Friday, May 21, 2010

பொருளாதார தடை விதித்தால் தென்கொரியா மீது போர்: வடகொரியா மிரட்டல்

எங்கள் மீது பொருளாதார தடை விதித்தால், தென்கொரியா மீது போர் தொடுப்போம் என்று வடகொரியா மிரட்டல் விடுத்துள்ளது. கடந்த மார்ச் மாதம் தென் கொரியாவின் போர்க்கப்பல் வடகொரிய கடல் அருகே நின்று இருந்தபோது திடீரென்று குண்டு வெ‌டி‌த்து கடலில் மூழ்கியது. இதில் கப்பலில் இருந்த 45 கடற்படை வீரர்கள் பலியானார்கள்.

இந்த ‌நிக‌ழ்வு குறித்து தென் கொரியா விசாரணைக்குழுவில் அமெரிக்கா, இங்கிலாந்து, சுவீடன் ஆகிய நாடுகளின் நிபுணர்கள் இடம் பெற்று இருந்தனர். இந்த விசாரணைக்குழு நடத்திய விசாரணையில் வடகொரிய நீர்மூழ்கிக்கப்பலின் தாக்குதல் காரணமாக தான் போர்க்கப்பல் வெடித்து கடலில் மூழ்கியது என்று அந்த விசாரணைக்குழு கண்டுபிடித்தது.

இதை தொடர்ந்து வடகொரியா தான் தங்களின் போர்க்கப்பலை மூழ்கடித்தது என்பதற்கு ஆதாரங்கள் உள்ளன என்று குற்றஞ்சா‌ற்‌றிய தென்கொரியா, இதற்கு பதிலடியாக வடகொரியா மீது உறுதியான நடவடிக்கை எடுப்போம் என்று அறிவித்தது.

கடந்த ஆண்டு இருநாட்டு எல்லை அருகே நடந்த துப்பாக்கி சண்டைக்கு பழிவாங்குவதற்காக தான் வடகொரியா இந்த தாக்குதலை நடத்தியது என்றும் தென்கொரியா குற்றஞ்சா‌ற்‌றி உள்ளது.

தென்கொரியாவின் குற்றச்சா‌ற்றுக்கு அமெரிக்கா, இங்கிலாந்து ஆகிய நாடுகள் ஆதரவு தெரிவித்து உள்ளன. இது தொடர்பாக தென்கொரியா அதிபர் லீ மியுங் பேக் அவசர ஆலோசனைக்கூட்டம் நடத்த இருக்கிறார். இந்த கூட்டத்தில் வடகொரியா மீது என்ன மாதிரி நடவடிக்கை எடுப்பது என்பது குறித்து ஆலோசனை நடத்த இருக்கிறார்.

வடகொரியா மீது ராணுவ நடவடிக்கை எடுப்பதில்லை என்ற முடிவை அந்த நாட்டு அரசு ஏற்கனவே எடுத்து உள்ளது. அதற்கு பதிலாக வடகொரியா மீது பொருளாதார தடை விதிப்பதற்கு உலக நாடுகளை வற்புறுத்துவது என்ற முடிவில் தென்கொரியா இருக்கிறது.

இதற்கிடையில், எங்கள் மீது பொருளாதார தடை விதித்தால், தென்கொரியா மீது போர் தொடுப்போம் என்று வடகொரியா மிரட்டி உள்ளது. இதனால் அந்த பிரதேசத்தில் பத‌ற்ற நிலை ஏற்பட்டு உள்ளது.

வடகொரியாவின் ஒரே ஆதரவு நாடான சீனா, இந்த சம்பவம் குறித்து தூரதிர்ஷ்டவசமானது என்று மட்டுமே கூறி முடித்துக்கொண்டு விட்டது. சீனாவின் ஆதரவு தென்கொரியாவை அதிருப்தி அடையச்செய்து உள்ளது.

0 comments :

Copyright www.ilankainet.com All right reserved.
Designed and Hosted By : ilankainet.com
To contact us : ilankainet@gmail.com