Wednesday, May 19, 2010

உலக ஹபடைடிஸ் (கல்லீரல் நோய்) தினம் World Hepatitis Day - புன்னியாமீன்

இன்று மே மாதம் 19ஆம் திகதி உலக ஹபடைடிஸ் (கல்லீரல் நோய்) தினமாகும். பொதுவாக சர்வதேச தினங்கள் அனுஸ்டிக்கப்படுவது ஒரு குறிப்பிட்ட விடயத்தின் முக்கியத்துவத்தை மக்களுக்கு உணர்த்துவதற்காக வேண்டியேயாகும். குறிப்பாக அத்தினத்தின் முக்கியத்துவத்தினை கருத்தரங்குகள். போட்டி நிகழ்ச்சிகளை ஏற்பாடு செய்தல், பதாதைகளை வெளியிடுதல், கலைநிகழ்ச்சிகளை நடத்துதல் போன்ற பல்வேறுபட்ட கருத்திட்டங்கள் ஊடாக வெளிப்படுத்தப்படும். இந்த அடிப்படையில் இன்றைய தினம் உலக ஹபடைடிஸ் (கல்லீரல் நோய்) பற்றிய விழிப்புணர்வை மக்களுக்கு ஏற்படுத்துவதை குறிக்கோளாகக் கொண்டுள்ளது.

பொதுவாக ஹபடைடிஸ் நோய் விட்டமின் பி மற்றும் சி குறைபாட்டால் ஏற்படும் ஒரு நோயாகும். இந்நோய் பற்றி மக்களுக்கு அறிவூட்டல் அதிகமாகத் தேவைப்படுகின்றது. இந்நோய் பற்றியும்நோயின் அறிகுறிகள், தன்மைகள் பற்றியும் தடுப்பு நடவடிக்கைகள் பற்றியும் மக்களுக்கு உணர்த்துவதும் அதற்கான சிகிச்சை முறைகள் பற்றி அறிவுறுத்துவதும், ஊக்குவிப்பதும் இத்தினத்தின் நோக்கங்களாகும் உலகின் ஏறக்குறைய 10 மில்லியன் மக்கள் இந்நோயினால் பீடிக்கப்பட்டுள்ளார்கள். இந்நோய்க்கு முறையான சிகிச்சை மேற்கொள்ளாவிடில் அல்லது கவனக்குறைவோடு இருப்பின் ஈரல் புற்றுநோய், ஈரல் செயலிழத்தல் மற்றும் ஆபத்தான நோய்கள் ஏற்பட வாய்ப்புண்டு. வருடா வருடம் உலகெங்கும் லட்சக்கணக்கான மக்கள் இந்நோயினால் பாதிக்கப்படுகின்றனர்.

உலக ஹபடைடிஸ் (கல்லீரல் நோய்) தினத்தை உலக ஹபடைடிஸ் நற்பணி கழகம் முன்னின்று ஏற்பாடு செய்கின்றது. இந்த நற்பணி கழகத்தில் 200 நோயாளர் தொகுதிகளும், ஹபடைடிஸ் சி - டிரஸ்ட் ஐரோப்பா ஈரல் நோயாளர் சங்கம் மற்றும் சீன ஹபடைடிஸ்தடுப்பு மற்றும் கட்டுப்பாட்டு நிறுவனம் என்பன அங்கம் வகிக்கின்றன. தற்போது உலகிலுள்ள HIV \ AIDS நோயாளர்களைவிட 10 மடஙகு அதிகமான ஹபடைடிஸ் நோயாளர்கள் இருக்கின்றனர் என கூறப்படுகின்றது.

ஹபடைடிஸ் நோய் ஹபடைடிஸ் ஏ, ஹபடைடிஸ் பி என்று இரண்டு பிரதான வகைகளைக் கொண்டது. இந்நோய்கள் பற்றி சிறிய விளக்கமொன்றினைப் பெற்றுக் கொள்வோம்.

