Wednesday, September 15, 2010

டக்ளஸ்,கருணா,பிள்ளையான் ஆகியோரை அரசு ஒரம்கட்டி விட்டது. ஐ.தே.க பொதுச் செயலாளர்.

பிரித்தானியாவிற்கு பிரத்தியேக விஜயம் ஒன்றினை மேற்கொண்டுள்ள ஐக்கிய தேசியக் கட்சியின் பொதுச் செயலாளர் பா.உ திஸ்ஸ இலங்கைநெற் இற்கு வழங்கிய விசேட செவ்வியில் அரசாங்கம் கே.பி யுடன் உருவாக்கிக் கொண்டுள்ள உறவுகளின் பின்னர் பயங்கர வாதத்தை ஒழிப்பதற்கு அரசுடன் இணைந்திருந்த டக்ளஸ் தேவானந்தா , கருணா , பிள்ளையான போன்றோரை ஓரம்கட்டி விட்டது என தெரிவித்துள்ளார். பேட்டி கண்டவர் பீமன்.

செவ்வியின் முழுவடிவம்.

கேள்வி - தற்போது இலங்கையில் நிலவரங்கள் எவ்வாறு காணப்படுகின்றது?

பதில் - யுத்தம் முடிவடைந்த பின்னர் மக்களுக்கு வாழ்க்கைச் சுமையை குறைப்பதாக கூறினார்கள். பொருட்களின் விலை குறைக்கப்படும், மக்களின் பொருளாதாரம் மேம்படுத்தப்படும், மக்களுக்கு வேலைப்வாய்ப்புகள் ஏற்படுத்தப்படும் , வருவாiயை அதிகரிக்கச் செய்வது போன்ற பல உறுதிகளை வழங்கினார்கள். ஆனால் இன்று மக்கள் முன்னரை விட மிகுந்த சுமையை சுமக்கவேண்டிய நிலையில் உள்ளனர்.

யுத்தத்தின் பின்னர் வடகிழக்கிலுள்ள மக்களுக்கு நிவாரணங்களை வழங்குவதாக அரசு உறுதியளித்தது. ஆறு மாதங்களினுள் மக்களை மீள் குடியேற்றுவோம் என உறுதி அளித்தார்கள். இவற்றில் எந்த ஒரு உறுதிமொழியையும் இந்த அரசாங்கத்தால் நிறைவேற்ற முடியவில்லை.

இன்று ஜனாதிபதியை அவரது குடும்பம் ஆட்சி செய்து கொண்டிருக்கின்றது. குடும்பத்தை காப்பாற்றுவதற்காக சட்டங்கள் கையிலெடுக்கப்பட்டுள்ளது. நாட்டு மக்களுக்கு வழங்கப்பட்ட சகல உறுதி மொழிகளையும் மறந்து அரசாங்கம் தொடர்ந்தும் நிறைவேற்று அதிகார ஆட்சி முறையை பலப்படுத்தும் விதமாக அரசியல் யாப்பிலும் மாற்ற ங்களை மேற்கொண்டுள்ளது.

கேள்வி - நிறைவேற்று அதிகார ஆட்சி முறை உங்கள் கட்சியினால் கொண்டுவரப்பட்ட ஒன்றுதானே?

பதில் - 1978ம் ஆண்டு ஐக்கிய தேசியக் கட்சி நிறைவேற்று அதிகாரம் கொண்ட ஆட்சி முறையை இந்நாட்டிற்கு அறிமுகம் செய்து வைத்தது உண்மை. ஆனால் நிறைவேற்று அதிகாரம் கொண்ட ஆட்சிமுறைக்காக அன்று ஜே.ஆர் ஜெயவர்த்தன அவர்கள் மக்களின் அங்கீகாரத்தைப் பெற்றே அதை செய்திருந்தார் என்பதை திடமாக கூறுகின்றேன். ஆனால் அவர் அன்று அந்த அதிகாரங்களை இன்றுள்ளவர்கள்போல் துஸ்பிரயோகம் செய்யவில்லை. நாட்டின் அபிவிருத்திக்காகவே பயன்படுத்தினார். ஆனால் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ச தேர்தல் வாக்குறுதியாக நிறைவேற்று அதிகாரமுள்ள ஜனாதிபதி ஆட்சி முறையை ஒழிப்பேன் என்று கூறி ஆட்சியை பிடித்த பின்னர் , நிறைவேற்று ஜனாதிபதிக்கான அதிகாரங்களை மேலும் பலப்படுத்திவருகின்றார். இவ்விடயத்தினை நாம் முற்றாக எதிர்கின்றோம்.

