Thursday, November 4, 2010

சங்குப்பிட்டிப் பால நிர்மாணப் பணிகள் பூர்த்தியடைகின்றன

பூநகரியையும் காரைதீவையும் இணைக்கும் சங்குப்பிட்டிப் பால நிர்மாணப் பணிகள் தற்போது நிறைவுறும் நிலையில் உள்ளன. கடந்த 3 தசாப்தங்கள் நீடித்த யுத்தம் காரணமாக ஏ 32 எனப்படும் இப்பாதையின் பல்வேறு பகுதிகள் சேதமடைந்திருந்தன.

தற்போதைய அமைதிச் சூழலில் ஏ 32 பாதை மீளப் புனரமைக்கப்பட்டு வருகின்றது.

தற்போது யாழ்ப்பாணத் தீவகற்பத்தைச் சென்றடையக்கூடிய ஒரே பாதையாக ஏ9 வீதி விளங்குகின்றது.

ஆனால் சங்குப்பிட்டிப் பாலத்துடன் கூடிய இந்த ஏ 32 பாதையின் நிர்மாணப் பணிகள் நிறைவடைந்ததும் யாழ்ப்பாணத்திற்கான போக்குவரத்து 80 கிலோமீற்றர்களால் குறைவடையுமென அறிவிக்கப்பட்டுள்ளது.

காரைதீவுக்கும் சங்குப்பிட்டிக்குமிடையிலான களப்பில் நிர்மானிக்கப்பட்டுவரும் சங்குப்பிட்டிப் பாலம் 288 மீற்றர் நீளமானதாகும்.

இரண்டு தடங்களைக் கொண்ட சங்குப்பிட்டிப் பாலம் பிரிட்டிஷ் அயன் பிரிட்ஜ் திட்டத்தின்கீழ் நெடுஞ்சாலைகள் அமைச்சினால் நிர்மாணிக்கப்படுகிறது.

கடந்த மார்ச் மாதத்தில் ஆரம்பிக்கப்பட்ட நிர்மாணப் பணிகள் 95 வீதம் நிறைவடைந்துள்ளன.

இதுவரை 1,000 மில்லியன் ரூபா இந்தப் பாலத்தின் நிர்மாணப் பணிகளுக்காகச் செலவிடப்பட்டுள்ளதாகவும் புத்தளம் , மன்னார்ப் பகுதி மக்கள் யாழ்ப்பாணம் சென்றடைய இப்பாதை பெரிதும் உதவுமென்றும் பெருந் தெருக்கள் அமைச்சர் நிர்மல கொத்தலாவல தெரிவித்தார்

ஏ 32 எனப்படும் இந்த வீதியை இவ்வாண்டு இறுதிக்குள் திறந்து வைக்கத் திட்டமிட்டுள்ளதாகவும் பெருந் தெருக்கள் அமைச்சர் மேலும் தெரிவித்தார்.


0 comments :

Copyright www.ilankainet.com All right reserved.
Designed and Hosted By : ilankainet.com
To contact us : ilankainet@gmail.com