Thursday, November 25, 2010

புலிகளின் வதைமுகாமில் கொலைசெய்யப்பட்ட 26 படையினரின் எலும்புக் கூடுகள் மீட்பு.

புலிகளினால் நிர்வகிக்கப்பட்டுவந்த வதைமுகாம் ஒன்றிலிருந்து புலிகளால் கொலை செய்யப்பட்டு புதைக்கப்பட்ட 26 படை வீரர்களது எலும்புக் கூடுகள் நேற்று தோண்டி எடுக்கப்பட்டுள்ளதாக இராணுவப் பேச்சாளர் தெரிவித்துள்ளார். தடுப்புக் காவலிலுள்ள முன்னாள் புலி உறுப்பினரொருவர் வழங்கிய தகவலையடுத்து, முல்லைத்தீவு, பரந்தன் வீதியில் 9 கி. மீ. தூரத்தில் புதுக்குடியிருப்பு வல்லிபுரம் என்ற இடத்தில் (காட்டுப் பகுதியில்) இந்தப் புதை குழி தோண்டப்பட்டுள்ளது. இந்தப் புதை குழியைத் தோண்டுவதற்கென 100 பேர் கொண்ட குழுவொன்று அங்கு சென்றிருந்தது. இக்குழுவில் பிரதி சொலிசிற்றர் ஜெனரல், மருத்துவ விசாரணை அதிகாரிகள் , அரச பகுப்பாய்வு அதிகாரிகள் , நில அளவை திணைக்கள அதிகாரிகள் , பல்கலைக்கழக விசேட விரிவுரையாளர்கள் என பலபேர் அடங்குகின்றனர்.

குறிப்பிட்ட புலிச் சந்தேக நபரின் தகவல் நீதிமன்றுக்கு வழங்கப்பட்டு நீதிமன்ற உத்தரவினை பெற்றுள்ள பயங்கரவாக தடுப்பு பிரிவினர் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

'சீறோ வன்பேஸ்' என்ற பெயரில் வதை முகாமொன்று செயற்பட்டு வந்துள்ள இம்முகாமில் புலிகளுக்கு எதிரானவர்களையும், பிடிக்கப்படும் படை வீரர்களையும் சித்திரவதை செய்து கொன்றுள்ளமை சந்தேக நபரின் ஊடாக வெளிச்சத்திற்கு வந்துள்ளது

2009 ஆம் ஆண்டு கொலை செய்யப்பட்டு புதைக்கப்பட்ட இராணுவம், கடற்படை வீரர்களின் எலும்புக் கூடுகளே நேற்றும் நேற்று முன்தினமும் தோண்டி எடுக்கப்பட்டுள்ளதாக பயங்கரவாத புலனாய்வுப் பிரிவு இராணுவப் பேச்சாளர் தெரிவித்துள்ளார். அத்துடன் யுத்தம் உக்கிரமடைந்தபோது புலிகளால் சிறைப்பிடிக்கப்பட்ட படையினரே இவ்வாறு கொல்லப்பட்டுள்ளதாகவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

புலிகளால் பிடித்துச் செல்லப்பட்ட ஐ. பி. ஜெயரட்ணமும் இங்கு தான் கொல்லப்பட்டு புதைக்கப்பட்டிருக்கலாமென நம்பப்படுகிறது. எடுக்கப்பட்ட எலும்புக் கூடுகளை கொழும்புக்குக் கொண்டுவர நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

0 comments :

Copyright www.ilankainet.com All right reserved.
Designed and Hosted By : ilankainet.com
To contact us : ilankainet@gmail.com