Thursday, May 13, 2010

13ம் திருத்தச்சட்டம் முழுமையாக நடைமுறைப் படுத்தப்படவேண்டும். நிருபமா ராவ்.

இந்தியா இலங்கைக்கு ஆணையிட முடியாது. விமல் வீரவன்ச
இலங்கை அரசியல் யாப்பின் 13ம் திருத்தச்சட்டம் முழுமையாக நடைமுறைப் படுத்தப்படவேண்டும் என இந்திய வெளியுறவுத்துறை செயலாளர் நிருபமா ராவ் தெரிவித்துள்ளார். இலங்கை தொடர்பாக டெல்லியில் இடம்பெற்ற இரண்டுநாள் கருத்தரங்கை ஆரம்பித்து வைத்து பேசிய அவர் இவ்வாறு தெரிவித்துள்ளதுடன் , 13ம் திருத்தச் சட்டத்தின் பிரகாரம் வடகிழக்கு மாகாண சபைகளுக்கு காணி மற்றும் பொலிஸ் அதிகாரங்களை வழங்கி நாட்டில் அமைதியையும், சமாதானத்தையும் உறுதி செய்து கொள்ளவேண்டும் எனவும் கூறியுள்ளார்.

அதேநேரம் இன்று கொழும்பில் இடம்பெற்ற ஊடகவியலாளர் மாநாடொன்றில் இந்தியா இலங்கைக்கு ஆணையிடமுடியாது என தேசிய சுதந்திர முன்னணியின் தலைவரும் நிர்மாணம் பொறியியல் சேவைகள், வீடமைப்பு மற்றும் பொதுச்சேவைகள் அமைச்சருமான விமல் வீரவன்ச தெரிவித்துள்ளார்.

அங்கு பேசிய விமல் வீரவன்ச, அரசியலமைப்பு சீர்த்திருத்தமானது மூன்று படிமுறைகளின் கீழ் முன்னெடுக்கப்படவுள்ளது எனவும் முதலாவது படிமுறை ஜனாதிபதி விவகாரம் எனவும் கூறியுள்ளார். கட்சித் தலைவர்களுடனான நீண்டநேர சந்திப்பை அடுத்தே ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஸவினால் இந்தத் தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளது என்று தெரிவித்த அமைச்சர், அரசியலமைப்பு சீர்த்திருத்தத்தின் முதற்கட்ட நடவடிக்கை எதிர்வரும் நவம்பர் மாதம் இடம்பெறும் என்றும் கூறியுள்ளார்.

அத்துடன், அரசியலமைப்பின் இரண்டாம்கட்ட சீர்த்திருத்தத்தின் போது, தேர்தல் முறைமையில் மாற்றங்கள் ஏற்படுத்தப்படும் என்று தெரிவித்த அவர், மூன்றாவதாகவே செனட் குழு அமைக்கப்படும் என்றும் கூறினார்.

இந்த சீர்த்திருத்தங்கள் அனைத்தும் எதிர்வரும் இரண்டு வருடங்களுக்குள் செய்து முடிக்கப்படும் என்றும் அமைச்சர் வீரவன்ச மேலும் கூறினார்.

1 comments :

Anonymous ,  May 16, 2010 at 8:04 PM  

ungaludaya nadduppirachanaiyai muthal paar. pirahu mattra naddaipparkkalam

Copyright www.ilankainet.com All right reserved.
Designed and Hosted By : ilankainet.com
To contact us : ilankainet@gmail.com