Thursday, April 15, 2010

வழிதவறிய செம்மறி......! - சதா. ஜீ.

'தைபிறந்தால் வழிபிறக்கும்' என்ற எந்தக் கட்டாயமும் இல்லை. தேர்தல் திருவிழா இனிதே நிறைவடைந்திருக்கிறது. எதிர்பார்த்த முடிவுகளும் எதிர்பாராத அல்லது விரும்பாத முடிவுகளும் வெளியாகின. இனி இலங்கையின் தேசிய கட்டுமானம் குதிரை வேகத்திலோ கழுதை வேகத்திலோ முன்னோக்கிச் செல்லும்.

பெரும்பாலான மக்கள், தேர்தலை புறக்கணித்துள்ளார்கள். கடந்த தேர்தலிலும் குறைவான வாக்குகளையே அரசாளும் கட்சி பெற்றிருக்கிறது. என்ற குரல்கள் தென்பகுதியில் ஒலிக்கத்தொடங்கியுள்ளன. மக்களுக்கும் அரசியல்வாதிகளின் மீது நம்பிக்கையில்லை என்றும் அதனை அர்த்தப்படுத்திக்கொள்ளலாம். வடக்கு கிழக்கிலும் வாக்குப்பதிவு மிகக் குறைவாகவே நடைபெற்றிருக்கிறது. ஆனால் அதைப்பற்றி தமிழ் கட்சிகள் அலட்டிக்கொள்ளவில்லை. காரணம் மக்கள் தம்மீது நம்பிக்கையற்றிருக்கிறார்கள் என்ற உண்மை உறைப்பதாலோ என்னவோ?

இதற்கு முன்னர் நடைபெற்ற பொதுத் தேர்தலில் யாழ் மாவட்டத்தில் அதிகூடிய விருப்பு வாக்குகளைப் பெற்று முதலாம் இரண்டாம் இடங்களைப் பெற்றுக்கொண்ட குதிரைக் கஜேந்திரன், பத்தினி சிதம்பரநாதன் ஆகியோர் வெட்கித் தலைகுனியவேண்டியதில்லை. பாராளுமன்ற ஓய்வூதியத்தை மாதமாதம் பெற்றுக்கொண்டு ஒதுக்குப்புறமாக ஒதுங்கவேண்டியதுதான். இவர்களைப் போன்றோர் மக்களால் தெரிவுசெய்யப்பட்டார்கள் என்று இன்றும் எழுதிக்கொண்டிருக்கிறார்கள். இது எவ்வளவு முட்டாள்தனம். புலிகளின் ஆயுதப் பலத்தால் தெரிவுசெய்யப்பட்டார்கள் என்பதையல்லவா ஆணித்தரமாக நிறுவியிருக்கிறது.

இதையே 'தமிழர் வரலாற்றில் திருப்புமுனை' என்றும் 'அடக்குமுறையின் உச்சத்தில்தான் தமிழர்கள் ஆயுதம் ஏந்தினார்கள்' என்றும் கொழும்பில் மையம்கொண்டுள்ள பேராசான்கள் வெட்கமே இல்லலமல் எழுதிக்கொண்டிருக்கிறார்கள். ஆயுதத்தை எங்கையா தமிழர்கள் தூக்கினார்கள்? தமிழர்களையல்லவா ஆயுதம் தூக்கோ தூக்கென்று தூக்கிச்சுது! உங்களுக்குத்தான் 'தேசத்தின் குரல்' என்றோ 'தேசத்தின் பிதா' என்றோ பட்டத்தை கொடுப்பான் என்று எதிர்பார்த்திருந்த தம்பி பரமன் பரலோகம் போய்விட்டான். 'சிவத்'துக்கு நாம் 'தேசத்தின் பாவம்' என்ற பட்டத்தை மனமுகந்து அளிக்கின்றோம்.

புலிப் பாசிசம் முள்ளிவாய்க்காலில் மண்டியிட்டபின்னர் சாகடிக்கப்பட்டதுபோல தமிழ் இனவாதமும் இத்தேர்தலோடு தோற்கடிக்கப்பட்டிருக்க வேண்டும். ஆனாலும் பனையால விழுந்தும் நொண்டிக்கொண்டு எழுந்திருக்கிறது கூத்தமைப்பு. பாசிசத்தை சிதறடிப்பதுபோல அவ்வளவு சிரமமல்ல இந்த இனவாத சில்லறைகளை சிதறடிப்பதற்கு. என்ன மாற்று அரசில் தலைமைகள்தான் தயாரில்லை.

