Tuesday, August 31, 2010

'மழை நதி கடல்' கவிதை நூல் வெளியீட்டு விழா

'கவிஞன் இல்லாத சமுதாயம் ஒரு உண்மையான சமுதாயமாக இருக்க முடியாது' இலங்கையில் இன்றைய இளைய தலைமுறையினர்களில் இயற்கையை ரசித்து அழகியற்கவிதைகள் மூலம் மனிதநேசத்தை வெளிப்படுத்தும் படைப்பாளியாகவும் ஓர் எழுச்சி மிக்க கவிஞராகவும் இனம் காணப்படுபவர் இனியவன் இஸாறுதீன் அவர்கள்.

இவரது 'மழை நதி கடல்' என்ற புதுக்கவிதை நூல் கவிக்கோ அப்துல் ரகுமானின் அணிந்துரையோடு இப்போதுதான் வெளிவந்திருக்கிறது. இந்நூல் வெளியீட்டு விழா கடந்த 31. 07.2010 சனி அன்று மாலை 5.00 மணிக்கு அட்டாளைச்சேனை லொயிட்ஸ் மண்டபத்தில் கட்டார் பல்கலைக்ழகத் துணைப் பீடாதிபதி கலாநிதி – பேராசிரியர் - அல்ஹாஜ் எம். எம். தீன்முஹம்மத் அவர்களின் தலைமையில் மிகச் சிறப்பாக நடைபெற்றது.

பிரதம அதிதிகளாக கல்முனை மேல் நீதிமன்ற நீதிபதி கௌரவ திருமதி சந்திரமணி விசுவலிங்கம் அவர்களும் எம்பிலிப்பிட்டிய மேல் நீதிமன்ற நீதிபதி கௌரவ அல்ஹாஜ் எம். எம். அப்துல்கபூர் அவர்களும் - கௌரவ அதிதியாக கல்முனை மாவட்ட நீதிபதி கௌரவ அல்ஹாபிஸ் என். எம். அப்துல்லாஹ் அவர்களும் - விசேட அதிதியாக தென்கிழக்குப் பல்கலைக் கழக உபவேந்தர் கலாநிதி எஸ்.எம்.எம். இஸ்மாயில் அவர்களும் கலந்து சிறப்பித்த இவ்விழாவில் இலக்கிய அதிதியாக கவிஞர் சோலைக்கிளி அவர்களும் முதல் மரியாதை அதிதிகளாக நூலாசிரியரின் தந்தை அல்ஹாஜ் ஏ.எல் முஹம்மது அலியார் அவர்களும் நூலாசிரியரின் மாமன் அல்ஹாஜ் ஜே. எம். ஷம்சுத்தீன் மவுலானா அவர்களும் கலந்துகொண்டார்கள்.

கலாநிதி அல்ஹாஜ் எம். எம். தீன்முஹம்மத் அவர்களின் தலைமையுரையின்போது 'ஒரு கவிஞனைக் கவிஞனாகப் பார்க்கின்றபோது மற்றவர்களால் மட்டிடப்படுவதோ அல்லது அளவிடப்படுவதோ மிகக் கஷ்டமான காரியமாய் இருக்கும். ஏனென்றால் நமது உடம்பிலே உள்ள புலன்களினூடாக – கண்ணிணூடாக – காதினூடாக - மூக்கினூடாக - வாயினூடாகப் பல விடயங்களையும் அறிகிறோம். ஆனால் மிக ஆழமான உணர்வின் மூலம் இந்த உலகத்தையும் தன்னைச் சூழ்ந்திருக்கின்ற சூழல்களையும் பார்க்கின்ற ஒருவன் கலைஞன் என்ற காரணத்தினால் அவனது உணர்வுகளை ஒரு தாரசுக்குக் கீழ் கொண்டு வருவதென்பது கஷ்டமான விடயமாகும். ஏனென்றால் என்னைப் பொறுத்தவரை நாம் எவ்வளவு அறிவியல் ரீதியாக விமர்சனம் செய்தாலும் இந்த உலகத்திலே எந்த மனிதனாயிருந்தாலும் எவ்வளவு தான் படித்தவனாயிருந்தாலும் அதி பெரிய இலக்கம் என்ன? என்று கேட்டால் அதற்கு என்ன பதில் சொல்லுவார்கள்? மில்லியன் கணக்கிலே சைபர்களைத்தான் தொடர்ந்து போட்டுக்கொண்டே செல்லலாம். ஆனால் போடப்படுகின்ற சைபர்களுக்கு ஒரு எல்லை இருக்கின்றதா? என்று கேள்வி கேட்ட அவர் எந்த ஒரு அளவிலும் நாங்கள் ஒரு இலக்கத்தைக் குறித்தால் அதற்கு இன்னும் ஒருவர் வந்து இன்னொரு சைபரைச் சேர்த்துக்கொண்டே போகலாம். அதே போன்றுதான் மனிதனின் ஆக்கமும் படைப்பும். கவிதையில் மட்டுமல்ல இலக்கியத்தில் மட்டுமல்ல சகல துறைகளிலும் முடிவு கிடையாது. விமர்சனம் செய்கின்ற ஒருவன் ஏதோ ஒரு இடத்தில் ஒரு முடிவைக் கற்பனை செய்தாக வேண்டும். அப்படி இல்லையென்றால் அது பூரண விமர்சனமாக அமையாது. ஒரு மரபுக்குள் கட்டுப்படாது ஒரு மனிதனின் முயற்சி எப்போதும் தொடர்ந்துகொண்டே இருக்கும். அப்படி இருக்கவேண்டியது இறை நியதியாகும். ஏனென்றால் 'பூரணத்துவம் பெற்றவன் அல்லாஹ்வே| என்ற தத்துவத்திலே வாழ்ந்துகொண்டிருக்கின்ற ஒவ்வொரு மனிதனும் அந்த அடிப்படையிலேயே சிந்திக்க ஆரம்பிக்கின்றான்.

இன்று பாராட்டப்படுகின்ற கவிஞர் இனியவன் இஸாறுதீன் அவர்கள் உண்மையில் இனியவர்- எளியவர்- அன்பாகப் பழகுபவர். ஒரு கவிஞன் எவ்வாறு இருக்கவேண்டுமோ அவ்வாறு இருந்தவராக நான் கண்டவர். மனித சமுதாயங்களிலே உணர்வு கெட்டு – ரசம் கெட்டு – மனிதத் தன்மையை இழந்து வாழகின்ற இன்றைய உலகத்திலே நான் இன்று வசிக்கின்ற அட்டாளைச்சேனையில் ஒரு கவிஞன் பாராட்டப்படுகிறான் என்று கூறப்பட்டபொழுது அதில் பங்குகொள்வதில் நான் மிகவும் சந்தோசமடைகின்றேன். இவர் 'மழை நதி கடல் | என்ற கவிதை நூலைத் தந்திருக்கிறார் என்பதற்காக மட்டுமல்ல இதிலே கலந்துகொள்வதன் மூலம்
ரசனை மறந்து - ரசனையை சாகடித்திருக்கின்ற மனித சமுதாயங்கள் மத்தியிலே ரசனைக்கு உயிர் கொடுக்கவும் - இரும்பு இயந்திரங்கள் போன்று உணர்வில்லாமல் போன மனிதர்களுக்கு உணர்வூட்டவும் இந்த நிகழ்வு ஒரு வாய்ப்பாக அமையும் என்ற காரணத்தினால்தான் முதலாவதாக இந்த விழாவிலே நான் பங்குகொள்ள விரும்பினேன்.

உணர்வினதும் ரசனையினதும் முக்கியத்துவத்தை மனித ரீதியில் மட்டுமல்ல இந்த ஊரில் வாழ்கின்ற அனைவரும் இஸ்லாத்தின் அடிப்படையில் கூட சகல மதங்களினாலும் சகல தத்துவங்களினாலும் சகல நாகரீகங்களினாலும் மிக உண்மையான – நேரான சமூக வாழ்க்கைக்கு இன்றியமையாததாகக் கருதப்பட்ட உயர்ந்த மனித உணர்வுகள் - உயர்ந்த
மனித ரசனைகள் கட்டாயம் இந்த உலகத்திலே புத்துயிர் கொடுக்கப்பட வேண்டும்.

