Wednesday, June 23, 2010

ஐ.நா வினால் போர்குற்ற விசாரணை கமிட்டி நியமனம். கிளம்பும் எதிர்ப்பலைகள்.

இலங்கையில் புலிகளுக்கெதிரான இறுதி யுத்தத்தின் போது இடம்பெற்றதாக குற்றஞ்சாட்டப்படும் மனித உரிமை மீறல்கள் தொடர்பான நடவடிக்கைகளை மேற்கொள்வது தொடர்பாக ஐ.நா வின் செயலாளர் நாயகத்திற்கான ஆலோசனைக்குழு பல தரப்பட்ட சர்ச்சையின் மத்தியில் நியமனமாகின்றது. இது தொடர்பான உத்தியோபூர்வ அறிக்கை இன்று (23) வெளியிடப்படவுள்ளது. நிபுணர்கள் குழுவின் பொறுப்புகள் தொடர்பாகவும் அந்த அறிக்கையில் தெரிவிக்கப்படும் எனக் கூறப்படுகிறது.

இக்குழுவின் தலைவராக இந்தோனேஷியாவின் முன்னாள் சட்ட மா அதிபர் மார்சூசி டாருஸ்மான் நியமிக்கப்பட்டுள்ளார். குழுவில் மூன்று பேர் அங்கம் வகிப்பதாகத் தெரிவிக்கப்படுகிறது. தென் ஆபிரிக்காவின் உண்மையைக் கண்டறியும் ஆணைக்குழுவில் அங்கம் வகித்த யாஸ்மின் சூகா மற்றும் அமெரிக்க சட்டத்தரணியான ஸ்டீவன் ராட்னர் குழுவில் அங்கம் வகிக்கும் ஏனைய உறுப்பினர்களாகும்.

இக்குழு நியமனம் தொடர்பாக இலங்கை அரசாங்கத்திற்கு அறிவிக்கப்படவுள்ளதாக ஐக்கிய நாடுகள் அமைப்பின் ஊடகப் பேச்சாளர் ஒருவர் குறிப்பிட்டுள்ளார். ஐக்கிய நாடுகளின் நிபுணர்கள் குழு நியமனம் குறித்து அரசாங்கம் கடும் எதிர்ப்பை வெளியிட்டு வருகின்ற போதிலும், நிபுணர்கள் குழு நியமிக்கப்பட்டமை தொடர்பில் இதுவரையில் கருத்துக்கள் எதுவும் முன்வைக்கப்படவில்லை.

2009ம் ஆண்டில் பான் கீ மூன் இலங்கைக்கு விஜயம் செய்த போது குற்றச் செயல்களுக்கு தண்டனை வழங்குதல் மற்றும் புனர்வாழ்வு தொடர்பில் ஐக்கிய நாடுகள் அமைப்பும், இலங்கை அசராங்கமும் கூட்டாக வெளியிட்ட இணக்கப்பாடு தொடர்பில் நிபுணர்கள் குழு ஆலோசனை வழங்கவுள்ளது.

குற்றச் செயல்கள் மற்றும் மனித உரிமை மீறல்களை எவ்வாறு விசாரணை நடத்த வேண்டும், அவற்றுக்கு எவ்வாறு தண்டனை வழங்குவது என்பன தொடர்பாக கடந்த கால அனுபவங்கள் மற்றும் சர்வதேச நியமங்களை கருத்திற் கொண்டு நிபுணர்கள் குழு, பான் கீ மூனுக்கு ஆலோசனை வழங்கவுள்ளது.

அத்துடன் நிபுணர்கள் குழுவின் ஆலோசனைகளையும், பரிந்துரைகளையும் தேவையென்றால் இலங்கை அரசாங்கம் பயன்படுத்திக் கொள்ள முடியும் என ஐக்கிய நாடுகளின் பேச்சாளர் தெரிவித்துள்ளார். நிபுணர்கள் குழு, இலங்கை அதிகாரிகளுடன் கூட்டிணைந்து செயற்பட எதிர்பார்ப்பதாகக் குறிப்பிடப்படுவதுடன் நான்கு மாத காலப்பகுதிக்குள் பூரணமாக ஆலோசனை அறிக்கையை சமர்ப்பிப்பதற்கு நிபுணர்கள் குழு உத்தேசித்துள்ளதாகவும் கூறப்படுகின்றது.
இக்குழுவின் உருவாக்கம் பற்றி கருத்துரைத்த ஐ.நா வின் பொதுச் செயலாளர் இலங்கையில் நிலையான சமாதானத்தை ஏற்படுத்துவதற்கு நிபுணர்கள் குழுவின் ஆலோசனை பெரும் பயனுள்ளதாக அமையும் எனவும் நிபுணர்கள் குழு நியமிக்கப்பட்டதன் மூலம் இலங்கை விவகாரத்தில் ஆக்கபூர்வமான உள்ளீடுகளை செலுத்த முடியும் எனவும் தெரிவித்திருந்தமை இங்கு குறிப்பிடத்தக்கதாகும்.

