Thursday, May 20, 2010

அப்பட்டமான உண்மை!

நீங்கள் என்னதான் சொன்னாலும் இலங்கைத் தமிழர்களில் பெரும்பான்மையினர் பிரிக்கப்படாத இலங்கையில் தான் வாழப்போகின்றார்கள். தங்களுடைய தலைவிதி சிங்களவரின் தலைவிதியோடு பின்னிப்பிணைந்தது. விடுதலைப்புலிகள் தமிழர்களுக்கு மீளமுடியாத தீங்கு விளைவித்து விட்டார்கள். இப்பொழுது தாங்கள் கசப்பான யதார்த்த நிலைமைகளுக்கு முகம் கொடுக்க வேண்டியுள்ளது. சின்னாபின்னமாக போனவற்றைப் பொறுக்கிக்கொண்டு வாழ்க்கையைத் தொடரவேண்டும்.

இலங்கைத் தமிழர்கள் அடியுண்டு போன நொறுங்குண்ட மக்கள் பிச்சைவேண்டாம் நாயைப்பிடி என்ற நிலைமை. ஆனால் எம் மக்களுடைய நெகிழ்ந்து கொடுக்கும் திறன் குறித்து எனக்கு நம்பிக்கையும் பெருமையும் உண்டு. ஒரு சமாதான காலம் கிடைத்தால் நாம் படிப்படியாக சுதாகரித்துக் கொள்ளமுடியும்.

தமிழர்கள் பகுத்தறிவுக்கொவ்வாத முரண் நிலை அரசியலைத் தவிர்த்து யதார்த்தமானதோர் அணுகுமுறையை மேற்கொள்ளவேண்டும். கடும் போக்கைக் கடைப்படிப்போமாயின் நாம் மேலும் ஒடுக்கப்பட்டுவிடுவோம். சிங்கள வல்லூறுகள் மேலும் மேலும் எம்மை அழிக்க முயல்கையில் புலம் பெயர் முட்டாள்களின் கொள்கைகளும், தமிழ்நாட்டு கோமாளிகளின் கூத்துக்களும் அதற்குத் தூப மிடுகின்றன.

இன்று தமிழ்தேசியக் கூட்டமைப்பு தனது கடந்தகால விடுதலைப்புலிகள் அரசியலில் இருந்து மெல்ல விடுபட முயல்கின்றது. அது ஊக்குவிக்கப்பட வேண்டும்.

இன்று ராஜபக்ஸ அரசு உச்சத்தில் இருக்கின்றது. நாம் விரும்பினாலும் விரும்பாவிட்டாலும் அதிகாரத்தில் இருக்கும் அவருடன் நாம் ஓர் இணக்கப்பாட்டுக்கு வரவேண்டும்.

சிங்கள கடும்போக்காளர்கள் எம்மை மேலும் நசுக்கவே முனைவர். நாம் எம்மைத் தற்காத்துக்கொண்டு அம்முயற்சியை எதிர்க்க வேண்டும். தனி நாட்டுக் கொள்கையை முன்னெடுத்துக்கொண்டு அதைச் செய்யமுடியாது.

ஓன்றுபட்ட ஸ்ரீலங்கா என்ற வரையறைக்குள் நின்றபடியே சிங்கள தீவிர செயற்பாடுகளை நாம் கட்டுப்படுத்தி முன்செல்லவேண்டும். அவர்களுடனான உரையாடல் பிரிவினை பற்றியதாக அன்றி உலகம் முளுவதும் ஏற்றுக்கொள்ளப்படும். மனித உரிமைகள் ஜனநாயகம் மற்றும் பன்மைத்தன்மை ஆகியவற்றின் அடிப்படையிலானதாக இருக்க வேண்டும்.