நடந்துமுடிந்த பொதுத் தேர்தலில் மாற்று அரசியல் கட்சிகள் அனைத்தும் ஓரணியில் நின்றிருந்தால் கூத்தமைப்பின் பாராளுமன்ற அங்கத்துவத்தை சரி அரைவாசிக்குகீழ் குறைத்திருக்கலாம். முடக்கியிருக்கலாம். மட்டக்களப்பில் முதலைமைச்சர் பிள்ளையானின் கட்சி ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியில் போட்டியிட்டிருந்தால் பிள்ளையானின் கட்சிக்கு ஒரு பாராளுமன்றப் பிரதிநித்துவம் கிடைப்பதோடு ஐ.ம.சு.முன்னணியின் ஆசனங்களும் அதிகரிப்பதற்கான வாய்பு நிச்சயம் ஏற்பட்டிருக்கும்.

அதேபோலத்தான் வவுனியா மாவட்டத்திலும் புளொட் ஐ.ம.சு.முன்னணியுடன் போட்டியிட்டிருந்தால் புளொட்டும் ஐ.ம.சு.முன்னணியும் ஆசனங்களைப் பெற்றிருக்க முடியும். அவ்வாறே யாழ். மாவட்டத்திலும் பத்மநாபா - ஈபிஆர்எல்எவ், புளொட் கூட்டு ஐ.ம.சு.முன்னணியுடன் கூட்டுச் சேர்ந்திருக்க வேண்டும். கிடைத்திருந்த அரிய சந்தர்ப்பத்தை தவறவிட்டது மட்டுமல்ல தமிழ் மக்கள் மீண்டும் மீண்டும் ஏமாறப்படுவதற்கும் இந்த தமிழ் தலைவர்களே காரணமாகின்றனர். இவர்கள் கூத்தமைப்பின் அழைப்பை எதிர்பார்த்திருந்தார்களோ? யாமறியோம் பராபரமே!

இனியொரு விதி செய்யப்போவதும் இல்லை இவர்கள். அடுத்தகட்டமாக வடக்கு மாகாணசபை நடைபெறவுள்ளது. இதே கூத்தைத்தான் இந்த மாற்று தலைமைகள் கையாளப்போகின்றன என்பதில் எந்தவித சந்தேகமும் இல்லை. புலிப் பாசிசத்துக்கு எதிராக கைகோர்த்து செயற்பட முடியாத இவர்களா தமிழ் இனவாத அரசியலுக்கு எதிராக ஒன்றுபட்டு செயற்படப்போகிறார்கள்? என்பது மனதைக் குடைந்துகொண்டிருக்கிறது, மூளை கசங்கி இரத்தம் கசிந்துகொண்டிருக்கிறது.

'வாருங்கள் என்னுடன், வந்து வேலை செய்யுங்கள்' என்று மேய்ப்பானாக அருளுவது நடந்திருக்கிறது. நடக்கிறது. நடக்கும்! 'கடந்த காலத்தில் இப்படித்தான் அழைத்து ஏமாற்றினார்' ஏமாற்றுகிறார். ஏமாற்றுவார் என்று ஆதங்கப்படுவதும் நியாயபூர்வமானதுதான்.
இவ்வளவற்றுக்கும் இவர்கள் எதிர் எதிர் அரசியல் செயற்பாடுகளில் ஈடுபட்டவர்கள் அல்ல. ஒன்றாக, ஒருமித்து மக்களை அரசியல் மயப்படுத்துவதற்கு புறப்பட்ட புரட்சிக்காரர்கள். காலவோட்டத்தில் இவர்கள் பிரிந்து, பிரிக்கப்பட்டு சிதைந்துள்ளவர்கள் மீண்டும் ஒன்றிணைந்து காலத்துக்கு ஏற்ற அரசியலை முன்னெடுக்க வக்கில்லாமல் கண்ணிருந்தும் குருடராய்! காதிருந்தும் செவிடராய்! மனமிருந்தும் கஞ்சனாய்! பக்கா மிதவாத அரசியல்காரராய்யிருக்கின்றனர்.

நாங்கள் முன்வைப்பதெல்லாம் 'யுக புரட்சி'யை ஏற்படுத்துங்கள் என்பதல்ல. தமிழ் இனவாத அரசியல் சக்திகளை தோற்கடியுங்கள் என்பதே. அதற்கு நீங்கள் அனைவரும் ஒன்றுபட்டு ஒருமித்துப் பயணிப்பதே ஒரேயொரு வழி. நடந்துமுடிந்த பாராளுமன்றத் தேர்தலில் தமிழ் இனவாதிகளின் பிரதிநித்துவம் குறைந்திருந்தாலும் அவர்கள்தான் பாராளுமன்றத்தில் கூடுதலான ஆசனங்களை பெற்றிருக்கிறார்கள். அரசாங்கமும் கூத்தமைப்பையே பிரதானமாக பேச்சுக்கு அழைக்கும். சர்வதேச நாடுகளும் அவர்களுடன் பேசுமாறு வலியுறுத்தும். கூத்தமைப்புக்கு 'சப்ப மேட்டர்' இதையெல்லாம் தட்டிக்கழிக்க. தமிழ் இனவாதத்தை கக்குவது என்பது கரும்பு தின்னுவதுபோன்றது அவர்களுக்கு.