குர்ஆனை ஓதுகின்றபோது கூட மிக ரசனையுடன் ஓதவேண்டும். அவ்வாறுதான் ஓத வேண்டும் என அல்லாஹ் எங்களுக்குப் பணித்திருக்கிறான். அவனை வணங்குகின்றபோது அந்த வணக்கம் கூட ஓர் இரசனையுள்ளதாக இருக்க வேண்டும் என்பதற்காகத்தான் நாங்கள் 'சுஜூது' செய்து விட்டு நேரடியாக எழுந்து விடாமல் ஒழுங்காக அமர்ந்து மிக அழகான முறையில் எழுந்து தொழும்படி பணித்திருக்கிறார்கள் நமது முஹம்மது நபி (ஸல்) அவர்கள்.

கவிஞன் என்பவன் அறிஞனல்ல – அவன் ஒரு வைத்தியனல்ல – அவன் ஒரு நிபுணருமல்ல
உத்தியோக சம்பந்தமானவனுமல்ல - அவன் இதயத்தால் சிந்திப்பவன். ஆனால் கவிஞன் இல்லாத சமுதாயம் உண்மையான சமுதாயமாக இருக்க முடியாது. ஏனென்றால் நாம் நம்மைச் சூழ இருக்கின்ற உலகத்தினைப் பார்க்கின்றோம். நமது கண்முன் நடக்கின்ற விடயங்களை நோட்டமிடுகின்றோம் - உரையாடுகின்றோம். ஆனால் கவிஞன் என்பவனோ
வேறு வகையானவன். எதார்த்த உலகிலே இருக்கின்ற உண்மைத் தத்துவங்களை – அவன் வாசிக்கிறான் - அறிகிறான். அவனைச் சூழ்ந்திருக்கின்ற அவனது நடைமுறை உலகத்தில்
நடக்கின்ற விடயங்களை அவன் கவனிக்கின்றான். பின் தனித்திருந்து அவன் இவ்விரண்டையும் ஒன்று சேர்த்து உள்ளத்தினால் சிந்திக்கின்றான். சில வேளை தகைமை பெற்றுப் பலர் படித்தவர்களாகவும் இருக்கலாம் அல்லது படிக்காதவர்களாகவும் இருக்கலாம்.

எங்கள் பகுதியில் பிறந்தார்கள் பல வரகவிகள். அட்டாளைச்சேனையில் மணமங்கள மாலை தந்த அப்துல் ரகுமான் ஆலிம் புலவர் அவர்களும் அக்கரைப்பற்றில் பிறந்த சேகுமதார்ப் புலவர் அவர்களும் அல்லது இரு கண்களும் தெரியாத ராஸிம் புலவர் அவர்களும் எந்தப் பாடசாலையில் படித்தார்கள்? என்று அரங்கம் நிறைந்து அமைதியாக் கேட்டுக்கொண்டிருந்த ஆர்வலர்கள் மத்தியில் வினாத் தொடுத்த அவர் தொடர்ந்து பேசும்போது குர்ஆனிலே அல்லாஹ் கூறுகின்றபோது 'அவர்களுக்கு உள்ளம் இருக்கின்றது ஆனால் அவர்கள் சிந்திப்பதில்லை' சிந்தனையைப் பற்றி நாம் பேசும்போதெல்லாம் ஒருபோதும் உள்ளத்தைச் சுட்டிக்காட்டுவது கிடையாது. ஏனெனில் நாங்கள் மூளையினால் சிந்திக்கின்றோம்.

அதனால்தான் இன்றைய மனிதன் இவ்வளவு தூரம் தன் சுயத்தை இழந்து உணர்வற்றவனாகவும் - தன் எதார்த்தத்தை மறந்தவனாகவும் - தான் யார் என்பதையும் கூட அறியாமல் தன்னை இழந்தவனாக இருக்கிறான். அப்படிப்பட்ட இக் காலத்தில்தான் இந்த மழை நதி கடல் என்ற கவிதை நூல் என் கைக்குக் கிடைத்தது. கவிக்கோ அப்துல் ரகுமான் தனது அணிந்துரையில் கூறியிருப்பது போல எத்தனையோ பல சிறந்த கவிதைகள் இருந்தாலும் இதில் அநாகரீகமடைந்தவர்கள் (பக்:222) என்ற ஒரு கவிதை என்னை மிகவும் ஆண்டது. என்னை ஆளுகின்ற கவிதை மற்றவர்களையும் ஆள வேண்டும் என்பது கடமையல்ல. ஆனால் ஒவ்வொருவனுடைய பின்புலம் - கலாசார அறிவு – மனோதத்துவ நிலை ஆகியனவற்றக்கு ஏற்றது போல ஒவ்வொருவனும் ஒவ்வொன்றினால் கவரப்படுகின்றான்.

ஓவ்வொரு மனிதனும் தனது எதார்த்தத்தைப் பற்றி சிந்தித்து தான் யார்? என அறியவும் அல்லது ஒவ்வொருவரும் அறிவதற்கு உதவி செய்யத் தூண்டவும் செய்கிறது இக்கவிதை. இது நமக்குக் கொடுக்கின்ற ஆன்மீகச் செய்தியும் ஒழுக்கவியல் செய்தியும் மிகவும் பொருத்தமானது என்பதால்தான் ஓவ்வொரு மனிதனுக்கும் தான் யார் என்பதை அறிந்துகொள்ளவும் அவன் தெளிவு பெறவும் இக் கவிதையைப் படிக்கவேண்டும் என்று சுட்டிக் காட்டுகின்றேன். 'மனிதநாகரீகம் என்ன?' என்ற உண்மையை அவனுக்கு விளக்கிச் சொல்லுகின்ற ஒரு தத்துவ ஞானியின் பொறுப்பினை இந்தக் கவிதையினூடாக - இந்தப் புத்தகத்தினூடாகச் செய்திருக்கின்றார் நமது இன்றைய நாயகன் இனியவன் இஸாறுதீன் அவர்கள்.

விசேடமாக இக்கவிதை ஒவ்வொரு பாடசாலை மாணவனாலும், ஒவ்வொரு வாலிபனாலும், ஆசிரியனாலும் வாசிக்கப்பட வேண்டும். தெளிவாக புகட்டப்பட வேண்டும். அதனால் நமது குழந்தைகளை - சிறுவர்களை- இளைஞர்களை - மக்களை - நவீன விஞ்ஞானத்தின் தாக்கத்திலிருந்து விடுவிப்பதன் மூலம் வழிகாட்டி நாம் என்ற உணர்வைப் பலப்படுத்தி – நமது எதார்த்தத்தை மீட்டெடுத்து நமது நாகரீகத்தினை மீண்டும் உயிர்ப்பிக்கச் செய்து நமது சமுதாயத்தினை மாற்றலாம். அந்த வகையில் இனியவன் இஸாறுதீன் அவர்களின் துடிப்புள்ள இந்தக் கவிதை நமக்கு மிகவும் பிரயோசனமானது.

அழகும் கூட ஒவ்வொருவனாலும் ஒவ்வொரு வகையான முறையிலேயே கவரப்படுகின்றது. அதனால்தான் இப்படிப்பட்ட எதார்த்தமான விடயங்களுக்கு வரைவிலக்கணம் கூறுவது முடியாத காரணமாய் இருக்கின்றது. இங்கே எத்தனையோ படித்தவர்கள் இருக்கிறீர்கள். அழகு என்றால் என்ன? என்று மெய்யியலாளர்கள் விரும்புகின்ற அளவுக்கு அவர்கள் ஏற்றுக்கொள்ளக் கூடிய வகையில் வரைவிலக்கணம் கூறுவதற்கு இயலுமானவர்கள் எவராவது உங்களில் இருக்கிறீர்களா? என்று கூட்டத்தினரிடம் மறு கேள்வி கேட்டார்.

தொடர்ந்து பேசிய அவர் , அழகை என்ன என்று கேட்டால் அழகான பொருளைத்தான் நமக்குக் காட்ட முடியும். உண்மை என்னவென்று கேட்டால் உண்மையைப் பிரதிபலிக்கும் பொருளைத்தான் நமக்குக் காட்ட முடியும். ஆனால் உண்மை இதுதானென்று நாம் கையிலிருக்கும் ஒரு பொருளை அதாவது புத்தகத்தையோ அல்லது ஒரு பேனாவையோ ஒருவரிடம் காட்டிக் கொடுக்க முடியாது.