ஹபடைடிஸ் ஏ

ஹபடைடிஸ் ஏ எனப்படும் நோயானது கல்லீரலில் ஹபடைடிஸ் ஏ என்னும் வைரஸ் கிருமியினால் ஏற்படுவதாகும். இந்நோய் அசுத்தமான உணவுகளை உட்கொள்ளல், ஹபடைடிஸ் ஏ நோய் கண்ட நபருடன் நெருங்கிப் பழகுதல் போன்ற காரணங்களினால் பரவுகின்றது. இந்நோய் நீரினாலும் பரப்பப்படலாம். ஹபடைடிஸ் ஏ வைரஸ் நோய் தொற்றிய நபரில், நோயின் அறிகுறிகள் தோன்றுவதற்கு 15 முதல் 45 நாட்கள் எடுக்கும். மேலும் பாதிப்புக்குட்பட்ட முதல் வாரகாலத்தில் மலத்தின் வழியாக இவ் வைரஸ் வெளியேற்றப்படுகிறது. இந்த வைரஸ் இரத்தம் மற்றும் பிற உடற்கூறு சுரப்பிகள் வழியாகவும் தொற்றக்கூடியது. இவ்வகை வைரஸ் நோய் குணமான பின் உடலில் தங்கியிருக்காது. மற்ற பொதுவான ஹபடைடிஸ் வைரஸ் நோய் தொற்றுகளாவன, ஹபடைடிஸ் பி மற்றும் சி.எனும் கிருமிகளினால் ஏற்படுகின்றது.

இந்நோயின் அறிகுறிகளக பின்வருவன ஏற்படும். வெளிர்ந்த அல்லது களிமண் நிற மலம் வெளியாதல், கருமை நிறத்தில் சிறுநீர் வெளியாதல், உடலில் அரிப்புத் தன்மைஏற்படல், மஞ்சள் காமாலை, உடல் சோர்வு, பசியின்மை, குமட்டலுடன் வாந்தி, மிதமான காய்ச்சல்.

இந்நோய் தொற்றாமல் இருப்பதற்கான தடுப்பு முறைகள் வருமாறு: ஹபடைடிஸ் நோயாளியின் இரத்தம், மலம் மற்றும் உடல்திரவம் போன்றவற்றை கையாண்ட பின்னர் கைகளை நன்கு கழுவி சுத்தம் செய்வது, கழிவறையை பயன்படுத்திய பின்னும் கைகளை நன்றாகக் கழுவி சுத்தம் செய்தல், உணவு உட்கொள்ளும்போதும் நீராகாரங்கள் பருகும்போதும் அவதானமாக இருத்தல்.

ஹபடைடிஸ் ஏ நோய்க்கான தடுப்பூசிகள் இருக்கின்றன. தடுப்பூசி ஏற்றிக்கொண்டு நான்காவது வாரத்திலிருந்து இம்மருந்தானது இந்நோய் ஏற்படுவதை தடுக்கிறது. நீண்ட நாள் பாதுகாப்பிற்கு, முதல் ஊசிபோட்டு ஆறிலிருந்து பன்னிரண்டு மாதத்திற்குள் பூஸ்டர் டோஸ் என்னும் கூடுதல் ஊசி எடுத்துக் கொள்ள வேண்டும். இது குறித்து மேலதிக ஆலோசனைகளை வைத்தியர்களிடம் பெற்றுக் கொள்ளலாம்.

இந்நிலையில் இந்த தடுப்பூசியை யார் ஏற்றிக் கொள்ள வேண்டும்? என்ற வினாவும் எழுகின்றது. குறிப்பாக ஹ‎படைடிஸ் ஏ நோய் ஒரு குறிப்பிட்ட பிரதேசத்தில் பரவியிருந்தால். அப்பிரதேசத்தில் வாழும் ஏனைய மக்கள் மற்றும் நீண்ட நாட்களாய் ஹ‎படைடிஸ் பி அல்லது சி நோய் தொற்றினால் பாதிக்கப்பட்டவர்களும் இத்தடுப்பூசியை ஏற்றிக் கொள்ளல் வேண்டும்.

