Tuesday, July 27, 2010

பாகிஸ்தா‌ன் உறவு மிகவும் முக்கியமானது: அமெரிக்கா

தலிபான் அமைப்புக்கு பாகிஸ்தானின் ஐ.எஸ்.ஐ அமைப்பு உதவுவதாக போலந்து ரகசிய புலனாய்வு அமைப்பு தெரிவித்துள்ளது. இருப்பினும் அந்நாட்டுடனான உறவு தங்களுக்கு மிகவும் முக்கியமானது என்று அமெரிக்கா தெரிவித்துள்ளது.

அமெரிக்காவின் இரட்டை கோபுர தகர்ப்புக்கு முக்கிய காரணமான தலிபான் அமைப்பை முற்றிலுமாக ஒழிப்பதில் அமெரிக்கா தீவிரம் காட்டி வருகிறது. இந்நிலையில் தலிபான் அமைப்புக்கு பாகிஸ்தானின் உளவு அமைப்பான ஐ.எஸ்.ஐ உதவுவதாக போலந்து ரகசிய புலனாய்வு அமைப்பு தெரிவித்துள்ளது. 92 ஆயிரம் பக்கங்கள் கொண்ட புலனாய்வு அமைப்பின் ரகசிய ஆவணம் சமீபத்தில் வெளியாகியுள்ளது.

மிகவும் ரகசியமாக பாதுகாக்கப்பட வேண்டிய புலனாய்வு ஆவணங்கள் பத்திரிகைகளுக்கு கசிந்தது அமெரிக்க அரசியலில் பெரும் அதிர்வலையை ஏற்படுத்தியுள்ளது. இந்நிலையில் பாகிஸ்தானுடனான உறவு தங்களுக்கு மிகவும் முக்கியமானது என்று அமெரிக்காவின் தேசிய பாதுகாப்பு ஆலோசகரும் முன்னாள் இராணுவ தளபதியுமான ஜேம்ஸ் ஜோன்ஸ் தெரிவித்துள்ளார்.

2009ஆம் ஆண்டு முதல் பாகிஸ்தானுடன் கூட்டு சேர்ந்து பயங்கரவாதத்தை ஒழிக்கும் நடவடிக்கையில் அமெரிக்கா ஈடுபட்டுள்ளது. தலிபான் அமைப்பினருக்கு எதிரான நடவடிக்கைகளை மேற்கொள்வதில் இரு நாடுகளும் ஒருங்கிணைந்து செயல்பட்டு வருகிறது. பாகிஸ்தான் ராணுவம் மற்றும் புலனாய்வு அமைப்பு ஊடுருவல்காரர்களுக்கு எதிராக உறுதியான நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என்று அமெரிக்கா விரும்புகிறது என்றும் ஜோன்ஸ் கூறியுள்ளார்.

போலந்தின் ரகசிய ஆவணம் 2004ஆம் ஆண்டு முதல் பாகிஸ்தான் ஐ.எஸ்.ஐ செயல்பாடு குறித்து விரிவாக விளக்கியுள்ளது. இந்த கால கட்டத்தில் இப்போது பாகிஸ்தானின் இராணுவ தலைவராக உள்ள அஷ்பக் பர்வேஸ் கியானிதான் ஐ.எஸ்.ஐ அமைப்பின் தலைவராக இருந்தார்.

போலந்தின் ஆவணம் வெளியானதால் அமெரிக்காவுடனான உறவு பாதிக்கப்படும் என்பது பாகிஸ்தானுக்கு நன்கு தெரியும். இருப்பினும் தற்போது பாகிஸ்தான் இராணுவம் தலிபான்களுக்கு எதிரான நடவடிக்கைகளை எடுத்து வருகிறது என்றும் ஜோன்ஸ் சுட்டிக்காட்டியுள்ளார்.

இப்போது ஸ்வாட் பள்ளத்தாக்கு, தெற்கு வஜிரிஸ்தான் பகுதிகளில் தலிபான்களுக்கு எதிரான நடவடிக்கைகளை பாகிஸ்தான் ராணுவம் எடுத்து வருகிறது என்று அவர் மேலும் குறிப்பிட்டார்.

பொருளாதார மேம்பாடு குறித்து பாகிஸ்தானுடன் அமெரிக்கா பிரத்யேகமான உத்தியை வகுத்து வருகிறது. சமீபத்தில்தான் பாகிஸ்தானும் ஆப்கானிஸ்தானும் உறவை மேம்படுத்துவதற்கான ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டுள்ளன. இரு நாடுகளிடையே வாகன போக்குவரத்துக்கு ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளது.

பாகிஸ்தான் அரசு, இராணுவம் மற்றும் அந்நாட்டின் உளவு அமைப்பான ஐஎஸ்ஐ ஆகிய மூன்றும் ஒருங்கிணைந்து ஊடுருவல்காரர்களுக்கு எதிராக மேற்கொள்ள வேண்டிய உத்தி குறித்து விவாதித்து வருகிறது என்றும் ஜோன்ஸ் கூறினார்.

0 comments :

Copyright www.ilankainet.com All right reserved.
Designed and Hosted By : ilankainet.com
To contact us : ilankainet@gmail.com