுக்க சட்டீஸ்கர் அரசு உருவாக்கிய சல்வா ஜூடும், மேற்கு வங்க அரசு உருவாக்கிய ஹர்மத் வாஹினி ஆகிய சமூக காவற்படைகள் தவறாகப் போய்விட்டன என்று இன்று உள்துறை அமைச்சர் ப.சிதம்பரம் ஒப்புக்கொண்டுள்ளார்! ஆனால் இந்த இரு படைகளும் எத்தனை ஆயிரம் பழங்குடியின பெண்களைக் கற்பழித்தன? எத்தனை ஆயிரம் பழங்குடியினரைக் கொன்றன? எந்த விவரமாவது இந்த ஜனநாயக நாட்டு மக்களுக்கு தெரிவிக்கப்பட்டுள்ளதா?

ஆனால் சுரங்கம் அமைக்க அனுமதி பெற்ற பெரு (வேதாந்தா, பாஸ்கோ போன்ற) நிறுவனங்கள், வனப் பாதுகாப்புச் சட்டம், பழங்குடியினர் உரிமைச் சட்டம், பழங்குடியின பகுதிகளுக்கு நீட்டிக்கப்பட்ட பஞ்சாயத்து ராஜ் சட்டம், சுற்றுச் சூழல் சட்டம் ஆகியவற்றை முழுமையாக மீறியுள்ளன என்று அரசு அமைத்த நிபுணர் குழுவே ஆய்வு செய்து அறிக்கை தந்துள்ளது.

இப்படிப்பட்ட உள்நாட்டு மனித உரிமை மீறல்களைக் கண்டுகொள்ளாத ஒரு அரசாக இருந்துகொண்டு, அண்டை நாட்டு அரசுகள் செய்யும் மனித உரிமை மீறல்களை எவ்வாறு கண்டிக்க இயலும். அதனால்தான், அதனை இறையாண்மையைக் காரணம் காட்டி தவிர்க்கிறது மைய அரசு, அதனைத்தான் பராக் ஒபாமா தனது உரையில் சுட்டிக்காட்டியுள்ளார்.

இந்திய மக்களுக்கு இந்தியாவின் அரசுகளால் இழைக்கப்படும் அநீதிகள் எல்லாம், பன்னாட்டளவில் ஒப்புக்கொள்ளப்பட்ட மனித உரிமை பிரகடனத்தில் குறிப்பிட்டுள்ளவற்றையெல்லாம் விட அதிகமானவை என்பதே உண்மை. கல்லெடுத்து எறிவோர் மீது துப்பாக்கியால் சுட்டுக் கொல்வது வெறும் மனித உரிமை மீறல் மட்டும்தானா? அவர்கள் வாழ்விடங்களில் இருந்து பல இலட்சக்கணக்கான பழங்குடியினரை அடித்து துரத்துவது வெறும் மனித உரிமை பிரச்சனைதானா? இல்லை, மிக அதிகமான கொடுமைகள் அவை.

எனவே, இந்த நாடு ஒரு காலத்தில் எதற்கெல்லாம் முன்னுதாரணமாக இருந்ததோ அதற்கெதிரான ஒரு திசையில் இன்று சென்றுக்கொண்டிருக்கிறது. இதனை எதிர் வரிசையில் இருக்கும் அரசியல் சக்திகள் முறைபடுத்தும் என்று எதிர்பார்க்க முடியாத துர்பாக்கிய சூழல் நிலவுகிறது. எனவே மக்களே அதனை மாற்ற வேண்டும். அந்த நிலைக்கு மக்கள் தயாராக வேண்டும். மக்களைப் பொறுத்துதானே அவர்களின் ஜனநாயகமும் இருக்கும்?

0 comments :

Copyright www.ilankainet.com All right reserved.
Designed and Hosted By : ilankainet.com
To contact us : ilankainet@gmail.com