Thursday, June 3, 2010

பாகிஸ்தானிடம் இந்தியாவைவிட அதிக அணு ஆயுதங்கள்!

இந்தியாவைவிட பாகிஸ்தானிடம் அதிகமான அணு ஆயுதங்கள் இருப்பது தெரியவந்துள்ளது. இந்தியாவிடம் 60 முதல் 80 அணு ஆயுதங்கள் இருப்பதாகவும், பாகிஸ்தானிடம் 70 முதல் 90 அணு ஆயுதங்கள் வரை இருப்பதாகவும் ஸ்டாக்ஹோமைச் சேர்ந்த சர்வதேச அமைதிக்கான ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

அதன் அறிக்கையில் மேலும் கூறப்பட்டுள்ளதாவது:

பாகிஸ்தானால் மிகக் குறைவான கால அவகாசத்தில் 100 அணு ஆயுதங்களைத் தயாரித்துவிட முடியும். சீனாவிடம் 240 அணு ஆயுதங்கள் உள்ளதாகத் தெரிகிறது. சீனாவின் உதவியோடு பாகிஸ்தான் இப்போது அமைத்து வரும் குஷாப் அணு மின் நிலையம் கட்டி முடிக்கப்பட்டுவிடடால், அணு ஆயுதத் தயாரிப்புக்குத் தேவையான பாகிஸ்தானின் புளுட்டோனியம் உற்பத்தி 7 மடங்காக அதிகரித்துவிடும்.

அமெரிக்கா வழங்கிய எப்-16 போர் விமானங்கள் மற்றும் கஸ்நவி, ஷகீன் ஆகிய ஏவுகணைகளைத் தான் அணு ஆயுதங்களை ஏந்திச் செல்ல பாகிஸ்தான் பயன்படுத்தத் திட்டமிட்டுள்ளது.

இந்தியாவின் அணு ஆயுதத் தயாரிப்புக்குத் தேவையான புளுட்டோனியத்தை (Pu-239) பாபா அணு ஆராய்ச்சி மையத்தில் உள்ள சைரஸ், துருவா அணு உலைகள் பூர்த்தி செய்கின்றன.

உலகம் முழுவதும் மொத்தம் 22,600 செயல்படும், செயலிழந்த, பாதுகாத்து வைக்கப்பட்டுள்ள அணு ஆயுதங்கள் உள்ளன. இதைத் கொண்டு ஒட்டுமொத்த பூமியை பலமுறை அழிக்கலாம்.

ரஷ்யாவிடம் 12,000 அணு ஆயுதங்கள் உள்ளன. இதில் 4,630 அணு ஆயுதங்கள் ஏவத் தயார் நிலையில் ஏவுகணைகளிலும் போர் விமானங்களிலும் பொறுத்தப்பட்டுள்ளவை. அமெரிக்காவில் 9,600 அணு ஆயுதங்கள் உள்ளன. இதில் 2,468 அணு ஆயுதங்களை எந்த நொடியிலும் ஏவலாம். இந்த இரு நாடுகளும் இவற்றின் எண்ணிக்கையை 3ல் ஒன்றாகக் குறைக்க முடிவு செய்துள்ளன.

பிரான்சிடம் 300, இங்கிலாந்திடம் 225, இஸ்ரேலிடம் 80 அணு ஆயுதங்கள் உள்ளன. வட கொரியாவிடம் அணு ஆயுதம் தயாரிக்கத் தேவையான அளவுக்கு புளுட்டோனியம் தயாராக உள்ளது.

இந்தியாவிடம் உள்ள ஹைட்ரஜன் அணுகுண்டு எந்த அளவுக்கு சக்தி வாய்ந்தது என்று தெரியவில்லை. போக்ரானில் 1998ம் ஆண்டு இந்தியா நடத்திய ஹைட்ரஜன் வெடிகுண்டு சோதனை முழு வெற்றி பெறவி்ல்லை என்ற வாதம் உலகளவில் உள்ளது.

சீனாவும் பாகிஸ்தானும் இணைந்து அதிக தூரம் சென்று தாக்கும் ஏவுகணைகளைத் தயாரித்துள்ள நிலையில் இந்தியாவிடம் கண்டம் விட்டு கண்டம் பாயும் ஏவுகணையோ, நீர்மூழ்கியிலிருந்து பாயும் ஏவுகணையோ இல்லாதது பெரும் குறையாகும்.

பாகிஸ்தானின் அணு ஆயுதங்களை கைப்பற்ற தீவிரவாதிகள் கடுமையான முயன்று வருகின்றனர். அவை எந்த அளவுக்கு பாதுகாப்பாக உள்ளன என்பது கவலை தரும் விஷயம்.

இவ்வாறு அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

0 comments :

Copyright www.ilankainet.com All right reserved.
Designed and Hosted By : ilankainet.com
To contact us : ilankainet@gmail.com