பெரும்பாலான எமது வாழ்க்கைக்கு மிகவும் அத்தியாவசியமான எத்தனையோ எதார்த்தமான உண்மைகள் நம்மால் சிந்தனை ரீதியில் உரிய முறையில் வரைவிலக்கணம் கூற முடியாதவைகளாக இருந்தாலும் அவை நமது வாழ்க்கையில் அத்திவாரமாக அமைகின்றன.

அதற்கு நமது குறிப்பிட்ட சொற்ப அறிவே காரணம் என்பதை உணர வேண்டும். அதனால்தான் திருக்குர்ஆனிலே சொல்லப்பட்டிருப்பது போல உங்களுக்குக் கொடுக்கப்பட்டிருப்பது சொற்ப அறிவே என்பதை மறந்து விட்டோம். அதை மறந்த காரணத்தினால் இன்று நாங்கள் உண்மையான விழுமியங்களையும் மறந்து வேறு கலாசாரங்கள் - வேறு நாகரீகங்கள் நமக்குப் புறம்பான விழுமியங்கள் கொண்ட மேற்கத்தைய நாகரீகத்தை ஏற்று தெரிந்தோ தெரியாமலோ நடந்துகொண்டிருக்கின்றோம்.

எந்த ஒரு படித்தவரையோ அல்லது படிக்காதவரையோ அல்லது பாமரரையோ பார்த்து நாங்கள் முன்னேற வேண்டும் - நமது சமுதாயம் முன்னேற வேண்டும் என்று சொன்னால் முன்னேற்றம் என்ற சொல்லை எப்படி விளங்குகிறார் என்று பார்த்தால் எதைக் காண்கிறோம்.?

யாரைக் கேட்டாலும் முன்னேற்றம் என்றால் விஞ்ஞான வளர்ச்சி – தொழில் நுட்ப வளர்ச்சி - ஜனநாயக அரசியல் வளர்ச்சி – பொருளாதார வளர்ச்சி என்பவைகளை மட்டுமதான் சொல்வார்கள். இவை வேறு சமூகங்களிலிருந்து இறக்குமதி செய்யப்பட்ட விளக்கங்களேயன்றி நம்மைப் பொறுத்தவரை முஸ்லீம்கள் மட்டுமல்ல இந்துக்கள் - கிறிஸ்தவர்கள் - பௌத்தர்கள் - யூதர்கள் மற்ற எந்த மதத்தவருக்கும் ஏற்றது இந்த முன்னேற்றமல்ல. Progressive என்று கூறுகின்றபோது நமக்கு ஒரு குறிக்கோள் இருக்கின்றது. அந்தக் கோள் என்ன என்று தெரிந்து அதை நோக்கி நாங்கள் எடுத்து வைக்கின்ற ஒவ்வொரு அடியும் நமது முன்னேற்றப் பாதையிலே நாம் வைக்கின்ற அடிகள். இதுதான் முன்னேற்றம் ஆகும்

ஒரு முஸ்லீமைப் பொறுத்தவரை அவனது வாழ்க்கையின் கோள் என்ன? பணம் சம்பாதிப்பதா? விஞ்ஞானத்துறையில் முன்னேறுவதா? தொழில் நுட்பத்துறையில் முன்னேறுவதா? பொருளாதாரத்தில் முன்னேறுவதா? அல்லது ஜனநாயக ரீதியான ஒரு அரசாங்கத்தை ஏற்படுத்துவதா? இல்லை. ஆனால் எல்லா மதத்தினரைப் பொறுத்தவரையிலும் முன்னேற்றம் என்பது அவர்களது வாழ்க்கையின் கோள் கடவுளைச் சந்திப்பது அல்லது கடவுளைத் திருப்தி செய்வதே ஆகும்.

அந்தத் திருப்தியை நோக்கியவன் எடுத்து வைக்கின்ற ஒவ்வொரு அடியும் அவனது முன்னேற்றத்தின் படிகள் ஆகும். சில நேரம் இந்த நோக்கம் மறக்கப்பட்டால் அவனுக்கு எதிராகவே இந்த எல்லா வளர்ச்சிகளும் முன்னேற்றம் என்ற பெயரிலேயே அவனுக்குத் தெரியாமல் அவனுக்கு எதிரானவைகளாக மாறலாம். அதனால்தான் படித்தவர்களாயினும் - உத்தியோகத்தவர்களாயினும் - அரசியல்வாதிகளாயினும் எமது சமூகத்தில் ஊழல் உருவாகி விடுகின்றது. நாங்கள் தெரிந்தோ தெரியாமலோ நவீன விஞ்ஞானத்தைக் கடவுளாக ஏற்றுக்கொண்டோம். ஏனென்றால் நவீன விஞ்ஞானம் சொல்வதைத்தான் நாம் வழி என்று நம்பி எங்களை மறந்துவிட்டோம். நாம் நோன்பு பிடிக்கின்றோம் என்று சொல்லி நமது முஸ்லீம்கள் எத்தனை பேர் நோன்பு பிடிக்கின்றோம். எத்தனையோ பேர் நோன்பு பிடிக்கின்றோம் அல்லாஹ் நோன்பு பிடிக்கச் சொன்னான் என்பதற்காக அல்ல. அவர்களுக்கு விஞ்ஞான விளக்கம் தேவைப்படுகின்றது. நோன்பு பிடிப்பது சர்க்கரை வியாதிக்கு நன்மை எனவேதான் நோன்பு பிடிக்கின்றார்கள்.

நபி (ஸல்) அவர்கள் கூறியது போன்று இவர்கள் பசித்திருந்ததைத் தவிர ஆத்மீக ரீதியில் பலனடையத் தவறி விட்டார்கள். இவர்களுக்கு மறுமையில் எந்தவித வெற்றியும் கிடைக்காது. ஒரு வணக்கம் வணக்கமாகச் செய்யப்படுகின்றது என்றால் அல்லாஹ் நம்மைப் படைத்திருக்கிறான் என்பதங்காகவே அன்றி அதனிலே நமக்கு ஒரு பௌதீக ரீதியான பயன் கிடைக்கின்றது என்பதற்காகச் செய்வாவோமேயானால் அது நவீன விஞ்ஞானத்தின் தாக்கமாகும். இதைத் தெளிவாகச் சொன்னால் இணை வைத்தல் ஆகும். இதிலிருந்து நம்மை நாம் மாற்றக் கூடிய அமைப்பிலே எமது சமுதாயத்தை உருவாக்குவதற்கு இது ஓர் ஆரம்பப் படியாக இருக்கவேண்டும்| என்று அனைவரையும் வேண்டிக்கொண்டார்.

இவ்விழாவில் பங்குகொண்ட அனைவரையும் வரவேற்று உரை நிகழ்த்திய கலாபூஷணம் ஆசுகவி அன்புடீன் அவர்கள் இந்நூல் வெளியீட்டு விழாவிலே பல்வேறு விதமான மனித முகங்களை நாங்கள் சந்திக்கின்றோம். தமிழ் எங்கள் தாய்மொழி – தமிழ் எங்கள் பேசும் மொழி – நமது தாய் நமக்குத் தாலாட்டுப் பாடுகின்ற மொழியும் நாங்கள் பேசுகின்ற மொழியும் பாடுகின்ற மொழியும் ஆடுகின்ற மொழியும் ஏன் நாம் ஏசுகின்ற மொழியும் கூட தமிழ்மொழிதான். தமிழ் இனியது - இளையது – புதியது – சில நேரங்களில் புரட்சிகரமானதும் கூட. இந்தத் தமிழ்மொழி மீது கொண்ட பற்றினாலும் - பாசத்தினாலும் - பக்தியின் காரணத்தினாலும் - தமிழின் இனிமையை இனியவனுடைய இந்தக் கவிதைநூலை படிப்பதன்மூலம் பெற்று அதைப் பாராட்டி தமிழுக்கும் – தமிழ்க் கவிதைக்கும் மரியாதை கொடுக்க நாங்கள் எல்லோரும் இங்கே கூடி இருக்கின்றோம் என்று சொன்னார்.

