Thursday, May 13, 2010

12 வழக்குகளில் விடுதலையான என்னைப் பற்றி கருணாநிதி அவதூறு பேசுவது கேலிக்கூத்து- ஜெ.

தர்மத்தை கடைபிடித்து வரும் எனக்கு இதுவரை இறைவன் அருளால் 12 வழக்குகளில் விடுதலை கிடைத்திருக்கிறது. 13-வது வழக்கை ஆதாரம் இல்லை என்று வாபஸ் பெற்ற கருணாநிதி , என்னைப் பற்றி அவதூறாகப் பேசுவது கேலிக்கூத்து என்று தெரிவித்துள்ளார் அதிமுக பொதுச்செயலாளர் ஜெயல்லிதா.

இதுதொடர்பாக அவர் விடுத்துள்ள அறிக்கை:

என் மீது தொடர்ந்து அவதூறு சுமத்துவதை கருணாநிதி வாடிக்கையாக கொண்டு இருக்கிறார். உதாரணமாக தி.மு.க அரசு ஆட்சிப் பொறுப்பேற்றவுடன் சிறுதாவூர் பிரச்சினை குறித்து கருணாநிதி என் மீது பொய் குற்றச்சாட்டு சுமத்தினார்.

அங்கே எனக்குச் சொந்தமான எந்த நிலமும் இல்லை, வாடகைக்கு எடுத்த வீட்டில் தங்குகிறேன் என்று உடனே நான் என்னுடைய நிலைமையை விளக்கினேன். அதன் பின்னரும் அதை விசாரிக்க ஒரு நபர் விசாரணை ஆணையத்தை அமைத்தார்.

தற்போது அந்த விசாரணை ஆணையம் தனது அறிக்கையை சமர்ப்பித்துவிட்டது. இந்த அறிக்கை வெளிவந்த பிறகு இதில் உள்ள உண்மை நிலை நாட்டு மக்களுக்குத் தெரியவரும். இதே போன்று, ஒவ்வொரு பிரச்சினையிலும் தொடர்ந்து என் மீது அவதூறு பரப்பிக் கொண்டு வருகிறார்.

1996 முதல் 2001 வரையிலான திமுக ஆட்சிக் காலத்தில், என்னை அரசியலில் இருந்தே ஒழித்து கட்ட வேண்டும் என்ற தீய நோக்கத்தில் என் மீது பல்வேறு பொய் வழக்குகளை புனைந்தார் கருணாநிதி. அவற்றில் 12-க்கும் மேற்பட்ட வழக்குகளில் நீதிமன்றங்களால் நான் விடுதலை செய்யப்பட்டு இருக்கிறேன். ஆதாரங்கள் இல்லை என்ற காரணத்தினால் லண்டன் ஓட்டல் வழக்கு தி.மு.க. அரசாலேயே திரும்பப் பெறப்பட்டுவிட்டது.

இந்தச் சூழ்நிலையில் தற்போது பெங்களூர் சிறப்பு நீதிமன்றத்தின் முன்பு நடைபெற்று வரும் வழக்கு 13 ஆண்டுகளாக தாமதப்படுத்தப்பட்டு வருவதற்கு நான்தான் காரணம் என்ற வகையில் கருணாநிதி அறிக்கை வெளியிட்டு இருக்கிறார். இது விஷமத்தனமானது மட்டுமல்ல, கண்டனத்திற்குரியதும் ஆகும்.

1991 முதல் 1996 வரை நான் முதலமைச்சராக இருந்தபோது, ஒரு ரூபாய் மட்டுமே சம்பளம் வாங்குவதாகச் சொல்லிக் கொண்டு, 66 கோடி ரூபாய் அளவுக்கு நான் சொத்து சேர்த்து விட்டதாக கூறி இருக்கிறார். இது அப்பட்டமான பொய்.

முதலமைச்சருக்கான சம்பளம் வாங்கித்தான் காலத்தை கழிக்க வேண்டும் என்ற அவசியம் எனக்கு இல்லை. சுயமாக சம்பாதித்து வாங்கிய சொத்துக்கள் இருந்ததால்தான், என்னுடைய சம்பள பணம் மக்களுக்கு பயன்பட வேண்டும் என்ற ஒரு நல்லெண்ணத்தில், சம்பிரதாயத்திற்காக ஒரு ரூபாய் மட்டும் பெற்றுக் கொண்டேன். இந்த வழக்கு என் மீது கருணாநிதியால் அரசியல் காழ்ப்புணர்ச்சி காரணமாக போடப்பட்ட பொய் வழக்கு.

வழக்கு நீதிமன்றத்தில் நிலுவையில் இருப்பதால், இதைப்பற்றி நான் விரிவாக குறிப்பிட விரும்பவில்லை. வருமானத்திற்கு அதிகமாக சொத்துக்களை குவித்ததாக 1997 ஆம் ஆண்டு அப்போதைய தி.மு.க. அரசினால் என் மீது ஒரு பொய் வழக்கு தாக்கல் செய்யப்பட்டது.

1997 முதல் 2001 வரை கருணாநிதி தலைமையிலான தி.மு.க. ஆட்சிதான் நடைபெற்றது. அப்போது அதற்கு நான் எந்த இடையூறும் ஏற்படுத்தவில்லையே? பின்னரும், இந்த வழக்கை தாமதப்படுத்த நான் எந்த இடையூறும் ஏற்படுத்தவில்லை.

