Wednesday, May 5, 2010

பொன்சேகா உண்ணாவிரதம். ஜெனரலின் உரிமைகளை காக்க கோருகின்றார் விமல்.

ஜனநாயக தேசிய முன்னணியின் தலைவரும், பாராளுமன்ற உறுப்பினருமான ஜெனரல் பொன்சேகா இன்று பாராளுமன்ற அமர்வுகளில் கலந்து கொள்வதற்கான அனுமதி மறுக்கப்பட்டுள்ளதாகவும் , தான் பாராளுமன்ற அமர்வுகளில் கலந்து கொள்ள அனுமதிக்கப்படவேண்டும் எனக் கோரி் அவர் உண்ணாவிரதத்தினை ஆரம்பித்துள்ளதாகவும் அவரது கட்சியின் ஊடகப்பிரிவினர் அறிவித்துள்ளனர்.

நேற்று இடம்பெறவிருந்த இராணுவ குற்றிவியல் நீதிமன்ற விசாரணைகளில் அவர் கலந்து கொள்ளவில்லை எனவும் , நேற்று கூடிய நீதிமன்று இன்று பிற்பகல் 2.30 மணிக்கு நீதிமன்றினை ஒத்தி வைத்திருந்துடன் , ஜெனரல் பொன்சேகாவை நாளை நீதிமன்றில் கொண்டுவந்து நிறுத்துமாறு அவருக்கு பாதுகாப்பு வழங்கும் இராணுவத்தினருக்கு இராணுவ நீதிமன்று உத்தரவிட்டுள்ளதாக இராணுவப் பேச்சாளர் நேற்று குறிப்பிட்டிருந்தமை குறிப்பிடத்தக்கதாகும்.

ஜெனரல் பொன்சேகா நேற்றைய பாராளுமன்ற உரையில் தனது பாராளுன்ற சிறப்புரிமைகளை காத்து தான் தொடர்ந்தும் பாராளுமன்ற அமர்வுகளில் பங்குகொள்ள ஆவன செய்யுங்கள் என பாராளுமன்ற சபாநாயகரை வேண்டியிருந்தார். நேற்று பிற்பகல் இராணுவ குற்றவியல் நீதிமன்று இருந்தபோதும் அவரை பாராளுமன்ற அமர்வுகளில் கலந்து கொள்ள அனுமதித்த சபாநாயகர், இவ்விடயம் தொடர்பாக தீர்க்கமானதோர் நடவடிக்கையை மேற்கொள்ளவில்லை என கூறப்படுகின்றது.

அதே நேரம் ஜெனரல் பொன்சேகாவின் பாராளுமன்ற சிறப்புரிமைகளை காக்கும் நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறு ஆழும் கட்சியைச் சேர்ந்த விமல் வீரவன்ச சபாநாயகரைக் கேட்டுக்கொண்டுள்ளார். ஜனாதிபதித் தேர்தல் காலங்களில் ஜெனரல் பொன்சேகா மீது மேற்கொள்ளப்பட்ட சேறடிப்புக்களை முன்நின்று நிகழ்தியவர் விமல்வீரவன்ச.

ஜெனரல் பொன்சேகா நேற்றைய பாராளுன்ற அமர்வுகளில் நாட்டில் அவசரகாலச் சட்டத்தை நீக்கி ஜனநாயகத்தை நிலைநாட்டுமாறு தனது பேச்சில் வேண்டியிருந்தார். அவர் அங்கு பேசுகையில்.

நீண்டகாலமாகத் தடுத்துவைக்கப்பட்டிருக்கும் தமிழ் இளைஞர்கள் 11 ஆயிரம் பேரின் விசாரணைகளைத் துரிதப்படுத்தி, அவர்களை விரைவில் விடுதலை செய்ய அரசு நடவடிக்கை எடுக்கவேண்டும் என சரத் பொன்சேகா வலியுறுத்தினார்.