இங்கே இலக்கிய அதிதி - முதல்மரியாதை அதிதிகள் என புதிய மூன்று அதிதிகளை இங்கே கூப்பிட்டு கௌரவித்து அந்த கௌரவத்தின் மூலம் தமிழுக்கும் ஒரு கௌரவத்தைத் தேடிக் கொடுக்கின்ற ஒரு நிகழ்வாக எழுவான் வெளியீட்டகம் ஒரு புதிய அறிமுகத்தையும் செய்திருக்கின்றது மற்றும் முன்னிலைப் பேராளர்கள் என புத்திஜீவிகள் - சட்டத்தரணிகள் - வைத்திய அதிகாரிகள் - பொறியியலாளர்கள் - பிரதேச செயலாளர்கள் - உயரதிகாரிகள் - நிறுவனத் தலைவர்கள் பலரை அழைத்து வந்து அவர்களையும் மதித்துப் பெருமைப் படுத்தியிக்கிறார்கள் என்று சொல்லிக் கவிஞரது கவிதை நூலையும் அறிமுகம் செய்து வைத்தார்.

அவரைத் தொடர்ந்து நூல் வெளியீட்டுரை நிகழ்த்திய எழுவான் வெளியீட்டகத்தின் தலைவரும் எழுவான் பிரதம ஆசிரியருமான அல்ஹாஜ் எம். ஏ. பௌசுர் ரஹ்மான் அவர்கள் , நூலாசிரியர் இனியவன் இஸாறுதீன் அவர்களுக்கு நூலை வழங்கினார்.

கல்முனை மேல் நீதிமன்ற நீதிபதி திருமதி சந்திரமணி விசுவலிங்கம் அவர்கள் பேசுகையில் நாளாந்தம் சட்டப்புத்தகங்களையும் வழக்கு ஏடுகளையும் கையில் எடுத்திருக்கும் நாங்கள்
இவ்வாறான ஓர் கவிதை நூல் வெளியீட்டு விழாவிலே கலந்து கொள்வது என்பது ஓர் வித்தியாசமான நிகழ்வுதான். கவிதைகளை ரசிப்போம் ஆனால் நாங்கள் கவிஞர்களுடன் உரையாட முடியாது. இலக்கியங்களை வாசிப்போம் ஆனால் நாங்கள் இலக்கியவாதிகளுடன் சேர்ந்து நடமாட முடியாது. உங்களைப்போல் கவிஞர்களுடன், கலைஞர்களுடன் இலக்கியவாதிகளுடன் இன்னோர்பட்ட பலருடனும் நாங்கள் பேசும்போது அல்லது சேர்ந்து நடமாடும்போது நீதிபதிகள் எவ்வாறான பெயரை சமுதாயத்தில் பெற்றுக்கொள்கின்றார்கள் என்பது உங்களுக்குத் தெரியாத விடயமல்ல. ஆனால் எனக்கு இவ்வாறான புதிய அநுபவம் இன்றுதான் ஏற்பட்டது.

ஒரு எழுதுவினைஞன் தன் பேனாவால் வாழ்கிறான். அதேபோன்று ஒரு கவிஞனும் பேனாவால்தான் வாழ்கிறான். ஆனால் எழுதுவினைஞன் தனது கடமையைச் சுமக்கிறான். கவிஞனோ தன் உணர்வுகளைச் சுமக்கிறான். இவ்வாறு உணர்வுகளைச் சுமந்து தனது பேனாவால் தீட்டிய ஓவியங்களின் வர்ணங்கள் சிலருக்கு மட்டுமே ஒளி விட்டுப் பிரகாசிக்கின்றன.ஆனால் அது பலருக்கு மங்கி விடுகின்றன அல்லது மங்கச்செய்யப் படுகின்றன. அந்த வகையில் கவிஞர் இனியவன் இஸாறுதீனின் கவிதைகள் மூன்று தசாப்த காலங்களாக சுடர் விட்டுப் பிரகாசிப்பதையிட்டு நாங்கள் மிகுந்த மகிழ்ச்சியடைகின்றோம். இது அவருக்கும் பெருமை அவரைப் பெற்றெடுத்த மண்ணுக்கும் பெருமை.

இன்று நாங்கள் எங்கள் மொழியை இழந்து – எங்கள் இனத்தை இழந்து – எங்கள் ஆடைகளைக் கூட சரியான முறையில் உடுக்க முடியாமல் அவதிப்பட்டு இன்னலுற்றுத் திரிகின்றோம். 'நமது நாடு நமக்கில்லை - நாமில்லாத நாடில்லை – நமக்கென்றொரு நாடில்லை' என்பதை உங்கள் பார்வையில் அறிந்திருப்பீர்கள். இப்படி எங்களுடைய இனம் ஐரோப்பிய நாடுகளில் - மேற்கத்திய நாடுகளில் அலைந்து திரிகின்றார்கள். அவரகளுடைய பிள்ளைகள் பேசும் மொழி தமிழ்மொழி அல்ல. தமிழர்களாகப் பிறந்த பூர்வீகம் அவர்களுக்கு இருந்தாலும் அந்தப் பிள்ளைகள் ஆங்கில மொழியையே பேசுகிறார்கள்.

அவர்களின் தாய் 'மகனே! இங்கே வா...' என்று கூப்பிட்டால் அந்தப் பிள்ளைகள் 'ஏஸ் மம்மி அய்யம் கமிங் | என்று சொல்லிக் கொண்டு போகின்றது. அவ்வாறான ஒரு காலகட்டத்தில் எங்களுடைய தமிழை நாங்கள் வளர்க்க வேண்டும் என்றால் இனியவன் இஸாறுதீன் போன்ற எத்தனையோ பேர் எங்களிடத்திலே உதிக்க வேண்டும். அவர்களின் ஆற்றல் - திறன் எல்லா இடத்திலும் பரவ வேண்டும். அப்போதுதான் எங்கள் தமிழ்மொழி உயரும் - உயரந்து வாழும்.

எந்தக் கவிதையை இயற்றினாலும் அந்தக் கவிதை பொருட்செறிவும் - சொல்நயமும் நல்ல உணர்வும் உள்ள கவிதையாக இருக்க வேண்டும். அப்படியான கவிதைகளை வாசிக்கும்போதே அதைப் படைத்த கவிஞனின் திறமையை வாசகர்கள் உணர்கிறார்கள். அப்போதுதான் அந்தக் கவிஞன் ஒரு சிறந்த கவிஞனாக அடையாளம் காணப்படுகிறான். அந்த வகையில் நூலாசிரியர் இனியவன் இஸாறுதீனின் 'மழை நதி கடல்| என்ற கவிதை நூல் என் முன்னே கொண்டு வரப்பட்டபோது நான் ஒரு கணம் திகைத்துவிட்டேன். இதென்ன இந்தக் கவிஞர் தன் கவிதை நூலுக்கு இப்படியான ஒரு தலைப்பை வைத்திருக்கிறார் என்று யோசித்தேன். மழை என்றாலும் நீர்தான் - நதி என்றாலும் நீர்தான் - கடல் என்றாலும் நீர்தான் ஆனால் மழை நீர் சுத்தமான நீர். அந்த சுத்தமான நீர் நதியை அடையும்போது கடல் அசுத்தமடைகின்றது. அந்த நதி கடலை அடையும்போதுதான் கடல்நீர் நிறமும் சுவையும் பெறுகிறது. அந்த வகையில் பார்க்கும்போது நூலாசிரியர் தன் முன்னுரையில் குறிப்பிட்டது போல 'மழை என்பது வாழ்வின் தொடக்கம் - நதி என்பது வாழ்வின் ஓட்டம் - கடல் என்பது வாழ்வின் முழுமை| என்று இரண்டு காரணங்களை விளக்கி இயற்கையுடன் சங்கமித்த வகையில் அர்த்தம் கற்பித்துள்ளார். அதாவது மழைநீர்- நதிநீர் - கடல்நீர் என்பன எல்லாமே வாழ்க்கையின் பாகங்களாகத்தான் இருக்கின்றன. வாழ்க்கையில் எங்களுக்கு குழந்தைப் பருவம் - இளம் பருவம் - முதுமைப் பருவம் என்ற நிலை வரும்போது எங்களுடைய இயல்புகள் எங்களுடைய வளர்ச்சியிலேயே மாற்றமடைகின்றன.

