Saturday, July 17, 2010

மக்களை கொல்வது வேடிக்கையானது எனக் கூறும் அமெரிக்க ராணுவத்தளபதி .. Barry Grey

கடந்த வாரம் ஒபாமா நிர்வாகம் மரைன் கோர்ப்ஸ் தளபதி ஜேம்ஸ் என்.மாட்டிஸ் இனை ஜெனரல் டேவிட் பெட்ரியஸுக்குப் பதிலாக அமெரிக்க மத்தியக் கட்டுப்பாட்டின் தலைவராக நியமித்துள்ளது. இது இந்த மரைன் அதிகாரிக்கு ஆப்கானிஸ்தான், ஈராக் உட்பட மத்திய கிழக்கு மற்றும் மத்திய ஆசியா முழுவதும் தலைமைக் கட்டுப்பாட்டை அளிக்கிறது.

மாட்டிஸ் உயர்பதவிக்கு நியமிக்கப்பட்டுள்ளமை கடந்த மாதம் ஜெனரல் ஸ்டான்லி மக்கிறிஸ்டல் பணியில் இருந்து விலக்கப்பட்டதும் பெட்ரீயஸ் ஆப்கானிஸ்தானில் உள்ள அமெரிக்க, நேட்டோ படைகளுக்கு தளபதியாக நியமிக்கப்பட்டதும் ஆப்கானிய மக்களுக்கு எதிராக அமெரிக்க இராணவ வன்முறை பெரிதும் விரிவாக்கப்படும் என்பதை அடையாளம் காட்டியுள்ளது. விக்கிபீடியா கருத்தின்படி மாட்டிஸ், “பெரும்குழப்பம்”, “போர்க்கொலைகாரன்” “வெறிநாய் மாட்டிஸ்” என்றும் அறியப்படுபவர், இராணுவத்திற்கு உள்ளேயும் வெளியேயும் அவருடைய குருதிவெறிக்கும் கொலை செய்யும் ஆர்வத்திற்கும் இழிந்த பெயரைக் கொண்டவர்.

மத்திய கிழக்கிலும், மத்திய ஆசியாவிலும் அமெரிக்க ஆக்கிரமிப்புப் போர்களில் முக்கிய போர் நடவடிக்கைகளில் அவர் நீண்ட கால வரலாற்றைக் கொண்டுள்ளவர். Operation Desert Storm (ஏப்ரல் 1991ல் ஈராக் மீது அமெரிக்கப் படையெடுப்பிற்குப் பெயர்) ல் அவர் ஒரு துணை அதிகாரியாக இருந்தார்; 2001ல் அந்நாட்டின்மீது படையெடுத்தபோது ஆப்கானிஸ்தானின் தெற்குப் பகுதிக்கு அனுப்பப்பட்ட முதல் தரைத் துருப்புக்களுக்கு தலைமை தாங்கியவர்; ஈராக்மீது 2003ல் படையெடுப்பு நடந்தபோது மரைன்கள் தலைவராக இருந்தார். ஏப்ரல் 2004ல் அவர் பல்லுஜா என்னும் ஈராக்கிய நகரத்தின்மீது முதல் அமெரிக்க தாக்குதலுக்கு தலைமை தாங்கி அந்த ஆண்டு பின்னர் நடந்த முற்றுகைக்கு திட்டமிட உதவினார். அதுதான் நகரத்தை அழித்து அதன் பல்லாயிரக்கணக்கான குடிமக்களின் உயிர்களையும் குடித்தது.

பெப்ருவரி 2005ல் சான் டியாகோவில் ஒரு பொது அரங்கில், மாட்டிஸ், “ஆப்கானியர்களை கொல்லுவது பெரும் வேடிக்கையாக இருந்தது” என்றார். அவர் தொடர்ந்து கூறியது: “உண்மையில் போரிடுவது பெரும் வேடிக்கையாக இருந்தது. சில மக்களைக் கொல்வது என்பது கேளிக்கையாகும். உங்களுடன் முன்னணியிலேயே இருப்பேன். எனக்கு மோதலுக்குபோவது பிடிக்கும்.” சற்று பின்னர் அவர் “சிலரை உண்மையில் தாக்கும்போது உங்களுக்கு உணர்வுபூர்வமான திருப்தி கிடைக்கும்….” என்றார்.