அவசரகாலச்சட்ட நீடிப்புப் மசோதா மீதான விவாதத்தில் கலந்துகொண்டு உரையாற்றியபோது மேற்கண்டவாறு தெரிவித்த அவர் தொடர்ந்த பேசுகையில், ஜனாதிபதித் தேர்தலில் 40 லட்சத்துக்கும் அதிகமான மக்கள் எனக்கு வாக்களித்தனர். நாடாளுமன்றத் தேர்தலில் எமது கட்சிக்கு 4 லட்சத்துக்கும் அதிகமான மக்கள் வாக்களித்தனர். அத்தேர்தலில் கொழும்பு மாவட்ட மக்கள் 98 ஆயிரம் விருப்பு வாக்குகளை எனக்கு வழங்கினர். அவர்கள் அனவைருக்கும் நான் எனது நன்றிகளைத் தெரிவித்துக்கொள்கிறேன்.

அதேபோல், என்மீது பொய்க் குற்றச்சாட்டுகளைச் சுமத்தி, என்மீது சேறு பூசி என்னை ஊக்கப்படுத்தியவர்களுக்கும் நன்றி.

படையினரின் அர்ப்பணிப்புக் காரணமாக 30 வருட கால யுத்தத்தை வெற்றிகொண்டு நாட்டில் சமாதானத்தை நிலைநாட்ட முடிந்தது. அந்த வெற்றியை வேறு எவரும் அபகரிக்க முடியாது. படையினருக்கும், படையினரின் உறவினர்களுக்குமே அந்த வெற்றி உரித்தாகிறது.

இப்படியானதொரு நிலையில் இந்த நாட்டில் தொடர்ந்தும் அவசரகாலச் சட்டம் இருப்பதை நான் விரும்பவில்லை. ஒரு வருடகாலமாக இந்த நாட்டின் பாதுகாப்புக்கு ஆபத்து ஏற்படும் வகையில் எதுவித அசம்பாவிதங்களும் இடம்பெறவில்லை.

அல்- காய்தா அமைப்பால் அமெரிக்காவுக்குத் தொடர்ந்தும் அச்சுறுத்தல் இருக்கின்றபோதிலும், அந்நாடு அவசரகாலச் சட்டத்தால் ஆளப்படவில்லை. ஆனால், எவ்வித அச்சுறுத்தலும் இல்லாத இந்நாடு மட்டும் அவசரகாலச் சட்டத்தால் ஆளப்படுகின்றது.

நாட்டில் நியாயத்தை நிலைநாட்டுவதற்கு அவசரகாலச் சட்டம் நீக்கப்படவேண்டும். மக்களைப் பாதுகாக்கக்கூடிய சட்டம் உருவாக்கப்படவேண்டும். இந்த நாட்டில் மக்களுக்குச் சுதந்திரம் இல்லை. இதனால், மக்கள் நாட்டைவிட்டு வெளியேறுகின்றனர். இராணுவத்தினர் கூட மிரட்டப்படுகின்றனர். இராணுவ அதிகாரிகள் காரணமின்றி பதவியில் இருந்து நீக்கப்படுகின்றனர்.

யுத்தத்தை வென்று கொடுத்த படையினருக்கு எவ்வித வசதிகளும் செய்து கொடுக்கப்படவில்லை. அவர்கள் பல துன்பங்களை அனுபவித்து வருகின்றனர். யுத்தத்தைப் படையினர் வென்றுகொடுத்துள்ளபோதிலும், அந்த யுத்த வெற்றியின் ஊடாக இனங்களிடையே ஒற்றுமை மற்றும் சமாதானம் போன்றவற்றைக் கட்டியெழுப்ப அரசு நடவடிக்கை எடுக்கவில்லை.

11 ஆயிரம் தமிழ் இளைஞர்கள் இன்னும் தடுத்துவைக்கப்பட்ட நிலையிலேயே உள்ளனர். அவர்கள் மீதான விசாரணையைத் துரிதப்படுத்தி அவர்களை விடுதலை செய்ய அரசு உடனடியாக நடவடிக்கை எடுக்கவேண்டும் என்றார்.

0 comments :

Copyright www.ilankainet.com All right reserved.
Designed and Hosted By : ilankainet.com
To contact us : ilankainet@gmail.com