Sunday, August 1, 2010

இ.சோ.ச கட்சி பொலிஸ்-அரச திட்டங்களுக்கு எதிராக பொதுக்கூட்டமொன்றை நடத்துகிறது.

இலங்கையில் சோசலிச சமத்துவக் கட்சியும் (சோ.ச.க.) சமூக சமத்துவத்துக்கான அனைத்துலக மாணவர்கள் அமைப்பும் (ஐ.எஸ்.எஸ்.ஈ.), அரசாங்கம் பொலிஸ்-அரச வழிமுறைகளை பயன்படுத்துவதற்கு எதிராக ஆகஸ்ட் 3ம் திகதி கொழும்பில் பொதுக் கூட்டமொன்றை நடத்தவுள்ளன.

தான் முன்னெடுக்கும் சிக்கன நடவடிக்கைகள் தொடர்பாக எதிர்ப்புக்களை சந்திக்கும் ஜனாதிபதி மஹிந்த இராஜபக்ஷ, வளர்ச்சி கண்டுவரும் வெகுஜன எதிர்ப்புக்களை நசுக்குவதற்காக மேலும் மேலும் அச்சுறுத்தலையும் அடக்குமுறையையும் நாடுகின்றார். அரசாங்கம் “தேசத்தை கட்டியெழுப்புவதற்கான” தனது “பொருளாதார யுத்தத்தை” முன்னெடுக்கின்ற நிலையில், இரு தசாப்தகால உள்நாட்டுப் போரில் தமிழ் வெகுஜனங்களுக்கு எதிராகப் பயன்படுத்தப்பட்ட வழிமுறைகள் இப்போது ஒட்டுமொத்த உழைக்கும் மக்களுக்கும் எதிராகத் திருப்பப்படுகின்றன.

மட்டக்குளியில் ஒரு இளம் முச்சக்கர வண்டி சாரதியை கைது செய்து தாக்கியது சம்பந்தமாக முதல் நாள் நடந்த எதிர்ப்பு ஆர்ப்பாட்டத்தை அடுத்து, ஜூலை 4 அன்று அந்தப் பிரதேசத்தில் உள்ள ஆயிரக்கணக்கான குடிசைவாசிகளை பொலிசார் சுற்றிவளைத்து கைது செய்தமை, இதுவரை நடந்தவற்றில் துரிதமாக கவணத்தை ஈர்க்கும் உதாரணமாகும். அரசாங்கம் மத்திய கொழும்பில் குடிசைகளை அகற்றும் திட்டமொன்றை அமுல்படுத்த தயாராகின்ற நிலையிலேயே இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது.

பூகோள பொருளாதார நெருக்கடி மோசமடைந்து வருகின்ற நிலையில் உலகம் பூராவும் இடம்பெறும் அரசியல் முன்னெடுப்புகளின் மிகவும் கூர்மையான வெளிப்பாடுகளில் ஒன்றே இலங்கையில் அரசாங்கம் பயன்படுத்தும் எதேச்சதிகார வழிமுறைகளாகும். இந்த விடயங்களையும் மற்றும் அனைத்துலகவாத சோசலிச மாற்றீட்டின் அவசியத்தையும் பற்றி கலந்துரையாடுவதற்கு எமது பொதுக்கூட்டத்துக்கு வருகை தருமாறு தொழிலாளர்கள், குடும்பப் பெண்கள், இளைஞர்கள் மற்றும் புத்திஜீவிகளுக்கும் நாம் அழைப்பு விடுக்கின்றோம்.

இடம் : கொழும்பு பொது நூலக கேட்போர் கூடம்

திகதியும் நேரமும் : ஆகஸ்ட் 3, மாலை 4.00 மணி

பிரதான உரை : சோ.ச.க. பொதுச் செயலாளர் விஜே டயஸ்

0 comments :

Copyright www.ilankainet.com All right reserved.
Designed and Hosted By : ilankainet.com
To contact us : ilankainet@gmail.com