கேள்வி - இடைத்தங்கல் முகாம் மக்களின் நிலைமைகள் எவ்வாறுள்ளது?

பதில் - இடைத்தங்கல் முகாம் மக்களை மீள் குடியேற்றும் பணிகள் மந்தகதியிலேயே இடம்பெறுகின்றது. இவ்வரசாங்கம் 6 மாத காலத்தினுள் மீள் குடியேற்றுவதாக இந்தியா உட்பட பல நாடுகளுக்கும் வழங்கிய உறுதிமொழியை காப்பாற்றத் தவறியுள்ளது. இன்னும் அம்முகாம்களில் லட்சக்கணக்கான மக்கள் உள்ளனர்.
இது நாட்டின் எதிர்காலத்தில் மீண்டும் பயங்கர வாதம் ஒன்று உருவாக வழிவகுக்கலாம்.

கேள்வி - ஐக்கிய தேசியக் கட்சி இன்று ஆட்சியிலிருந்திருந்தால், இவ்விடயத்தை எவ்வாறு கையாண்டிருக்கும்?

நாம் ஆட்சியில் இருந்திருந்தால் , இம்மக்களை அவர்களுக்கு சொந்தமான இடங்களில் கால நேரத்துடன் குடியமர்த்தி , அவர்கள் தங்கள் சொந்த பந்தங்களுடன் வாழக்கூடிய நிலை ஒன்றினை நிச்சயமாக ஏற்படுத்தியிருப்போம். நாம் இம்மக்களை சிறைக்கைதிகளைப் போல் நடாத்தாமல் , அம்மக்கள் சுயமாக தொழில் புரிந்து கௌரவமாக வாழக்கூடிய நிலையை உருவாக்கியிருப்போம். ஆனால் நாம் தற்போதும் அதற்கான முயற்சிகளை மேற்கொள்கின்றோம்.

கேள்வி - வன்னிமக்கள் குடியேற்றப்படுவதில் ஏற்படும் தாமதங்கள் மற்றும் குறைபாடுகள் , வன்னி பிரதேச அபிவிருத்தி பற்றி குறிப்பிடுகின்றீர்கள் , அரசாங்கம் இன்று நாட்டில் பல்வேறுபட்ட அபிவிருத்தி வேலைத்திட்டங்களை முன்னெடுக்கின்றது. சமநேரத்தில் சமவேகத்தில் சகல விடயங்களையும் மேற்கொள்ள எமது அரசாங்கத்திடம் பொருளாதார வசதி உண்டா?

பதில் - அபிவிருத்தி நடைபெறவில்லை என நான் கூறவில்லை. தென்பகுதியில் நடைபெறுகின்ற விடயங்கள் நாட்டின் வடகிழக்கிலும் இடம்பெறவேண்டும். எமது நாட்டில் அனைவரும் இணைந்து செயற்படவேண்டும். அனைவரையும் ஒரேவிதத்தில் பார்க்கப்பட வேண்டும். தென்பகுதியில் இடம்பெறுகின்ற அதே வேலைத்திட்டங்கள் வடகிழக்கிலும் மேற்கொள்ளப்பட்டால் மட்டுமே மேலுமோர் பயங்கர வாதம் தலைதூக்காது நாட்டைப் பாதுகாக்கலாம்.

கேள்வி - மீண்டும் நாட்டில் பயங்கர வாதம் தோன்றாலம் என்ற அடிப்படையிலான குற்றச்சாட்டுக்களை முன்வைக்கின்றீர்கள். இது மக்களிடம் காணப்படும் அச்சமா?

பதில் - நிச்சயமாக கூறுகின்றேன். இடைதங்கல் முகாம் மக்களை மீள் குடியேற்றுவதை அரசாங்கம் தாமதப்படுத்துவது சாதாரணமான விடயமல்ல. இந்நாட்டில் மேலுமோர் பிரபாகரன் உருவாகாமல் இருக்கவேண்டுமென்றால் அம்மக்கள் விடயத்தில் அரசாங்கம் அதிக சிரத்தை செலுத்தவேண்டும்.