ஒரு நாளில் அல்லது இரவோடிரவாக மாற்றங்களைக் கொணர வல்ல மந்திரக் கோல் யார்கையிலும் இல்லை. இது ஒரு பகீரத முயற்சி. வேறு வழியில்லை. தமிழ்ஈழம் என்பது ஒரு வழியே அல்ல. தமக்கு எது நன்மை பயப்பது என்பதை ஸ்ரீலங்காவில் வாழும் தமிழர்களே முடிவு செய்ய வேண்டும். நாங்கள் மிகுந்த அடக்கமாக அவர்களுக்குத் தார்மீக ஆதரவு வழங்கலாமேயொழிய அவர்கள் என்னசெய்யவேண்டும் என்று கட்டளை இடுவதோ சொல்லாடலில் ஈடுபடுவதோ சரியல்ல. சென்ற நூற்றாண்டில் முப்பதுகளில் இருந்தே தமிழர்கள் சிங்கள மேலாதிக்கத்தை எதிர்த்து வந்துள்ளனர். இன்று அந்தப் போராட்டம் இராணுவரீதியாக முறியடிக்கப்பட்டுவிட்டது. ஆனால் அப்போராட்டத்தின் அரசியல் வேர்கள் அப்படியே உள்ளன.

எதிர்ப்பியக்கப் படிமுறையின் ஒரு கட்டத்தில் ஆயுதப்போராட்டம் தொடங்கியது. ஆந்த இராணுவ வலுவை நாம் பேரம் பேசும் சக்தியாக மாற்றியிருந்தால் இந்த மட்டில் கூட்டாட்சி கைக்கெட்டியிருக்கும். விருதலைப்புலிகள் தவறவிடப்பட்டவொன்றான சந்தர்ப்பங்கள் பல. 2002 இல் எய்தப்பட்ட ஒஸ்லோ உடன்படிக்கை அவற்றுட் சிறந்தது. அது கூட்டாட்சி முறையைப் பரிசீலிப்பதற்கு இணங்கியது.

ஆயுதப் போராட்டம் வியத்தமானது என்பதை உணர்ந்த நான் அணுகுமுறையை மாற்றி அரசியல் தீர்வுக்குப் போகும்படியும், புலிகளைத் திரும்பத்திரும்ப வேண்டிக் கொண்டேன். அதற்காக நான் புலிப்புகழ்பாடுவோரால் பரிகசிக்கப்பட்டேன். அச்சுறுத்தப்பட்டேன். தொந்தரவுக்குள்ளானேன். இன்று புலிகள் இல்லை. தமிழர்கள் படுபயங்கரமான நிலையில் இருக்கின்றார்கள். அதற்கு நான் காரணமல்ல புலிகளே காரணம்.

புலிகள் அழிவுசெய்தபோது அமைதியாக இருந்த அல்லது அவர்களை உற்சாகப்படுத்தியோர் என்னைக் கேட்கிறார்கள். தமிழர் நிலைமை பற்றி என்ன சொல்லுகிறீர்கள்? ஏதோ இந்த நிலைமைக்கு நான் பொறுப்பு என்பது போல.

அண்மைக்கால சம்பவங்களால் நான் மிகுந்த வேதனைக்குள்ளாகியிருக்கின்றேன். உண்மையில் கடந்த காலம் பற்றிப் பேச நான் விரும்பவில்லை. ஆனால் புலிகளின் அடிவருடிகள் எனக்கு எரிச்சலூட்டுகிறார்கள் . பேசும்படி நிர்ப்பந்திக்கின்றார்கள். இன்று தமிழர்கள் யதார்த்தத்தை ஏற்றுக்கொள்ளவேண்டும் ஒரு மோசமான நிலைமையிலிருந்து மீளும் வழியைப்பார்க்க வேண்டும். முதலில் நாம் எம்மை மீளக்கட்டியெழுப்பவேண்டும். போரால் ஏற்பட்ட சேதங்களைத் திருத்துவதும் இயல்புநிலைக்குத்திரும்புவதும் முன்னுரிமை பெற வேண்டும்.

எமது மக்கள் முழுமையாக மீளக் குடியமரவேண்டும். உயர் பாதுகாப்பு வலயங்கள் குறைக்கப்படவேண்டும். பாரிய புனர் நிர்மாணப்பணி காத்திருக்கின்றது. 10000க்கும் அதிகமான புலி உறுப்பினர்கள் விடுவிக்கப்பட்டு சமூகத்தோடு மீள இணைக்கப்படவேண்டும். பயங்கரவாதத் தடைச்சட்டத்தின் கீழ் தடுத்து வைக்கப்பட்டோர் விடுவிக்கப்படவேண்டும். விவசாயம் மீன்பிடி சிறுகைத்தொழில் எல்லாம் புத்துயிர்ப்புப் பெற்று பொருளாதாரம் மேம்பட வேண்டும். சுற்றுலாத்துறை விருத்தி செய்யப்படுதலும் அந்நிய முதலீடு ஊக்குவிக்கப்படுதலும் அவசியம் செய்வதற்கு எவ்வளவோ உண்டு.

