Friday, July 9, 2010

கொல்த்தில் ஆட்கடத்தல் மன்னன் கைது. புலிகளியக்க உறுப்பினர் என தெரியவந்துள்ளது.

இந்தியாவின் கேரள மாநிலம் கொல்லத்திலிருந்து ஆட்களை வெளிநாட்டுக்கு அனுப்பும் கும்பலில், போலீசாரிடம் பிடிபட்ட இலங்கை நபர், புலி இயக்கத்தைச் சேர்ந்தவர் என்பது தெரிய வந்துள்ளது. இதையடுத்து, கேரளாவை மையமாக்கி புலிகளின் சர்வதேச ரகசியப் பணிகள் நடந்து வருகின்றனவா என, போலீசார் விசாரித்து வருகின்றனர். கேரள மாநிலம் கொல்லத்தில், காங்கிரஸ் கட்சி பொதுச் செயலர் ராகுல் வருவதற்கு முன், அங்குள்ள விடுதிகளில் போலீசார், "ரெய்டு' நடத்தினர். அப்போது, இலங்கையைச் சேர்ந்த 27 பேர் சிக்கினர். அவர்களில் ஒருவர் சிவா (எ) பராபரன். இவரிடம் தனிப்படை போலீசார், விசாரணை நடத்தி வருகின்றனர்.

விசாரணையில், இலங்கையில் புலி தலைவர் பிரபாகரனின் தீவிர ஆதரவாளர் என்பதும், அங்கு நடந்த போரில் சிங்கள வீரர்களின் துப்பாக்கி குண்டு, அவரது காலில் பட்டு காயமடைந்தார் என்பதும் தெரிந்தது.

மேலும், 1990ம் ஆண்டு முதல், 10 ஆண்டுகள் புலிகள் அமைப்பிற்காக பல பணிகளை செய்து வந்துள்ளார். குறிப்பாக, கண்ணிவெடிகளை தயாரித்து பூமிக்கடியில் புதைத்து வைப்பதில் வல்லவர் என்பதும் தெரிந்தது. இவர், 2007ம் ஆண்டு பயணிகள் விசாவில், இலங்கையில் இருந்து விமானத்தில் தமிழகம் வந்துள்ளார்.

இலங்கைத் தமிழர்களை இந்தியாவுக்கு கடத்தி வந்து, அவர்களை போலி விசா அல்லது படகுகள் மூலம், ஆஸ்திரேலியா நாட்டுக்கு அனுப்பும் ஏஜன்ட் வேலை செய்து வந்தார். இதற்காக பலரிடம், ஒரு லட்சம் ரூபாய் வீதம் பெற்று வந்துள்ளார். இலங்கையில் இருந்து அனுப்பப்படும் பணம், ராமேஸ்வரத்தில் செயல்படும் வங்கி வழியாக, இவருக்கு கைமாறி வந்தது.

இவரது காலில் குண்டு தாக்கியதால் பாதிக்கப்பட்ட தழும்பு இருப்பதும், போலீசார் விசாரணையில் தெரிய வந்துள்ளது. இவரிடம் போலீசார் தொடர்ந்து விசாரிக்கின்றனர்.

0 comments :

Copyright www.ilankainet.com All right reserved.
Designed and Hosted By : ilankainet.com
To contact us : ilankainet@gmail.com