ஹபடைடிஸ் பி

ஹபடைடிஸ் பி வைரஸ் கண்ட பெரும்பாலான நபர்கள் 6 மாத காலத்திற்குள் இந்த வைரஸ் பாதிப்பிலிருந்து விடுவிக்கப்படுவார்கள். இந்த குறுகிய கால நோய் தொற்றினை அக்யூட் ஹபடைடிஸ் பி என்பர். ஹபடைடிஸ் தொற்று கண்ட சுமார் 10 சதவீத மக்களில் இவ்வகை நோய் நீண்ட நாட்களுக்கு பாதிப்பை உருவாக்குகின்றது என சில ஆய்வுகளில் தெரிவிக்கப்பட்டுள்ளன. இந்நோய்க்கான அறிகுறிகளை பின்வருமாறு நோக்கலாம். உடல் சோர்வும் உடல்நலம் குன்றுதலும், மூட்டுகளில் வலி ஏற்படுதலும் குறைந்த அளவு காய்ச்சல் ஏற்படுவதும். மேலும், குமட்டல், வாந்தி, பசியின்மை வயிற்றுவலி, மஞ்சள் காமாலை, சிறுநீர் மஞ்சள் நிறத்தில் வெளியாதல் போன்றனவையும் இந்நோய்க்கான அறிகுறிகளாகக் கூறப்படுகின்றது.

ஆனால் பலருக்கு இந்நோயின் அறிகுறிகள் தோன்றுவதே இல்லை. இந்த அடிப்படையில் அறிகுறிகள் இல்லாத நோயாளிகள், இந்நோயினை பிறருக்குப் பரவச் செய்ய வாய்ப்புகள் அதிகம். இவ்வகை நோய்கண்ட நபரில், கல்லீரலானது நிரந்தரமாக சேதம் அடையக்கூடிய சாத்தியங்கள் உண்டு. அவையாவன, சிர்ரோஸிஸ் (கல்லீரலில் ஏற்படும் தழும்புக்காயங்கள்) மற்றும் கல்லீரல் புற்று நோய் என்பனவும் நீண்ட நோயாளிகளுக்கு பின்பு ஏற்பட இடமுண்டு.

ஹபடைடிஸ் பி இரத்தத்தின் மூலமும் மற்றும் உடற்திரவங்கள் மூலமும் பரவுகிறது. கீழ்காணும் முறையிலும் நோய் தொற்ற இடமுண்டு. வைத்தியசாலைகளில் நோய்கண்ட நபரின் இரத்தத்தை கையாள்வதின் மூலம் மருத்துவர்கள், தாதியர் இந்நோயின் பாதிப்புக்கு உட்பட இடமுண்டு. மேலும், நோய் கண்ட நபருடன் பாதுகாப்பு அற்ற முறையில் உடலுறவு கொள்ளல், நோய்வாய்ப்பட்ட நபரின் இரத்தத்தினை பிறர்க்கு செலுத்துதல், ஒரே ஊசியினை பலர் பகிர்ந்து கொள்ளுதல் போன்வற்றினூடாகவும் இந்நோய் பரவலாம். அதேநேரம், நோய் கண்ட தாய்க்கு பிறக்கும் நோய் காவப்படுகின்றது.

இந்நோய்க்கான தடுப்பு முறைகள்: விசேடமாக இரத்த தானம் செய்பவர்கள் இரத்தத்தை பரிசோதித்த பின்பே தானம் செய்தல் தடுப்பு ஊசியினை முழுமையான நோய் எதிர்ப்பு தன்மையை அடைய ஒரு நபர் ஆறுமாத காலத்திற்குள் மூன்று தடுப்பூசிகளை போட்டுக்கொள்ள வேண்டும், குறைந்த நாள்பட்ட அல்லது நாள்பட்ட ஹபடைடிஸ் பி வைரஸ் தாக்கம் கொண்டவரோடு பாலுறவு கொள்வதினை தவிர்க்கலாம்

