Friday, August 27, 2010

அமைச்சர் பசில் ராஜபக்சவின் இந்திய பயணம் தொடர்பாக அந்நாட்டு பத்திரிகைகள் விசனம்.

அமைச்சர் பசில் ராஜபக்சவின் இந்தியப் பயணம் சந்தேகங்களைக் கிளப்புவதாகவும் , திரைமறைவில் மேற்கொள்ளப்பட்டதாகவும் இந்திய நாட்டுப் பத்திரிகைகள் இணையத்தளங்கள தெரிவிக்கின்றன. இது தொடர்பாக வெப்துனியா இணைத்தளத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது.

இரண்டு நாள் பயணமாக இந்தியா வந்த இலங்கை பொருளாதார அபிவிருத்தி துறை அமைச்சர் பசில் ராஜபக்ச, இந்திய அமைச்சர்கள் மற்றும் அதிகாரிகளை சந்தித்துப் பேசியுள்ளார். கடந்த 24 ஆம் தேதியன்று பசில் இந்தியாவுக்கு புறப்பட்டபோது, அவருடன், இலங்கை அதிபர் ராஜபக்சவின் இன்னொரு சகோதரரும், பாதுகாப்புத் துறைச் செயலருமான கோத்தபாய ராஜபக்ச மற்றும் ராஜபக்சவின் செயலாளர் லலித் வீரதுங்கே ஆகியோரும் உடன் வருவதாக இருந்தது.

இந்நிலையில் கடைசி நிமிட மாற்றத்தினால், (அதில் என்ன மர்மமோ?!) கோத்தபாய பயணம் ரத்தானது. வழக்கமாக அண்டை நாடுகளிலிருந்து ஒரு அமைச்சரோ அல்லது அதிகாரியோ இந்தியாவுக்கு வருகை தந்தால் அது குறித்தும், அவர்களது பயண நோக்கம், செய்துகொள்ளப்பட இருக்கும் ஒப்பந்தங்கள் மற்றும் விவாதிக்கப்பட இருக்கும் பேச்சுவார்த்தைகள் குறித்த விவரங்களை இந்திய அயலுறவுத் துறை அமைச்சகம், ஊடகங்களுடன் ஆர்ப்பாட்டமாக பகிர்ந்துகொள்ளும்.

அல்லது குறைந்தபட்சம் அதிகாரிகளையாவது தகவல் கொடுக்கச் செய்து "வட்டாரங்கள் தெரிவித்தன" என்ற ரீதியிலேனும் ஊடகங்களில் அது குறித்து செய்திகளை வரவழைத்துவிடும்.

ஆனால் பசில் வருகையில் அதுபோன்ற எந்தவிதமான அறிவிப்புகளோ அல்லது செய்திகளோ இந்திய அயலுறவுத் துறை அமைச்சகத்திலிருந்து அதிகாரப்பூர்வமாக தெரிவிக்கப்படவில்லை.

மாறாக இலங்கை ஊடகங்கள் வெளியிட்ட செய்திகள் மற்றும் அந்நாட்டு தூதரகம் மூலம் கிடைத்த தகவலின் அடிப்படையிலேயே இந்திய ஊடகங்களில் பசில் வருகை குறித்த செய்தி இடம் பெற்றது.

தமிழக மீனவர்கள் இலங்கை கடற்படையினரால் சுட்டுக்கொல்லப்படுவது, இலங்கையில் முகாம்களில் அடைக்கப்பட்டுள்ள தமிழர்கள் இன்னமும் மீள் குடியமர்த்தப்படாமல் இருப்பது, தமிழர் பகுதிகளில் இராணுவ முகாம்கள் அமைக்கப்பட்டு வருவது, வாழ்வாதாரத்தை பறிக்கும் வகையில் தமிழர்களது விவசாய நிலங்கள் பறிக்கப்பட்டு, சிங்கள குடியேற்றம் அரங்கேறி வருவது என இலங்கை அரசின் தமிழர் விரோத நடவடிக்கைகளின் பட்டியல் நீண்டுகொண்டே இருக்க, இது குறித்து நாடாளுமன்றத்திலும் தமிழக எம்.பி.க்கள் அண்மையில் குரல் எழுப்பி, மத்திய அரசை தலையிட வலியுறுத்தினர்.

மத்திய அரசு தரப்பிலும் இது குறித்து இலங்கையுடன் விவாதிக்கப்படும் என்று உறுதி அளிக்கப்பட்டது.

அப்படி அளிக்கப்பட்ட உறுதி உண்மையாக இருந்திருக்குமானால், இந்திய அயலுறவுத் துறை அமைச்சகமோ அல்லது அரசின் தலைமையோ என்ன செய்து இருக்கவேண்டும்?

இலங்கையிலிருந்து பசில் உள்ளிட்டவர்கள் வர உள்ளனர்.அவர்களிடம் தமிழர் விரோத நடவடிக்கைகளுக்கு - குறைந்தபட்சம் தமிழக மீனவர்கள் சுட்டுக்கொல்லப்படுவதையாவது - முற்றுப்புள்ளி வைக்க வலியுறுத்தப்படும் என்று அதிகாரப்பூர்வமாக தெரிவித்திருக்க வேண்டும்.

0 comments :

Copyright www.ilankainet.com All right reserved.
Designed and Hosted By : ilankainet.com
To contact us : ilankainet@gmail.com