அதாவது நாங்கள் சமுதாயத்தில் வாழ்க்கையை ஆரம்பிக்கும்போது எப்போதும் குழந்தையைப் போலவே இருக்கவேண்டும் என்று நாம் நினைக்கின்றோம். ஒரு குழந்தை தெய்வீகப் பண்புகளை உடையது. அந்தக் குழந்தை வளர்ந்து எப்போது சிறுவனாக – இளம் மாணவனாக பாடசாலைக் கல்வியை முடித்து சமுதாயத்துடன் பழக வெளிச் செல்கின்றதோ அப்போதே அந்த நிலையில் தன் சகவாசம் - பழக்கவழக்கங்கள் என்று நல்ல நிலைக்கு இட்டுச் செல்கின்றுது. ஆனால் பல சந்தர்ப்பங்கள் அந்தப் பிள்ளையைக் கெட்ட நிலைக்கு உள்ளாக்கி விடுகின்றது. நமது வாழ்வின் இறுதியில் மரணம் நிகழும்போது சிலர் நமக்கு ஒரு நல்ல பெயரை விட்டுச் செல்கின்றார்கள். அப்போது 'பாருங்கள்... அவர் - எவ்வளவு நற்பெயருடன் வாழ்ந்தார் - சமுதாயத்தில் எத்தனை நன்மைகளைச் செய்திருக்கின்றார்' என்றெல்லாம் நாம் போற்றிப் பேசுவோம். அப்படிக் கடலின் சுவையையும் நிறத்தையும் அந்த வாழ்வின் கடைசிப் பகுதி ஏற்படுத்திவிடுகின்றது. 'கணினிகளையும் கணிப்பொறிகளையும் கைப்பிடித்த இக்காலத்தில் பேனாவைப் பிடித்து கவிதை இயற்றுவது என்பது மிகக் குறைவு. ஆனாலும் சகோதரர் இனியவன் இஸாறுதீன் அவர்கள் இன்று நேற்றல்ல கிட்டத்தட்ட முப்பது வருடங்களாக தனது பேனாவினால் தமிழை வளர்க்கின்றார். தமிழ் அணிக்கு அணிகலன்களை வழங்கி தமிழுக்கு உரமும் சேர்த்துள்ளார். இவருடைய பணி 'மழை நதி கடல்| என்பதோடு நின்றுவிடாமல் இன்னும் உலக சமுத்திரமாகத் தொடரவேண்டும் என்று வேண்டி நன்றியோடு முடித்தார்.

மற்றும் பிரதம அதிதியாகக் கலந்து கொண்ட எம்பிலிப்பிட்டிய மேல்நீதிமன்ற நீதிபதி அல்ஹாஜ் எம்.எம். அப்துல் கபூர் அவர்கள் 'கொஞ்சியழகும் கொடுத்தானே கோட்டழகும் மஞ்சள் அழகும் அழகல்ல – நெஞ்சத்து நடுநிலையாற் கல்வி அழகே அழகு'என்ற நாலடியார் பாடலைப் பாடி உரைத்தபோது அங்கே நிறைந்திருந்த ஆர்வலர்களின் கை தட்டலால் அரங்கம் அதிர்ந்தது. இன்று 'நடுநிலைக் கல்வி' எனச் சொல்லக் கூடிய கவிதை நூலுக்கு மகுடம் சூட்டுவது மாதிரி பேராசிரியர்கள் - நீதிபதிகள் - புத்திஜீவிகள் - கல்விமான்கள் - பெரிய கவிஞர்கள் என பலபெருந்தகைகளோடு கலாநிதி தீன்முஹம்மத் அவர்களின் தலைமையில் நிகழும் இக்கவிதை நூல் வெளியீட்டு விழா ஓர் இளம் கவிஞனுக்குப் புகழாரம் சூட்டும் ஒரு முக்கியமான நிகழ்வு மட்டுமல்ல இது என்போன்றோருக்கு வாழ்வில் ஒரு மைல் கல்லாகும். 'தலைவன் எழுந்தான் கனலை உமிழ்ந்தான்' என்று உமறுப்புலவர் பாடியிருந்தார். ஆனால் அது இப்போது 'தலைவன் எழுந்தான் தமிழை உமிழ்ந்தான்' என்று தலைவரின் பேச்சு எம்மைப் பூரிப்படையச் செய்து விட்டது என்று குறிப்பிட்டு தலைமை உரையை மெச்சினார்.

மேலும் பேசுகையில் இந்த இருபதாம் நூற்றாண்டிலே உலக மயமாக்கல் என்ற காலகட்டத்தில்தான் நாம் இப்போது வாழ்ந்துகொண்டிருக்கிறோம். இன்றைய நமது சிந்தனை – கலாசாரம் - பண்பாடு – பொருளாதாரம் எல்லாம் நவகாலனித்துவத்தினால் நசுக்கப் பட்டிருக்கும் இந்த காலகட்டத்தில்தான் இந்த முக்கியமான மழை நதி கடல் என்ற கவிதை நூல் வெளியீட்டு விழாவிலே நாம் சந்தித்திருக்கின்றோம். நான் குறிப்பிட்டுச் சொல்வதானால் ஏன் இப்படியான கவிதைகள் - ஏன் இப்படியான சிறந்த புத்தகங்கள் நமக்குத் தேவைப்படுகின்றன என்பதைப்பற்றி நாம் சிந்திக்க வேண்டும். அதாவது 'எந்த நெறியைக் கடைப்பிடித்தாவது உன் இலட்சியத்தை அடை' என்று மக்கியவல்லி Prince என்ற புத்தகத்தில் எழுதியிருப்பதற்கேற்ப அனேகர் தன் வாழ்ந்திருக்கிறார்கள். உலகில் கொடியவன் ஹிட்லர் கூட அந்தப் புத்தகத்தைப் படித்தே ஆண்டிருக்கிறான். அவனுடைய சிந்தனைகளெல்லாம் அக்காலகட்டத்தில் இவ்வாறான அந்தப் புத்தகத்தின் வழியாகத்தான் நிகழ்ந்திருக்கின்றது. 'The books and Friends should be few and good'என்றொரு பழமொழி ஆங்கிலத்திலும். கண்டது கற்கப் பண்டிதனாவான் என்று தமிழிலும் இரண்டு பழமொழிகள் இருக்கின்றன இந்த இரண்டு வேறுபட்ட பழமொழிகளும் வித்தியாசமாய் இருக்கின்றன. இந்த கால கட்டத்திலே இந்த இரண்டு சித்தாந்தங்களையும் இந்தப் புத்தகத்தோடு ஒப்பிட்டுச் சிந்தித்துப் பார்க்க வேண்டும். எல்லா கலாசாரங்களோடும் எல்லா பண்பாட்டோடும் உறவாடிக்கொண்டிருக்கும் எமக்கு இந்த உலக மயமாக்கல் என்கிற சித்தாந்தத்திலிருந்து விடுபட நாம் முயற்சிக்கவேண்டும்.

நண்பர்களும் நல்ல புத்தகங்களும் வாய்ப்புக்களும்தான் ஒரு மனிதனுடைய வாழ்க்கையில் ஒரு நல்ல உச்சக்கட்டத்தை அடைவதற்கு முக்கிய தூண்டுகோலாக இருக்கின்றன. அதனால் நமக்கு எதிரான இந்தக் கெட்ட நிலையை மாற்ற இப்படியான 'மழை நதி கடல்' என்ற நல்ல புத்தகத்திற்கு முன்னுரிமை கொடுத்து நமது பிள்ளைகளையும் நமது இளைஞர்களையும் நமது நாட்டு மக்களையும் வாசிக்க வைப்பதன் மூலம் நாம் நல்ல வழிகாட்டல்களைக் கற்றுக்கொடுக்கலாம். அவ்வாறு செய்வதால்தான் நமது சமுதாயம் இன்னுமின்னும் நல்ல கவிஞர்களையும் நல்ல கலைஞர்களையும் நல்ல அறிவாளிகளையும் நல்ல படைப்பாளிகளையும் உருவாக்கக் கூடிய ஒரு நல்ல சமுதாயமாக மாற்றலாம்.' அப்படித்தான் நாம் மாற்ற முயற்சிக்க வேண்டும்'என்றார்.

