Wednesday, October 20, 2010

ஓய்வூதிய திட்டத்திற்கு எதிராக பிரான்சில் ஆர்ப்பாட்டம்.

அரசாங்கத்தின் ஓய்வூதிய சீர்திருத்த திட்டம், வேலை ஓய்வு வயதை உயர்த்தும் திட்டம் ஆகியவற்றுக்கு எதிர்ப்பு தெரிவித்து பிரான்சில் வேலை நிறுத்தப் போராட்டம் ஆர்ப்பாட்டங்களும் தொடர்ந்து நடந்து வருகின்றன. நேற்றைய ஆர்ப்பாட்டங்களில் கலந்து கொண்ட மாணவர்களும், இளையர்களும் கார்களுக்கு தீ மூட்டியதுடன் பஸ் நிறுத்தும் இடங்களிலும் வன்செயல்களில் ஈடுபட்டனர்.

பாரிஸ் நகரில் ஒரு பள்ளிக்கூடத்திற்கு வெளியே மாணவர்களை கற்களை வீசித் தாக்கினர்.
இதனால் போலிசாருக்கும் மாணவர்களுக்கும் இடையில் நேற்று கடும் மோதல் ஏற்பட்டதாக பிரஞ்சு தகவல் கூறியது. ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட மாணவர்களைக் கலைக்க போலிசார் கண்ணீர் புகை குண்டுகளை அவர்கள் மீது வீசியதாகவும் ரப்பர் தோட்டாக்களை பயன்படுத்தியதாகவும் போலிஸ் வட்டாரங்கள் கூறின.

பாரிஸ் அருகே ஒரு புறநகர் பகுதியில் உள்ள பள்ளிக் கூடத்திற்கு வெளியே ஒன்றுகூடிய போலிசார் மீது இளையர்கள் பெட்ரோல் குண்டுகளை வீசியதாகவும் போலிசார் கூறினர். போலிசாருக்கும் இளையர்களுக்கும் இடையில் ஏற்பட்ட மோதலின்போது இளையர்கள் குறைந்தது 3 கார்களை தலைகீழாக புரட்டிப் போட்டதாக போலிஸ் தகவல்கள் கூறின.
இந்த மோதல்களில் நான்கு போலிசார் காயமடைந்தனர். இந்நிலையில் பல நகரங்களில் கலவரத்தில் ஈடுபட்ட வர்களில் 196 பேரை போலிசார் கைது செய்திருப்பதாக உள்துறை அமைச்சர் கூறினார். இத்தகைய ஆர்ப்பாட்டங் களால் 300 பள்ளிக்கூடங்கள் பாட வகுப்புகளை நடத்த முடியாமல் சிரமத்திற்கு உள்ளானதாகக் கூறப் பட்டது.

இதற்கிடையில் வாகன ஓட்டு நர்களும் நேற்றைய ஆர்ப்பாட்டத்தில் கலந்து கொண்டனர். அரசாங்கம் அதன் உத்தேசத் திட்டத்தை ரத்து செய்ய வலியுறுத்தி பிரான்சின் ஏராளமானோர் பல வாரங்களாக ஆர்ப்பாட்டங்களில் ஈடுபட்டு வருகின்றனர்.

அரசாங்கத் திட்டத்திற்கு எதிராக வேலை நிறுத்தப் போராட்டங்களும் ஆர்ப்பாட்டங்களும் தொடர்ந்து நடந்தாலும் பென்சன் சீர்திருத்த நடவடிக்கைகளை அமுலுக்கு கொண்டுவரப்போவதாக பிரஞ்சு அதிபர் நிக்கோலஸ் சர்கோசி தெரிவித்துள்ளார். சீர்திருத்தங்கள் நாட்டுக்கு மிகவும் அவசியம் என்றார் அவர்.

0 comments :

Copyright www.ilankainet.com All right reserved.
Designed and Hosted By : ilankainet.com
To contact us : ilankainet@gmail.com