தமிழ் இனவாத பாராளுமன்றப் பிரதிநித்துவம் தமிழ் பகுதிகளில் நேரடியான தாக்கத்தை பெரியளவில் ஏற்படுத்தப்போவதில்லை. பாராளுமன்ற உறுப்பினர்கள் தத்தமது வயிற்ரை முடிந்தவரை வளர்த்துக்கொள்ளலாம். வெளிநாடுகளில் உள்ளாசம் அனுபவிக்கலாம் மற்றும் பலவிதமானவற்றை அனுபவிக்கலாம்!

ஆனால் மாகாண சபை என்பது விஷேசமானது. அதுவும் வடக்கு மற்றும் கிழக்கு மாகாண சபைகளுக்கான விஷேச தேவைகள் இருக்கின்றன. விஷேசமான சேவைகளும் ஆற்றவேண்டியிருக்கிறது. நிர்வாகத்திலும் நிறைய தேவைகளும் மாற்றங்களும் செய்ய வேண்டியிருக்கிறது. விஷேசமாக இது மக்களுடன் நேரடியான தொடர்புடைய நிர்வாகம். இதனை இந்த இனவாதிகளின் கைகளுக்கு செல்லவிட்டால் என்னவிதமான விளைவுகளை சந்திக்க வேண்டியேற்படும் என்பதை இந்த மாற்று அரசியல் சக்திகள் சிந்திக்க வேண்டும்.
தமிழ் இனவாதிகளின் மாகாணசபை வெறும் பத்திரிகை அறிக்கைகளில்தான் காணமுடியும். கண்ணுக்குத் தெரிந்தும் தெரியாத மாகாணசபையாகத்தான் இயங்கும். இது நமக்குத் தேவையா?

எனவே மாற்றுத் தலைமைகள் மற்றவர்களின் குற்றங்களை கையோடு எடுத்துச் செல்லாமல் தமக்குள்ளிருக்கும் மனிதநேயத்துடன் நட்புடன் விட்டுக்கொடுப்புடன் கலந்துரையாடி மாகாணசபையையாவது தமிழ் இனவாதிகளின் கைகளுக்குச் சென்றுவிடாதபடி பார்த்துக்கொள்ள வேண்டும். அதற்கு புலன்பெயர்ந்து வாழும் இந்த தலைவர்களின் விசுவாசிகள் பொத்திக்கொண்டிருக்க வேண்டும்.

இந்த சந்தர்ப்பத்தையும் கைநழுவவிட்டால் 'இதிலும்பார்க்க புலிகள் பரவாயில்லை' என்று சிந்திக்கும் நிலைக்கு மக்களைத் தள்ளிவிடக்கூடாது என்பதே எமது வேண்டுகோள்.
இலங்கையின் இரு பிரதான கட்சிகளான வலது அல்லது இடதுசாரி சார்புடைய அரசியல் சக்திகளுடன் இணைந்துதான் சிறுபான்மை மற்றும் சிறிய கட்சிகள் தமது அரசியல் செயற்பாடுகளை முன்னெடுத்துச் செல்லவேண்டிய நிலை தவிர்க்கமுடியாதபடி தோன்றியிருக்கிறது. அதனால்தான் பெரும்பாலான தமிழ் முஸ்லீம் கட்சிகள் பெரும்பான்மை கட்சிகளுடன் இணைந்து தேர்தலைச் சந்திக்கின்றன. மூன்றாவது பெரிய சக்தியாக தன்னைத் தானே உருவகித்துக்கொண்ட ஜே.வி.பி ஐந்தே ஐந்து பாராளுமன்ற ஆசனங்களைப் பெற்று படுதோல்வி அடைந்திருக்கிறது. அதுவும் ஜெனரலை முன்நிறுத்தித்தான் பெற்றிருக்கிறது. அப்படியிருக்க தூய்மைவாதம் வாதத்துக்கு நன்றாகத்தான் இருக்கும். நடைமுறைக்கு 'ஏட்டுச் சுரைக்காய'யாகத்தான் இருக்கும்.

வழிதவறிய செம்மறியாட்டை திருத்துவதற்கு நாமொன்றும் ஜேசுநாதருமல்ல, வழிதவறுவதற்கு இவர்கள் ஒன்றும் செம்மறியளுமல்ல!

0 comments :

Copyright www.ilankainet.com All right reserved.
Designed and Hosted By : ilankainet.com
To contact us : ilankainet@gmail.com