தமது அதிகாரங்களுக்கு உட்பட்ட வகையிலேயே நிபுணர்கள் குழு நியமிக்கப்பட்டுள்ளது.
தமது அதிகாரங்களுக்கு உட்பட்ட வகையிலேயே நிபுணர்கள் குழு நியமிக்கப்பட்டுள்ளதாக ஐக்கிய நாடுகளின் பொதுச் செயலாளர் பான் கீ மூன் தெரிவித்துள்ளார். இலங்கையில் இடம்பெற்றதாகத் தெரிவிக்கப்படும் யுத்தக் குற்றச் செயல்கள் மற்றும் மனித உரிமை மீறல்கள் தொடர்பில் தமக்கு ஆலோசனை வழங்குவதற்காக நியமிக்கப்பட்டுள்ள நிபுணர்கள் குழு குறித்த கருத்து வெளியிட்ட போது அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார்.
இந்த விடயம் தொடர்பில் அணி சேரா நாடுகளினால் அனுப்பி வைக்கப்பட்டுள்ள கடிதம், இரு தரப்பினருக்கும் இடையில் நிலவும் புரிந்துணர்வின்மையை வெளிப்படுத்துவதாக அவர் குறிப்பிட்டுள்ளார். கடந்த வருட மே மாதத்தில் தாம் இலங்கைக்கு விஜயம் செய்திருந்த போது ஜனாதிபதியுடன் இணைந்து வெளியிட்ட கூட்டறிக்கையின் அடிப்படையில் இந்த நிபுணர்கள் குழு நியமிக்கப்பட்டுள்ளதாகவும், அதிகாரத்தை மீறிச் செயற்படவில்லை எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
குற்றச் செயல்கள் மற்றும் அதற்கான தண்டனை வழங்குதல் தொடர்பிலான சர்வதேச தர நிர்ணயங்களை கருத்திற் கொண்டு தமக்கு ஆலோசனை வழங்கும் நோக்கில் நிபுணர்கள் குழு உருவாக்கப்பட்டுள்ளதாக அவர் தெரிவித்துள்ளார். இது எந்த வகையிலும் இலங்கையின் இறைமைக்கு இடையூறாக அமையாது என அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
இதேவேளை, பொதுத் தேர்தலில் அழுத்தங்களை செலுத்தும் நோக்கில் மேற்குலக நாடுகள் பல்வேறு அழுத்தங்களை பிரயோகித்து வந்ததாக இலங்கை அரசாங்கம் குற்றம் சுமத்தியுள்ளது. அரசியல் நோக்கங்களை பூர்த்தி செய்து கொள்வதற்காக இலங்கை மீது சில குற்றச்சாட்டுக்கள் சுமத்தப்பட்டு வருவதாக அரசாங்கம் சுட்டிக்காட்டியுள்ளது.
தமிழீழ விடுதலைப் புலிகளுடன் நடைபெற்ற யுத்தத்தின் போது எந்த சந்தர்ப்பத்திலும் மனித உரிமை மீறல்கள் இடம்பெறவில்லை எனவும், பொதுமக்கள் மீது தாக்குதல் நடத்தப்படவில்லை எனவும் தெரிவித்துள்ளது.
0 comments :
Post a Comment