இக்குழு நியமனம் தொடர்பான விபரங்களை ஐ.நா அலுவலகம் வெளிவிடுதற்கு முதல்நாளே இன்னர் சிற்றி பிரெஸ் வெளியிட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது. எனினும் இந்தக் குழுவினர் இலங்கைக்கு விஜயம் செய்யவேண்டியதில்லை எனவும் சாட்சியங்கள் எவரையும் நேர்காண வேண்டியதில்லை எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளதாக இன்னர் சிற்றி பிரஸ் தெரிவித்துள்ளது.

இந்த ஆலோசனைக்குழு போரின் இறுதிக்கட்டத்தில் சரணடைந்த பொது மக்கள் கொல்லப்படுவதற்கு உத்தரவிடப்பட்டதாக முன்னாள் இராணுவத்தளபதி தெரிவித்தாக வெளியாகியுள்ள செய்திகள் பற்றி சரத் பொன்சேகாவை நேர்காண வேண்டியிருந்தால் என்ன செய்வது என ஐநா செயலாளர் நாயகத்தின் பேச்சாளர் மார்ட்டின் நேர்ஸ்கியிடம் இன்னர் சிற்றி பிரஸ் கேட்டபோது பதிலளித்த நேர்ஸ்கி இவ்விடயங்களை யார் எப்படிக் கையாள்வது என்பது குறித்து இனிமேல் தான் தீர்மானிக்க வேண்டும் எனத் தெரிவித்துள்ள அவர், தொடர்புடைய அதிகாரிகளுடன் இது குறித்துப் பேச வேண்டும் எனவும் அத்தோடு நான்கு மாதங்களுள் அவற்றைப் பூர்த்தியாக்க வேண்டும் என்றும் தெரிவித்திருந்தார்.

ஜனாதிபதி மகிந்த ராஜபக்ச, அவருடைய சகோதரர்களான பசில் ராஜபக்ச, கோட்டபாய ராஜபக்ச, அவருடைய ஐநாவுக்கான தூதுவர் பாலித கோகண, பான் கீமுனின் தலைமை அதிகாரியான விஜய் நம்பியார் ‐ இவர் தான் சரணடைபவர்கள் சர்வதேச சட்டவிதிகளின் கீழ் நடாத்தப்படுவார்கள் என உத்தரவாதம் வழங்கியவர்‐ இவர்களைத் தவிர வேறு எந்த அதிகாரிகள் அதிகம் தொடர்புடையவர்களாக இருந்தார்கள் என இன்னர் சிற்றி பிரஸ் கேள்வியெழுப்பியுள்ளது.

தற்போது இலங்கையின் ஐக்கியநாடுகள் ஸ்தபனத்திற்கான நிரந்தர பிரதிநிதி பாலித கொஹண, கைப்பற்றப்பட்ட பலஸ்தீன் பிரதேசங்கள் தொடர்பாக நியமிக்கப்பட் டுள்ள சர்வதேச விசாரணைக் குழுவுக்கு தலைமை தாங்கும் நிலையில், இலங்கை அரசாங்கம் முந்திக் கொண்டு அதன் சொந்த விசாரணைக் குழுவொன்றை நியமித்துள்ளது. இது ஒரு கபட நாடகமா? என்றும் இன்னர் சிற்றி பிறெஸ் வினவியுள்ளது.

இறுதிக்கட்ட யுத்தத்தின் போது சரணடைந்த தமிழீழ விடுதலைப்புலிகள் சுட்டுக் கொல்லப்படுவதற்கு முன்னர், அவர்கள் சர்வதேச சட்டத்திற்கமைய நடத்தப்படுவார்கள் என்று கொஹண உறுதிமொழி வழங்கினார் என்று செயலாளர் நாயகத்தின் பிரதான அதிகாரியான விஜய் நம்பியார் தெரிவித்திருந்தார்.

கொஹண தற்போது தாம் நம்பியாருடன் தொடர்பு கொண்ட நேரம் குறித்து பிரச்சினையை எழுப்புகிறார். இதனை நிரூபிப்பதற்கான உரையாடல் நாடாக்களையும் இன்னர் சிற்றி பிறெஸ் ஒலிபரப்பிக் காட்டியுள்ளது.

பாகிஸ்தானில் பெனாஸிர் பூட்டோ கொல்லப்பட்டது குறித்து விசாரிக்க நியமிக்கப்பட்ட பான்கீ மூனின் குழுவில் இருந்தவா மர்ஸ{கி தாருஸ்மன். அந்தக்குழுவின் அறிக்கை பொது மக்கள் மத்தியில் வெளியிடப்பட்டது. அத்தோடு அது வெளியிடப்பட்ட அன்று தாருஸ்மான் ஐநாவின் அலுவலகத்தில் பத்திரிகையாளர்களைச் சந்தித்தார்.