இவற்றையெல்லாம் செய்ய சிங்கள மேலாண்மையுள்ள அரசாங்கத்தின் சிங்கள ஜனாதிபதியோடு ஒத்துழைக்க வேண்டும் வேறு வழியில்லை. சமாந்தரமாக அதிகாரப்பரவலாக்கத்துக்கு நாம் முயற்சிசெய்யவேண்டும். புலிகள் வலுவோடு இருந்த வேளையில் இம் முயற்சியை மேற்கொண்டிருந்தால் அதிகம் கிடைத்திருக்கும். அந்தப் பலம் இல்லாத நிலையில் நாம் அரசாங்கத்தினதும் ஜனாதிபதியினதும் தாராளப்போக்கில் தங்கியிருக்க வேண்ட்டியுள்ளது.

மேற்குலகின்மீதோ இந்தியாவின்மீதோ தங்கியிருப்பதில் அர்த்தமில்லை. தமிழராகிய நாம் சிங்கள மக்களை நோக்கி நேசக்கரம் நீட்டவேண்டும். அரசியல் ஏற்பாடுகளுக்காக கொழும்பின்மீது வெளியார் அழுத்தத்தைப் பிரயோகிக்க முயல்வதில் அர்த்தமில்லை. நிர்ப்பந்தத்தின் பேரில் சிங்களவர்கள் இணங்கினாலும் அவர்கள் திரைக்குப் பின்னால் அதைச்செயலிழக்கச்செய்வர். (13 வது திருத்தத்திற்கு நேர்ந்தது போல)

சிங்கள அரசியல் அரங்கு மனசாரத்தரவேண்டும். அழுத்தத்தினால் அல்ல. இதற்கு ஏற்றவர் மகிந்தா தான் சிங்களவர்கள் அவரை நம்புகின்றார்கள். அவர் செய்யும் எதுவும் ஏற்றுக்கொள்ளப்படும். அவர் சிங்களவர் நலன் பேணுபவர் என்பதில் ஐயம் எதுவுமில்லை.

ஆனால் நாங்கள் யதார்த்தத்தைப் புரிந்துகொள்ள வேண்டும். நாம் கேட்கும் அனைத்தையும் மஹிந்தா தருவார் என எதிர்பார்க்கக்கூடாது. அது நடக்காது. ஏனெனில் சில கோரிக்கைகள் மஹிந்தவுக்கு உடன்பாடானவை அல்ல. அதற்கும் மேலாக சிங்கள மக்கள் தன்மீது வைத்த நம்பிக்கைக்கு மாறாக அவர் போக மாட்டார்.

ஆக தற்போக்கு வரையறைக்குட்பட்ட சில உரிமையாளர்களையும் சலுகைகளையுமே எதிர்பார்க்கலாம். என்னைப்பொறுத்தவரை அதுபோதும்.

என்னபாடுபட்டும் வன்முறைக்கும் தீவிரவாதத்துக்கும் திரும்புவதைத் தவிர்க்கவேண்டும். அது தற்கொலைக்கு ஒப்பானது. ஓற்றையாட்சியை மஹிந்த கைவிடாதபோது வடக்கு கிழக்கு இணைப்புக்கும் அவர் சம்மதிக்கமாட்டார்.

நடைமுறைச்சாத்தியமானது என்வென்றால் இப்பொழுதிருக்கும் மாகாணசபை முறைமையை வலுப்படுத்துவதாகும். முழுமையான முறைமையை வலுப்படுத்துவதாகும். முழுமையான சமஸ்டி முறைமையை ஒரு தூர இலக்காக வைத்துக்கொண்டு சிங்களவர்களோடும் முஸ்லிம்களோடும் சேர்ந்து செயற்படவேண்டும். ஒற்றையாட்சிக்குள் எவ்வளவு அதிகாரப் பரவலாக்கத்தை பெறமுடியுமோ அதைப்பெற முயல வேண்டும். தமிழ்மொழி அமுலாக்கல் முழுமையாக நிறைவேற முயற்சி செய்யலாம். அது அரசியல் யாப்பில் ஏலவே இருப்பது.