கேள்வி - எதிர்கட்சிகள் பலவீனமாகிச் செல்வதாக கூறப்படுகின்றதே..

பதில் - அரசு இன்று தனக்கெதிராக செயல்படுகின்ற கட்சிகளை பிளவு படுத்துவதிலும் , துண்டாடச் செய்வதிலும் ஈடுபட்டுவருகின்றது. எதிர்கட்சிகளின் குரல்வளைகளை நசுக்குவதற்கு அரசு வௌ;வேறு தந்திரங்களை கையாள்கின்றது. அதிகார பலத்தினால் பல அழுத்தங்களை கொடுத்து சிதற வைக்க முயற்சி செய்கின்றது. ஐக்கிய தேசியக் கட்சி அனைத்து மக்களையும் ஒரே பார்வையில் பார்த்ததோர் கட்சி. தமிழ் சிங்கள முஸ்லிம் மக்களை ஒரேவிதமாக பராமரித்த கட்சி. சகல இனங்களினதும் அங்கீகாரத்தைப் பெற்ற கட்சி. இவ்வாறானதோர் பாரம்பரியத்தை கொண்ட இக்கட்சியை தற்போதைய அரசாங்கம் சிதறடிக்கவே முயற்சிக்கின்றது. எமது அமைச்சர்களை பணம் கொடுத்து வாங்கி கட்சியை சிதறடிக்கின்றனர். அது தவறானதோர்செயல். இது ஜனநாயகத்தை மீறும்மோர் செயல். இது மக்களுக்கு எவ்வித நன்மையையும் தரப்போவதில்லை.

கேள்வி - எதிர்கட்சிகள் பலவீனமாகியுள்ள நிலையில் அக்கட்சிகள் யாவும் இணைந்து செயற்படவேண்டும் என்ற கருத்தியல் உள்ளது. இவ்விடயத்திற்காக ஐக்கிய தேசியக் கட்சி எதைச் செய்துள்ளது?

பதில் - நாம் அந்த முயற்சியில் ஈடுபட்டிருக்கின்றோம். அரசிற்கு எதிரான அனைத்துக்கட்சிகளையும் ஒன்றிணைத்து வேலை செய்யும் ஒர் திட்டத்தை பற்றி பேசிக்கொண்டிருக்கின்றோம். தற்போது கட்சிகளிடையே காணப்படும் பிளவுகள் அரசிற்கு சாதகமாக அமைந்துள்ளது. அத்தோடு பாராளுமன்றில் நாம் வௌ;வேறாக பிரிந்து நிற்பதும் அவர்களுக்கு சாதகமாகவுள்ளது. அரசிற்கு ஒர் பாடத்தை புகட்டவும் சவாலாக திகழவும், அரசிற்கு எதிரான கருத்தினை கொண்டவர்கள் ஒன்றிணையவேண்டும். பாராளுமன்றிற்கு உள்ளே உள்ள கட்சிகள் மாத்திரமல்ல , வெளியேயுள்ள கட்சிகள் , தொழிற் சங்கங்கள் , பொதுஜன அமைப்புக்கள் ஆகியனவும் எம்மோடு ஒன்றிணையவேண்டும். அதற்கான அர்ப்பணிப்புகளையும் நாம் செய்துவருகின்றோம்.

கேள்வி - எதிர்காலத்தில் ஐக்கிய தேசியக் கட்சி என்ற ஒன்று மிஞ்சுமா?