ஆனால் இலங்கை விடயத்தில் இக்குழவின் அறிக்கை பகிரங்கமாக வெளியிடப்படும் என்பது பற்றியோ ஊடகவியலாளர்களை இக்குழு சந்திக்குமா என்பது பற்றியோ ஐநாவின் பேச்சாளர் நேர்ஸ்கி எதுவும் தெரிவிக்கவில்லை.

விமல் வீரவன்ச எதிர்ப்புக்குரல்

ஐக்கிய நாடுகள் அமைப்பின் இரட்டை நிலைப்பாடு கண்டிக்கப்பட வேண்டியதென வீடமைப்பு மற்றும் பொறியியல் அமைச்சர் விமல் வீரவன்ச தெரிவித்துள்ளார். ஐக்கிய நாடுக்களின் பாதுகாப்புப் பேரவையில் இலங்கைக்கு எதிரான சக்திகளினால் முன்வைக்கப்பட்ட குற்றச் சாட்டுக்கள் முறியடிக்கப்பட்டுள்ள நிலையில் ஐ.நா. பொதுச் செயலாளர் பான் கீ மூன், மீண்டும் இலங்கைக்கு எதிராக செயற்படும் முனைப்புக்களில் தீவிரம் காட்டி வருவதாக அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

நாட்டின் அரசியல் ஸ்திரத்தன்மையை சீர் குலைப்பதற்கும், தமிழீழ விடுதலைப் புலிகள் தோற்கடிக்கப்பட்டதன் பின்னர் மேற்கொள்ளப்பட்டு வரும் அபிவிருத்திப் பணிகளுக்கு தடை ஏற்படுத்தும் வகையிலும் ஐக்கிய நாடுகள் அமைப்பு செயற்பட்டு வருவதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.

யுத்தத்தின் போது சிவிலியன் இழப்புக்களை தவிர்த்த காரணத்தினால் படையினர் பாரியளவு உயிர் மற்றும் உடமைச் சேதங்களை எதிர்நோக்கியதாக அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

மேற்குலக நாடுகளினால் ஈராக், ஆப்கானிஸ்தான் போன்ற நாடுகளில் மேற்கொண்டு வரும் நடவடிக்கைகள் குறித்து ஐக்கிய நாடுகள் அமைப்பு கவனம் செலுத்தத் தவறியுள்ளதாக அவர்

குழுவின் தலைவருக்கு எதிராக குற்றச்சாட்டு

ஐ.நா நிபுணர்கள் குழுவின் தலைமைப் பொறுப்பிற்கு டாரூஸ்மான் நியமிக்கப்பட்டமை முரண்பாடுகளை தோற்றுவிக்கும் என அரசாங்க உயரதிகாரியொருவர் குறிப்பிட்டுள்ளார்.

இந்தோனேஷியாவின் முன்னாள் சட்ட மா அதிபரான டாருஸ்மான் ஏற்கனவே இலங்கை அதிகாரிகளுடன் முரண்பாடுகளை ஏற்படுத்திக் கொண்டவர் என பெயர் குறிப்பிட விரும்பாத உயர் அதிகாரி சுட்டிக்காட்டியுள்ளார்.

இலங்கையில் இடம்பெற்ற பாரிய மனித உரிமை மீறல் சம்பவங்களை விசாரணை செய்யும் நோக்கில் நியமிக்கப்பட்ட சர்வதேச முதன்மையாளர் குழுவிலும் டாருஸ்மான் அங்கம் வகித்ததாகத் தெரிவிக்கப்படுகிறது.

குறித்த விசாரணைகள் நடத்தப்பட்ட காலப்பகுதியிலும் டாருஸ்மான், உள்நாட்டு அதிகாரிகளுடன் முரண்பாடுகளை ஏற்படுத்திக் கொண்டதாக அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

டாருஸ்மானை நிபுணர்கள் குழுவின் தலைமைப் பொறுப்பிற்காக நியமித்ததன் மூலம் ஐக்கிய நாடுகளுக்கும் இலங்கைக்கும் இடையில் கருத்து முரண்பாடுகள் ஏற்படக் கூடிய சாத்தியம் காணப்படுவதாக அவர் தெரிவித்துள்ளார்.

நிபுணர்கள் குழு நியமனம் அவசியமற்றது எனவும், இதனை அரசாங்கம் ஏற்றுக்கொள்ளாது எனவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

0 comments :

Copyright www.ilankainet.com All right reserved.
Designed and Hosted By : ilankainet.com
To contact us : ilankainet@gmail.com