அதிகாரப்பகிர்வின் மூலம் கிடைக்கும் அதிகாரத்தை எமது பிரதேசங்களை அபிவிருத்தி செய்யவும் பயன்படுத்தலாம். ஆனால் இவை ஒருமைப்பட்ட நாடு என்ற வரையறைக்குள் தான் நடைபெறவேண்டும். இனவெறிபிடித்த சிலர் தவிர நியாயமான போக்குடைய சிங்களவர்களுக்கு பிரிவினைவாதம் மீண்டும் இனி எழாது என்ற நம்பிக்கை வரவேண்டும்.

ஒற்றுமைப்பட்டுப் பணியாற்றுவோமாயின் தற்பொழுது நிலவும் பகைமையான சூழல் படிப்படியாகக்குறைந்துவிடும். ஓற்றையாட்சியின் கீழ் எமக்குக்கிடைக்கும் அதிகாரங்களும் உரிமைகளும் எமது அபிலாசைகளை உள்ளடக்கப் போடுமானவையாகக் கண்டால் ஒரு பிரச்சனயும் இல்லை.

ஆனால் உண்மையாகவே அவை போதாமல் இருந்தால் எங்களுக்கு ஏன் அதிக அதிகாரங்கள் தேவை என்பதைச் சிங்கள மக்கள் உணரச்செய்யவேண்டும். சுமுகமான முரணற்றநிலையில் சிங்கள அரசுக்கட்டமைப்பு எம்முடைய அக்கறைகளையும் புரிந்துகொள்ளும். பரிவுகாட்டும்.

தமிழர்களைப்பொறுத்தவரை கிடைக்கமுடியாததற்கு ஆசைப்படுதல் தற்கொலைக்கொப்பானது. அடையக்கூடியதை ஏற்றுக்கொள்ளுதல் புத்திசாலித்தனமானது.

எங்களிடம் ஒரு வேட்டி இருந்தது. அதன் தரம் போதாதென்று ஒரு பட்டு வேட்டிக்கு ஆசைப்பட்டோம். எமக்கு ஒரு கதர் வேட்டி தரப்பட்டது. அதை நிராகரித்து பட்டு வேட்டிக்காக போராடினோம். இப்பொழுது எம்மிடம் வேட்டி இல்லை. எம் நிர்வாணத்தை மறைக்க ஒரு கோவணம் மட்டுமேயுள்ளது. நாங்கள் தொடர்ந்தும் முரண் நிலைப்பாட்டையே முன்னெடுப்போமாயின் கோவணமும் பறிபோய்விடும்.

முரண்நிலை அரசியலை தமிழர் கைவிடவேண்டும் என்று சொல்லும் போது அவர்களுக்கு நான் ஒரு தெரிவையும் தரவில்லை என்று நீங்கள் சொல்லக்கூடும். உண்மையில் தற்சமயம் எமக்குத் தெரிவு ஏதும் இல்லை. தமிழர்களுடைய பரிதாபநிலையை மூடிமறைத்து அவர்களுக்கு ஒரு தன்மான உணர்வின் சாயலைத்தரவே நான் முனைகின்றேன்.

இலங்கைத் தமிழர்களுக்கு ஸ்ரீலங்கா தாயகமாதலாலும் என்ன பிரச்சனை இருந்தாலும் அவர்கள் இங்கேயே வாழவேண்டியவர்கள் என்பதாலும் இந்த இக்கட்டான நிலைமையைச் சாதகமாக மாற்றிக் கொள்ளும்படி தமிழர்களைக் கேட்டுக்கொள்கின்றேன்.

1 comments :

Unknown May 21, 2010 at 10:42 AM  

டி.பி எஸ் ஜெயராஜ் அவர்களே இப்போதுதான் புலிகள் இலங்கையில்
இல்லை. கனடாவில்லிருந்து உடனேவரலாம்தானே?ஏன் அங்குஇருக்கிறிர்?

Copyright www.ilankainet.com All right reserved.
Designed and Hosted By : ilankainet.com
To contact us : ilankainet@gmail.com