பதில் - நாம் வீழ்ந்து எழுந்திருக்கின்றோம். ராஜபக்ச அரசாங்கம் ஐ.தே.கட்சியை அழிக்க முயற்சித்தாலும் , நாம் மக்கள் பலத்தோடு மீண்டும் ஆட்சிக்குவருவோம். ஐக்கிய தேசிய கட்சியை ஒருபோதும் அழித்து விடமுடியாது. இது இவர்களது தற்காலிக எத்தனிப்பு . இதே முயற்சியை 1956 இல் எஸ் ஆர்.டபிள்யூ பண்டாரநாயக்க அவர்கள் மேற்கொண்டிருந்தபோது கட்சி முற்றிலும் அழிந்துபோகும் வெளித்தோற்றமே காணப்பட்டது. ஆனால் நாம் 1970 களில் மீண்டும் பலம்பெற்று ஆட்சியை கைப்பற்றினோம். இவ்வாறான நிலைகள் அனைத்துக்கட்சிகளுக்கும் ஏற்பட்டிருக்கின்றது, சிறிலங்கா சுதந்திரக் கட்சிக்கும் லங்கா சமசமாஜ கட்சிக்கும் கொமுனீசக் கட்சிக்கும் ஏற்பட்டிருக்கின்றது. உதாரணத்திற்கு எடுத்துக்கொண்டால் 1978 க்கு பின்னர் சிறிமாவோ பண்டாரநாயக்க , சந்திரிகா அம்மையார் , அனுரபண்டாரநாயக்க ஆகியோர் கூட சின்னாபின்னப்பட்டு போயிருந்தார்கள்.

ஏன் ஜேவிபியை எடுத்துப்பாருங்கள். அவர்கள் ஐக்கிய தேசியக் கட்சி , சிறிலங்கா சுதந்திரக் கட்சியை விட மாறுபட்ட கொள்கையுடன் இடதுசாரிப் போக்கினை கொண்டவர்கள். இவர்களுடனிருந்த விமல்வீரவன்ச போன்றோர் பிரிந்து சென்று அரசுடன் இணைந்ததன் ஊடாக அவர்களுக்கும் இவ்வாறான நிலைமைகளுக்கு முகம் கொடுக்க நேரிட்டிருந்தது, எனவே இது இலங்கை அரசியல் வரலாற்றில் புதியவை அல்ல. அநத்வகையில் ஐக்கிய தேசியக்கட்சி அதேபோன்றதோர் பிரச்சினைக்கு தற்போது முகம் கொடுத்துள்ளது. இன்றைய எம்நிலைமை நிரந்தரமானது அல்ல. தவறுகளை திருத்திக்கொண்டு நாம் மீண்டும் செயல்படுவோம். அதற்கான மக்களின் அடித்தளம் எமக்குண்டு.

கேள்வி - நாட்டை ஆண்ட இரு பிரதான தேசியக் கட்சிகளில் ஒன்றான தங்கள் கட்சியினுள் இன்று உட்பூசல் தோன்றியுள்ளது. இப்பூசல்களை தீர்த்துக்கொள்ள முடியாத உங்களால் எவ்வாறு நாட்டிற்கு தலைமைத்துவத்தை வழங்க முடியும்?

பதில் - ஐக்கிய தேசியக் கட்சி மண்டியிடும் கட்சியல்ல. இக்கட்சி 7 தலைவர்களால் வழிநடத்தப்பட்டு வந்துள்ளதோர் கட்சி. எமது கட்சி ஒரு தனிநபருக்கோ குடும்பத்திற்கு கட்டுபட்ட சொத்தாக இருந்ததில்லை. தற்போது ஒர்பின்னடைவு ஏற்பட்டிருக்கின்றது. இந்நிலைமையை அரசாங்கமே திட்டமிட்டு செய்து வருகின்றது. எமது கட்சியின் சிலர் பணத்திற்காகவும் பதவிகளுக்காகவும் கட்சியை காட்டிக்கொடுத்திருக்கின்றார்கள். இவ்வாறான பல சரித்திரங்களை நாம் கண்டிருக்கின்றோம். நாம் மீண்டும் பழைய நிலைக்கு வருவோம் என்ற நம்பிக்கையும் தைரியமும் எம்மிடமுண்டு.

கேள்வி - ஐக்கிய தேசியக் கட்சியைச் சேர்ந்த பாராளுமன்ற உறுப்பினர்கள் பலர் அரசின் பக்கம் தாவியுள்ளனர். அவர்களுள் ஐ.தே.கட்சியில் நுவரேலிய மாவட்டத்தில் போட்டியிட்டு வெற்றியீட்டிய முன்னாள் ஊடகவியலாளரான சிறிரங்காவும் அடங்குகின்றார். இவ்வாறான நிலைமைகள் உருவாக என்ன காரணம்?