கல்முனை மாவட்ட நீதிமன்ற நீதிபதி கௌரவ ஹாபிஸ் என்.எம். அப்துல்லாஹ் அவர்கள் பேசுகையில் 'கவிஞன் என்பவன் கற்பனையில் பேசுபவன். ஒரு கண்ணோட்டத்தில் மட்டும் அவனைப் பார்க்கக் கூடாது. அவனது கவிதைகளினூடாக அவனைப் பல கண்ணோட்டத்தில் நாம் விஞ்ஞானியாகவும் ஒரு ஆசானாகவும் ஒரு நீதிபதியாகவும் பேராசிரியராகவும் நாம் சிந்தித்துப் பார்க்க வேண்டும். இந்த உலகத்தில் இருக்கின்ற எல்லாவற்றுக்கும் ஒரு தூரம் இருக்கிறதென்றால் கவிஞன் என்பவனுக்கு மட்டும் எதுவும் தூரமாக இருக்காது. கவிஞன் என்பவன் ஒரு கண்டுபிடிக்கும் அலைவரிசை (Discovery Channel) அந்த அலைவரிசையில் இல்லாததைக் கூடக் கண்டு பிடித்து அவனது கவிதை நயத்தினால் நம் கண் முன் கொண்டு வந்து காட்டுகிறான். இந்த உலகத்தினையும் மிகத் தெளிவாக நமது கண்முன் கொண்டு வந்து வைத்து நம் எல்லோரிடமும் இதுதான் உலகம் என வியப்பில் ஆழ்த்துவான். ஒரு கவிஞன் எந்த அடிப்படையில் சிந்திக்கின்றானோ அந்த அடிப்படைக்குள் உட்படுத்தப்படுவான். ஆகவே வானம் அவனுக்கு எல்லை இல்லை. வானத்திற்கு அவனும் எல்லை இல்லை. வானத்திற்குள் சென்று பார்ப்பான் - கடலிற்குள் சென்று பார்ப்பான் - மீன்கள் பேசுவதைக் கேட்பான் - காட்டு விலங்குகள் எப்படித் தன் இனம் பெருக்குகின்றன என்று வர்ணிப்பான்.

கவிதைகளைப் பிரசவம் என்றே குறிப்பிடுவார்கள். அதிலும் பலவகையான பிரசவங்கள் உண்டு. 'இயற்கைப் பிரசவம் – அறுவைச் சிகிச்சைப் பிரசவம் - குழாய்ப் பிரசவம்' என்றெல்லாம் கூறுகிறார்கள். இது எப்படியிருப்பினும் இந்த 'மழை நதி கடல்| என்ற நூலிலுள்ள கவிதைகள் எல்லாம் இயல்பான சுகப்பிரசவங்களாய் இருக்கின்றன. இந்தக் கவிதை நூலிற்குரிய பெயரில் மூன்று சொற்கள் அடங்கியிருக்கின்றன. 'முக்கலை அல்லது முக்கனி அல்லது முத்தமிழ்' என்று சொல்வார்கள். அது போல் மூன்று சொற்களுக்கும் தமிழுக்கும் மிகப் பொருத்தமாய் இருக்கின்றது. நபி (ஸல்) அவர்கள் சொல்வதுபோல் ஒருவரிடம் 99 சத விகிதம் கெட்ட விடயங்கள் இருந்தாலும் ஒரே ஒரு விகிதம் மட்டும் நல்ல விடயம் இருந்தாலும் அந்த ஒரு நல்ல விடயத்தைப் பற்றித்தான் நாம் பேச வேண்டும். அதுதான் இங்கிதமாகும். ஒரு கவிஞனைப் பாராட்டுகின்றபோது இந்த மொழியை நாம் பயன்படுத்திப் பேச வேண்டும். சோகம் என்பதை நாம் ஏற்றுக்கொள்வதில்லை. ஆனால் கவிஞன் ஒரு சோகத்தையும் சுகமாக வாசிப்பான். எல்லோருக்கும் சாதகமாக எவ்வாறு சாக்கடைக்குள் நுழையலாம் என்று பார்ப்பவனே கவிஞன். அது போல இனியவன் இஸாறுதீனின் கவிதைகளில் ஒரு கவிதைகளில் அப்படியான ஒரு விடயத்தைப் பார்த்தேன். அதாவது மனங்கொள் மனிதா என்ற கவிதையில் (பக் 233ல்) ஓரிடத்தில் அகம் மகிழ்கையில் ஆழிப்பேரலை வந்து அனர்த்தம் கூட நிகழ்த்தலாம் என்று 1998ம் ஆண்டு எழுதியுள்ளார். 2004 டிசம்பர் மாதம் சுனாமி வருவதற்கு முன்னரே அது பற்றித் தெரியாத காலகட்டத்தில் முன்கூட்டியே இந்தக் கவிஞன் ஆழிப்பேரலை பற்றிச் சிந்தித்திருக்கிறார் என்றால் அக்கவிஞன் எனபவன் புத்தி குறைந்தவனல்ல. அவன் ஒரு நல்ல சிந்தனையாளன்- ஒரு தீர்க்கதரிசி – பிறருக்குத் தகவல் கொடுத்துச் சிந்தனை ஊட்டுபவன் என்பதை நாம் உணர்ந்துகொள்ள வேண்டும்' என்றார்.

விசேட அதிதியாகக் கலந்துகொண்ட தென்கிழக்குப் பல்கலைக் கழக உபவேந்தர் கலாநிதி எஸ்.எம்.எம். இஸ்மாயில் அவர்கள் பேசும்போது 'தமிழ் ஒரு தொன்மை மொழியாக இருந்ததன் காரணத்தினால் இன்று தமிழுக்குத் தொன்மைமொழி என்ற அந்தஸ்து கிடைத்திருக்கின்றது. 1500 ஆண்டுகளுக்கு மேலாக இலக்கண வடிவோடு பேசப்பட்ட , தடம் புரளாமல் இருக்கின்ற ஒரு மொழியாகத் தமிழ்மொழியைப் பார்க்கின்றார்கள். இந்தியாவில் இன்று தமிழை மேம்படுத்துவதற்காகவும் - ஆய்வு செய்வதற்காகவும் - இலக்கண சீர் செய்வதற்காகவும் அரச மட்டத்திலும் சமூக மட்டங்களிலும் பாரிய பங்களிப்பு நடந்துகொண்டிருக்கும் இக்கால கட்டத்தில் இலங்கையில் இவ்வாறாக ஒரு கவிதைத் தொகுதியை ஆக்கி இருக்கின்றார் இனியவன் இஸாறுதீன் அவர்கள்.

இயற்கை வளங்களைப் பற்றியும் - மனித உணர்வுகளைப் சமூக உறவுகளைப் பற்றியும் விலங்குகள் பறவைகளைப் பற்றியும் பாடி இருக்கின்றார். இவ்வாறு பலவற்றை இந்தக் காலத்தில் பேசப்படுகின்ற வசனங்களோடும் வாக்கியங்களோடும் கவிதைகளாக்கித் தொகுத்துத் தந்திருக்கின்றார். இருந்தாலும் இவரது கவிதை நூலுக்கு அணிந்துரை வழங்கிய கவிக்கோ அப்துல் ரகுமான் மற்றும் இந்த விழாவின் தலைவர் - அதிதிகள் - ஆய்வாளர்கள் - கவிஞர் சோலைக்கிளி ஆகியோர் அவருடைய கவிதைக்குரிய அங்கீகாரத்தை தெளிவாக வழங்கியுள்ளார்கள். இதற்கும் மேலாகப் பார்க்கின்றபோது இவர் தன் கவிதைகளைச் சுத்தத் தமிழிலேயே எழுதியுள்ளார்.

எனக்கு ஞாபகம் இருக்கின்றது சமீபத்தில் ஓர் இந்தியப் பேராசிரியர் 'தற்போது தமிழைக் கூட நாங்கள் பல மொழிகள் கலந்துதான் பேசுகின்றோம்' என்று 'இந்த வருஷம் லீவு ஜாஸ்தி' என்று ஒரு சின்ன உதாரணத்தையும் எடுத்துக் கூறி இருந்தார். ஆனால் இதில் நான்கு மொழிகள் கலந்திருக்கின்றன. சகோதரர் இஸாறுதீன் அவர்கள் இந்தக் கவிதைத்தொகுதியைத் எளிய தமிழில் தொகுத்துத் தந்தமைக்கு எங்களுடைய சமூகம் சார்ந்த நன்றியைத் தெரிவித்துக்கொள்ள வேண்டும்' என்றார்.