அவருடைய கருத்துக்களுக்காக மாட்டிஸ் உத்தியோகபூர்வ கடிந்துரைகளைப் பெற்றார். ஆனால் அவை ஒன்றும் மனச்சிதைவில் வெளிவந்த கருத்துக்கள் அல்ல. 2006ல் Thomas Ricks ஆல் வெளியிடப்பட்ட தோல்வி: ஈராக்கில் அமெரிக்க இராணுவ சாகஸம் என்னும் புத்தகத்தில் அவர் மரைன் தளபதி தன் துருப்புக்களுக்கு போரை ஒட்டி வாழும்போது கடைப்பிடிக்கப்படும் விதிகளில் ஒன்று “நாகரிகமாக, தொழில்நேர்த்தியுடன் இரு; ஆனால் நீங்கள் சந்திக்கும் ஒவ்வொருவரையும் கொல்லுவதற்கு ஒரு திட்டத்தை வைத்துக் கொள்.” என எழுதியுள்ளார்.

Desert Storm இன் போது அதிரடிப்பிரிவு Ripper க்கு நிகழ்த்திய உரையில், “ஒவ்வொரு மரைனும் போர்ப்பிரிவில் ஒரு இறந்த ஈராக்கியரை அம்மா வீட்டிற்கு அனுப்புதல் பணி எனக் கொள்ள வேண்டும்.”

இந்த நியமனத்தை அறிவிக்கையில், பாதுகாப்பு மந்திரி ரோபர்ட் கேட்ஸ், மாட்டிஸை “நம் இராணுவத்தின் தலைசிறந்த போர்த்தலைவர், மூலோபாயச் சிந்தனையாளர்களில் ஒருவர், அனுபவம், முடிவுரை, முன்னோக்கு ஆகியவற்றின் அடிப்படைக் கலவையை இம்முக்கிய பதவிக்கு கொண்டுவருபவர்” என்று பாராட்டினார். மாட்டிஸுக்கு எதிரான உத்தியோகபூர்வ கடிந்துரையை ஒதுக்கும் வகையில் அது ஐந்து ஆண்டுக்கு முன்னர் நிகழ்ந்தது என்றார்.

இந்தப் பாசிசக் கொலைகாரரை இரு முக்கிய போர்களுக்குப் பொதுக் கட்டுப்பாட்டு அதிகாரியாக நியமித்துள்ளது, யேமனிலும், சோமாலியாவிலும் இரகசிய, வெளிப்படை இராணுவச் செயல்களுக்குப் பொதுக் கட்டுப்பாடு, மற்றும் புதிய போர்களுக்கு திட்டமிடுதல் பொறுப்பு கொடுக்கப்பட்டுள்ளது என்பது முக்கிய ஜனநாயகவாதிகள், பெரும் செய்தி ஊடகங்கள், அல்லது “இடது” எனக்கூறப்படும் தாராளவாதிகள் என்று எவரிடம் இருந்தும் எதிர்ப்பைத் தூண்டவில்லை. மாறாக இது Wall Street Journal இடமிருந்து ஆர்வமான பாராட்டைப் பெற்றுள்ளது; அது வெள்ளியன்று “An Obama Home Run” என்ற தலைப்பில் ஒரு தலையங்கத்தை வெளியிட்டது. “ஒபாமாவின் நேர்மையான தன்மை அவர் ஈரானில் இருந்து ஆப்கானிஸ்தான் வரை ஒன்று, இரண்டு எனப் பெரும் தாக்குதல் கொடுக்கும் பெட்ரீயஸ் மற்றும் மாட்டிஸை நியமித்துள்ளதில் வெளிப்படுகிறது“ என்று Journal அறிவித்துள்ளது.

