Wednesday, August 4, 2010

ஹட்டனில் கடத்தப்பட்ட மாணவிகள் உடற்- காயங்களுடன் கம்பளையில் மீட்கப்பட்டுள்ளனர்.

இனந்தெரியாத குழுவொன்றினால் கடத்தப்பட்டதன் பின்பு விடுவிக்கப்பட்டுள்ள ஹட்டனைச் சேர்ந்த இரண்டு மாணவிகள் காயமடைந்த நிலையில் கம்பளை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். கடந்த 2ஆம் திகதி ஹட்டன் நகரில் வான் ஒன்றில் கடத்தப்பட்ட இந்த இரண்டு மாணவிகளும் அன்றைய தினம் இரவு 7 மணியளவில் கம்பளை சிங்கஹபிட்டிய பகுதியிலுள்ள காட்டுப்பகுதியில் கைவிடப்பட்டதாக தெரிவிக்கப்படுகிறது. இவர்களைக் கண்ட பிரதேசவாசி ஒருவர் 119 அவசர பொலிஸ் பிரிவுக்கு அறிவித்ததைத் தொடர்ந்து கம்பளை பொலிஸார் இவர்களை மீட்டு விசாரணைக்கு உட்படுத்தியதோடு கம்பளை வைத்தியசாலையிலும் அனுமதித்துள்ளனர்.

இவர்களை பரிசோதனைக்கு உட்படுத்திய கம்பளை வைத்தியசாலையின் சட்டவைத்திய அதிகாரி முஹித்த அப்பு ஆராய்ச்சி, இந்த மாணவிகளின் உடல்களில் ஆயுதங்களால் தாக்கப்பட்டமையால் ஏற்பட்ட சிறு காயங்கள் உள்ளதாகவும் தெரிவித்துள்ளார். இவர்கள் ஹட்டனிலுள்ள பிரபல பாடசாலையொன்றில் தரம் 10இல் கல்வி கற்கின்ற மாணவிகள் ஆவார்.

இந்தச் சம்பவம் தொடர்பில் கடத்தப்பட்டதாக கருதப்படுகின்ற இரண்டு மாணவிகளும் பொலிஸாருக்கு தெரிவித்துள்ள தகவல்களின்படி, கடந்த 2ஆம் திகதி காலை வேளையில் பாடசாலைக்கு ஹட்டன் நகரூடாக வந்து கொண்டிருந்தபோது அவர்களிடத்தில் நெருங்கி வந்த வயோதிப பெண்ணொருவர் ஏதோ முகவரி ஒன்றினைக் கேட்டுள்ளார். அதன்போது திடீரென அந்த வயோதிப மாது மயக்கமுற்றதுபோல கீழே விழ எத்தனித்துள்ளார். இதன்போது அந்த வயோதிபப் பெண்ணை இந்த மாணவிகள் கைகளால் தாங்கி கொண்டிருந்தபோது அவ்விடத்தில் திடீரென வான் ஒன்று வந்துள்ளது. வானில் உள்ளே இருந்தவர்கள் உடனடியாக அந்த வயோதிபப் பெண்ணை வானினுள் ஏற்றுமாறு கூறியுள்ளனர். அப்போது வானுக்குள் அந்தப் பெண்ணை ஏற்றும்போது குறிப்பிட்ட மாணவிகளை வானில் இருந்தவர்கள் உள்ளே இழுத்து மூக்குக்கருகில் திரவமொன்றினை நுகரச்செய்ததாகவும் அதன் பிறகு தாம் மயக்கமுற்றதாகவும் மயக்கம் தெளிந்தபோது புரியாத இடமொன்றில் தாம் இருந்ததாகவும் அவர்கள் தெரிவித்துள்ளனர்.

இந்தக் கடத்தல் சம்பவம் தொடர்பாக கம்பளை மற்றும் ஹ்ட்டன் பொலிஸார் விசாரணைகளில் ஈடுபட்டு வருகின்றனர்.

0 comments :

Copyright www.ilankainet.com All right reserved.
Designed and Hosted By : ilankainet.com
To contact us : ilankainet@gmail.com