பதில் - இது மனவருத்தத்திற்குரியதோர் விடயம். இவர்களுக்கு உண்ண உணவு கொடுத்தது ஐக்கிய தேசியக் கட்சி. இவர்களுக்கு கிடைத்த வாக்குகள் அவர்களின் தனிப்பட்ட செல்வாக்கினால் கிடைத்த வாக்குகள் அல்ல. இவை கட்சிக்கான வாக்குகள். இவர்கள் தனியாக போட்டியிடுட்டு வெற்றிபெற்றிருந்தால் அவர்களின் செயற்பாட்டில் தவறில்லை. ஐக்கிய தேசியக் கட்சியின் வாக்குளை பெற்று பணத்திற்காக பா.உ அங்கத்துவத்தை விற்பனை செய்துள்ளனர். அடுத்த தேர்தலில் அதற்கான பாடம் மக்களால் புகட்டப்படும். அங்கேயுள்ள அப்பாவி மலையகத் தமிழ் மக்களின் வாக்குகளை இவர் விற்றுள்ளார். இம்மலையக மக்கள் தமது வாக்குகளை ஐ.தே.கட்சிக்கே அளித்தனர். விருப்புவாக்குகளும் ஐக்கிய தேசியக் கட்சிக்கே உரியவையாகும். தனக்கு ஓர் பதவியோ , அந்தஸ்தோ கிடைத்தால் அவற்றை ஏலத்தில் விடுவது அழகல்ல.

கேள்வி - பா.உ சிறிரங்கா , நாட்டின் ஜனாதிபதியின் புத்திரர் நாமல் ராஜபக்சவின் தலைமையிலான இளையோருக்கு நாளை எனும் அமைப்பில் ஓர் முக்கிய பதவியை வகிப்பதாகவும், அரசாங்கத்துடன் மிகுந்த உறவை கொண்டுள்ளதாகவும் தகவல்கள் வெளியாகி இருந்துள்ளபோதும் , ஐக்கிய தேசியக் கட்சியில் அவர் போட்டியிடுவதற்கு சந்தர்ப்பம் வழங்கப்பட்டமைக்கான பின்னணி அல்லது மர்மம் என்ன?

பதில் - அரசியல் ரீதியாக இவர் விடயத்தில் எடுக்கப்பட்ட முடிவு குறித்து நான் கருத்து கூற விரும்பவில்லை. இலங்கையின் முன்னணி ஊடக ஸ்தாபனம் ஒன்றின் தலைவரும் சில ஊடக முக்கியஸ்தர்களும் விடுத்த வேண்டுகோளின் பேரிலேயே இவருக்கு எமது கட்சியில் போட்டியிட அனுமதி கிடைத்தது. ஐக்கிய தேசியக் கட்சியிலிருந்து பிறிதொரு கட்சிக்கு தாவமாட்டோம் என இவர்கள் வாக்குறுதியும் வழங்கிவிட்டே கட்சியில் போட்டியிட்டார்கள். அவர்கள் வேறு ஒரு கட்சிக்கு செல்லும் எண்ணம் இருந்திருந்தால் அவர்கள் அங்கே போட்டியிட்டிருக்க வேண்டும். இது அவர்கள் கட்சிக்கு செய்த அநீதி மட்டுமல்ல அவர்களுக்கு வாக்களித்த மக்களுக்கும் செய்த அநீதியாகும். இவர்கள் அனாதைகள் ஆகும் காலம் வெகு தொலைவில் இல்லை.

கேள்வி - ஜெனரல் பொன்சேகாவின் தற்போதைய நிலை என்ன?

