Thursday, September 9, 2010

ஜனநாயகத்தை புதைத்து ஏகாதிபத்தியப் ஆட்சியை நோக்கிய பயணம் ஆரம்பம்.

இலங்கை அதிபர் ராஜபக்ச்வை 3 ஆவது முறையாக அதிபர் தேர்தலில் போட்டியிட அனுமதிக்க ஏதுவாக அரசியலமைப்பின் 18 ஆவது சட்டத்திருத்தத்தை நிறைவேற்றியுள்ளதன் மூலம் ஜனநாயகத்திற்கு தோல்வி ஏற்பட்டுள்ளதாக தெரிவித்துள்ள எதிர்க்கட்சித் தலைவர் ரணில் விக்ரமசிங்க நாட்டின் ஜனநாயகத்தை புதைத்து ஏகாதிபத்திய ஆட்சியொன்றை நோக்கிய பயணத்தை மஹிந்த ராஜபக்ச அரசாங்கம் ஆரம்பித்துள்ளதாக தெரிவித்துள்ளார்.
18 ஆவது சட்டத்திருத்தை நிறைவேற்றிக் கொள்வதற்கு நாட்டு மக்கள் அங்கீகாரம் வழங்கவில்லை என்று கூறியுள்ள அவர் எதிர்க்கட்சி நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கு பல்வேறு வரப்பிரசாதங்களை வழங்கி, ஆளும் கட்சி ஆதரவு திரட்டியுள்ளதாகவும் தெரிவித்துள்ளார்.

நாட்டின் சகல மக்களுடனும் இணைந்து ஜனநாயக விரோத அரசாங்கத்திற்கு எதிரான போராட்டம் தொடரும் எனவும் குறிப்பிட்டுள்ளார்.

அதேநேரம் அரசியல் யாப்பு மாற்றம் தொடர்பாக பேசிய முன்னாள் ராணுவத் தளபதி ஜெனரல் பொன்சேகா, ராஜபக்ச 3 ஆவது முறையாக அதிபர் தேர்தலில் போட்டியிட அனுமதிக்க ஏதுவாக அரசியலமைப்பின் 18 ஆவது திருத்தச்சட்டத்தை நிறைவேற்றியுள்ளதன் மூலம் அரசாங்கம் இராணுவப் புரட்சிக்கும் அழைப்பு விடுத்துள்ளதாக பொன்சேகா கூறியுள்ளார்.

இலங்கை நாடாளுமன்ற கட்டட வளாகத்தில் செய்தியாளர்களுக்கு அளித்த பேட்டியிலேயே ஜெனரல் பொன்சேகா இவ்வாறு தெரிவித்தார்.

நாட்டின் அரசியலமைப்பானது மக்களையும் எதிர்க்கட்சியினரையும் மிதிப்பதாக இருக்குமானால் அதன் விளைவுகள் என்ன என்பதை உலகத்தில் நாங்கள் பார்த்துள்ளோம். அதாவது தற்போதைய நிலைமையில் அரசியலமைப்பின் 18 ஆவது திருத்தச்சட்டத்தை நிறைவேற்றுவதன் மூலம் அரசாங்கம் மக்கள் புரட்சிக்கும், இராணுவப் புரட்சிக்கும் அழைப்பு விடுக்கின்றது.

தற்போதைய அரசியலமைப்பு தொடர்ந்திருக்குமானால் சில வருடங்களில் பசில் ராஜபக்ச ஜனாதிபதியாக வந்திருக்கலாம். ஒரு காலத்தில் நாமல் ராஜபக்சவும் ஜனாதிபதியாக வந்திருக்கலாம். ஆனால் 18 ஆவது திருத்தத்தின் மூலம் அந்த சந்தர்ப்பம் இல்லாமல் போயுள்ளது. ஒருவரே தொடர்ந்து ஜனாதிபதியாக பதவி வகிப்பதன் மூலம் பல சிக்கல்கள் எழலாம் என்றும் அவர் குறிப்பிட்டார்.

ஜனநாயக தேசிய கூட்டணியினர் என்ற வகையில் இன்றைய தினத்தை கவலைமிக்க தினமாகவே பார்க்கின்றோம். மக்களின் இறைமை மற்றும் ஜனநாயகம் என்பன இறந்துபோன தினமாகும். அரசியலமைப்பானது அமைச்சர்களை பலப்படுத்துவதாக இல்லாமல் மக்களை பலப்படுத்துவதாக அமைய வேண்டும்.

தற்போதைய நிலைமையிலேயே இவர்களுக்கு போதுமான அதிகாரங்கள் இருக்கின்றன. அவற்றை வைத்துக்கொண்டு எவ்வளவோ செய்திருக்கலாம். ஆனால் அதனைவிடுத்து இருக்கின்ற அதிகாரங்களை அதிகரித்துக்கொள்ளவே முயற்சிக்கின்றனர்.

இந்நிலையில் எமது ஜனநாயக தேசிய கூட்டணியானது இந்த 18 ஆவது திருத்தங்களை கடுமையாக எதிர்க்கின்றது என்று பொன்சேகா மேலும் தெரிவித்தார்.

0 comments :

Copyright www.ilankainet.com All right reserved.
Designed and Hosted By : ilankainet.com
To contact us : ilankainet@gmail.com