மக்கிறிஸ்டல் பணிநீக்கம் செய்யப்பட்டதை பாராட்டியவர்களின் ஏமாந்த தன்மையை அம்பலப்படுத்த அதிக நாட்கள் பிடிக்கவில்லை. அவர் வெளியேற்றப்படுவதற்கு கூறப்பட்ட போலிச்சமாதானம் ஒபாமா மற்றும் உயர்மட்ட சிவிலிய அதிகாரிகள் மீது அவரும் அவருடைய உதவியாளர்களும் Rolling Stone கட்டுரை ஒன்றில் இழிந்த கருத்துக்களை தெரிவித்தார் என்பதாகும். உண்மையில் இராணுவத்தின்மீது சிவிலியக் கட்டுப்பாட்டின் சக்திவாய்ந்த உறுதிப்பாடு என்று நினைக்கப்பட்டது. உலக சோசலிச வலைத் தளம் மக்கிறிஸ்டல் நீக்கப்பட்ட சில நாட்களுக்குள்ளேயே சிவிலியக் கட்டுப்பாடு என்னும் கருத்து ஆப்கானிஸ்தானில் இராணுவப் படுகொலைகளை தீவிரப்படுத்துவதற்கு கூறப்படும் ஒரு ஜனநாயகப் பூச்சுத்தான் என்று முடிவுரை கூறியிருந்தது.

மக்கிறிஸ்டல் பதவியில் இருந்து இறக்கப்பட்டது அமெரிக்கத் தலைமையிலான காலனித்துவவகை ஆக்கிரமிப்பிற்கு எதிரான பெருகிய மக்கள் எழுச்சியை கட்டுப்படுத்துவதில் அவர் தோல்வி அடைந்ததுதான். ஜூன் மாதம், கடந்த பெப்ருவரி மாதம் ஹெல்மாண்ட் மாநிலத்தில் மர்ஜா நகரத்திற்கு எதிரான தாக்குதல் தலிபானை அகற்றுவதில் தோல்வி அடைந்துவிட்டது என்று ஒப்புக் கொண்டதும், நீண்ட காலமாக தலிபானின் கோட்டையான காந்தகாரின் மீது திட்டமிடப்பட்டிருந்த தாக்குதலை பல மாதங்களுக்கு ஒத்தி வைத்ததும்தான்.

Rolling Stone கட்டுரையிலும், New York Times இன்னும் பிற நாளேடுகளிலும் வந்த கட்டுரைகள் மூலம் தெரியவந்த இராணுவம், உளவுத்துறை அமைப்பு மற்றும் ஒபாமா நிர்வாகத்தின் குறிப்பிடத்தக்க கவலை மக்கிறிஸ்டலின் போர் விதிகள் ஆகும். இவை பொதுமக்கள் இறப்புக்கள் குறைக்கப்பட வேண்டும் என்ற காரணத்தால் ஆப்கானிய சிறுநகரங்கள், கிராமங்கள்மீது அமெரிக்க வலிமையை சற்றே குறைத்தன.

பெட்ரீயஸ், மக்கிறிஸ்டலுக்கு பதிலாக நியமிக்கப்பட்ட உடனேயே, ஈராக்கில் அமெரிக்க தலையீட்டின் முன்னாள் தளபதி தான் போர் விதிகளை பரிசீலனை செய்ய உள்ளதாகவும், அவற்றை ஒட்டி அமெரிக்கத் துருப்புக்கள் ஆப்கானிய குடிமக்களை அதிகமாக கொல்ல முடியும், காய்படுத்த முடியும் என்றும் அறிவித்தார். செனட் மன்றத்தில் அவர் நியமனம் உறுதி செய்யப்படுவதற்காக நடந்த குழுக்கூட்டத்திலும் ஜூலை 2011 ஒபாமா குறிப்பிட்டிருந்த பெயரளவு “திரும்பப் பெறல்” என்ற அறிவிப்பு இருந்த போதிலும் போர் காலம் வரையற்று தொடரும் என்பதைத் தெளிவாக்கினார்.

செய்தி ஊடக நடைமுறை முழுவதும் உடனே இந்த இராணுவத் தந்திரோபாய மாற்றத்திற்கு ஆதரவு கொடுத்தன; நியமிக்கப்பட்ட சில நாட்களுக்குள்ளேயே பெட்ரீயஸுக்கு ஒருமனது இசைவும் கொடுக்கப்பட்டது.

போர்விதிகளை பெட்ரீயஸ் இன்னும் உத்தியோகபூர்வமாக தளர்த்தவில்லை. ஆனால் அவர் கட்டுப்பாட்டை முறையாக ஏற்றுக்கொண்ட ஒரு வாரத்தில், ஆப்கானிய பொதுமக்கள் மீதான அமெரிக்க, நேட்டோ படுகொலைகள் தொடர்ந்து நடைபெற்றுள்ளன. ஆனால் அமெரிக்கச் செய்தி ஊடகம் இவை பற்றி அதிகம் குறிப்பிடவில்லை என்பது கவனத்திற்குரியது.