பதில் - ஜெனரல் சரத் பொண்சேகாவுக்கு அரசு மாபெரும் துரோகத்தை இழைத்துள்ளது. ஜெனரல் பொன்சேகாதான் பயங்கரவாதத்தை ஒழிப்பதற்கான யுத்தத்திற்கு தலைமை தாங்கினார். சிலர் காரியாலயங்களில் இருந்து கொண்டும் , வீடுகளில் இருந்துகொண்டும் ஆலோசனைகளையே வழங்கிவந்தார்கள். சரத் பொன்சேகாவோ நேரடியாக யுத்த முனையிலேயே அதற்காகச் செயற்பட்டார். இந்த வெற்றியை வைத்துத்தான் இவர்கள் வாக்குகளை பெற்றது. இதனால் ஜெனரல் பொன்சேகா மீது மக்களுக்கு அபிமானம் உண்டு. இப்படி மக்கள் அபிமானம் உள்ள ஒருவரைத்தான் அரசு சிறையில் அடைத்து வைத்துள்ளது. நாம் அவரை விடுதலை செய்வதற்கான முன்னெடுப்புக்களைச் செய்கின்றோம். அரசாங்கம் அவரை தடுப்புக்காவலில் வைத்துள்ளது. போரில் முன்னணியில் இயங்கிய இராணுவச் சிப்பாய் தொடக்கம் ஜெனரல்கள் வரை அரசு சிறைகளில் அடைத்துள்ளது. யுத்தத்திற்கு தலைமை தாங்கிய பலரை பதவிகளிலிருந்தும் விலக்கி வருகின்றது.

கேள்வி - ஜெனரல் பொன்சேகா இன்று எதிர்நோக்கும் சிக்கல்களிலிருந்து அவர் மீள உங்கள் கட்சி என்ன செய்திருக்கின்றது?

பதில் - அவருக்காக நாம் குரல் கொடுக்கின்றோம். அவர் எமது கட்சியைச் சார்ந்தவர் அல்ல. அதிபர் தேர்தலுக்கு பொது அபேட்சகர் ஒருவரை தெரியும்போது அவரை தேர்ந்தெடுத்தோம். அவர் தேர்தலில் வெற்றிபெறுவதற்கு முற்றாக உழைத்தோம். அவர் தேர்தலில் பெற்ற பெரும்பாண்மையான வாக்குகள் எம்முடைய வாக்குகள். எங்களால் முடிந்தவை யாவற்றையும் நாம் அர்பணிப்புடன் செய்துள்ளோம். ஜெனரல் பொன்சேகாவிற்கு எதிரான பல வழக்குகளில் எமது சட்டத்தரணிகளே அவருக்காக வாதாடுகின்றனர். இந்த அநீதிக்கு எதிராக உள்நாட்டிலும் வெளி நாட்டிலும் அவர் சார்பாக போரட்டங்களை நாடாத்துகின்றோம். சர்வதேச அமைப்புக்களின் கவனத்திற்கு இவர் விடயத்தினைக் கொண்டு சென்றவர்களும் ஐக்கிய தேசியக் கட்சியினர்தான். உதாரணத்திற்கு ஜெனிவா மனித உரிமைகள் ஆணையத்திற்கு அவர் குறித்த விடயத்தை நாம் கொண்டு சென்றுள்ளோம். இவ்விடயத்தை எமது கட்சியின் மனித உரிமைகள் விவகாரங்களுக்கான விடயங்களை கையாளும் கலாநிதி ஜெயலத் ஜெயவர்த்தன முன்னெடுத்துச் செல்கின்றார். எதிர்வரும் ஐப்பசி மாதத்தில் ஜெனிவா செல்லவுள்ள ஜெயலத் ஜெயவர்த்தன அவர்கள் மேலதிய விடயங்களை சம்பந்தப்பட்டவர்களின் கவனத்திற்கு எடுத்துச்செல்வார்.

கேள்வி - அரசாங்கத்தின் பாதுகாப்பில் உள்ள புலிகளின் முக்கியஸ்தர் கே.பி தொடர்பாக பலதரப்பட்ட செய்திகள் நாளாந்தம் வெளிவருகின்றது. உங்கள் கருத்து என்ன?

பதில் - குமரன் பத்மநாதனை கைது செய்து தடுத்து வைத்துள்ளதாக அரசாங்கம் தெரிவிக்கின்றது. ஆனால் அவர் புலிகளியக்கத்தின் தலைவர் தானே என பிரகடனப்படுத்தியிருந்தார். கே.பி கைது செய்யப்பட்டார் என்ற செய்தி வெளியாகியிருந்தபோது, எமது ஊடகங்கள் யாவும் புலிகளுக்கு சொந்தமான சொத்துக்கள் அனைத்தும் கே.பி யிடமே உள்ளதாக கூறியிருந்தன. அவர் பெயரில் உள்ள கப்பல்கள் உட்பட அசையும் அசையா சொத்துக்களை நாட்டுக்காக பெற்றுக்கொள்ள முடியும் என தெரிவிக்கப்பட்டிருந்தது. அனால் இன்று அவ்வாறான செயல்கள் எதுவும் நடந்தேறியதாக தெரியவில்லை.

