Saturday, August 7, 2010

கேபி போன்ற தலைவர்களுக்கு ஆடம்பர சொகுசு வாழ்கை , சிறார்களுக்கு சிறையா? ஜேவிபி

புலிகளினால் போரிட நிர்பந்திக்கப்பட்ட இளைஞர் யுவதிகளுக்கு தண்டனை வழங்கும் அதே நேரம் கே.பி போன்ற முன்னணித் தவைர்களுக்கு இவ்வரசாங்கம் ஆடம்பர சொகுசு வாழ்வைத்தருவது மிகவும் ஒழுக்கமற்றதோர் செயல் என ஜேவிபி யின் பாராளுமன்ற உறுப்பினர் அனுரகுமார திஸாநாயக்க தெரிவித்துள்ளார்.

நேற்று வியாழக்கிழமை பாராளுமன்ற விவாத்தின்போது மேற்கண்டவாறு தெரிவித்த அனுரகுமார மேலும் பேசுகையில், புலிகளுடன் இணைந்து செயற்பட்டார்கள் என்ற குற்றச்சாட்டில் ஆயிரக்கணக்கான இளைஞர்கள் இன்று தடுத்து வைக்கப்பட்டுள்ளனர். அவர்களுடைய பெயர் பட்டியல் ஒன்றுகூட இன்றுவரை வெளியிடப்படவில்லை. அவர்களில் குற்றச்சாட்டுக்கள் உள்ளவர்களுக்கு எதிராக எப்போது சட்டநடவடிக்கை எடுக்கப்படும் என்பது குறித்தும் ஏனையோர் எப்போது விடுவிக்கப்படுவர் என்பது குறித்தும் இதுவரை அரசாங்கம் எதுவும் தெரிவிப்பதாக இல்லை. இவ்வாறு தடுத்து வைக்கப்பட்டுள்ள இளைஞர் யுவதிகள் யாவரும் அவர்களது சிறு பிராயங்களில் , புத்தி தெரியாத வயதில் யுத்தத்தில் ஈடுபடுத்தப்பட்டார்கள். அவர்களை யுத்தமுனைக்கு பலவந்தமாக அழைத்துச் சென்ற தலைவர்களை மன்னித்து விடுவித்துவிட்டு அப்பாவிச் சிறுவர்களைத் தண்டிப்பதில் என்ன நியாயமிருக்கின்றது.

இன்று இந்த அரசாங்கம் ஒர் பயங்கரவாதியை , ஆயுத மற்றும் போதைப்பொருள் கட்தல் காரனை ஏற்றுக்கொள்ளமுடியாத வகையில் பராமரிக்கின்றது. நான் இன்று இந்த அரசாங்கத்தை பார்த்து கீழ் வரும் கேள்விகளை கேட்கின்றேன் .

1. குமரன் பத்மநாதன் இன்று கைது செய்யப்பட்டுள்ளாரா? அவ்வாறாயின் அது நீதிமன்றின் உத்தரவின் பேரிலா?

2. அவர் கடந்த ஒருவருடங்களாக எங்கே தடுத்து வைக்கப்பட்டிருந்தார்? எந்த விளக்கமறியல் சிறைச்சாலையில் அல்லது எந்த தடுப்பு முகாமில்?

3. அவர் தொடர்பாக முழுமையான விசாரணை ஏதும் இடம்பெற்றுள்ளதா?

4. இந்த மன்றுக்கு அவ்விசாரணைகள் தொடர்பில் தெரியப்படுத்தப்படுமா?

5. அவர் பயங்கரவாத செயற்பாடுகளில் ஈடுபாட்டார் என்பதற்கு ஆதாரங்கள் உண்டா?

6. அவருக்கு எதிராக எடுக்கப்பட்டுள்ள சட்ட நடவடிக்கைகள் யாது?

7. குமரன் பத்மநாதனிடமுள்ள சொத்துக்கள் தொடர்பான அறிக்கை இம்மன்றுக்கு தெரியப்படுத்தப்படுமா?

8. அச்சொத்துக்களை அரசுடமையாக்குவதற்கு எடுக்கப்பட்டுள்ள நடவடிக்கைகள் யாவை?

9. அவர் தடுப்புக்காவலில் உள்ளாராயின் , கடந்த 15ம் திகதி அமைச்சர்களையும் புலம்பெயர் நாடுகளிலிருந்து வந்திருந்தோரையும் சந்திப்பதற்கு அவரை அனுமதித்ததற்கான காரணங்கள் யாது?

10. அவர் தொடர்ந்தும் தடுப்புக்காவலில் உள்ளவராயின் கடந்த 20ம் திகதி வவுனியா கிளிநொச்சி பிரதேசங்களுக்குச் செல்ல ஏன் அனுமதிக்கப்பட்டார்?

11. அவர் தொடர்ந்தும் தடுப்புக்காவலில் உள்ளவராயின் கடந்த 29ம் திகதி ஐலன்ட பத்திரிகைக்கு நேர்காணல் ஒன்றினை வழங்குவதற்கு ஏன் அனுதிக்கப்பட்டார்?

12. அரச சார்பற்ற ஸ்தாபனம் ஒன்றை நிறுவி அதற்கான வங்கி கணக்கொன்றையும் பேணுவதற்கு அரசாங்கம் அனுமதி வழங்கியுள்ளதா?

13. குமரன் பத்மநாதனுக்கு மன்னிப்பு வழங்க அரசாங்கம் தீர்மானித்துள்ளதா?

14. அதற்கான காரணம் என்ன?

15. இவ்வாறு மன்னிப்பு வழங்கப்படவுள்ள பயங்கரவாதிகளின் பெயர்ப்பட்டியலை அரசாங்கம் வெளியிடுமா?

என்ற கேள்விகளை எழுப்பினார்.

இக்கேள்விகளுக்கு பதிலளித்த அமைச்சர் நிமால் சிறிபால டீ சில்வா கே.பி விடயம் தேசிய பாதுகாப்புடன் தொடர்புடைய மிக முக்கியமான விடயம் இது தொடர்பாக பொருத்தமான நேரத்தில் நாடாளுமன்றத்தில் அறிவிக்கப்படும் எனவும் கே.பி. பற்றிய விடயங்களை வெளியிடுவதால் அது எதிர்கால விசாரணைகளுக்கு பாதிப்பாக அமையும் எனவும் தெரிவித்த அவர் நாம் நாட்டின் தேசிய பாதுகாப்புக் குறித்து முக்கியமாகக் கவனம் செலுத்துகிறோம் எனவும் எதிர்காலத்தில் கே.பி. பற்றி சபைக்கு அறிவிப்போம் எனவும் கூறினார்.

0 comments :

Copyright www.ilankainet.com All right reserved.
Designed and Hosted By : ilankainet.com
To contact us : ilankainet@gmail.com