இலக்கிய அதிதி கவிஞர் சோலைக்கிளி அவர்கள் பேசுகையில் 'இனியவன் இஸாறுதீன் இன்று நேற்றுப் பூத்த கவிஞரல்ல. இவரை ஒரு மூத்த கவிஞரென்று அடையாளப்படுத்தவே எனக்கு விருப்பமாக இருக்கிறது. இவர் கிட்டத்தட்ட எனது தலைமுறையைச் சேர்ந்த நண்பர். இவர் தூர தேசத்தில் வாழ்ந்தாலும் தனது மக்களையும் தனது மண்ணையும் நேசிப்பவர். இவரது கவிதைகளைப் படிப்பவர்களுக்கு அதனைப் புரியும். ஆனால் இவருக்கென்று ஒரு கவிதைமொழி இருக்கின்றது. ஒரு தனி நடை இருக்கின்றது. அது ஒரு கவிஞனுக்குரிய முக்கியமான விடயம். படைப்பாளி எந்த வரைபடத்துக்குள்ளும் பறக்கின்றவனல்ல. அவன் பலதையும் மொய்த்து – தின்று – கழித்து வாழுகின்ற ஒரு பட்சியைப் போன்றவன். இது பற்றிய அறிவை – மண் பற்றிய பாசத்தை அவன் வளர்த்திருக்க வேண்டும். இந்த இயற்கையோடு கலந்து தானும் இயற்கையும் ஒன்றாகும்போதுதான் படைப்பாளியின் ஆத்மா விரிவடைகின்றது.

இந்த உலகத்திலுள்ள பொய் புரட்டு அளவுக்கதிகமான பற்று இவற்றையெல்லாம் நீக்கும்போதுதான் பாட்டு பலம் பெறுகிறது. பாட்டு ஊற்றெடுக்கும் இடம் நமது ஆத்மாதான். எந்தக் கவிஞனும் தனது மூளையால் பாடல் எழுதுவதில்லை. ஒரு பப்படத்தைத்தான் மூளையால் சிந்தித்துத் தாயரிக்க முடியும். ஆத்மாவிலிருந்து பாடல் எழுதும் ஒரு கவிஞன் இந்தப் பொய்உலகத்தை நிராகரிப்பவனாக இருப்பான். அவனது படைப்புகள்தான் காலத்தை மிஞ்சியதாக இருக்கும். இதற்கு உதாரணமாக திருவள்ளுவரையும் குணங்குடி மஸ்தானையும் குறிப்பிட முடியும். இனியவன் இஸாறுதீனின் இந்தத் தொகுதிக்கு 'மழை நதி கடல்' என்று பெயர் வைத்திருக்கிறார். இந்தப் பெயரைப் பார்த்ததும் எனது கண் மூக்கு காதைப் பிடுங்கி பெயர் வைத்தது போலிருக்கிறது. எனது வாழ்க்கையின் அங்கங்கள் இந்த மூன்றும்தான். எனக்கு மழை என்றால் அதிக விருப்பம். நான் அதைப் பற்றி அதிகம் எழுதியிருக்கிறேன். இப்போது மழை பெய்தால் ஆடைகளை அவிழ்த்து எறிந்துவிட்டு வீதிகளில் ஓடி அதை அநுபவித்துப் பார்க்கவேண்டும் என்று மனம் சொல்லுகிறது. என்ன செய்வது எனது தெருவிலுள்ளவர்களின் பார்வை என்னைப் பொறுத்தவரை சரியில்லை. சும்மாவே என்னை ஒரு அரைக் கிறுக்கனைப் பார்ப்பதுபோல் பார்க்கிறார்கள். அப்படி ஓடினால் என்னைப் பிடித்து எங்காவது அனுப்பி விடுவார்கள்.

நான் இல்லறத்தை 'நதியில் குளிப்பது போல் சுகமானது' என்று எழுதியிருக்கிறேன். ஒரு நாள் பிறகுதான் புரிந்தது அது கொதிக்கின்ற கொல்லன் பட்டறை என்று. இருந்தாலும் நதியின் இனிமைதான் இனிமை. என் வாழ்க்கையின் பாதிக் காலத்தை இந்தக் கடற்கரையில்தான் கழித்திருக்கிறேன். இப்போதும் கொல்லன் பட்டறை போல் கொதிக்கின்ற போதும் இந்தக் கடற்கரையில்தான் சாந்தியடைகின்றேன். காற்சட்டை சேட்டு அணிந்து தினமும் ஒரு நாடகக்காரனைப் போல் வேசம் போட்டு வாழ்வதை விட இந்தக் கடற்கரையில் ஒரு முடத்தென்னையாக முளைத்திருக்கலாமே என்று நினைத்து நினைத்து ஏங்கிக்கொண்டிருக்கிறேன். இந்த மூன்றையும் இஸாறுதீன் தனது தொகுதிக்குப் பெயராக்கி விட்டார். எனது மூக்கையும் காதையும் கண்ணையும் பிடுங்கி தனது புத்தகத்தில் நட்டு விட்டார். பெருமையாக இருக்கிறது' என்று சொல்லி நகைச்சுவையோடு சபையோரைச் சிரிக்க வைத்தார்.

நூலாசிரியர் இனியவன் இஸாறுதீன் ஏற்புரை நிகழ்த்துகையில் 'இங்கே மேடையில் அமர்ந்திருக்கும் எல்லோரும் என்னை வாழ்த்தினார்கள் - போற்றினார்கள். ஆனால் இந்தக் கூடத்தில் நானடைகிற மகிழ்ச்சியும் எழுச்சியும் எதனால் வந்தது? – யாரால் வந்தது? என்று யோசித்துப் பார்க்கிறேன். என் தாய்மண் தந்த பெருமையையும் என் தாய்மொழி எனக்களித்த புகழையும் எண்ணி மெய்சிலிர்க்கிறேன். இந்த 'மழை கதி கடல்' என்ற கவிதை நூல் பெருமை பெற்றதென்றால் அந்தப் பெருமை மூன்றுபேருக்குப் போய்ச் சேரவேண்டும். முதலில் என்னைப் படைத்த அல்லாஹ்வுக்குப் போய்ச் சேர வேண்டும். இரண்டாவது எனது பெற்றோர்களுக்குப் போய்ச் சேர வேண்டும். மூன்றாவது எனக்குப் படித்துத் தந்த பள்ளி ஆசிரியர்களுக்குப் போய்ச் சேர வேண்டும். ஆனால் இந்தக் கூடத்தில் எனக்கு ஒன்று மட்டும் தெரிகிறது. இங்கே பெருந்தகைகள் கூடியிருக்கிறீர்கள். நீதிபதிகள் கூடியிருக்கிறீர்கள். பேராசிரியர்கள் கூடியிருக்கிறீர்கள். பெரியோர்கள் - புத்திஜீவிகள்- கவிஞர்கள் - இலக்கிய ஆர்வலர்கள் - தாய்மார்கள் - சகோதரிகள் என ஒரே கூரையின் கீழ் எலலோரும் கூடியிருக்கிறீர்கள். இதுவல்ல முக்கியம். எனக்குப் பிடித்த விஷயம் தமிழுக்கு இங்கே மதிப்பளிக்கப்படுகிறதே - தமிழ்க்கவிதைக்கு மரியாதை செலுத்தப்படுகிறதே என்பதுதான். இங்குள்ளவர்களில் நான் பார்த்தேன். எனக்கு ஒன்று மட்டும் தெரிகிறது பெரியோர்களே! மற்ற மொழிகள் எப்படி என்று எனக்குத் தெரியாது. மற்ற மொழிகள் உதட்டிலிருந்து பிறக்கலாம் - சில மொழிகள் நாவின் கமலத்திலிருந்து பிறக்கலாம் - சில மொழிகள் தொண்டையிலிருந்து பிறக்கலாம் - ஆனால் எனக்குத் தெரிந்து உயிரின் ஆழத்திலிருந்து பிறக்கிற ஒரே மொழி தமிழ்மொழியாகத்தான் இருக்கும் என்று நினைக்கிறேன். இல்லையென்றால் வரவேற்புரையில் தமிழின் இனிமை - தலைமை உரையில் தமிழின் எழில் - பிரதம அதிதிகள் உரையில் தழிழின் சுவை – கௌரவ அதிதியின் உரையில் தமிழின் பண்பு - விசேட அதிதியின் உரையில் தமிழின் சிறப்பு - இலக்கிய அதிதியின் உரையில் தமிழின் நயம் இப்படி இங்குள்ளவர்களின் தமிழின் இனிமையில் என்னைத் தொலைத்துவிட்டேன்.