ஹபடைடிஸ் நோய் ஏற்பட்டவர்களுக்கு முக்கியமான அறிகுறியாக காணப்படுவது மஞ்சள் காமாலையாகும். சில வகையான மருந்துகளை உட்கொண்டாலும் சிறுநீர் மஞ்சளாகப் போகும். குறிப்பாக வயிற்றோட்டத்திற்குத் தருகின்ற ·ப்ளுரோ ஸோஸிடோன் மருந்து, அதிக உஷ்ணத்தாலும் சிறுநீர் மஞ்சளாகப் போகும். எனவே, ஒருவருக்கு சிறுநீர் மஞ்சளாகப் போனால் அவரை பரிசோதனை செய்ய வேண்டும். அத்துடன் அவரது சிறுநீரிலும், இரத்தத்திலும் சில அடிப்படை பரிசோதனைகள் செய்யப்படல் வேண்டும். இதன் மூலம் ஒருவருக்கு மஞ்சள் காமாலை ஏற்பட்டுள்ளதா? இல்லையா? என்பதைக் கண்டறியலாம். பரிசோதனையினூடாகவே இந்நோயை உறுதிப்படுத்திக் கொண்ட பின்பு சிகிச்சையினைத் தொடங்க முடியும்.

இந்தியா, இலங்கை போன்ற மூன்றாம் உலக நாடுகளுக்கு மக்கள் மஞ்சள் காமாலையைப் பொறுத்த அளவில், இரு பெரும் தவறுகளைச் செய்து விடுகிறார்கள், முதலாவது, மஞ்சள் காமாலை வந்து விட்டதா? இல்லையா? என்பதை அறிந்து கொள்ளத் தவறி விடுகிறார்கள். இரண்டாவது, மஞ்சள் காமாலைக்குச் சிகிச்சை செய்யும் முன், அது எந்த வகை மஞ்சள் காமாலை எதனால் அது வந்தது? என்று பார்க்காமல் நேரடியாகவே, சிகிச்சைக்குப் போய் விடுகிறார்கள்.

உண்மையிலேயே மஞ்சள் காமாலை பாராதூரமான நோயல்ல. நோயையறிந்து வைத்தியம் மேற்கொள்வோமாயின் இது சாதாரண நோய். இதை வேறு வகையில் கூறுவதாயின் ஒரு நோயின் அறிகுறியாகத்தான் இதனைக் கொள்ள வேண்டியுள்ளது.

கிராமிய வைத்திய முறையில் மாதுளம் பழச்சாறு தயாரித்து அதை ஒரு இரும்புச் சட்டியில் நான்கு மணி நேரம் வைத்திருந்து பிறகு பருகி வரவேண்டும் என்று கூறுவார்கள். பத்து நாட்கள் இதே முறையில் தயாரித்து இரும்புச் சட்டியில் வைத்திருந்து பருகி வந்தால் மாதுளம்பழத்தில் உள்ள இரும்புச்சத்து, பொசுபரஸ், கல்சியம், விட்டமின் ஏ முதலியவற்றால் கல்லீரல் புதுப்பிக்கப்பட்டு பலம் பெறும் என்பார்கள். இல்லையெனில் காலை நேரத்தில் இரண்டு மாதுளம் பழங்கள் சாப்பிடலாம். இவற்றில் உள்ள உயர்தரமான ஆர்கானிக் அமிலம் உடலுக்கும் உள்ளத்துக்கும் உடனடியாக சக்தியை வழங்கிவிடும். எவ்வாறாயினும் நோய் தொற்றியவர்கள் வைத்தியரின் ஆலோசனைப் பெற்று சிகிச்சைப் பெறுவது இந்த நவீன காலத்தில் மிகவும் ஏற்புடையதாகும்.

0 comments :

Copyright www.ilankainet.com All right reserved.
Designed and Hosted By : ilankainet.com
To contact us : ilankainet@gmail.com