2003-ம் ஆண்டு இந்த வழக்கு முடிவுக்கு வரும் தருவாயில், அரசியல் காழ்ப்புணர்ச்சி காரணமாக 28.2.2003 அன்று தி.மு.க. பொதுச் செயலாளர் அன்பழகன், மேற்படி வழக்கை வேறு மாநிலத்தில் உள்ள நீதிமன்றத்திற்கு மாற்ற வேண்டும் என்று கோரி உச்ச நீதிமன்றத்தில் ஒரு மனுவை தாக்கல் செய்தார்.

இதனையடுத்து, சென்னை நீதிமன்றத்தில் நடைபெற்று வந்த வழக்கிற்கு உச்ச நீதிமன்றம் இடைக்காலத் தடையாணை விதித்தது. இதன் காரணமாக வழக்கு ஒரு வருட காலம் தாமதப்படுத்தப்பட்டது. இந்த வழக்கு தாமதப்படுத்தப்பட்டதற்குக் கருணாநிதிதான் காரணம்.

உச்ச நீதிமன்ற தீர்ப்பின் அடிப்படையில், இந்த வழக்கு பெங்களூர் நீதிமன்றத்திற்கு மாற்றப்பட்டது. பின்னர், மேற்படி வழக்கையும், லண்டன் ஓட்டல் வழக்கையும் ஒருங்கிணைத்து பெங்களூர் சிறப்பு நீதிமன்றம் ஓர் ஆணை பிறப்பித்தது.

இந்த ஆணையை எதிர்த்து உச்ச நீதிமன்றத்தில் ஒரு மனுவை தாக்கல் செய்தவர் தி.மு.க. வைச் சேர்ந்த அதே அன்பழகன். இதற்கு 5.8.2005 அன்று உச்ச நீதிமன்றம் தடையாணை விதித்தது. பின்னர் 22.1.2010 அன்று அன்பழகனே மனுவை வாபஸ் பெற்றுக்கொண்டதால், உச்ச நீதிமன்றத்தால் வழங்கப்பட்ட தடையாணை முடிவுக்கு வந்தது.

இந்த வழக்கு விரைவில் முடிவுக்கு வந்து அதிலிருந்து நான் விடுதலையாகிவிட்டால், எனக்கு எதிராக அவதூறு பிரசாரம் செய்ய எந்த அடிப்படையும் இருக்காதே! என்னைப் பற்றி அவதூறு பிரசாரம் செய்வதற்காகவே இந்த வழக்கை முடிக்கவிடாமல் இன்றுவரை அதற்கு உயிரூட்டி வைத்திருக்கிறார் எனவே, என்னை அரசியலில் இருந்து ஒழித்துக்கட்ட வேண்டும் என்பதற்காக, இந்த வழக்கில் எனக்கு எப்படியாவது தண்டனை பெற்றுத் தந்துவிட வேண்டும் என்று பகீரத பிரயத்தனம் மேற்கொண்டு இருக்கிறார்.

சட்டமன்றம் நடைபெற்றுக் கொண்டிருக்கும்போது, அவையின் உறுப்பினர் குறித்து, அவைக்கு வெளியே அறிக்கை வெளியிடுவது அவையின் உரிமையை மீறிய செயல் ஆகும்.

இது முதல் குற்றம். இரண்டாவதாக, நீதிமன்றத்தில் ஒரு வழக்கு நிலுவையில் இருக்கும்போது, அதைப் பற்றி பேரவைக்குள் தெரிவிப்பதும் பேரவை விதிகளுக்கு முரணானதாகும்.

2001 முதல் 2006 வரை நான் முதலமைச்சராக ஆட்சி புரிந்தபோது, நான் நினைத்திருந்தால், கருணாநிதி என் மீது போட்ட பொய் வழக்குகள் அத்தனையையும் வாபஸ் பெற்றிருக்க முடியாதா? செய்திருக்க முடியும்! ஆனால் அவ்வாறு நான் செய்ய விரும்பவில்லை.

தர்மத்திற்கும், சத்தியத்திற்கும், நேர்மைக்கும் கட்டுப்பட்டு, தைரியமாக நீதிமன்றங்களில் போராடி நான் நிரபராதி என்பதை நிரூபித்து வழக்குகளிலிருந்து விடுதலை பெறுவேன் என்று சபதம் செய்து, அவ்வாறு எனது மனசாட்சி காட்டும் வழியில் செயல்பட்டு வருகிறேன்.

தர்மத்தை கடைபிடித்து வரும் எனக்கு இதுவரை இறைவன் அருளால் 12 வழக்குகளில் விடுதலை கிடைத்திருக்கிறது. 13-வது வழக்கை ஆதாரம் இல்லை என்று வாபஸ் பெற்ற கருணாநிதி, என்னைப் பற்றி அவதூறாகப் பேசுவது கேலிக்கூத்து என்று கூறியுள்ளார் ஜெயலலிதா.

0 comments :

Copyright www.ilankainet.com All right reserved.
Designed and Hosted By : ilankainet.com
To contact us : ilankainet@gmail.com