இங்கே தமிழைத் தாய்மொழியாய்க் கொண்டவர்கள் அனைவரும் கவிதை எழுதத் தகுதியுள்ளவர்கள் எனபதை நான் தெரிவித்துக்கொள்கிறேன். கவிதை எழுதவேண்டுமென்றால் புலமை வேண்டும் என்று நினைக்கின்றீரகளா? இல்லை. கவிதை எழுதவேண்டுமென்றால் அழகை ரசிக்க வேண்டும் - கற்பனை செய்யத் தெரிய வேண்டும். கவிதை என்ற ஊற்று நம் எல்லோரது இதயங்களிலும் சுரக்கின்றது. ஆனால் ஒரு சிலரது இதயங்களில் மட்டும்தான் ததும்புகின்றது – மற்ற எல்லோரது இதயங்களிலும் அப்படியே அது வற்றிப் போகின்றது. ஏன் தெரியுமா? நம்மில் பலருக்கு இரசனை இருப்பதில்லை. எதையும் ரசிப்பதில்லை. அழகை ரசிக்க நாட்டமில்லை. நமது வயிற்றை நாம் வறுமைப்பட வைக்கலாம். ஆனால் நமது மனசை வறுமைப்பட வைக்கக் கூடாது. மனசை வறுமைப்பட வைத்தால் வாழ்க்கையை ரசிக்க முடியாது. வாழ்வின் வலியிலிருந்து நம்மை மீட்டெடுக்க முடியாது. அதனால் நாம் எல்லோரும் ரசனையைப் பெருக்கிக் கொள்ள வேண்டும்.

இங்கே பேசிய கல்முனை மேல்நீதிமன்ற நீதிபதி அம்மா அவர்கள் 'இஸாறுதீன் அவர்கள் தமிழ் வளர்த்துக்கொண்டிருக்கிறார்' என்று சொன்னார்கள். அந்தக் கருத்தை என்னால் ஒப்புக்கொள்ள முடியவில்லை. நானும் என்போன்றோரும் தமிழை வளரக்கிறோம் என்றால் நமது தமிழ்பேசும் பகுதியில் அரச அலுவலகங்களில் ஏன் நம்மால் தமிழை கருமமொழியாக்க முடியவில்லை? தமிழை நான் வளர்க்கவில்லை. பெற்றோர்களும் பள்ளி ஆசிரியர்களும்தான் பிள்ளைகளுக்கு அட்சரம் சொல்லிக் கொடுத்துத் தமிழை வளர்த்துக்கொண்டிருக்கிறார்கள். நானும் என் போன்றோர்களும் தமிழை வளர்க்கின்றோம் என்றால் நமது தாய்மண்ணில் தமிழ் ஏன் தாழ்த்தப்பட்டது? நமது இனஉரிமையையும் மொழிஉரிமையையும் காக்க வேண்டிய கடமை எங்களுக்கு இருக்கிறதென்றால் ஏன் நாங்கள் தமிழைக் காக்கத் தவறிவிட்டோம்? அப்படித் தவறியதால்தான் ஆளுவோர் தமிழை இங்கே அடிமைமொழி ஆக்கி விட்டார்கள். தமிழை நாம் மேம்படுத்தவேண்டுமானால் எமது பகுதியிலுள்ள எல்லா அரச அலுவலகங்களிலும் தமிழ்தான் அரசகரும மொழியாக்கப் பட வேண்டும். இன்றைய ஈனநிலையை இனி மாற்றவேண்டுமானால் நாம் எல்லோரும் பாடுபட வேண்டும். தமிழ்பேசுவோர் எல்லோரும் அழுதுகொண்டுதான் இருக்கிறார்கள்.

ஆனால் எங்கள் நிலங்களில் புத்தர் சிலைவடிவில் சிரித்துக்கொண்டே இருக்கிறார் என்பதை நாம் மறந்துவிடக் கூடாது. ஒரு நல்ல இலக்கிய ரசிகனாலும் கவிதை எழுத முடியும் என்பதற்கான சான்றுதான் இந்த 'மழை கதி கடல்' என்ற கவிதை நூல். இதை எழுதியதற்காக நான் பெருமைப் படவில்லை. ஆனால் தமிழ் எனது தாய்மொழி என்பதற்காகவும் அட்டாளைச்சேனையில் பிறந்ததற்காகவும் நான் பெருமைப்படுகிறேன். ஆனால் நானும் புலம்பெயர்ந்து - கடல் கடந்துதான் உழைக்கிறேன். எப்போது கடல் கடந்தேனோ அப்போதே நான் தன்னம்பிக்கையைப் பெற்றுக்கொண்டேன். நான் கடல் கடந்த பின்னர்தான் என்னையும் என்னைச் சார்ந்த குடும்பத்தையும் ஓரளவுக்கு உயர்த்தியிருக்கிறேன். அதில், வெற்றியும் பெற்றிருக்கிறேன். ஏனென்றால் கடல் கடந்து வந்ததுதான் நாகரீகம் - கடல் கடந்து வந்ததுதான் வெற்றி - கடல் கடந்து வந்ததுதான் படை - கடல் கடந்து வந்ததுதான் வணிகம். நான் சவூதிக்குப் பணம் சம்பாதிக்கச் சென்றாலும் அந்த 'குர்ஆன்' இறங்கிய புனித பூமியில் என்னை நான் நெறிப்படுத்திக்கொண்டிருக்கிறேன். அதிகம் அங்கே நன்னெறிகளைக் கற்றுக்கொண்டிருக்கிறேன். சங்க இலக்கியத்தில் பழைய கலித்தொகையில் ஒரு பாடல் உண்டு. 'இந்நிழல் இன்மையால் வருந்திய மடப்பிணைக்கு தம் நிழலைக் கொடுத்தளிக்கும் கலை' என்பதைப் போலதான் நானும் இலங்கையில் நிழல் வேண்டும் என்பதற்காக சவூதியில் வெய்யில் சுமக்கிறேன். ஆனால் துன்பம் இல்லாமல் இன்பம் உண்டா? தோல்வி இல்லாமல் வெற்றி உண்டா? விலை இல்லாமல் பொருள் கிடைக்குமா? நிலக்கரிதான் வைரமாகிறது – சுண்ணாம்புதான் முத்தாகிறது. உழைப்பவன்தான் உயருகிறான் - வியர்வை கொடுப்பவன்தான் வெற்றி பெறுகிறான்' என்று எல்லோருக்கும் நன்றி கூறித் தன் உரையை முடித்தார்.

தொடர்ந்து நிகழ்ந்த இவ்விழாவில் எழுவான் வெளியீட்டகத்தின் தலைவரும் எழுவான் பத்திரிகை பிரதம ஆசிரியருமான அல்ஹாஜ். எம். ஏ. பௌசுர் ரஹ்மான் அவர்கள் வெளியீட்டுரையும் தென்கிழக்குப் பல்கலைக் கழகத்தின் மொழித் துறைத் தலைவர் ஜனாப்.. றமீஸ் அப்துல்லாஹ் அவர்கள் ஆய்வுரையும் - ஆசிரிய ஆலோசகர் ஜனாப் என். எம். ஸம்சுத்தீன் அவர்கள் கருத்துரையும் செய்தார்கள். மற்றும் கலாபூஷணம் கவிஞர் பாலமுனை பாறூக் அவர்கள் 'இனியவன் இஸாறுதீன் இளையவர் இரசிகர் கனிந்த மொழியில் கதைக்கத் தெரிந்தவர் - மனங்களை மதித்து மரியாதை செய்பவர்- அளவோடு பேசும் அன்பர் அவரை வளர்க என்று வாழ்த்தி மகிழ்கிறோம்' என்று ஆரம்பித்து வாழ்த்துப் பா பாடினார். பிறை FM வானொலி அறிவிப்பாளர் ஜனாப் எம். ஐ. அன்வர் அவர்கள் விழாவைத் தொகுத்து சிறப்பித்து வழங்கினார்.

தொகுத்தவர் : இளையவன் ஜாபீர் அட்டாளைச்சேனை - 11



0 comments :

Copyright www.ilankainet.com All right reserved.
Designed and Hosted By : ilankainet.com
To contact us : ilankainet@gmail.com