கே.பி இலங்கை அரசிற்கு சொந்தமான கெலிக்கொப்டர்களில் வவுனியா மற்றும் வன்னி பிரதேசங்களுக்கும் சுற்றுப்பயணங்களைச் செய்துள்ளார். அது மட்டுமல்ல இலங்கையின் பத்திரிகைகள் சிலவற்றுக்கும் செவ்விகளை வழங்கியுள்ளார். அச்செவ்விகளினூடாக அவர் இலங்கையின் பாதுகப்பு அமைச்சின் செயலருடன் மிக நெருக்கமான தொடர்பினை கொண்டுள்ளமை தெளிவாகின்றது. எனவே நாம் சொல்கின்றோம். அவர் தடுப்புக்காவலில் இல்லை. அரசுடனான உடன்படிக்கையுடன் , அரச பாதுகாப்பில் தங்கியுள்ளார் என்றே நாம் கூறுகின்றோம். அவரிடம் உள்ள சொத்துக்கள் தொடர்பான விபரங்கள் எதுவும் வெளிவரவில்லை. அவற்றை அறிந்துகொள்ள மக்களுக்கு உரிமை உண்டு. எனவே இவர் விடயமான உண்மைகளை மக்களுக்கு அரசாங்கம் தெரியப்படுத்தவேண்டும்.

கேள்வி - மேற்படி குற்றச்சாட்டுக்களுக்கு என்ன ஆதாரங்கள்?

பதில் - ஆதாரங்கள். புலிகளின் தற்போதைய தலைவர் என தன்னை பிரகடணப்படுத்தியுள்ள இவர் ராஜதந்திரிகள் தங்கவைக்கப்படும் இடத்தில் தங்கவைக்கப்பட்டுள்ளார். குமரன் பத்தநாதனுக்கு எதிராக குற்றங்கள் முன்வைக்கப்பட்டிருந்தன. புலிகளுக்காக ஆயுதங்களை கொள்வனவு செய்தவர். இவர் அரச பாதுகாப்பில் உள்ளார். அவரிடமிருந்த சொத்துக்கள் யாருக்கு கொடுக்கப்பட்டிருக்கின்றது. புலிகளின் வருவாய் யாருக்கு சென்றுகொண்டிருக்கின்றது.

கேள்வி - கடந்தகாலங்களில் அரசுடன் இணைந்திருந்தவர்களை புறந்தள்ளி கே.பி யை முதன்மைப்படுத்தும் செயற்பாட்டில் அரசாங்கம் இறங்கியுள்ளதாக பா.உ சரத் பொன்சேகா தெரிவித்துள்ளார். இவ்விடயத்தில் உண்மைகள் உண்டா?

பதில் - ஆம் இது முற்றிலும் உண்மை, திரு. டக்ளஸ் தேவானந்தா, திரு. கருணா , திரு. பிள்ளையான் ஆகியோர் புலிகளுக்கு எதிரான விடயங்களில் அரசிற்கு ஆதரவினை வழங்கி வந்தார்கள். இன்று இவர்களின் நிலை என்ன? இவர்களை கணக்கில் எடுக்கின்றார்களா? , ஒத்துழைப்பு வழங்குகின்றார்களா ? இல்லை. கே.பி யை தமிழ் மக்களின் ஒரேதலைவராக்குவதற்கு முயற்சிகளை அரசு மேற்கொள்கின்றது. அதாவது விடுதலைப் புலிகளுக்கு எதிராக செயற்பட்டவர்களை புறந்தள்ளி , புலிகளின் தலைவர் ஒருவரை வாழவைக்க முயற்சிக்கின்றது. XIII

0 comments :

Copyright www.ilankainet.com All right reserved.
Designed and Hosted By : ilankainet.com
To contact us : ilankainet@gmail.com