ஜூலை 7ம் தேதி அமெரிக்கப் படைகள் மஜர்-இ-ஷரிப் என்னும் வடக்கு நகரத்தில் விடியற்காலைத் தாக்குதலில் இரு குடிமக்களைக் கொன்று, மூன்று பேரைக் கைது செய்தது. நூற்றுக்கணக்கான மக்கள் சனியன்று “அமெரிக்காவிற்கு இறப்பு” என்ற பதாகைகளைத் தாங்கி தம் எதிர்ப்பைத் தெரிவித்தனர்.

கடந்த வாரம் பாக்டியா கிழக்கு மாநிலத்தில் நடந்த ஒரு கமாண்டோப் பிரிவுத் தாக்குதல் ஒரு தலிபான் தலைவரை கொன்று மற்றும் எட்டு பேரை சிறைபிடித்ததாக நேட்டோ கூறியுள்ளது. அரசாங்க அலுவலகங்களுக்கு முன்பு கிராமவாசிகள் கொல்லப்பட்டவர்கள் நிரபராதியான மக்கள் என்று கூறி எதிர்ப்புத் தெரிவித்தனர்.

புதனன்று கிழக்கே உள்ள கஜனி மாநிலத்தில் நடந்த ஒரு நேட்டோ வான்வழித் தாக்குதல் எட்டு ஆப்கானிய படையினரைக் கொன்று இருவரை காயப்படுத்தியது.

இதற்கு மறுநாள் நேட்டோ பீரங்கிக் குண்டுகள் ஆறு குடிமக்களைக் கொன்றதுடன் பலரை பாக்டியா மாநிலத்தில் உள்ள கேல் மாவட்டத்தில் காயப்படுத்தியது. நேட்டோ உத்தியோகபூர்வமாக படுகொலையை வெள்ளியன்று ஒப்புக்கொண்டு, வாடிக்கையான வருத்தம் தெரிவிக்கும் அறிக்கையையும் வெளியிட்டது.

அதே நேரத்தில் அமெரிக்க, மற்றும் பிற நேட்டோ படைகளைக் கொல்லுதல், காயப்படுத்துதல் என்பது விரிவாக்கம் அடைந்து வருகிறது. கடந்த வாரம் குறைந்தது 14 அமெரிக்க படையினராவது கொல்லப்பட்டனர். இது இம்மாதம் இறந்தவர் எண்ணிக்கையை குறைந்தபட்சம் 23 என ஆக்கியுள்ளது. அமெரிக்காவிற்கும் மற்ற ஆக்கிரமிப்பு துருப்புக்களுக்கும் ஒன்பது ஆண்டுகளில் அமெரிக்க படையெடுப்பு தொடங்கியதில் இருந்து ஜூன் மிக அதிக இறப்பைக் கொடுத்த மாதம் ஆகும். ஏனெனில் 102 பேர் இறந்து போயினர், 60 அமெரிக்கர்கள் இதில் அடங்குவர்.

ஆப்கானிஸ்தானில் அமெரிக்க காலனித்துவவகை ஆதிக்கத்திற்கு முற்றிலும் முறையான எதிர்ப்பிற்கு பெருகிய மக்கள் ஆதரவு வளர்கையிலும், அமெரிக்கா, நேட்டோ படைகள் அந்நாட்டில் சரியும் இராணுவ/பாதுகாப்பு நிலைமையை எதிர்கொள்ளுகையில், உள்நாட்டில் போருக்கு எதிர்ப்பு உயர்கையில், ஒபாமா நிர்வாகம் எதிர்ப்பைக் குருதியில் மூழ்கடிக்கும் முயற்சியில் கொலைகளை அதிகரிக்க முடிவெடுத்துள்ளது.

இது ஒரு போர்க்குற்றம் ஆகும். ஏகாதிபத்தியப் போருக்கும் அதை வளர்க்கும் முதலாளித்துவ முறைக்கும் எதிராக ஒரு வெகுஜன தொழிலாள வர்க்க இயக்கம் வளர்க்கப்பட்டு இதை நிறுத்த வேண்டும்.

0 comments :

Copyright www.ilankainet.com All right reserved.
Designed and Hosted By : ilankainet.com
To contact us : ilankainet@gmail.com